Saturday, April 13, 2024

1306. தங்கை மீது பொறாமை!

"யார்கிட்டேந்து ஃபோன்? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே!" என்றான் தரணிதரன்.

"கலாகிட்டேந்துதான்" என்றாள் உமா, சுருக்கமாக. கலா உமாவின் தங்கை.

"ஏதோ ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்தே போல இருக்கே!"

"அவ புருஷன் ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசறது இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப்பட்டா. 'கவலைப்படாதே. புருஷன் பெண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். சீக்கிரமே சரியாயிடும்'னு ஆறுதல் சொன்னேன்.

"சகஜம்னு எப்படிச் சொல்ற? நமக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. நமக்குள்ள சண்டையே வந்ததில்ல. உன் தங்கையும், அவ புருஷனும் கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்குள்ள, மூணு தடவை சண்டை போட்டுட்டாங்களே!"

"எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா?" என்றபோது, உமாவின் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்தது.

ன்று மாலை, உமாவுக்கு மீண்டும் அவள் தங்கையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அவள் பேசி முடித்ததும், "இப்ப என்ன? சண்டை முத்திப் போய் அடிதடியில இறங்கிட்டாங்களாமா?" என்றான் தரணிதரன், கேலியாக.

கணவனை முறைத்துப் பார்த்த உமா, "அதெல்லாம் இல்ல. அவ புருஷன் ஆஃபீஸ்லேந்து ஃபோன் பண்ணினாராம். ராத்திரி ஓட்டல்ல டின்னர் சாப்பிட்டுட்டு, நைட் ஷோ போகலாம்னு சொன்னாராம். அவளுக்கு ஒரே சந்தோஷம். அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினா!" என்றாள்.

"அடிச்சுக்கறது, அப்புறம் சேந்துக்கறது! என்ன இது? நாம எப்படி இருக்கோம் பாரு! எனக்குப் பெருமையா இருக்கு!" என்றான் தரணிதரன்.

"சண்டை போட்டுக்கிட்டு, அப்புறம் சேர்ந்துக்கறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கலாம் இல்ல?" என்ற உமா, 'எனக்கு நம்ம வாழ்க்கை உப்புச் சப்பில்லாம இருக்கற மாதிரி இருக்கு. கலாவைப் பார்த்தாப் பொறாமையா இருக்கு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)
குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

பொருள்:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால், அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...