"வைகை! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் அவள் தோழி திருச்செல்வி, தயங்கிக் கொண்டே.
"சொல்லுடி!" என்றபோதே, வைகையின் உடலில் ஒரு பதட்டம் தெரிந்தது.
"ஏன் பதட்டப்படற?"
"நீ சொல்லப் போற விஷயம் எப்படி இருக்குமோங்கற பதட்டம்தான். சொல்லு."
"ஆமாம். உங்கிட்ட ஏதோ ஒரு மாறுதல் தெரியுதே!" என்ற திருச்செல்வி, வைகையின் கையைப் பற்றியபடி, "ஏண்டி, நேத்து பாத்தப்ப, கையில வளையல்கள் இருந்ததே, இப்ப இல்ல! கழட்டி வச்சிருக்கியா?" என்றாள்.
வெடுக்கென்று தன் கையை விடுவித்துக் கொண்ட வைகை, "சுத்தி வளைக்காம விஷயத்தைச் சொல்லு!" என்றாள், அதட்டலாக.
திருச்செல்வி சற்றுத் தயங்கி விட்டு, "உன் புருஷனைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். முதல்ல நான் அதை நம்பல. ஆனா, நானே கண்ணால பாத்தப்பறம் உங்கிட்ட சொல்லாம இருக்க முடியல!"
"என்ன கேள்விப்பட்ட? என்ன பாத்த?"
"உனக்குப் பூங்கொடியைத் தெரியும் இல்ல. அவ ஊர்ல பல ஆண்களை மயக்கி வச்சிருக்கான்னு கேள்விப்பட்டிருப்பியே! உன் புருஷனுக்கும் அவளோட தொடர்பு இருக்குன்னு சில பேர் எங்கிட்ட சொன்னாங்க. நான் நம்பல. ஆனா, அவர் பூங்கொடி வீட்டிலேந்து வந்ததை நானே பாத்தேன்!"
செய்தியைச் சொல்லி விட்டு, வைகை அதை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிய, அவள் முகத்தைப் பார்த்தாள் திருச்செல்வி.
வைகை தன் கைகளைப் பார்த்தபடி, "எனக்கு இது நேத்திக்கே தெரியும்!" என்றாள்.
"நேத்திக்கே தெரியுமா? எப்படி?" என்றாள் திருச்செல்வி, வியப்புடன்.
'எனக்குன்னா, எனக்கு இல்லை. என் கைவளையல்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. நேத்து ராத்திரி அவர் என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டப்பவே, அவர் உடலளவில என்னோட கூடி இருந்தாலும், மனசளவில எங்கிட்டேந்து பிரிஞ்சு இருந்ததை என் கைவளையல்கள் புரிஞ்சுக்கிட்டு, என் கையிலேந்து நழுவி விழுந்துடுச்சு' என்று நினைத்துக் கொண்ட வைகை, "நேத்து என் கையில போட்டிருந்த வளையல்கள் நழுவி விழுந்து உடைஞ்சுது. அதனால, தப்பா ஏதோ நடக்கப் போகுதுன்னு நினைச்சு பயந்துக்கிட்டே இருந்தேன்!" என்றாள் தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment