ஆனால், அவள் மகன் மனோகரனால் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.
ஒரு கட்டத்தில், தன் மகன் இனித் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்து, தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாள் மரகதம்.
சில நாட்களாக மனோகரனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது என்ன மாற்றம் என்று புரியவே மரகதத்துக்கு இரண்டு நாட்கள் ஆயின.
"என்னடா, இப்பல்லாம் நீ குடிக்கறது இல்ல போலருக்கே!" என்றாள் மரகதம், வியப்புடன்.
"ஆமாம்மா. குடியை விட்டுட்டேன்."
"எப்படிடா?" என்றாள் மரகதம், நம்ப முடியாமல்.
"நீ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்க இல்ல? அதனாலதான்!"
"அப்படியெல்லாம் குடியை சட்டுனு விட முடியாதே!"
"இல்லம்மா. குடியைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா, விட்டுட லாம்."
"என்ன புரிஞ்சுக்கிட்ட? எப்படி விட்ட? என்னவோ எனக்குப் புரியல. நீ நிரந்தரமாக் குடியை விட்டுட்டா, எனக்கு சந்தோஷம்தான்!"
"நிரந்தரமாத்தான், அம்மா" என்றான் மனோகரன்.
"ஏண்டா, உங்கம்மா எவ்வளவோ சொல்லியும் குடியை விடாதவன், காதலிக்க ஆரம்பிச்சவுடனே விட்டுட்டியா? அம்மா சொன்னா கேக்காதவன், காதலி சொன்னதும், உடனே விட்டுட்டியே!" என்றான் மனோகரனின் நண்பன் பிரகாஷ்.
"என் காதலி எதுவும் சொல்லல. நானாத்தான் விட்டேன்!" என்றான் மனோகரன்.
"அது எப்படி நீயா விடுவ?"
"டேய்! என் காதலியைப் பாத்தாலே எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ஏன், அவளை நினைச்சாலே சந்தோஷம் கிடைக்குது. ஆனா, மதுவுக்கு இந்த குணம் இல்லையே! மதுவைக் குடிச்சாத்தானே போதை கிடைக்குது. அப்ப எதுக்கு மது குடிக்கணும்னு நினைச்சேன், விட்டுட்டேன்!" என்றான் மனோகரன்.
"உங்கம்மா பாவம், இது தெரியாம, தன்னோட பேச்சைக் கேட்டுத்தான் நீ குடிக்கறதை விட்டுட்டதா நினைச்சு, அதை எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க!" என்றான் பிரகாஷ்.
கற்பியல்
No comments:
Post a Comment