"ஏண்டி, நீதான் ஒழுங்கா சாப்பிடாம, பல நாள் பட்டினி கிடக்கற. நானும் உன்னை மாதிரி இருக்கணுமா?" என்றாள் குயிலியின் தாய் அரசி.
"என்னம்மா இது? நீதானே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்ப?"
"நேத்திக்குத்தானேடி விரதம் இருந்தேன்? அந்தக் களைப்பிலேயே, இன்னிக்கு எப்ப சாப்பிடப் போறோம்னு இருக்கு. இதில இன்னிக்கு வேற விரதம் இருக்கணுமா?" என்றாள் அரசி, எரிச்சலுடன்.
"நேத்திக்கு விரதம் இருந்தியா? வெள்ளிக்கிழமைதானே விரதம் இருப்ப? இப்ப வியாழக்கிழமை விரதம்னு மாத்திட்டியா?" என்றாள் குயிலி, வியப்புடன்.
"உனக்கு மூளை கலங்கிப் போயிடுச்சா என்ன? நேத்திக்குத்தானே வெள்ளிக்கிழமை? இன்னிக்கு சனிக்கிழமையாச்சே! நேத்து என்னைக் கேட்டியே, விரதம் இருக்கறது கஷ்டமா இருக்கான்னு, மறந்துடுச்சா?"
"மறக்கலம்மா. ஆனா, நான் அப்படிக் கேட்டது ஒரு வாரம் முன்னேதானே? நேத்திக்குக் கேட்டேன்னு சொல்ற!"
"வெளியூருக்குப் போன உன் புருஷன் எப்ப வரப் போறான்னு பார்த்துக்கிட்டிருக்கறதால, உனக்கு நாளே நகர மாட்டேங்குது. ஒரு நாள் கழியறது ஏழு நாள் கழியற மாதிரி இருக்கு போலருக்கு. அதனாலதான், நேத்து நடந்ததை ஒரு வாரம் முன்னால நடந்ததா சொல்ற. என்ன பெண்ணோ!" என்று அலுத்துக் கொண்டாள் அரசி.
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment