Saturday, April 25, 2020

1100. அவளும் நோக்கினாள்!

பெண் பார்த்து முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப யத்தனித்தபோது, பெண்ணின் தாய் கௌரி தன் கணவன் பசுபதி அருகில் வந்து அவர் காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள்.

பசுபதி சற்றுத் தயங்கி விட்டு, பையனின் தந்தை ராமசாமியைப் பார்த்து, "நீங்க தப்பா நினைக்கலேன்னா, எங்க பொண்ணு கலா உங்க பையன்கிட்ட தனியாப் பேசணும்னு நினைக்கறா!" என்றார்.

"இதென்ன புது வழக்கமா இருக்கு? நாங்க கேள்விப்பட்டதில்லையே இப்படி?" என்றாள் பையனின் அக்கா சுமதி.  

பையனின் தாய் சுந்தரி தன் பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டுக் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

மனைவியிடம் சம்மதம் கேட்பது போல் அவளைப் பார்த்து முக ஜாடை செய்த ராமசாமி, மனைவி அரைச் சம்மதத்துடன் தலையாட்டியதும், பசுபதியைப் பார்த்து, "அதுக்கென்ன பேசட்டுமே!" என்றார். 

பிறகு பெண்ணின் பெற்றோர் எதோ தப்பு செய்து விட்டதைப் போல் சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதை கவனித்த ராமசாமி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, "இது நம்ப காலம் இல்லையே! 1970ஆம் வருஷம். சந்திரனுக்கே ராக்கெட் விட்டுட்டாங்க. இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னால பையனும் பெண்ணும் பேசிப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கறது சகஜம்தானே!  இதோ இருக்காளே என் பொண்ணு சுமதி அவளுக்குப் போன வருஷம்தான் கல்யாணமாச்சு. தன்னைப் பெண் பாக்க வந்தப்ப தான் இப்படிக் கேக்காம விட்டுட்டமேங்கற குறையிலதான் இது வழக்கமில்லையேன்னு சொல்லியிருக்கா. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க!" என்று சொல்லி விட்டுத் தன் பெண் சுமதியைப் பார்த்துச் சிரிக்க, அவள் அவரை முறைத்தாள். 

க்கத்தில் இருந்த அறைக்குக் கலா முதலில் செல்ல, பிறகு சேகர் சென்றான். அந்த அறை மற்றவர்கள் அமர்ந்திருந்த முன்னறைக்குப் பின்னால் அமைந்திருந்ததால் இவர்களை யாரும் பார்க்க முடியாது. இவர்கள் பேசுவதும் யாருக்கும் கேட்காது. 

அந்த அறையில் நாற்காலி ஏதும் இல்லை. கலா சுவர் ஓரத்தில் போய் நிற்க, அவளுக்கு எதிரில் போய் நின்றான் சேகர்.

பெண் பார்க்கும் படலத்தின்போது குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த கலா இப்போது தலை நிமிர்ந்து அவன் முகத்தை நேரே பார்த்தாள். சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். சேகருக்கு அவள் அப்படிப் பார்த்தது சங்கடமாக இருந்தாலும், அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "சரி. வாங்க போகலாம்!" என்றாள் கலா.  

"என்ன கலா? எங்கிட்ட எதோ பேசணும்னு சொல்லி இங்க அழைச்சுக்கிட்டு வந்துட்டு, சும்மா ரெண்டு நிமிஷம் பாத்துக்கிட்டே இருந்துட்டு போகலாங்கற?" என்றான் சேகர் வியப்புடன். 

"எல்லார் முன்னாலயும் உங்க முகத்தை சரியா பாக்க முடியல. உங்களை நேருக்கு நேரா பாக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். கொஞ்ச நேரம் உங்களை நேருக்கு நேராப் பாத்ததிலேயே உங்ககிட்ட பேசி உங்களைப் புரிஞ்சுகிட்ட திருப்தி கிடைச்சுடுச்சு எனக்கு!" என்று சொல்லிச் சிரித்த கலா, "ஆமாம். நீங்களும் எதுவும் பேசலியே? இப்ப ஏதாவது கேக்கணுமா?" என்றாள்.

"வேண்டாம்! எனக்கும் உன்னை மாதிரிதான் தோணுது. உள்ள வரப்ப, உன்கிட்ட தனியாப் பேசணுங்கற ஆசையிலதான் வந்தேன். ஆனா உன்னைப் பாத்துக்கிட்டே இருந்ததில அந்த ஆசையெல்லாம் அடங்கிப் போயிடுச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் சேகர்.

சிரித்தபடியே சேர்ந்து நடந்து வந்த இருவரையும், இருவரின் பெற்றோர்களும் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல்  
குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
பொருள்:
காதலர்கள் ஒருவர் கண்ணால் மற்றவர் கண்ணை நோக்கி ஒன்று பட்ட உணர்வு கொண்டு விட்டால், அதற்குப் பிறகு வாயால் பேசிக்கொள்ளும் சொற்களுக்கு ஒரு பயனும் (தேவையும்) இல்லை.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...