"அவன் பாவம், தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கறவன். அவனை ஏண்டா இழுக்கற?" என்றான் நடராஜ்
"அவன் மட்டும்தான் வேலை செய்யறானா? நாமளும்தான் கஷ்டப்பட்டு வேலை செய்யறோம். அதுக்கும், காதலி இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் கிஷோர்.
"நாம எல்லாரும் அவனைக் கிண்டல் பண்றோம். அவன் ஏதாவது பதில் சொல்றானா பாரு!" என்றான் வினோத்
நண்பர்களின் கேலிப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சுமந்த், "உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்றேன். எனக்குக் காதலி இருக்கா!" என்றான்.
"என்னோட வேலைதான் என் காதலின்னு பழைய ஜோக் எல்லாம் அடிக்காதே!" என்றான் நடராஜ்.
"இல்லைடா. எனக்கு ஒரு காதலி இருக்கா. அவ நம்ம ஆஃபீசிலேயே வேலை செய்யறா. அது மட்டும் இல்ல, நம்ம ஆஃபீஸ்ல உள்ள பெண்களிலேயே அவதான் ரொம்ப அழகு!" என்றான் சுமந்த்.
"அது எப்படிடா, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுதான் என்னைக் காதலிக்கறாளே!" என்றான் வினோத்.
"டேய்! சந்தடி சாக்கில சைக்கிள் ஓட்டாதே! எந்த அழகான பொண்ணாவது உன்னைக் காதலிப்பாளா? ஏதோ ஒரு பொண்ணு உன்னைக் காதலிக்கிறா. அதோட நிறுத்திக்க" என்ற நடராஜ், "டேய் சுமந்த்! உன் காதலியைப் பத்திச் சொல்லுடா!" என்றான், சுமந்த்தைப் பார்த்து.
"அதான் சொல்லிட்டேனே, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுன்னு."
"அதை நாங்க தீர்மானிக்கறோம். பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு" என்றான் கிஷோர்.
"அதை நான் சொல்ல முடியாதுடா!"
"ஏன்? அப்ப, சும்மா கதை விடறேன்னுதானே அர்த்தம்? காதலி இருந்தா, அவ யாருன்னு சொல்றதில என்ன கஷ்டம்?"
"எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிற வரையில, எங்க காதலைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு அவ சொல்லி இருக்கா."
"ஏன் அப்படி?"
"ஏன்னா, அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. பெண்மைக்கு உண்டான நாணம்கற குணம் அவகிட்ட இருக்கு! அதனால, தன்னோட காதல் மற்றவங்களுக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கறா. இன்னும் ரெண்டு மூணு மாசத்தில எங்க கல்யாணம் நிச்சயம் ஆயிடும். அவ யாருன்னு அப்ப நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றான் சுமந்த்.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment