Thursday, May 7, 2020

1103. தோள் கண்டேன் தோளே கண்டேன்!

அங்கே போவது விப்ரநாராயணர்தானே?" 

"ஆமாம். அவரேதான்." 

"ஆஹா! என்ன ஒரு இறை பக்தி! ஒரு குடலை நிறையப் பூக்களுடன் கிளம்பி விட்டாரே, அரங்கன் ஆலயத்துக்கு!"

"அவர் செல்வது அரங்கன் ஆலயத்துக்கல்ல! அரங்கன் ஆலயத்துக்குச் செல்வதென்றால், காலைப்பொழுதில்தானே பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி எடுத்துச் செல்வார்? இது போல் இருட்டும் நேரத்திலா செல்வார்?"

"ஆமாம். உண்மைதான். பின்னே, வேறு எங்கு போகிறார்?"

"அவர் அரங்கனை மறந்துப் பல மாதங்கள் ஆகி விட்டன. இப்போது, தன்  குடிலையே தேவதேவியின் ஆலயமாக அல்லவா மாற்றி விட்டார் விப்ரநாராயணர்! இப்போது அவர் பூக்களை எடுத்துச் செல்வது அவருடைய அன்புக்குரிய தேவிக்குத்தான்!"

"அடப்பாவமே! அரங்கனின் அடியே கதி என்று இருந்தவர், இன்று ஒரு அணங்கின் மடியே கதியென்று கிடக்கிறார் என்று சொல்லுங்கள்!"

"பொழுது விடிந்து விட்டது அன்பரே, எழுங்கள்!" என்றாள் தேவதேவி.

"என்னால் முடியாது. நீ வேண்டுமானால் எழுந்து செல்!" என்றார் விப்ரநாராயணர்.

"ம்? நான் எப்படி எழுந்திருப்பது? என் தோளில் அல்லவா தாங்கள் தலை வைத்துப் படுத்திருக்கிறீர்கள், ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் அரங்கன் போல்!" 

விப்ரநாராயணர் சட்டென்று எழுந்து கொண்டார்.

"என்ன பிரபு, ஏன் எழுந்து விட்டீர்கள்?"

"நீ அரங்கன் பெயரைச் சொன்னதும், கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். அரங்கனை தரிசித்துப் பல வாரங்கள் ஆகி விட்டனவே!" என்றார் விப்ரநாராயணர்.

"அரங்கனை தரிசிக்க இப்போது கிளம்பிச் செல்லப் போகிறீர்களா?" என்றாள் தேவதேவி, எழுந்து அமர்ந்தபடி.

"இல்லை" என்ற விப்ரநாராயணர், தேவதேவியின் தோள்களைப் பிடித்து அழுத்தி, அவளை மஞ்சத்தில் தள்ளி, அவள் தோள்களில் மீண்டும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார். "உன் தோள்களில் சாய்ந்து உறங்குவதை விட, ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருக்கும் தாமரைக்கண் கொண்ட அந்த அரங்கனின் உலகம் இனிமையானதா என்ன?" என்று சொல்லி விட்டுக் கண்களை மூடி, மீண்டும் உறங்கத் தலைப்பட்டார்.

"அடப்பாவி மனிதரே!" என்று நினைத்த தேவதேவி, "அரங்கநாதா! என்னிடம் பித்துக் கொண்டு, உன்னையே மறந்து விட்ட உன் பக்தருக்கு நீதான் அருள் புரிய வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தது போல், அரங்கனின் ஆலய மணி ஒலித்தது. 

விப்ரநாராயணரின் மீது திருட்டுப் பட்டம் விழ வைத்து, அவரை ஆட்கொண்டு, மீண்டும் தன் பக்தராக்கித் தன் மீது திருமாலை என்ற பாமாலையும், திருப்பள்ளி எழுச்சி என்ற சுப்ரபாதமும் பாடி, தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற பெயர் பெற்று, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் புகழ் பெற்றவராக ஆக்க அரங்கன் போட்டிருக்கும் திட்டம்  துவங்கப்போவதன் அறிவிப்புதான் அந்த மணி என்பதை தேவதேவி அப்போது அறிந்திருக்கவில்லை!   

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

பொருள்:
தான் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதை விட தாமரைக் கண்ணனின் உலகம் இனிமையானதா என்ன?

Read 'Vipranarayana' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...