"எனக்கு சாப்பாடே பிடிக்கலேம்மா. எனக்காகன்னு எதுவும் சமைக்காதே!" என்றாள் தேவி.
"இப்படி எத்தனை நாள் நடந்திருக்கு, உனக்குப் பிடிச்சதுன்னு நான் ஒண்ணை சமைக்கறதும், நீ அதை சாப்பிடாம அப்படியே வச்சுட்டுப் போறதும்!" என்றாள் ருக்மிணி, சலிப்புடன்.
"நான் கணக்கு வச்சிருக்கேம்மா!"
"கணக்கு வச்சிருக்கியா? என்ன கணக்கு?"
தேவி உள்ளிருந்து ஒரு ஓலையை எடுத்து வந்தாள்.
"என்னடி ஓலை இது?"
"நீ எனக்குப் பிடிச்ச உணவுப் பொருட்களை சமைச்சதை எல்லாம் இதில குறிச்சு வச்சிருக்கேன். இதோ, நீ இன்னிக்கு சமைச்ச வள்ளிக் கிழங்கைக் கூட எழுதி இருக்கேன், பாரு!"
"நல்லா இருக்கு! எதுக்குடி இதெல்லாம்? நான் சமைச்சதைச் சாப்பிட மாட்டாளாம், ஆனா, ஓலையில எழுதி வைப்பாளாம்!"
"அம்மா! என்னைப் பிரிஞ்ச போனவர் திரும்பி வந்ததும், இந்த ஓலையை உங்கிட்ட கொடுக்கிறேன். இதில இருக்கறதை எல்லாம் நீ சமைச்சுப் போடு. நான் சந்தோஷமா சாப்பிடறேன்!" என்றாள் தேவி.
'இவளுக்குக் கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு!' என்று நினைத்துக் கொண்டாள் ருக்மிணி.
கற்பியல்
No comments:
Post a Comment