எனக்குப் பத்து வயதாகும்போது, என் பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்குக் குடி பெயர்ந்து விட்டனர்.
அதனால், எனக்குத் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் தெரியும்.
பொதுவாகப் பல மொழிகள் தெரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு இரண்டு மொழிகள் தெரிந்திருந்தது என்னை என் காதலியிடமிருந்து பிரித்து விட்டது!
பிங்களையை நான் சந்தித்ததுமே, அவளிடம் காதல் கொண்டு விட்டேன். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், அவள் என் காதலை ஏற்றுக் கொண்டது என் முற்பிறவியில் நான் செய்த புண்ணியத்தின் விளைவுதான் என்று கூற வேண்டும்.
எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு, எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
'வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழி உடைந்தது போல்' என்று சோழ நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
அது போன்ற ஒரு நிகழ்வு அப்போது ஏற்பட்டது.
எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் அரண்மனையில் வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் நடந்த அன்று அவர் எங்கள் ஊருக்கு வந்து, நேரே என் வீட்டுக்கு வந்தார். "உன்னை மன்னர் உடனே அழைத்து வரச் சொன்னார்" என்றார்.
'நான் தவறு எதுவும் செய்யவில்லையே!' என்ற எண்ணம்தான் என் மனதில் முதலில் தோன்றியது.
என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல், அவர் உடனே "பயப்படாதே! மன்னர் ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுத்தத்தான் உன்னை அழைக்கிறார்" என்றார்.
"இன்றுதான் எனக்குத் திருமணம் ஆகி இருக்கிறது. இரவு என் மனைவி வீட்டில் திருமண விருந்து. அதற்குப் பிறகு..."
"எனக்குத் தெரியும்" என்று என்னை இடைமறித்தார் அவர். "திருமண விருந்து, முதல் இரவு எல்லாம் அப்புறம்தான். மன்னர் பணியை முடித்துக் கொடுத்து விட்டு, அப்புறம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்."
பிறகு என் காதில், "இந்தப் பணிக்காக உனக்கு எவ்வளவு பொற்காசுகள் கிடைக்கும் என்று உன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. மன்னர் அவ்வளவு தாராள மனம் படைத்தவர். அந்தப் பணத்தை வைத்து, நீ ஒரு வியாபாரத்தைத் துவக்கி, உன் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொள்ளலாம்" என்றார்.
மனைவியிடமும், அவள் பெற்றோர், என் பெற்றோர் ஆகியோரிடமும் விடைபெற்று, அவருடன் கிளம்பினேன்.
விடைபெறும்போது, என் மனைவியின் கண்களைப் பார்க்கும் துணிவு எனக்கு இல்லை. திருமணம் முடிந்த கையோடு தன்னைப் பிரிந்து செல்லும் கணவன் குறித்து ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது.
அரண்மனைக்குப் போன பிறகுதான், என் வேலை பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்தன.
இலங்கை நாட்டுடன் வணிகத் தொடர்புகளை அதிகரிக்க, இளவரசர் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்புகிறாராம் அரசர். இலங்கை மன்னருடனும், மற்றவர்களுடன் அவர்கள் உரையாடுவதற்கு உதவ, அவர்களுக்குச் சிங்கள மொழி அறிந்த ஒரு நபர் தேவைப்பட்டிருக்கிறார்.
எங்கள் ஊர்க்காரர் என்னைப் பரிந்துரைக்க, அரசர் என்னை உடனே அழைத்து வரும்படி கட்டளை இட்டிருக்கிறார்.
அந்தக் குழுவுடன் நான் இலங்கைக்குச் சென்று, பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு உதவி, பிறகு அவர்களுடன் நாடு திரும்ப வேண்டும். ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கி, இந்தச் செயல்பாடு நிறைவு பெற ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
அதுவரை, புதிதாக மணந்து கொண்ட என் மனைவியை நான் பிரிந்துதான் இருக்க வேண்டும்.
தஞ்சைக்குப் புதிதாக வந்திருப்பவன் என்பதால், என்னை அன்று மாலை பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
கோவிலில் வழிபாடு செய்து விட்டுத் திரும்பியபோது, "கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டாய்?" என்றான், என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற காவல் வீரன்.
"மன்னரின் பணி சிறப்பாக முடிய வேண்டும் என்றுதான்!" என்றேன்.
'அதன் பிறகு, நான் என் ஊருக்குத் திரும்பி, என் மனைவியுடன் ஒன்று சேர்ந்து அவளுடன் மாலை விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்' என்றும் வேண்டிக் கொண்டதை அவனிடம் சொல்லவில்லை!
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment