அன்றைய தினத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.
"குமுதா! என் நண்பன் அமுதன் வேலை தேடி வெளியூர் போனான், இல்ல? அவன்கிட்டேந்து எனக்கு ஒரு மடல் வந்திருக்கு" என்றான் சீவகன்.
'என்ன?' என்பது போல் அவனைப் பார்த்தாள் குமுதா.
"அவனுக்கு அங்கே ஒரு செல்வந்தர்கிட்ட வேலை கிடைச்சிருக்காம். 'நல்ல வேலை, நிறையப் பொருள் கொடுக்கறாரு, உன்னைப் பத்திச் சொன்னேன், உன் நண்பனை இங்கே வரச் சொல்லு, அவனுக்கும் வேலை கொடுக்கறேன்' னு சொன்னாராம். ஒரு ஆண்டு வேலை செஞ்சா போதும், அதுக்குள்ள நிறையப் பணம் சம்பாதிச்சுக்கிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடலாம்னு எழுதி இருக்கான். அதனால, நான் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்."
குமுதா பதில் சொல்லவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அடுத்த நாள், சீவகன் ஊருக்குக் கிளம்புவதற்காகத் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த குமுதா, அவன் முகத்தைப் பார்த்தாள்.
முதல்நாள் பார்த்த அதே பார்வை!
சீவகனுக்குச் சுருக்கென்று ஏதோ உறுத்தியது.
"சரி. நீயும் என்னோட வா!" என்றான்.
அப்போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி!
'உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்று அவள் வாய் திறந்து சொல்லவில்லை.
அவள் பார்வையே அதை அவனுக்கு உணர்த்தி விட்டது.
திருமணம் ஆனதிலிருந்தே, பெண்மையின் மென்மையையும், நளினத்தையும் குமுதாவிடம் அவன் உணர்ந்திருக்கிறான்.
ஆனால், அன்று அவள் தன் கண்களாலேயே தன்னிடம் பேசித் தன் மனதிலிருந்த ஏக்கத்தையும் விருப்பத்தையும் குறிப்பால் உணர்த்தியதைக் கண்டபோது, அவள் பெண்மைக்கு இன்னும் சற்றுப் பெண்மை கூடுதலாகச் சேர்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றயது.
அந்த உணர்வுடன், தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த குமுதாவைப் பெருமையுடன் மீண்டும் பார்த்தான் சீவகன்.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment