அதன் பிறகு, மணிவண்ணன் தினமும் அவளை அந்த பஸ் நிறுத்தத்தில் பார்த்தான். ஆனால், அவள் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.
மணிவண்ணன் அவளை தினமும் கவனித்து வந்தான்.
அவ்வாறு கவனித்ததில், அவனுக்குப் புலப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று, அவள் இயற்கையாகவே அழகானவள் என்பது. இரண்டு, அவள் தினமும் தன்னை வெவ்வேறு விதங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் என்பது.
மணிவண்ணன் பல மாதங்களாக அந்த பஸ் நிறுத்தத்தில்தான் பஸ் ஏறுகிறான். ஆனால், அன்று அவள் அவனைப் பார்த்துச் சிரித்த, அல்லது அவன் அவ்வாறு நினைத்துக் கொண்ட அந்த நாளுக்கு முன், அவன் அவளை அங்கே பார்த்ததில்லை. பார்த்ததில்லையா, அல்லது கவனித்ததில்லையா என்பது அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால், இப்போது அவளை தினமும் பார்க்கிறான் - கூர்ந்து பார்க்கிறான். ஏன் இந்த மாற்றம்?
முதலில் அவன் கண்ணுக்குத் தெரியாத அவள் அழகு இப்போது தெரிவது ஏன் என்று யோசித்தான். அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்வதுதான் அதற்குக் காரணம் என்று தோன்றியது.
முதல்முறை அவன் அவளைப் பார்த்தபோது, அவள் இதுபோல் அலங்காரம் செய்து கொள்ளவில்லை. எளிமையாகத்தான் தெரிந்தாள்.
அன்று அவனைப் பார்த்துச் சிரித்த, அல்லது அவன் அவ்வாறு நினைத்த அந்த நாளுக்குப் பிறகுதான், அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்ளத் தொடங்கி இருக்கிறாள்.
அப்படியானால், தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதன் மூலம், அவன் தன்னை கவனிக்க வேண்டும், தன் அழகை ரசிக்க வேண்டும் என்பதுதான் அவள் நோக்கமா?
அப்படியானால், தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வதன் மூலம் அவள் அவனுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறாளா?
அடுத்த நாள் பஸ் நிறுத்தத்தில் அவளைப் பார்த்தபோது, மணிவண்ணன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
பதிலுக்கு அவளும் சிரித்தாள்.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment