Monday, November 27, 2023

1282. தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால்...

"என்னை ஒரு இடத்துக்கு வரச் சொல்றது, நான் அங்கே போய் அவருக்காகக் காத்துக்கிட்டிருந்தா, ஃபோன் பண்ணி, 'சாரி டியர், ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்,' 'சொந்தக்காரர் ஒத்தரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகணும்,' 'அம்மா என்னை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க' இது மாதிரி ஒரு காரணத்தைச் சொல்லி, வராம என்னை ஏமாத்தறது! இது மாதிரி நாலைஞ்சு தடவை ஆயிடுச்சு. இதைப் பத்தி, இன்னிக்கு அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுடப் போறேன்!" என்றாள் ஸ்வப்னா, தன் தோழி கல்பனாவிடம்.

"நல்லாக் கேட்டுடுடி. தட்டிக் கேக்கலைன்னா, ஆம்பளைங்க இப்படித்தான் நம்மை அலைக்கழிப்பாங்க!" என்றாள் கல்பனா.

"நீ சொல்றதைப் பார்த்தா, உனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் போலருக்கே!"

"சேச்சே! உன்னை மாதிரி தோழிகள் சொல்றதை வச்சு சொல்றேன். எனக்குத்தான் காதலனே கிடையாதே! நான் இந்தக் காதல்ல எல்லாம் மாட்டிக்க மாட்டேன்."

"என்னடி, உன் காதலர்கிட்ட கேக்கப் போறேன்னியே, கேட்டியா?" என்றாள் கல்பனா.

"இல்லைடி. கேக்கணும்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா முடியல" என்றாள் ஸ்வப்னா.

"ஏன்?"

"ஏன்னா, எனக்கு அவர் மேல அவ்வளவு காதல் இருக்கு!"

"அதுக்காக? தட்டிக் கேக்கக் கூடாதா என்ன?"

"கேக்கலாம். ஆனா, இதனால எங்களுக்குள்ள சண்டை வந்துட்டா?"

"என்ன சண்டை வரப் போகுது? வந்தாலும், சின்னச் சண்டையாதானே இருக்கும்!"

"அதேதான்! எனக்கு அவர் மேல இவ்வளவு காதல் இருக்கறப்ப, அது ஒரு சின்னச் சண்டையால பாதிக்கப்படக் கூடாது இல்ல, நிறைய காத்து உள்ள பலூன் ஒரு சின்னக் குண்டூசி முனை பட்டு வெடிச்சுப் போற மாதிரி? அதனாலதான், கேக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."

கல்பனா தோழியை வியப்புடன் பார்க்க, "இதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்குத்தான் காதலன் இல்லையே!" என்றாள் ஸ்வப்னா, சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பொருள்:
பனையளவாகக் காதல் பெருகிடும்போது, தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...