Monday, May 4, 2020

1102. குருராஜனுக்கு வந்த நோய்

"என்னடா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா என்ன?"

கடந்த சில நாட்களாக குருராஜனைப் பார்த்துப் பலரும் கேட்கும் கேள்வி இது.

"இல்லையே! நல்லாத்தானே இருக்கேன்!" என்று குருராஜன் பதில் சொன்னாலும் தன்னிடம் ஒருசோர்வு இருப்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். 

மருத்துவரிடம் சென்றான். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "உடம்பில ஒண்ணும் பிரச்னை இல்ல. நல்லாத்தான் இருக்கீங்க. ரெண்டு நாள்  எங்கேயாவது வெளியூர் போயிட்டு வாங்க. சில சமயம் சின்ன இட  மாறுதல், சூழ்நிலை மாறுதல் உடம்புக்கும் மனசுக்கும் ஒரு சக்தியைக் கொடுக்கும்" என்றார் மருத்துவர்.  

ஒரு கிராமத்திலிருந்த அவன் நண்பன் ஒருவன் நீண்ட நாட்களாக குருராஜனைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் யோசனையைச் செயல்படுத்தும் விதமாக நண்பனின் கிராமத்துக்குச் சென்றான் குருராஜன்.

கிராம சூழ்நிலை ரம்மியமாகத்தான் இருந்தது. நண்பனோடு இருந்ததும் மனதுக்கு உற்சாகமாகத்தான் இருந்தது. ஆயினும் அப்போதும் குருராஜன் சோர்வை உணர்ந்து கொண்டிருந்தான்.

நண்பன் கூட, "ஏண்டா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா? எங்க ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. அவரு நாடியைப் பாத்தே என்ன பிரச்னைன்னு சொல்லிடுவாரு" என்றான்.

நாட்டு வைத்தியரிடம் சென்றார்கள். அவர் நாடியைப் பார்த்து விட்டு,  "நாடி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட்டணத்துத் தம்பிக்கு கிராம வாழ்க்கை சலிப்பா இருக்கலாம். ஊருக்குப் போனவுடனே சரியாயிடும்!" என்றார் அவர்.

குருராஜனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

கிராமத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய பிறகும் குருராஜனின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்களால் கூடக் கண்டு பிடிக்க முடியாத பெரிய நோய் தனக்கு வந்திருக்குமோ என்ற அச்சம் குருராஜனுக்கு ஏற்பட்டது. 

ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. இத்தனை நாட்களாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தான்.

அடுத்த நாள் காலை பஸ் பிடித்துப் பக்கத்து ஊரிலிருந்த அத்தை வீட்டுக்குப் போனான்.

"என்னடா? இத்தனை நாளா இந்த அத்தை இருக்கறதையே மறந்துட்டேன்னு  நெனச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து நின்ன. ஒரு மாசம் கழிச்சு இப்ப மறுபடி வந்திருக்க. அத்தை மேல இப்பதான் பாசம் வர ஆரம்பிச்சிருக்கா உனக்கு?" என்றாள் அத்தை.

"என்ன அத்தை இது? சின்ன வயசிலேயே என் அம்மா போயிட்டாங்க. இப்ப அப்பாவும் போயிட்டாரு. எனக்கு இருக்கற உறவு நீ மட்டும்தானே!" என்றான் குருராஜன்.

"உன் அப்பா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பதான் உனக்கு இது தோணிச்சாக்கும்!" என்றாள் அத்தை. 

சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்காக அத்தை உள்ளறைக்குப் போய் விட்டாள்.

தாழ்வாரத்தில் அவன் தனியே அமர்ந்திருந்தபோது அத்தை பெண் வனஜா அங்கே வந்தாள். அவனுக்குப் பின்னே வந்து நின்று அவன் தோளைத் தொட்டாள்.

வனஜாவின் ஸ்பரிசம் குருராஜின் உடலில் சிலீரென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. திரும்பி அவளைப் பார்த்தான். 

"என்ன வனஜா! உன்னைப் பாக்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இத்தனை நேரம் உன்னைக் கண்ணிலேயே காணோம்?" என்றான் குருராஜன்.

"ம்? நீ என்னைப் பாக்கவா வந்தே? உன் அத்தையைப் பாக்கத்தானே வந்தே?" என்றாள் வனஜா குறும்பாகச் சிரித்தபடி.

"சொல்ல மாட்ட? உன்னைச் சின்னப் பொண்ணாதான் பாத்திருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு அத்தையைப் பாக்க போன மாசம் வந்தப்பத்தான் முதல் தடவையா உன்னைப் பெரிய பொண்ணாப் பாத்தேன். அப்ப உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போனப்பறம் இந்த ஒரு மாசமா என் உடம்பும் மனசும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாக்கறவங்கள்ளாம் உனக்கு என்னடா ஆச்சுங்கறாங்க. சரி மறுபடி உன்னைப் பாத்துப் பேசினாத்தான் சரியாப் போகும்னு நெனச்சு ஆசையா ஓடி வந்திருக்கேன். அத்தையைப் பாக்கத்தானே வந்தேன்னு சொல்லிக் காட்டற?" என்றான் குருராஜன் போய்க் கோபத்துடன். 

அதற்குப் பிறகு இருவரும் ஒருவர் கையை மற்றவர் பற்றியபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

காமத்துப்பால்  
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

பொருள்:
நோய்களுக்கு மருந்து வேறு பொருட்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் விளைந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...