Sunday, April 26, 2020

1101. காதலில் விழுந்தேன்!

வார இறுதி நாட்களில் கோபாலைப் பிடிக்கவே முடியாது. ஹோட்டல், சினிமா என்று எங்காவது போய்க் கொண்டிருப்பான். 

கோபால் நல்ல வேலையில் இருந்து கை நிறையச் சம்பாதித்து வந்ததால், அவன் பெற்றோர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் வரும்போது திருமணம் செய்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள். 

கோபால் பெரும்பாலும் வெளியில் சுற்றுவது அவன் நண்பன் செந்திலுடன்தான். ஆயினும் எல்லா வார இறுதி நாட்களிலும் கோபாலுடன் வெளியில் சுற்றுவது செந்திலுக்கு சற்று சிரமமாக இருந்தது. ஒரு புறம் பொருளாதார ரீதியாக செந்தில் அவ்வளவு வசதியானவன் இல்லை என்பதால் ஹோட்டல், சினிமா என்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணிசமான தொகையைச் செலவழிப்பது அவனுக்கு ஒரு சுமையாக இருந்தது என்றால், மறுபுறம் இந்தப் பழக்கத்தை அவன் பெற்றோர்கள் ஆதரிக்கவில்லை.

ஆயினும் கோபால் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் விடுவான். சில சமயம் செந்தில் வீட்டுக்குச் சென்று அவன் பெற்றோர்களிடமே பேசி செந்திலை அழைத்துக்கொண்டு போய் விடுவான்.

"ஏண்டா இப்படி வெறி பிடிச்ச மாதிரி வாராவாரம் ஹோட்டல், சினிமான்னு சுத்தற" அதுவும் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ளேயும்! சனியோ, ஞாயிறோ ஒரு நாளைக்கு மட்டும் போனாலாவது பரவாயில்ல!" என்று செந்தில் அவனிடம் பல முறை சொல்லி விட்டான்.

"டேய்! வாழ்க்கையை அனுபவிக்கணும்டா! கடவுள் நமக்கு அஞ்சு புலன்களைக் கொடுத்திருக்கார். அந்த அஞ்சு புலன்களுக்கும் அனுபவ சுகத்தை நாம கொடுக்க வேண்டாமா? நல்ல தியேட்டருக்குப் போனா, படம் பாக்கறது கண்ணுக்கும், காதுக்கும் விருந்து, ஏசியோட இதமான குளிரும், சொகுசான சீட்டில இஷ்டப்படி சாஞ்சுக்கிட்டு உக்காந்துக்கறது உடம்புக்கு சுகம், ஏசி தியேட்டர்ல போடற பர்ஃப்யூமோட மணம் மூக்குக்கு சுகம், நல்ல ஹோட்டல்ல ருசியா சாப்பிடறது நாக்குக்கு சுகம். இதாண்டா வாழ்க்கையை அனுபவிச்சு வாழற வழி!" என்பான் கோபால்.

"சரியான ரசிகன்தாண்டா நீ?" என்பான் கோபால்.

 ரண்டு மூன்று வாரங்களாக செந்திலால் கோபாலைப்  பார்க்க முடியவில்லை. ஒரு வார இறுதியில் கோபால் தன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்திருந்த செந்தில் அவன் வராததால் ஏமாற்றமடைந்தான்.

திங்கட்கிழமையன்று  செந்தில் கோபாலுக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஏதோ முக்கியமான வேலை இருந்ததாகச் சொன்னான் கோபால்.

அடுத்த வார இறுதியிலும் கோபால் வரவில்லை. செந்தில் ஃ போன் செய்தபோது கோபால் ஃ போனை எடுக்கவில்லை. 

முன்றாவது வார இறுதியில் செந்தில் கோபால் வீட்டுக்குப் போய்ப் பார்த்தான்.

"அவன் காலையிலேயே கிளம்பிப் போயிட்டானே! உன்னோடதான் எங்கியோ போறான்னு நினைச்சேன்" என்றாள் கோபாலின் தாய்.

செந்தில் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

அன்று இரவு கோபால் செந்திலுக்கு ஃபோன் செய்தான். "வீட்டுக்கு வந்திருந்தியாமே? சாரிடா! உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாளைக்குக் காலையில நானே உன் வீட்டுக்கு வரேன்" என்றான்.

றுநாள் செந்தில் வீட்டுக்கு வந்த கோபால் அவன் அறைக்குள் இருவரும் தனிமையில் இருந்தபோது, "ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா! நான் ஒரு பெண்ணைக் காதலிக்கறேன்!" என்றான்.

"அடப்பாவி! எத்தனை நாளாடா?"

"ஒரு மாசமாத்தான்!"

"அதான் மூணு வாரமா வீக் எண்ட்ல என்னைக் கூப்பிடறதில்லையா? எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவளோட சுத்தறியாக்கும்! எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல?  நான் உன்னை எதிர்பாத்து ஏமாறாம இருந்திருப்பேன்!" என்றான் செந்தில் குற்றம் சொல்வது போல்.

"சாரிடா! இதையெல்லாம் உடனே சொல்ல முடியுமா? முதல்ல நான்  அதை உறுதிப் படுத்திக்கணும் இல்ல?"

"அதான் மூணு வாரமா அவளோட சுத்தறியே, இன்னும் என்ன உறுதிப்  படுத்திக்கறது?" என்ற  செந்தில், "அவளோடயும் சினிமா, ஹோட்டல்னுதானே சுத்தற? மால்ல பர்ச்சேஸ் எல்லாம் கூட இருக்குமே!" என்றான்.

"அதெல்லாம் இல்ல. அவளுக்கு தியேட்டருக்குப் போறது, ஹோட்டலுக்குப் போறதிலேல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. கோவில், பார்க், மியூசியம், ஜூ, பீச்  இது மாதிரி இடங்களுக்குப் போகத்தான் அவளுக்கு விருப்பம். அதனால இங்கெல்லாம்தான் போனோம். ஐயா சினிமா பாத்தே மூணு வாரம் ஆச்சு, தெரியுமா!" என்றான் கோபால் சிரிப்புடன்.

"ஐம்புலன்களாலேயும் இன்பங்களை அனுபவிக்கணும்னு சொல்லுவியே? அதெல்லாம் இப்ப போச்சா?" என்றான் செந்தில் கேலியாக.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கோபால், "இல்லடா! ஐம்புலன்களுக்கான இன்பமும் அவ கிட்டயே இருக்குடா! அவள் முகத்தைப் பாக்கறதும் அவ பேச்சையும், அவள் வளையல் சத்தத்தையும் கேக்கறதும், அவ கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறதும், அவ தலையில இருக்கற பூவோட நறுமணத்தை அனுபவிக்கறதும், அப்புறம் எப்பவாவது..." என்று இழுத்தான் 

"புரியுது, புரியுது! முத்தக்காட்சியெல்லாம் சென்சார்ல கட்!" என்றான் செந்தில் சிரித்தபடி.

"எப்பவாவது ஒரே தின்பண்டத்தை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறதும்ன்னு சொல்ல வந்தேன்!" என்றான் கோபால். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

பொருள்:
கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களின் இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடமே உள்ளன.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...