"ஏன் பரிவாதினியோட உடம்பு வெளிறிப் போன மாதிரி இருக்கு?"
"மாதிரி என்ன? வெளிறித்தான் போயிருக்கு. அவளோட கணவர் நேத்திக்கு ஊருக்குப் போயிட்டார் இல்ல? அதான், பசலை வந்து தோல் வெளிறிப் போயிருக்கு."
"நேத்திக்குத்தான் ஊருக்குப் போனாரா? ஆனா, நான் நாலைஞ்சு நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்தபோது கூட, அவ இப்படித்தானே இருந்தா?"
"நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே!"
தனக்குக் காதில் விழாது என்று நினைத்து, ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது பரிவாதினியின் காதில் விழுந்தது.
அந்தப் பெண்களைக் கடைக்கண்ணால் பார்த்த பரிவாதினி, கடைசியாகப் பேசிய பெண்ணிடம் பேசுவது போல், மனதுக்குள் பேசினாள்:
'உன் தோழி சொல்றது சரிதான். அவ சரியாதான் கவனிச்சிருக்கா. நாலைஞ்சு நாளுக்கு முன்னால இல்ல, ஏழு நாளைக்கு முன்னாலேயே, என் மேனியில பசலை படர ஆரம்பிச்சுடுச்சு. தான் ஊருக்குப் போகப் போறதை ரகசியமா வச்சிருந்து, அவர் முதல்நாள்தான் எங்கிட்ட சொன்னார். ஆனா, அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறார்ங்கறது என் மனசுக்கு ஒரு வாரம் முன்னாலேயே தெரிஞ்சு, அது என் உடம்பில பசலை படர வச்சுடுச்சு. இதை நான் சொன்னா, நீங்க ரெண்டு பேரும் நம்பவா போறீங்க?'
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment