எத்தனை நாட்கள் கழித்து, இல்லை எத்தனை மாதங்கள் கழித்து?
போகும்போது சொல்லி விட்டுப் போனது என்ன?
'நீ கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வந்து விடுவேன்!'
இந்த ஆறேழு மாதங்களில் எத்தனை லட்சம் முறை கண் இமைத்திருப்பேன், எத்தனையோ கோடி முறை கூட இருக்கக் கூடும்!
இதுதான் கண் இமைக்கும் நேரத்துக்குள் வருவதா?
சரி. ஆண்கள் பொருள் ஈட்டக் கடல் கடந்து போவார்கள்தான். திரும்ப வர அதிக நாட்கள் பிடிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால், யாரிடமாவது சொல்லி அனுப்பி இருக்கலாமே!
இந்த ஆறேழு மாதங்களில், அவர் இருந்த இடத்திலிருந்து இந்த ஊருக்கு நான்கைந்து கப்பல்களாவது வந்து போயிருக்குமே! கப்பலில் வந்த மாலுமி, பயணி யாரிடமாவது எனக்கு ஒரு மடல் கொடுத்து அனுப்பி இருக்கலாமே! ஒரு சில பொற்காசுகள் கொடுத்தால், அவருடைய மடலை என்னிடம் கொண்டு வந்து தரக் கூடியவர்கள் இருந்திருப்பார்களே!
எல்லாம் ஒரு அலட்சியம். இவள் எங்கே போய் விடப் போகிறாள் என்ற மதர்ப்பு! எப்போது திரும்பி வந்தாலும், நான் ஓடிப் போய் அவரை அணைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை!
அதுதான் நடக்கப் போவதில்லை!
அவர் இங்கு வந்ததும், நான் உள்ளே போய்க் கதவைத் தாள் போட்டுக் கொள்ளப் போகிறேன் - கலிங்கத்துப் போரிலிருந்து சோழ மன்னர் திரும்பி வந்தபோது, மகாராணி அந்தப்புரத்தின் கதவைத் தாளிட்டுக் கொண்டு மன்னரை உள்ளே வர விடாமல் வெளியிலேயே நிறுத்தி வைத்தாராமே, அது போல்!
கதவைத் திறந்து வெளியே வரும்படி அவர் என்னைக் கெஞ்ச வேண்டும். இத்தனை நாட்கள் என்னைப் பிரிந்து இருந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீண்ட நேரம் ஊடலாடி விட்டுத்தான், சமாதானம் அடைந்து அவர் என்னை நெருங்க அனுமதிக்கப் போகிறேன்.
வாயிலில் அரவம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போலிருக்கிறது.
இப்போதே அறைக்குள் போய் விடலமா?
வேண்டாம். அவர் உள்ளே வரட்டும். அவர் என்னைப் பார்த்த பிறகு, அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என் கோபம் புரியும்.
...................
என்னவோ தெரியவில்லை. அவர் உள்ளே நுழைந்ததுமே. ஓடிப் போய் அவரைத் தழுவிக் கொண்டு விட்டேன்.
இவ்வளவு நேரம் சிந்தித்து, நான் போட்டிருந்த திட்டத்தை என் நெஞ்சம் முறியடித்து விட்டது!
கற்பியல்
நிறையழிதல் (தயக்கம் உடைபடுதல்)
பொருள்:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துத்தான் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு, என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
No comments:
Post a Comment