
"போய்ப் படுத்துக்க!" என்றான் கார்த்திக்.
"டேய்! இது என் வீடுடா!"
"இருந்தா என்ன? நான் உன்னோட கெஸ்ட். கெஸ்ட்டோட வசதிக்கு முன்னுரிமை கொடுக்கறதுதானே பண்பாடு?"
"வசதிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்டா. பைத்தியக்காரத்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது! நீ வேணும்னா கொஞ்சம் வெளியில போய்த் தெருவில நடந்து பாத்துட்டு வா. யார் வீட்டிலேயாவது ஏசி ஓடுதான்னு பாரு!" என்றான் நிகில்.
"டேய்! எனக்கு உடம்பு வேகுது, ஏசி போடுன்னு கேட்டா மத்தவங்க வீட்டில எல்லாம் ஏசி ஓடுதான்னு பாக்கச் சொல்ற?" என்றான் கார்த்திக்.
"நேத்து ராத்திரி ஃபேன் கூட வேண்டாம், குளிருதுன்னு சொன்னே! இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா? மத்தியானம் எங்கேயோ போயிட்டு வந்ததில, உனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். எங்கே போயிட்டு வந்தே?"
"அதெல்லாம் சொல்ல முடியாது!" என்றான் கார்த்திக்.
அன்று பிற்பகல் நடந்த விஷயம் அவன் நினைவில் ஓடியது.
கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவன் மாமா பெண் கமலி, விடுமுறையில் அவள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து, அவளைப் பார்க்க, அவள் வீட்டுக்குச் சென்றான் கார்த்திக்.
மாமா வீட்டில், கமலியின் அறையில், அவளிடம் ஒரு மணி நேரம் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வது என்று இருவரின் பெற்றோர்களும் முன்பே நிச்சயித்து விட்டதால், அவன் கமலியுடன் தனியே பேசுவதை அவள் பெற்றோர் அனுமதித்தார்கள்.
கமலியின் அறை மாடியில் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடி என்பதால், மாடியறையில் வெப்பம் அதிகமாக இருந்தது. டிசம்பர் மாதம் என்றால் கூட, சென்னையைப் பொருத்தவரை, பகல் வேளைகள் எப்போதுமே கோடைதானே! கமலியின் அறையில் ஏசி இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை. எனவே, ஃபேன் ஓடிக் கொண்டிருந்தது.
கமலியிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக், சற்று நேரத்துக்குப் பின், அவளிடம், "கமலி! குளிருதே! ஃபேனை அணைச்சுடறியா?" என்றான்.
"குளிருதா? ஃபேன் ஓடறப்பவே, எனக்கு ஒரே சூடா இருக்கு. உனக்கென்ன ஜுரமா என்ன?" என்றாள் கமலி.
"இல்ல, முதல்ல எனக்கும் சூடாத்தான் இருந்தது. ஆனா, உன் பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கச்சே, சூடெல்லாம் போய், குளிர ஆரம்பிச்சுடுச்சு!" என்றான் கார்த்திக்.
கமலி அவனை முறைத்தாள், ஆனால், ஃபேனை அணைக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த மீதி நேரமும் கார்த்திக்கிற்கு உடல் குளிருவதாகத்தான் தோன்றியது.
'குளிருகிறது, ஃபேனை அணை என்றால் கமலி கேட்கவில்லை. இப்போது என்னவென்றால், சூடாக இருக்கிறது ஏசி போடு என்றால் நண்பன் முடியாது என்கிறான்! என்ன ஆயிற்று இவர்களுக்கு?' என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.
களவியல்
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.
பொருள்:
நீங்கினால் சுடுகிறது, நெருங்கினால் குளிர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதுவிதமான தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?
No comments:
Post a Comment