முன்பெல்லாம், அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே, ஓடி வந்து சுகுணாவை அணைத்துக் கொள்வான். அதன் பிறகு, தூங்கப் போகும் வரை அவளுடன் பேசிக் கொண்டிருப்பான். அவள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது கூட, அங்கே போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பான்.
ஒருமுறை, அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சுகுணாவின் தாய் பார்வதி, "என்னடி, பூனைக்குட்டி காலைச் சுத்திச் சுத்தி வர மாதிரி, உன் புருஷன் உன்னையே சுத்திக்கிட்டிருக்காரு!" என்று கேலி செய்தாள், தன் மகளிடம் அவள் கணவன் இவ்வளவு அன்பாக இருக்கிறானே என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தபடி.
ஆனால், அவையெல்லாம் இப்போது மாறி விட்டன.
இப்போதெல்லாம், அரவிந்தன் அலுவலகத்திலிருந்து வந்ததும், அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். சுகுணா காப்பி எடுத்துக் கொண்டு வந்தால், "வச்சுட்டுப் போ!" என்கிறான். சில சமயம், "வேண்டாம். நான் வரும்போதே ஹோட்டல்ல குடிச்சுட்டேன்" என்கிறான்.
"முன்னாடியே சொல்லி இருந்தா, நான் காப்பி கலந்திருக்க மாட்டேன் இல்ல?" என்று அவள் ஒருமுறை கேட்டபோது, "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று எரிந்து விழுந்தான், ஏதோ இயலாத ஒன்றைச் செய்யும்படி அவள் சொல்லி விட்டது போல்.
முன்பெல்லாம், விடுமுறை நாட்களில் சுகுணாவை வெளியே எங்காவது அழைத்துச் சென்றது போல், இப்போது அழைத்துச் செல்வதில்லை. அவளே, "வெளியில எங்கேயாவது போகலாமா?" என்று கேட்டால் கூட, "எனக்கு வேற வேலை இருக்கு" என்று தட்டிக் கழித்து விடுகிறான்.
அவன் மட்டும் தனியே எங்காவது போய்விட்டு வருகிறான். எங்கே போகிறான், எப்போது வருவான் என்றெல்லாம் சொல்வதில்லை.
"எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போகக் கூடாதா?" என்று சுகுணா ஒருமுறை கேட்டபோது, "எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.
"ஆஃபீஸ் வேலையா வெளியூர் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்" என்றான் அரவிந்தன்.
அரவிந்தன் இல்லாத இரண்டு நாட்களில், சுகுணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்து விட்டது போல் உணர்ந்தாள். கணவன் எப்போது திரும்பி வருவான், எப்போது அவன் முகத்தை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மூன்றாம் நாள் காலையிலிருந்தே, வாசற்படியில் அமர்ந்து கொண்டு, அரவிந்தன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
'எனக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாள் கூட என்னால அவரைப் பிரிஞ்சு இருக்க முடியலியே! அவர் என்னைக் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட பேசறது கூட இல்ல. அவர் இஷ்டத்துக்கு எங்கேயாவது போறாரு, வராரு. வீட்டில இருக்கறப்பவும், என்னை ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்குமோ, அதனாலதான் இப்படி நடந்துக்கறாரோங்கற சந்தேகம் கூட எனக்கு வருது. ஆனா, அவரைப் பாக்காம இருக்கறது எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?'
சுகுணாவுக்குப் புரியவில்லை.
கற்பியல்
No comments:
Post a Comment