அவருக்கும் ஒரு நெஞ்சு இருக்கிறது. அந்த நெஞ்சில் என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை.
அப்படி இருந்திருந்தால், பல மாதங்களுக்கு முன் என்னைப் பிரிந்து எங்கோ தொலை தூரம் சென்றவர், என்னைக் காண வேண்டும் என்ற ஆவலில், இத்தனை நேரம் திரும்பி இருக்க மாட்டாரா?
ஆனால், என் நெஞ்சான நீ, அவர் நினைவை எப்போதும் சுமந்து கொண்டு, என்னை வருத்தத்தில் ஆழ்த்தி வருவதுடன், அவரைக் காண, அவர் இருக்கும் இடத்துக்கே செல்வதென்று தீர்மானித்து விட்டாய்!
உன்னை என்னால் தடுக்க முடியாது. நீ நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்துக்கும் செல்லும் வல்லமை படைத்தவள். பயணம் செய்ய உனக்குக் கட்டை வண்டியோ, கப்பலோ தேவையில்லை. காற்றை விட வேகமாக, நீ விரும்பும் இடத்துக்குச் சென்று விடுவாய்!
என்னால் உன்னுடன் வர முடியாது. நீ சென்றதும், அவரைப் பிரிந்த துயரத்துடன், உன்னைப் பிரிந்த துயரத்தையும் சேர்த்து நான் அனுபவிக்க வேண்டும்.
சென்று வா! ஆனால், விரைவில் திரும்பி விடு.
இரு, இரு. கிளம்பி விடாதே! இந்தக் கண்களுக்கும் அவரைக் காண வேண்டுமாம்! தங்களை அவரிடம் அழைத்துச் செல்லும்படி அவை என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால், என்னால்தான் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்ல முடியாதே!
எனவே, நீ செல்லும்போது, இந்தக் கண்களையும் அழைத்துச் செல். உனக்கு அவை வழித்துணையாகவும் இருக்கும்!
கற்பியல்
நெஞ்சொடு கிளத்தல்
பொருள்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது, என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
No comments:
Post a Comment