"என்னடி, உனக்குள்ளேயே பேசிக்கிட்டிருக்க?" என்றாள் தமயந்தி.
"ஒண்ணுமில்லையே!" என்றாள் அங்கயற்கண்ணி, தான் தனக்குள் பேசிக் கொண்டதைத் தோழி பார்த்து விட்டாளே என்ற சங்கட உணர்வுடன்.
"என்ன ஒண்ணுமில்ல? இவ்வளவு நேரம் கையை ஆட்டி, ஏதோ மேடைப் பிரசங்கம் பண்றவர் மாதிரி பேசிக்கிட்டிருந்தே? எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
அங்கயற்கண்ணி சற்றுத் தயங்கி விட்டு, "ஒண்ணுமில்லை. என்னை விட்டுப் பிரிஞ்சு போன காதலர் திரும்பி வரப்ப, அவர்கிட்ட என்ன சொல்றதுன்னு நினைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்!" என்றாள்.
"நினைச்சுப் பார்த்தியா? ஒத்திகை இல்ல பார்த்துக்கிட்டிருந்த! சரி, என்ன சொல்லப் போற?"
"இவ்வளவு நாள் என்னைப் பிரிஞ்சிருந்ததுக்காக, அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு சண்டை போடலாமான்னு நினைச்சேன்."
ஓ! அதுதான் கையை ஆட்டிப் பேசிக்கிட்டிருந்தியா? நல்லது. அப்படியே செய். அப்பதான் உன்னோட பிரிவுத் துயர் அவருக்குப் புரியும்!"
"ஆனா, அப்படிச் செய்ய முடியுமான்னு தெரியல!"
"ஏன்?"
"பல மாசப் பிரிவுக்கப்புறம் அவரைப் பாக்கறப்ப, அவரைக் கட்டித் தழுவிக்கணும்னுதானே தோணும்?"
"அப்ப, அவரைக் கட்டித் தழுவிக்கப் போறியா? அவரோட சண்டை போடப் போறதில்லையா?"
"ரெண்டையுமே செய்யலாமான்னு கூடத் தோணுது!"
"எப்படி? முதல்ல கட்டித் தழுவிக்கிட்டு, அப்புறம் சண்டை போடப் போறியா, இல்லை, முதல்ல சண்டை போட்டுட்டு, அப்புறம் கட்டித் தழுவிக்கப் போறியா?" என்றாள் தமயந்தி, கேலியாக.
"போடி!" என்றாள் அங்கயற்கண்ணி, வெட்கத்துடன்.
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment