ஊர்வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கிழவிக்கு என்னைச் சீண்டிப் பார்க்காவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. தினமுமா இதே கேள்வியைக் கேட்பாள்?
"அவர் வந்ததும், முதல்ல உங்ககிட்ட வந்து சொல்றேன், பாட்டி!" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள் மல்லிகா.
அவள் சிந்தனை ராக்காயின் கேள்வியைத் தொடர்ந்து ஓடியது.
'அவ எங்கே இருக்கார்னும் தெரியாது, எப்ப வருவார்னும் தெரியாது!'
திடீரென்று மல்லிகாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது:
'ஒருவேளை, அவர் வராமலே போயிட்டா?
சேச்சே! அது எப்படி வராமப் போவாரு? நான் அவருக்காகக் காத்திருக்கறது அவருக்குத் தெரியாதா?
'ஒருவேளை, அவர் பிரிவைத் தாங்காம நான் உயிரை விட்டிருப்பேன்னு நினைச்சிருப்பாரோ? அப்படி நினைச்சு, வராமலே இருந்துட்டா?'
இந்த எண்ணம் மல்லிகாவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
'நான் கல்நெஞ்சுக்காரி. அதனால, உங்க பிரிவைத் தாங்கிக்கிட்டு, இன்னும் உயிரோடதான் இருக்கேன். நீங்க எவ்வளவு காலம் கழிச்சுத் திரும்பி வந்தாலும், இந்த உயிரைப் பிடிச்சுக்கிட்டு உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்!'
இந்தச் செய்தியை அவருக்கு எப்படித் தெரிவிப்பது? அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தால், அந்த ஊருக்குச் செல்லும் யாரிடமாவது சொல்லி அனுப்பலாம்! ஆனால், அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்றே தெரியவில்லையே!
இரவு வந்து விட்டது. வழக்கம் போல் உறக்கம் வரவில்லை.
'கண்களே! இன்று ஒரு நாளாவது உறங்குங்களேன்! அப்படி உறங்கினால், அந்த உறக்கத்தில் கனவு வரும். கனவு வந்தால், அதில் என் கணவர் வருவார். அவரிடம் நான் உயிருடன் இருக்கும் செய்தியைச் சொல்லுவேன். எனவே, கண்களே, என்னிடம் இரக்கம் காட்டிக் கொஞ்சம் உறக்கம் கொடுங்கள்!'
படுக்கையில் படுத்துக் கொண்டு, உறங்கும் முயற்சியில் கண்களை மூடிக் கொண்டாள் மல்லிகா.
கனவுநிலை உரைத்தல்
பொருள்:
நான் வேண்டுவதற்கு இணங்கி, என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.