"நீ நீனைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்! அவர் வர மாட்டார்,"
"ஏன் இப்படி எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்? ஊருக்குச் சென்றவர் திரும்பி வந்துதானே ஆக வேண்டும்?"
"உன் மீது சிறிதேனும் அன்பு இருந்திருந்தால், அவர் முன்பே வந்திருக்க வேண்டும்."
"சென்ற வேலையை முடிக்காமல் எப்படித் திரும்பி வர முடியும்? அவர் என்ன பக்கத்து ஊருக்கா போயிருக்கிறார், இன்னொரு முறை போய் வேலையை முடித்து விட்டு வரலாம் என்பதற்கு? கடல் கடந்தல்லவா போயிருக்கிறார்!"
"எங்கே போயிருந்தால் என்ன? நம் மீது உயிரையே வைத்திருக்கும் ஒருத்தி நமக்காகக் காத்திருக்கிறாள் என்ற உணர்வு இருந்தால், வேலையை விரைவாக முடித்து விட்டுப் பறந்து வந்திருக்க வேண்டாமா?"
"பறந்து வருவதற்கு அவர் அனுமனா, இல்லை, அவரிடம் புஷ்பக விமானம் இருக்கிறதா?"
"பறப்பதற்குச் சிறகுகளோ, விமானமோ இல்லாத ராமர், கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரவில்லையா? மனம் இருந்தால் வழி உண்டு!"
"நீ அவர் மீது மிகவும் கோபமாய் இருக்கிறாய் போலிருக்கிறதே!"
"பின்னே? மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாத மனிதர் மீது கோபப்படாமல் பரிதாபமா பட முடியும்? ஒருவேளை, சகுந்தலையை துஷ்யந்தன் மறந்தது போல், அவர் உன்னை மறந்து விட்டாரோ என்னவோ!"
"நீ அவர் மீது கோபமாய் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை!"
"ஏன் நம்ப முடியவில்லை?"
"எத்தனையோ முறை, எங்கள் இருவருக்கிடையே ஊடல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், அவர் என்னிடம் நெருங்கி வந்து ஊடலைப் போக்கி இருக்கிறார். அவர் என் மீது ஊடல் கொண்டிருந்தபோதெல்லாம், ஒருமுறை கூட நீ அவர் மீது கோபம் கொண்டதில்லையே! அதனால்..."
"அதனால்?"
"அதனால், உனக்கு அவர் மீது இருக்கும் கோபம் பொய்யானது என்று நினைக்கிறேன்! என் அருமை நெஞ்சே! என்னையே ஏமாற்றப் பார்க்காதே!"
கற்பியல்
நெஞ்சொடு கிளத்தல்
பொருள்:
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால், ஒரு தடவை கூடப் பிணங்கியறியாத நீ, இப்போது அவர் மீது கொள்கிற கோபம் பொய்யானதுதானே?
No comments:
Post a Comment