"ஊர்லதான் இருக்கா!" என்றான் விஜய், சலிப்புடன்.
"அப்புறம் ஏன் அவளைப் பாக்கப் போகல? அவளுக்கு ஏதாவது எக்ஸாமா இப்ப?"
"அவளுக்கு எதுவும் இல்லை. எனக்குத்தான் எக்ஸாம்!"
"உனக்கு ஏதுடா எக்ஸாம்?" என்றான் சபரீஷ், புரியாமல்.
"டேய், டியூப்லைட்! அவனோட காதலி அவனை சோதிக்கறாளாம்! அதைத்தான் எக்ஸாம்கறான்! அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"கரெக்டா சொல்லிட்டியே! உனக்கும் இது மாதிரி சோதனையெல்லாம் நடந்திருக்கா என்ன?" என்றான் விஜய், சிரித்துக் கொண்டே.
"எனக்கு எப்படி நடக்கும்? எனக்குத்தான் காதலியே இல்லையே! உன்னை மாதிரி எல்லாரும் அதிர்ஷ்டக்காரங்களா இருப்பாங்களா என்ன?" என்றான் சிவா, பெருமூச்சுடன்.
"டேய்! சோதனைன்னு பேசி நீங்க ரெண்டு பேரும் என் பொறுமையைத்தான் சோதிக்கிறீங்க! என்னடா சோதனை?" என்றான் சபரீஷ்.
"நீ ஒரு டியூப்லைட்டுங்கறதைத் திரும்பித் திரும்ப வெளிக்காட்டணுமா என்ன? காதலி அவனை சோதிக்கிறான்னா, காதலியோட ஏதோ சண்டைன்னு அர்த்தம். அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"ஆமாம். ஒரு சின்ன விஷயம். அதுக்குக் கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டா. நான் அவளைப் போய்ப் பார்க்கவும் கூடாதாம்!" என்றான் விஜய்.
"அப்படின்னா, உன் காதல் அவ்வளவுதானா? பலூன் மாதிரி வெடிச்சுடுச்சா?" என்றான் சபரீஷ்.
"உன்னை எத்தனை தடவை டியூப்லைட்னு சொல்றதுன்னு தெரியல! எனக்கு அலுத்தே போச்சு. காதலியோட சண்டை போட்டா, காதல் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? ஊடல்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டதில்ல?" என்றான் சிவா.
"ஓ, அதுவா?" என்றான் சபரீஷ் சுருக்கமாக. மறுபடி ஏதாவது சொல்லித் தன்னை ஒரு டியூப்லைட் என்று மீண்டும் உறுதிப்படுத்த அவன் விரும்பவில்லை.
"எதுக்குடா அவளோட சண்டை போட்ட?" என்றான் சிவா.
"இவன் போட்டானோ, அவ போட்டாளோ!" என்றான் சபரீஷ்.
"இவனை மாதிரி ஒத்தனுக்கு ஒரு காதலி கிடைச்சதே ஒரு பெரிய அதிர்ஷ்டம். சண்டை போட்டு, அதைக் கெடுத்துப்பானா என்ன? அவதான் போட்டிருப்பா. அப்படித்தானேடா?" என்றான் சிவா.
"இல்லை. நான்தான் சண்டை போட்டேன்!" என்றான் விஜய்.
"ஏண்டா? கொழுப்புதானே?" என்றான் சபரீஷ்.
"ஆறு மாசமா அவளைக் காதலிக்கறேன். இது வரையிலேயும், எங்களுக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் வரலை. ஒரு தடவையாவது சண்டை போட்டாதான், காதல்ல சுவாரசியம் இருக்கும்னு நினைச்சேன். அதோட, அவளோட கோபத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதனாலதான், சின்னதா ஒரு சண்டை போட்டேன். அவளும் கோவிச்சுக்கிட்டு என்னோட பேச மாட்டேன்னுட்டா!"
"முட்டாளாடா நீ? அவ உன் மேல நிரந்தரமாக் கோவிச்சுக்கிட்டு, உங்க காதல் முறிஞ்சு போச்சுன்னா, என்ன செய்வே?" என்ற சபரீஷ், ஒருவேளை, தான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்து, சிவாவைப் பார்த்தான்.
"டேய், டியூப்லைட்!" என்று சிவா ஆரம்பப்பதற்குள், விஜய்யின் கைபேசி ஒலித்தது.
"அவதான்!" என்று சொல்லி விட்டு, வாய் நிறையச் சிரிப்புடன், ஃபோனில் பேசுவதற்காகச் சற்று விலகிச் சென்றான் விஜய்.
ஒரு நிமிடம் கழித்து, ஃபோன் பேசி விட்டுத் திரும்பிய விஜய்யின் முகத்தில உற்சாகம் கொப்பளித்தது.
"பைடா! மெரினாவுக்கு வரச் சொல்லி இருக்கா. நாளைக்குப் பாக்கலாம்!" என்று கூறி விட்டுக் கிளம்பினான் விஜய்.
"கொடுத்து வச்சவன்!" என்றான் சபரீஷ்.
அதை ஆமோதிப்பது போல், தலையசைத்தான் சிவா.
கற்பியல்
No comments:
Post a Comment