சொந்த ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்து விட்டுப் பத்து நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவன்தான்! இப்போது, பத்து மாதங்கள் கழித்து வந்திருக்கிறான்.
திடீரென்று ஒருநாள், தன் வீட்டு வாசலில் குலசேகரன் வந்து நின்றதைக் கண்ட கோதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரவில் தூக்கம் பிடிக்காததால், பகலிலேயே தூங்குகிறோமோன்று கூட நினைத்தாள்.
இல்லை. இது கனவு இல்லை, நிஜம்தான்.
"பத்து நாள் ஆகும்னு சொன்னீங்க. அதுக்குள்ள வந்துட்டீங்களே! ஏதாவது பறவை முதுகில உக்காந்து வந்தீங்களா?" என்றாள் கோதை.
கோதை கோபமாகப் பேசாமல், கேலியாகப் பேசியது குலசேகரனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
கோதையின் கைகளைப் பற்றிக் கொண்டு, சொந்த ஊரில் தனக்கு இருந்த பணிகளையும், அதனால் அங்கே பல நாட்கள் தங்க வேண்டி இருந்ததைப் பற்றியும் கூறினான் குலசேகரன்.
"கடல் கடந்தா போனீங்க? இங்கேந்து பத்து காத தூரம்தானே உங்க ஊர்? ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கலாம். இல்லேன்னா, யார் மூலமாவது செய்தி சொல்லியாவது அனுப்பி இருக்கலாம்."
"பல மாதங்கள் பிரிவுக்கப்புறம் உன்னோட சேரறது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு! உனக்கு அப்படி இல்லையா?" என்றான் குலசேகரன், அவளை அணைத்தபடியே.
"ஏன் இல்லாம? என் முகத்தைப் பார்த்தா தெரியலியா?" என்ற கோதை, 'அதோட, இத்தனை நாள் நீங்க என்னைப் பிரிஞ்சிருந்ததை நினைக்கறப்ப, என் மேல அன்பு இருந்தா அப்படி இருந்திருப்பீங்களாங்கற எண்ணமும்தானே வருது?' என்று நினைத்துக் கொண்டாள்.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment