Sunday, June 16, 2024

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும், அவர் மனைவி பிரேமாவும் வசித்து வந்தனர்.

நாகராஜன் பிரேமா தம்பதி 60 வயதுக்கு மேலானவர்கள். அவர்களுடைய இரண்டு மகன்களும், ஒரு மகளும் வெளிநாடுகளில் வசித்து வந்தனர்.

மதனும், திவ்யாவும் அந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். கீழ் வீட்டிலிருந்து, நாகராஜனும், பிரேமாவும் உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொள்வது கேட்டது.

"இப்படியா எல்லாருக்கும் கேக்கும்படியா சண்டை போடுவாங்க?" என்றாள் திவ்யா.

"இந்த வயசில, இவங்களுக்குள்ள எதுக்கு இவ்வளவு பெரிசா சத்தம் போட்டுக்கற அளவுக்கு சண்டை வரணும்?" என்றான் மதன்.

சற்று நேரத்தில் வாக்குவாதம் முடிந்து விட்டது போல் தோன்றியது.

ஆனால், பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. அவர்கள் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் இவர்கள் காதுகளில் விழுந்தன.

"கல்யாணம் ஆகி இவ்வளவு நாள்ள, என்னிக்கு நீ என் பேச்சைக் கேட்டிருக்க?" என்றார் நாகராஜன்.

"சும்மா சொல்லாதீங்க. இவ்வளவு வருஷமா, நான் உங்க பேச்சைத்தான் கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரு மாறுதலுக்கு, இப்ப என் பேச்சை நீங்க கேளுங்க!" என்றாள் பிரேமா.

"என்ன, இந்தப் பெரிசுங்க இப்படி சண்டை போடுதுங்க?" என்றாள் திவ்யா.

"நல்லவேளை, நாம இவங்க மாதிரி இல்ல!" என்றான் மதன்.

ஆனால், மதன் கூறியது தவறு என்று சில மாதங்களில் நிரூபணமாகியது.

ஒருநாள் காலையில், மதனுக்கும் திவ்யாவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, மதன் கோபித்துக் கொண்டு, காலை உணவு உண்ணாமலும், மதிய உணவை எடுத்துக் கொள்ளாமலும் அலுவலகத்துக்குச் சென்று விட்டான்.

அன்று பிற்பகல், பிரேமா மாடி ஏறி திவ்யாவின் வீட்டுக்கு வந்தாள்.

"என்ன திவ்யா, எப்படி இருக்க?" என்றாள் பிரேமா.

"வாங்கம்மா. உக்காருங்க!" என்றாள் திவ்யா.

"என்ன, அழுதிருக்க போலிருக்கே! புருஷன்காரன் சண்டை போட்டுட்டு, உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, சாப்பிடாம, சாப்பாடு எடுத்துக்காம போனா வருத்தமாத்தான் இருக்கும்!"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லையே!" என்றாள் திவ்யா.

"நீங்க காலையில சண்டை போட்டுக்கிட்டது எனக்குக் கேட்டது. எங்களை மாதிரி நீங்க இரைஞ்சு பேசி சண்டை போட்டுக்காட்டாலும், நீங்க பேசிக்கிட்டது கொஞ்சம் கொஞ்சம் என் காதில விழுந்தது. எப்பவும் கையில லஞ்ச் பாக்சோட ஆஃபீசுக்குப் போற உன் புருஷன், இன்னிக்கு அது இல்லாம போனதையும் கவனிச்சேன்!"

பிரேமா இதைச் சொல்லி முடிப்பதற்குள், திவ்யா அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். "சின்ன விஷயம்தான், ஆன்ட்டி. அதுக்காக என்மேல கோவிச்சுக்கிட்டு, டிஃபனும் சாப்பிடாம, லஞ்ச்சும் எடுத்துக்காம போயிட்டாரு!" என்றாள் திவ்யா, அழுகையினூடே.

"திருமண வாழ்க்கையில, கணவன் மனைவிக்குள்ள இது மாதிரி சண்டை வரது இயல்பானதுதான். நாங்க அடிக்கடி சண்டை போட்டுக்கறதை நியாயப்படுத்தறதுக்காக இதைச் சொல்லல. நீ நினைச்சுப் பாத்தா, உங்க அப்பா அம்மா சண்டை போட்டுக்கிட்ட சம்பவங்கள் உனக்கு ஞாபகம் வரும். கணவன் மனைவிக்குள்ள சண்டை வரது நல்லது. ஏன் தெரியுமா?" என்றாள் பிரேமா.

"ஏன் ஆன்ட்டி?"

"சண்டை வந்தாதான், அன்பு அதிகமாகும். நான் சொல்றது உனக்கு வேடிக்கையா இருக்கலாம். ஆனா, கொஞ்ச நாள்ள நீயே புரிஞ்சுப்ப. ஏன், இன்னிக்கு சாயந்திரம் உன் புருஷன் வீட்டுக்கு வந்தப்புறம் கூட இதை நீ புரிஞ்சுக்கலாம்! அதுக்கப்பறம், 'சண்டை வந்தா நல்லதுதானே, அப்புறம் அன்பு அதிகமாகுமே!'ன்னு உனக்குத் தோணும். நாங்க விரும்பினா, சண்டை போட்டுக்காம இருக்க முடியும். ஆனா, சின்னச் சின்ன சண்டைக்கு அப்புறம், அன்பு அதிகமாகிறதைப் பாத்துத்தான், நாங்க சண்டையைத் தவிர்க்கறது இல்ல!"

அன்று மாலை, மதன் அலுவலகத்திலிருந்து வந்தபோது, திவ்யாவுக்குப் பிடித்த முந்திரி பர்பி வாங்கிக் கொண்டு வந்தான். "லட்சுமி ஸ்வீட்ஸ்ல மட்டும்தான் முந்திரி பர்பி ரொம்ப நல்லா இருக்கும். அந்தக் கடை எங்க ஆஃபீஸ்லேந்து ரொம்ப தூரம். ஆஃபீஸ் முடிஞ்சதும், அங்கே போய் வாங்கிக்கிட்டு வந்தேன்- உனக்காகத்தான்!" என்றான் மதன்.

அன்று இரவு, திவ்யா மதனின் அணைப்பில் இருந்தபோது, ஊடலுக்குப் பின் வந்த அந்த அணைப்பில், அவளுக்கு ஒரு கூடுதல் சுகம் தெரிந்தது. 

பிரேமா ஆன்ட்டி சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டாள் திவ்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

பொருள்:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின், கூடித் தழுவப் பெற்றால், அது அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

நிறைவடைந்தது!
அறத்துப்பால்                                                         பொருட்பால்   

1329. சந்திரனின் விருப்பம்!

சந்திரன் கண் விழித்தபோது, மணி பகல் பதினொன்று ஆகி விட்டது. 

படுக்கையிலிருந்து எழுந்து அவன் சமையலறைக்குள் சென்றபோது, குமாரி சமையல் செய்து கொண்டிருந்தாள்.

சந்திரனைப் பார்த்ததும், "சாருக்கு காப்பியா, பிரேக்ஃபாஸ்டா, லஞ்ச்சா, இல்லை பிரஞ்ச்சா?" என்றாள் குமாரி, கேலியாக.

"நீ எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் சாப்பிட்டுடுவேன். அவ்வளவு அலுப்பா இருக்கு உடம்பு!"

"ஏன் இருக்காது? ராத்திரி கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க, நாலு மணி வரையிலேயும் தூங்காம?"

"மேடம், நீங்க பிடிச்ச பிடிவாத்தினாலதானே, நான் அவ்வளவு நேரம் கண் முழிச்சு, உங்களை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது?"

"பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டா, 'சரிதான் போடி'ன்னுட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு ராத்திரி முழுக்கக் கண் முழிச்சு, அவளைக் கெஞ்சணும், சமாதானப்படுத்தணும்?"

"ஒருவேளை நான் உன்கிட்ட கோவிச்சுக்கிட்டா - அப்படி நடக்காது, ஒருவேளை நடந்தா - நீ வேணும்னா 'சரிதான் போடா'ன்னுட்டுப் போகலாம். நான் அப்படிப் போக மாட்டேன்" என்றபடி, குமாரியை அணைத்துக் கொள்ளப் போனான் சந்திரன்.

"விடுங்க. இது சமையலறை" என்றபடியே, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குமாரி, "சாரி. ராத்திரி ஏதோ அப்படிக் கோபமா நடந்துக்கிட்டேன். இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றாள், கனிவான குரலில்.

"ஐயையோ! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறியே! நேத்திக்கு நடந்ததை அனுபவிச்ச சந்தோஷத்தில, இனிமே நீ தினமும் ராத்திரி என்னோட சண்டை போடணும், ராத்திரி முழுக்க நான் உன்னை சமாதானப்படுத்தணும், அதுக்கு வசதியா, ராத்திரி நேரம் இன்னும் அதிகமாகணும்னுல்ல நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்? ஏன்னா, அதில கிடைக்கிற சந்தோஷத்துக்கு இணையே இல்லையே!" என்று சந்திரன் சொன்னபோது, அவன் உண்மையாகச் சொல்கிறானா, இல்லை தன்னைக் கேலி செய்கிறானா என்று புரியாமல், பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள் குமாரி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

பொருள்:
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும், இராப் பொழுது இன்னும் நீடிப்பதாக.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Saturday, June 15, 2024

1328. அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்!

சுமனுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. கர்லாக் கட்டையைத் தூக்கிச் சுழற்றுவது போன்ற கடுமையான உடற்பயிற்சிகளையும் அவன் செய்வான்.

ஒருநாள், சுமன் உடற்பயிற்சி செய்து முடித்தபோது, அங்கே வந்த அவன் மனைவி நிஷா, "என்ன இது, நெத்தியில இவ்வளவு வியர்வை வழியுது! துடைச்சுக்க மாட்டீங்களா?" என்றபடி, ஒரு துண்டால் அவன் நெற்றியைத் துடைத்தாள்.

"இப்பதான் செஞ்சு முடிச்சேன்" என்றான் சுமன்.

"பொதுவாகவே, உங்களுக்கு வியர்வையை அப்பப்ப துடைச்சுக்கற பழக்கம் கிடையாது!"

சுமன் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

"என்ன அப்படிப் பாக்கறீங்க?"

"அன்னிக்கு ஒருநாள் ராத்திரி என் நெத்தியில இருந்த வியர்வையைத் துடைச்சுட்டு, 'என்ன இது? ஏசி ஓடிக்கிட்டிருக்கறப்ப கூட உங்களுக்கு இப்படி வியர்க்குது? இதுதான் நெத்தி வேர்வை சிந்த உழைக்கறதுங்கறதா?'ன்னு நீ என்னைக் கேலி செஞ்சியே, ஞாபகம் இருக்கா?"

"அதுக்கென்ன இப்ப?" என்றாள் நிஷா, வெட்கத்துடன்.

"அன்னிக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருந்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா?"

"என்ன காரணம்?"

"அதுக்கு முன்னால நாம சண்டை போட்டுக்கிட்டு, அன்னிக்குத்தான் ஒண்ணு சேர்ந்தோம்."

"சரி. அதுக்கென்ன இப்ப?"

"இல்லை, மறுபடி அந்த மாதிரி வியர்த்துப் போற அளவுக்கு ஆகி சந்தோஷம் கிடைக்கணும்னா, மறுபடி நாம சண்டை போட்டுப் பிரிஞ்சுட்டு, அப்புறம் ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு ஏக்கமா இருக்கு!" என்றான் சுமன்.

"மறுபடி எங்கிட்ட சண்டை போட்டீங்கன்னா, நீங்க கையில வச்சுக்கிட்டு சுத்தறீங்களே, இந்த கர்லாக்கட்டையாலேயே உங்க தலையில போட்டுடுவேன்!" என்றபடி, தன் உள்ளங்கையால் அவன் தலையைத் தட்டினாள் நிஷா.
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

பொருள்:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1327. வென்றவர் யார்?

"நான் இதை எதிர்பாக்கல!" என்றான் பாஸ்கர்.

"எதை எதிர்பாக்கல?" என்றாள் கவிதா.

"நீ உன்னோட தப்புக்கு மன்னிப்புக் கேட்டு, நம் ஊடலை முடிச்சு வப்பேன்னு!"

"ஏன் எதிர்பாக்கல?"

"நீ ரொம்பப் பிடிவாதக்காரியாச்சே! ஒரு சின்ன விவாதத்தில கூட, உன்னோட நிலையை மாத்திக்க மாட்டியே! அப்படி இருக்கறப்ப, எப்படி இறங்கி வந்தே?"

"யாராவது ஒத்தர் இறங்கி வந்துதானே ஆகணும்? அதோட, என் மேலயும் தப்பு இருக்குன்னு தோணிச்சு. அதை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேக்கறதில எனக்கு என்ன தயக்கம்? அதுவும், நீங்க என் கணவர். உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறதில, எனக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?"

என்ன சொல்வதென்று தெரியாமல், மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

"நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்!" என்றான் பாஸ்கர்.

"என்ன தப்புக் கணக்குப் போட்டீங்க?"

"நாம சண்டை போட்டுக்கிட்டுப் பேசாம இருந்தப்ப, நீ இறங்கி வந்து எங்கிட்ட மன்னிப்புக் கேட்டதும், நான் ஜெயிச்சுட்டதா நினைச்சேன்!"

"அது சரிதானே? நான்தானே மன்னிப்புக் கேட்டேன்! அப்படின்னா, ஜெயிச்சது நீங்கதானே?"

"இந்த ஒரு வாரமா, நம்ம நெருக்கம் முன்னை விட அதிகமா இருக்கறதைப் பாக்கறப்ப, நீதான் ஜெயிச்சேன்னு தோணுது!"

"அது எப்படிங்க? மன்னிப்புக் கேட்டவங்கதானே தோத்தவங்க?"

"அது பொதுவான விதியா இருக்கலாம். ஆனா, காதலைப் பொருத்தவரையிலும், ஊடலை யார் முடிச்சு வக்கறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்கன்னு இப்ப எனக்குப் புரியுது. அதனால, ஊடல்ல தோக்கறவங்க காதல்ல வெற்றி பெற்றவங்களா ஆறாங்க. அதனால, நீதான் வெற்றி நாயகி!" என்றான் பாஸ்கர். 

கவிதா பெருமையுடன் கணவனைப் பார்த்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

பொருள்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர். அந்த உண்மை, ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் நிலையில் உணரப்படும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1326. மீண்டும் ஊடல்?

லதாவும், அவள் காதலன் தினேஷும், அதிக நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

"சாரி" என்றான் தினேஷ்.

"எதுக்கு?" என்றாள் லதா.

"உன்னோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாள் பேசாம இருந்ததுக்கு."

"நானும்தான் சாரி கேக்கணும்."

"என்னைப் பாக்காத இந்த நாலு நாளும் உனக்குக் கஷ்டமா இருந்ததா?"

லதா கொஞ்சம் யோசித்து விட்டு, "உண்மையைச் சொல்லட்டுமா?" என்றாள்.

"சொல்லு!"

"முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் சந்தோஷமா இருந்தது!"

"என்னைப் பிரிஞ்சு இருந்தது உனக்கு சந்தோஷமா இருந்ததா?" என்றான் தினேஷ், சற்றுக் கோபத்துடன்.

"பாத்தியா, கோவிச்சுக்கறியே! அதுக்குத்தான் முதல்லேயே உண்மையைச் சொல்லட்டுமான்னு கேட்டேன்!" என்றாள் லதா.

"என்னைப் பிரிஞ்சு இருந்தது சந்தோஷமா இருந்ததுன்னு நீதானே சொன்னே?"

"சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். உன்னைப் பிரிஞ்சு இருந்ததாலன்னு சொல்லல. உன்னைப் பிரிஞ்சு தனியா இருந்தப்ப, நாம சேர்ந்து இருந்தபோது கிடைச்ச சந்தோஷத்தை நினைச்சுப்பேன். அந்த நினைவே சந்தோஷமா இருக்கும். அதைத்தான் சொன்னேன்."

"எனக்குப் புரியல!"

சற்றுத் தொலைவில் படுத்திருந்த ஒரு மாட்டைக் கட்டிய லதா, "அந்த மாடு என்ன செய்யுது?" என்றாள்.

"அசை போடுது!"

"அதாவது, கொஞ்ச நேரம் முன்னே சாப்பிட்டதை, இப்ப வாய்க்குக் கொண்டு வந்து, மறுபடி அதை ரசிச்சு சாப்பிடுது. அது மாதிரிதான், நாம சேர்ந்து இருந்தப்ப கிடைச்ச சந்தோஷத்தை, பிரிஞ்சு இருந்தபோது அசை போட்டபோது, சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். இதைப் புரிஞ்சுக்காம..." என்றாள் லதா, சற்றே கோபத்துடன்.

"சாரி, லதா. இப்பதான் எனக்குப் புரியுது. நாம ருசியா எதையாவது சாப்பிட்டா, சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சுக் கூட அந்த ருசி நாக்கில இருக்கும். அது மாதிரிதானே!"

"அப்பா! இப்பவாவது புரிஞ்சுதே! தெரியாத்தனமா, என் மனசில தோணினதை உங்கிட்ட சொல்லிட்டு, நீ அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, மறுபடியும் நமக்குள்ள சண்டை வந்துடுமோன்னு பயந்துட்டேன்!" என்றாள் லதா.

"வந்தா என்ன? அப்பவும் உன்னால சந்தோஷமா இருக்க முடியுமே! இந்த டெக்னிக்கை உங்கிட்டேந்து கத்துக்கிட்டதால, நானும் சந்தோஷமா இருக்க முடியும்" என்றான் தினேஷ்.

"அப்ப, மறுபடி சண்டை போட்டுக்கலாமா?" என்றாள் லதா.

இருவரும் சிரித்தனர்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

பொருள்:
உண்பதை விட, முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது. அதுபோல், காமத்தில் கூடுவதை விட, ஊடுதல் இன்பமானது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Friday, June 14, 2024

1325. அழுது கொண்டே சிரிக்கின்றேன்!

"அவ மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்! காரணமே இல்லாம என் மேல கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டாடா!" என்றான் சுரேன்.

"இந்தப் பெண்களே இப்படித்தான். என் வீட்டில அடிக்கடி நடக்கறதுதான் இது!" என்றான் அவன் நண்பன் மாறன்.

"டேய்! நீ சொல்றது வேற, நான் சொல்றது வேற. நீ அப்பா அம்மா பாத்து நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவன். உனக்குக் காதலைப் பத்தி என்ன தெரியும்?"

"ஆமாம், ஆமாம். என் பிரச்னை வேற, உன் பிரச்னை வேற. காதலி சண்டை போட்டுக்கிட்டுப் பேசாம இருந்தா, நீ ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம். ஆனா, என் மனைவி சண்டை போட்டுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருந்தாலும், நான் அவளோட அதே வீட்டிலதானே இருக்கணும்! அந்தக் கொடுமையெல்லாம் கல்யாணம் ஆன அப்புறம்தான் உனக்குத் தெரியும்!" என்றான் மாறன்.

"ஏண்டா, காதலி சண்டை போட்டுக்கிட்டு உன்னோட பேசாம இருந்தா, ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீ நிஜமாகவே அப்படித்தான் இருக்க போலருக்கு. அவ்வளவுதான் உன் காதலா?" என்றான் மாறன்.

"ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசாம இருக்கறது மனசை உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஆனா, அதையும் மீறி, அவளைப் பாக்காம, அவளோட பேசாம இருக்கறதில ஒரு இன்பம் இருக்கத்தான் செய்யுது!" என்றான் சுரேன்.

"அது எப்படிடா? அவளை விட்டுப் பிரிஞ்சிருக்கறது மனசுக்கு உறுத்தலா இருக்குங்கற, அதில ஒரு இன்பமும் இருக்குங்கற! இது என்ன 'அழுது கொண்டே சிரிக்கின்றேன்' மாதிரியா?"

"நீதான் கல்யாணம் ஆனவனாச்சே! உனக்கு இந்த அனுபவம் வந்திருக்கணுமே!"

"நீதான் சொல்லிட்டியே, காதல் வேற, அப்பா அம்மா நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறது வேறன்னு! அப்படி இருக்கும்போது, உனக்குக் கிடைச்ச அனுபவம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?"

"அது சரிதான். உங்களுக்குள்ள சண்டை வந்தா, சண்டை முடிஞ்சு மனைவி மறுபடியும் பேச ஆரம்பிச்சுடுவாளேன்னு கவலைப்படற ஆள் நீ!"

"சார் எப்படி? உன்னைப் பாத்தா, சண்டை முடிஞ்சு காதலி எப்ப பேசுவாங்கற எதிர்பார்ப்போட இருக்கற ஆள் மாதிரி தெரியலியே! நீதான் பிரிவில இன்பம் இருக்குன்னு சொல்றியே!"

சுரேன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான்.

"ஏண்டா கண்ணை மூடிக்கற? புத்தர் மாதிரி ஞானியாக முடியுமான்னு பாக்கறியா?"

"இல்லை. என் காதலியோட நான் சேர்ந்து இருந்தப்ப இருந்த சந்தோஷத்தை ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிட்டு நினைச்சுப் பார்த்தேன்!"

"அப்ப, அந்த சந்தோஷம் இப்ப இல்லையேங்கற வருத்தம்தானே இருக்கணும்?" என்று சுரேனை மடக்கினான் மாறன்.

"இருக்கு. அதோட நாங்க மறுபடி ஒண்ணு சேரும்போது, அதே சந்தோஷம் மறுபடியும் கிடைக்குமேங்கற எதிர்பார்ப்பும் இருக்கு. இந்த எதிர்பார்ப்புதான் எனக்கு ஒரு இனம் தெரியாத இன்பத்தைக் கொடுக்குதுன்னு நினைக்கறேன். பரவாயில்லை. நான் எந்தத் தப்பும் பண்ணாத நிலையில இந்தப் பிரிவு ஏற்பட்டிருந்தாலும், அதில ஒரு இன்பம் இருக்கறது நல்ல விஷயம்தானே!" என்றான் சுரேன்.

"அப்ப, சிரிச்சுக்கிட்டே அழு, இல்லை அழுதுகிட்டே சிரி!" என்றான் மாறன், சலிப்புடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பொருள்:
தன் மேல் தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1324. காதுக்குள் ஒரு செய்தி!

"ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுவ. ஆனா, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, உன் காதலனோட சேர்ந்துடுவ!" என்றாள் காவ்யா.

"நிச்சயமா மாட்டேன். இந்தத் தடவை, நான் ரொம்ப உறுதியா இருக்கேன். அவன் என்னை என்ன பேச்சுப் பேசினான்! அத்தனைக்கும் அவன் எங்கிட்ட மன்னிப்புக் கேக்கணும்" என்றாள் லாவண்யா.

"அப்படி மன்னிப்புக் கேக்கலேன்னா?"

"கேப்பான், கண்டிப்பாக் கேப்பான்."

"கேக்கலேன்னா?" என்றாள் காவ்யா, விடாமல்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த லாவண்யா, "கேக்கலேன்னா, அவ்வளவுதான், எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுப்பேன்!" என்றாள்.

"பாக்கலாம்!"

"ஏண்டி, அவ்வளவு வீறாப்பாப் பேசின. ரெண்டு நாளுக்குள்ள காதலனோட சேந்துட்ட! அவன் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டானா?" என்றாள் காவ்யா.

"காதலர்களுக்குள்ள மன்னிப்பு எல்லாம் எதுக்கு?" என்றாள் லாவண்யா.

"அப்படிப் போடு அருவாளை! அதான் நான் அன்னிக்கே சொன்னேனே!" என்றாள் காவ்யா, கேலியாகச் சிரித்தபடி.

சில விநாடிகள் மௌனமாக இருந்த லாவண்யா, "ரொம்ப உறுதியாத்தான் இருந்தேன். ஆனா என்னவோ தெரியல, என்னை அறியாமலேயே இறங்கி வந்துட்டேன்!" என்றாள்.

"வந்துதானே ஆகணும்?"

"ஏன் அப்படிச் சொல்ற?"

"எல்லாம் அனுபவம்தான். காதல்ல நான் உனக்கு சீனியராச்சே! ஊடல் ரொம்ப வலுவானதுதான். ஆனா, அதை முறியடிக்கிற ஆயுதம் அந்த ஊடலுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கு!"

"அது என்ன ஆயுதம்?" என்றாள் லாவண்யா.

"பக்கத்தில வா! நாம பேசறது வேற யாருக்கும் கேட்டுடக் கூடாது" என்று லாவண்யாவை அருகில் அழைத்த காவ்யா, "ஊடலின்போது காதலனை நினைக்கலாம், தூரத்தில இந்தோ, ஏன், பக்கதில இருந்தோ கூடப் பாக்கலாம், அவன் பேசறதைக் கேக்கலாம், ஏன், அவன்கிட்ட மறைமுகமாப் பேசக் கூடச் செய்யலாம். ஆனா, அவனோட நெருக்கமா இருக்க முடியாது. அந்த நெருக்கத்தைப் பறிக்கிற ஊடலிலேயே, அந்த ஊடலை உடைச்சு மறுபடி நெருக்கத்தை உண்டாக்கிற ஆயுதம் இருக்கு. அந்த ஆயுதம்தான் உன்னை இறங்கி வந்து உன் காதலனோட சேர வச்சிருக்கு!" என்றாள், மெல்லிய குரலில்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 1323
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

பொருள்:
என்னவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்கு மேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1323. காதலித்துப் பார்!

"இந்த வயசில நமக்குக் கதாகாலட்சேபம் தேவையா? நீ கூப்பிட்டியேங்கறதுக்காக வரேன். ஆனா, போரடிச்சா எழுந்து வந்துடுவேன்!" என்ற எச்சரிக்கையுடன்தான், சினேகாவுடன் கதாகாலட்சேபத்துக்குக் கிளம்பினாள் சியாமளா.

கதாகாலட்சேபம் முடிந்து இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, "எப்படி இருந்தது கதாகாலட்சேபம்?" என்றாள் சினேகா.

"பரவாயில்ல. நான் பயந்த அளவுக்கு போரடிக்கல. ஆனா, இந்தப் புராணக் கதையில எல்லாம் எனக்கு ஆர்வம் இல்ல. உனக்கு எப்படி இதில திடீர்னு ஆர்வம் வந்ததுன்னு தெரியல!" என்றாள் சியாமளா.

"எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இல்ல. இவர் நல்லா சொல்லுவார்னு சொன்னாங்க. அதான் கேட்டுப் பாக்கலாம்னு வந்தேன். எனக்கு கம்பெனி கொடுத்துக்கு ரொம்ப தாங்க்ஸ்!"

"என்னடி தாங்க்ஸ் எல்லாம்? நீ கூப்பிட்டா நான் வர மாட்டேனா? அதுவும் நீ இப்ப இருக்கற நிலைமையில..." என்ற சியாமளா, தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்துப் பாதியிலேயே நிறுத்தினாள்.

தோழியை ஏறிட்டுப் பார்த்த சினேகா, "அது என்ன நிலைமை?" என்றாள்.

"இல்லை...சாரி. நீ குமரனோட சண்டை போட்டுட்டுத் தனியா இருக்கறதை சொன்னேன்! வருத்தமா இருக்கற உனக்கு, எங்கேயாவது போயிட்டு வந்தா ஆறுதலா இருக்கும்னுட்டுத்தானே கதாகாலட்சேபத்துக்குக் கிளம்பின? அதைத்தான் சொன்னேன்!"

"தனியா இருக்கேன், ஆனா வருத்தமா இல்ல!" என்றாள் சினேகா.

"என்னடி சொல்ற?"

"ஆமாண்டி. இந்த ஊடலை நான் எஞ்ஜாய் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!"

"எஞ்ஜாய் பண்றியா?"

"ஆமாண்டி. எங்களுக்குள்ள எப்பவுமே பிரிவு வராது. இந்த ஊடல்ங்கறது ஒரு சின்ன இடைவெளி. மறுபடி நாங்க சேரும்போது, முன்னை விட ரொம்ப நெருக்கமா இருப்போம். அதனாலதான், ஊடலை நான் எஞ்ஜாய் பண்றேன்னு சொன்னேன். இன்னிக்குக் கதாகாலட்சேபத்துக்குப் போகணும்னு ஏன் நினைச்சேன் தெரியுமா?" 

"ஏன்?" 

"நேத்திக்கு எங்க அம்மா இந்தக் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு வந்துட்டு, கிருஷ்ணருக்கும் சத்தியபாமாவுக்கும் இடையிலே ஏற்பட்ட ஊடலைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறார்னு சொன்னாங்க. கடவுள் தம்பதிகிட்ட கூட ஊடல் இருந்திருக்கே! அந்தக் கதையைக் கேட்டுட்டு வரலாம்னுதான் கிளம்பினேன். எப்படி, கதை நல்லா இருந்தது இல்ல?" என்றாள் சினேகா.

"இருந்தது. நீ சொல்ற ஊடல் கதை அதை விட நல்லா இருக்கு. ஊடலுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரியாது!" என்றாள் சியாமளா.

"நீயும் காதலிச்சுப் பாரு. அப்ப உனக்குப் புரியும்!" என்றாள் சினேகா, சிரித்துக் கொண்டே.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

பொருள்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Monday, June 10, 2024

1322. நீண்டு விட்ட ஊடல்!

அன்று நடந்த ஒரு சிறிய வாக்குவாதம் அவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று மாதவி எதிர்பார்க்கவில்லை.

திருமணமான இந்த ஆறு மாதங்களில், மாதவிக்கும், அவள் கணவன் தேவாவுக்கும் இடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அவை சில மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததில்லை. 

காலையில் ஒரு சச்சரவு ஏற்பட்டால், கோபித்துக் கொண்டு அலுவலகம் செல்லும் தேவா, மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், காலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடியோடு மறந்து விட்டது போல்தான் நடந்து கொள்வான். 

ஆனால் இந்த முறை, வாக்குவாதம் சற்றுப் பெரிதாகி, இருவரிடமிருந்தும் வார்த்தைகள் சற்றுக் கடினமாக வெளிப்பட்டு விட்டன. ஆயினும், மாலையில் கணவன் வீடு திரும்பியதும், முந்தைய தடவைகளில் நடந்து கொண்டது போல், காலையில் நடந்ததை மறந்து விடுவான் என்றுதான் மாதவி நினைத்தாள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

தேவா மாலையில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். மாதவியின் முகத்தைப் பார்க்காமலேயே, "நான் சாப்பிட்டுட்டேன்" என்று கூறி விட்டு, அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். 

மாதவி பதில் பேசாமல், இன்னொரு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். வழக்கத்துக்கு மாறாகக் கணவன் சமாதானமடையாதது அவளுக்கு வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.

அடுத்த நாள் காலை, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் தேவா. "டிஃபன் பண்ணி இருக்கேன்" என்று மாதவி கூறியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இது அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தது. மாதவி தேவாவிடம் வலுவில் சென்று பேச முயன்றபோது, அவன் பதில் பேசவில்லை. 

இது எத்தனை நாள் நீடிக்கும், எங்கு சென்று முடியும் என்ற கவலை மாதவிக்கு ஏற்பட்டது. 

ந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், மாலையில் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்த தேவா, மாதவியைப் பார்த்துச் சிரித்து, "இன்னிக்கு வெளியில சாப்பிடப் போறோம், கிளம்பு!" என்றான்.

றுநாள் காலை, தேவா அலுவலகத்துக்குக் கிளம்பியபோது, "அஞ்சாறு நாளா உன்னைக் கொஞ்சம் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல?" என்றான்.

"கொஞ்சமா? ரொம்ப!" என்ற மாதவி, "நீங்க எங்கிட்ட பேசாம இருந்ததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனாலும், இப்ப நீங்க எங்கிட்ட காட்டற அன்பைப் பாக்கறப்ப, அந்தக் கஷ்டம் கூட ஒரு நல்ல விஷயமாத்தான் தோணுது!" என்றாள், தேவாவை அணைத்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

பொருள்:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடி விடக் காரணமாக இருந்தாலும், பெருமை பெறும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1321. அப்போது புரியும்!

"ஏண்டி அவசரப்பட்டு முகேஷோட சண்டை போட்ட? அவரு கோவிச்சுக்கிட்டு, உங்கிட்டேந்து விலகிப் போயிட்டார்னா?" என்றாள் சௌம்யா.

"அப்படியெல்லாம் நடக்காது!" என்றாள் தாரிணி.

"நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்!"

"அவர் என்னைக் குத்தம் சொன்னா, நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா? என் மேல தப்பு இல்லேன்னு நான் சொல்லக் கூடாதா?"

"உங்க சண்டையை நான் பாத்துக்கிட்டுத்தானே இருந்தேன்? முகேஷ் ரொம்ப இறங்கி வந்தாரு. தான் சொன்னது தப்புன்னு கூட ஒத்துக்கிட்டாரு. ஆனா, நீதான் அவ சமாதானத்தை ஏத்துக்காம, மூர்க்கமா சண்டை போட்ட!"

"என் மேல தப்பு கண்டுபிடிக்காதே. என் நிலைமையில நீ இருந்தாதான் உனக்குப் புரியும்" என்று பேச்சை முடித்தாள் தாரிணி.

ரண்டு நாட்கள் கழித்துத் தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது, "என்னடி, உங்களுக்குள்ள சமாதானம் ஆயிடுச்சா?" என்றாள் சௌம்யா.

"இல்லை" என்றாள் தாரிணி, சுருக்கமாக.

"நீ அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசலாம் இல்ல?"

"நான் எதுக்கு ஃபோன் பண்ணணும்? தப்பு அவர் மேலதான். அவர் ஃபோன் பண்ணட்டும்!"

"அப்படி அவர் ஃபோன் பண்ணலேன்னா?"

"கண்டிப்பாப் பண்ணுவாரு" என்றாள் தாரிணி.

டுத்த சில நாட்களில், தாரிணிக்கும், முகேஷுக்கும் சமாதானம் ஆகி, இருவரும் முன்பு போல் நெருக்கமானார்கள்.

தாரிணியுடன் தனியே இருந்தபோது, "ஆனாலும் உனக்கு ரொம்பப் பிடிவாதம்டி! தப்பு அவர் மேல இருந்தாலும், நீ முதல்ல ஃபோன் பண்ணிப் பேசி இருக்கலாம் இல்ல? நல்லவேளை, அவர் ஃபோன் பண்ணிப் பேசினாரு. இல்லேன்னா என்ன ஆகி இருக்கும்?" என்றாள் சௌம்யா.

"என்ன ஆகி இருக்கும்? நான் அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசியிருப்பேன் எங்களுக்குள்ள சமாதானம் ஆகி இருக்கும்!" என்றாள் தாரிணி, சிரித்துக் கொண்டே.

"அதுக்கு, முதல்ல அவர் இறங்கி வந்து பேசினப்பவே நீ சமாதானமாப் போயிருக்கலாம் இல்ல?"

"போயிருந்தா, எங்களுக்குள்ள சண்டையே வந்திருக்காதே!"

"என்னடி சொல்ற?"

"ஆமாண்டி. முகேஷ் மேல எந்தத் தப்பும் இல்ல. நான்தான் அவர் சாதாரணமா சொன்ன ஒரு விஷயத்தைப் பெரிசு பண்ணி, அவரோட சண்டை போட்டேன்."

"ஏன் அப்படிப் பண்ணின?" என்றாள் சௌம்யா, வியப்புடன்.

"சண்டை போட்டுட்டு, இப்ப மறுபடியும் சேர்ந்தப்புறம், அவரோட அன்பு எவ்வளவு அதிகம் ஆகி இருக்கு தெரியுமா? இதுக்காகத்தான் நான் சண்டை போட்டேன்!"

"என்னவோ எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் சௌம்யா.

"இப்ப புரியாது. நீ காதலிக்க ஆரம்பிச்சேன்னா, அப்ப புரியும்!" என்றாள் தாரிணி, தோழியின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

பொருள்:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

Sunday, May 19, 2024

1320. ஏன் இந்தப் பார்வை?

பின்புறத்திலிருந்து தன் முதுகை யாரோ தட்டியதும், சட்டென்று திரும்பிப் பார்த்தான் கவுதம்.

அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும், அவனுக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன.

"நீங்களா?" என்றான்.

"நீங்களான்னா? என்னை உனக்கு முன்னாலேயே தெரியுமா என்ன?" என்றாள் அந்தப் பெண்.

"இல்லை. பாத்திருக்கேன்."

"பாத்திருக்கேன்னு சொல்லாதே. பாத்துக்கிட்டே இருக்கேன்னு சொல்லு. நாலு நாளா, நான் இந்த பார்க்குக்கு வர அதே நேரத்துக்கு நீயும் வரே. நான் எங்கே உக்காந்திருந்தாலும், கொஞ்சம் தள்ளி நின்னு என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட்ஸ் கூடக் கேட்டாங்க 'யாருடி அவன், உன்னையே பாத்துக்கிட்டிருக்கான்?'னு. அவன் என்னைப் பாக்கலே, வேற எங்கேயோ பாக்கறான்னு சொல்லிச் சமாளிச்சேன். இன்னிக்கு என் ஃப்ரண்ட்ஸ் யாரும் வரலை. அதனாலதான், உன்னை நேருக்கு நேர் கேக்கலாம்னு வந்திருக்கேன். சொல்லு, ஏன் என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டிருக்கே?"

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அதான் உங்களைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!"

"அப்ப, எந்தப் பொண்ணு அழகா இருந்தாலும், இப்படித்தான் பாப்பியா?"

"ஐயையோ! அப்படி இல்ல. ம்... வந்து... நான் உங்களைக் காதலிக்கறேன். அதான்!" என்றான் கவுதம்.

"காதலிக்கறேன்னா, அதை நேரடியா சொல்லணும். முதல்ல, என்னை வாங்க போங்கன்னு பேசறதை நிறுத்து. நான் உன்னை வா போன்னுதானே பேசறேன். பை தி வே, என் பேர் வனிதா. உன் பேரு?"

"கவுதம்" என்றான் கவுதம்.

து நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இப்போது கவுதமும், வனிதாவும் காதலர்கள். விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்.

அன்று, கடற்கரையில் கவுதம் அமர்ந்து கொண்டு வனிதாவுக்காக் காத்திருந்தான்.

அப்போதுதான் வந்த வனிதா, அவன் முதுகைத் தட்டினாள். அவர்கள் முதல் சந்திப்பின்போது வனிதா அவன் முதுகைத் தட்டியது கவுதமுக்கு நினைவுக்கு வந்தது.

வனிதாவை உற்றுப் பார்த்த கவுதம், "உன்னை எவ்வளவு தடவை பார்த்தாலும், பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!" என்றான்.

"இருக்கும்டா. அப்படிப் பாத்தாத்தானே, அந்தப் பொண்ணை விட நான் அழகா இருக்கேனான்னு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?" என்றாள் வனிதா, கோபத்துடன்.

"எந்தப் பொண்ணோட?" என்றான், கவுதம் புரியாமல்.

"நான் வரதுக்கு முன்னாடி உத்துப் பாத்துக்கிட்டிருந்தியே அந்தப் பொண்ணோட" என்று கவுதமுக்கு முன்புறமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினாள் வனிதா.

கடல் அலைகளில் காலை நனைத்தபடி நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்த கவுதம், "அந்தப் பொண்ணை நான் இப்பதான் கவனிக்கிறேன். நான் கடலைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன்" என்றான்.

"பொய் சொல்லாதே! நீ முதல்ல என்னைத் திரும்பத் திரும்பப் பாத்ததே, வேற ஒரு பொண்ணோட என்னை ஒப்பிட்டுப் பார்க்கத்தான். அது தெரியாம, நீ என்னைக் காதலிக்கறதா நினைச்சு நான் ஏமாந்துட்டேன். இப்பதான் உன் குணம் புரியுது!" என்று கூறியபடி எழுந்து செல்ல யத்தனித்த வனிதாவின் கைகளைப் பற்றி, "நான் சொல்றதைக் கேள், வனிதா. நீ நினைக்கிற மாதிரி இல்ல!" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் கவுதம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

பொருள்:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து, அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

அறத்துப்பால்                                                         பொருட்பால் 


1319. கலைவாணியின் கேள்வி!

மருதவாணனின்  மனைவி கலைவாணி அவனுடன் ஊடல் கொண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த மருதவாணன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தான். கலைவாணி அவனைத் தன் அறைக்குள் வர அனுமதிக்காததால், பணிப்பெண் மூலம் அவற்றைக் கலைவாணிக்கு அனுப்பி வைத்தான் மருதவாணன். பணிப்பெண் மூலமே அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டாள் கலைவாணி.

போர்க்களத்தில் எதிரிகளைக் கலங்கடிக்கும் மாவீரனாக இருந்து என்ன பயன்? படைத்தளபதி என்ற சக்தி வாய்ந்த பதவியில் இருந்து என்ன பயன்? ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.

வெளியூர் சென்று திரும்பியதும், நேரே வீட்டுக்கு வராமல், அரண்மனைக்குச் சென்றதுதான் மருதவாணன் செய்த தவறு. அரண்மனையில் ஒரு முக்கிய ஆலோசனை இருந்ததால், வீட்டுக்குத் திரும்பாமல் அரண்மனையிலேயே தங்கி விட்டான். ஆலோசனை தொடர்ந்து நீடித்ததால், இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கும்படி ஆகி விட்டது.

இதற்குத்தான், கணவன் மீது கோபம் கொண்டு, அவனைப் பார்க்க மறுத்துத் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் கலைவாணி.

மூன்றாம் நாள், மருதவாணன் ஒரு முடிவு செய்தான். மனைவி தன்னிடம் பேசும் வரை தான் உணவு அருந்தப் போவதில்லை என்பதைப் பணிப்பெண் மூலம் மனைவிக்குத் தெரிவித்து விட்டு, உணவு அருந்தாமல் இருந்தான்.

சில மணி நேரம் கழித்துத் தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த கலைவாணி, அவன் கைகளைப் பற்றித் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் சென்றதும், கதவைத் தாளிட்ட கலைவாணி, "அடேயப்பா! ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்கிறீர்கள்! பட்டினி கிடந்து, உடலை வருத்திக் கொள்ளக் கூடத் துணிந்து விட்டீர்களே!" என்றாள், வியப்புடன்.

"உன் மேல் இருக்கும் அன்புக்காக நான் இதைக் கூடச் செய்ய மாட்டேனா?" என்று சொல்லியபடி அவளை அணைக்க வந்த மருதவாணனைக் கையை நீட்டித் தடுத்த கலைவாணி, "உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மற்ற காதலிகளைச் சமாதானப்படுத்தவும் இதே வழிமுறைகளைக் கடைப்பிடிப்பீர்கள் அல்லவா?" என்றாள், கோபத்துடன். 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பொருள்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

அறத்துப்பால்                                                         பொருட்பால் 


1318. சந்தேக தாரிணி!

திருமணத்துக்குப் பிறகு, வாழ்க்கை நெடுஞ்சாலைப் பயணம் போல் தங்குதடையின்றி ஓடிக் கொண்டிருக்கும் என்றுதான் கோபால் எதிர்பார்த்தான்.

ஆனால், அவன் வாழ்க்கை அப்படி அமைய அவன் மனைவி தாரிணி அனுமதிக்கவில்லை.

ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு இருவருக்கும் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. 

இதற்கு முக்கியமான காரணம் தாரிணியின் சந்தேகப்படும் இயல்புதான்.

அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால், ஆயிரம் கேள்விகள் - எங்கே போயிருந்தீர்கள், தாமதமாகும் என்று ஏன் முன்பே சொல்லவில்லை, வேறு யாராவது பெண்ணைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தீர்களா என்பவை போல்.

தாரிணியின் சந்தேக குணத்தால், கோபால் சில விஷயங்களை அவளிடம் சொல்வதைத் தவிர்க்க ஆரம்பித்தான். அது மேலும் பிரச்னைகளைக் கிளப்பியது.

அவன் சொல்லாமல் விட்ட விஷயம் தாரிணிக்குத் தெரிய வந்தால், 'ஏன் இதை மறைத்தீர்கள்?' 'சின்ன விஷயம்தான் என்றாலும், என்னிடம் சொல்லி இருக்கலாமே!' 'இது எனக்குத் தெரியக் கூடாது என்று நீங்கள் நினைத்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?' போன்ற கேள்விகளால் அவனைத் துளைத்து எடுத்து விடுவாள் தாரிணி.

எனவே, ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தாரிணியிடம் சொல்லி விடுவது என்று வழக்கப்படுத்திக் கொண்டான் கோபால். அப்படியும், தாரிணி சந்தேகப்பட்டுக் கேள்விகள் கேட்பது நிற்கவில்லை.

ஒருமுறை, கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவனுக்குத் தும்மல் வந்து விட்டது.

தும்மல் போட்டு விட்டு கோபால் சுதாரித்துக் கொண்டதும், "சாப்பிடறப்ப தும்மினா, யாரோ நமக்கு நெருக்கமானவங்க நம்மை நினைக்கிறாங்கன்னு அர்த்தம். உங்களை யார் நினைக்கறாங்க?" என்றாள் தாரிணி.

"என் அம்மாவாத்தான் இருக்கும். உன்னையும், அவங்களையும் விட்டா, எனக்கு வேற யாரு இருக்காங்க?" என்றான் கோபால்.

"உங்கம்மாதான் இப்ப உயிரோட இல்லையே!"

"ஒருவேளை, மேல் உலகத்திலேந்து நினைக்கிறாங்களோ என்னவோ?" 

அத்துடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது.

கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரிணி சமையற்கட்டில் இருந்தாள். கோபாலுக்குத் தும்மல் வருவது போல் இருந்தது. சாப்பிடும்போது தும்மினால், அதை வைத்து தாரிணி ஏதாவது சொல்வாளோ என்று பயந்து, கஷ்டப்பட்டுத் தும்மலை அடக்கிக் கொண்டான் கோபால்.

அப்போது, சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த தாரிணி, கோபால் தும்மலை அடக்கிக் கொள்வதை கவனித்து விட்டாள்.

"தும்மலை அடக்கினீங்களா?" என்றாள் தாரிணி.

"ஆமாம்" என்றான் கோபால், பலவீனமான குரலில்.

"ஏன் அடக்கினீங்க? தும்மல் வந்தா, தும்ம வேண்டியதுதானே?"

"இல்லை, தும்மினா, வாயில இருக்கற சாப்பாடு வெளியில தெறிச்சுடுமேனுதான்!"

"அது இல்லை காரணம். உங்களுக்கு வேற ஒரு காதலி இருக்கா. அவ உங்களை நினைச்சதாலதான் அன்னிக்கு நீங்க தும்மினீங்க. இன்னிக்கும் அப்படித்தான். அதை நான் கண்டுபிடிச்சுடுவேனேன்னுதானே தும்மலை அடக்கினீங்க?"

இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திகைத்தபடி அமர்ந்திருந்தான் கோபால்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

பொருள்:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி, யான் தும்மலை அடக்கிக் கொள்ள, உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

1317. விநோதினியின் நம்பிக்கைகள்

"இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு உன் வீட்டுக்கு வரேன். அங்கேந்து மாலுக்குப் போகலாம்" என்றான் ரவீந்திரன்.

"அஞ்சு மணிக்கு வேண்டாம். நாலரை மணிக்கு முன்னால வா. இல்லேன்னா, ஆறு மணிக்கு அப்புறம் வா!" என்றாள் விநோதினி.

"என்னால நாலு மணிக்கு மேலதான் கிளம்ப முடியும். ஏன், அஞ்சு மணிக்கு வந்தா என்ன?"

"டேய், முட்டாள்! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. நாலரையிலேந்து ஆறு மணி வரையில ராகுகாலம். இது கூடத் தெரியாதா?"

"இந்த விஞ்ஞான உண்மை தெரியாத நான் முட்டாள்தான். ஞாபகம் வச்சுக்கறேன். ஐ ஏ எஸ் பரீட்சை எழுதறப்ப உபயோகமா இருக்கும்!"

"நீ ஐ ஏ எஸ் பரீட்சை எழுதப் போறியா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

"ஒருவேளை எழுதினா, உபயோகமா இருக்கும்னு சொன்னேன்! சரி. அப்ப,  அஞ்சு மணிக்கு மேல கிளம்பி வரேன்."

"ஐயையோ! ராகுகாலத்தில கிளம்ப வேண்டாம்!"

"அப்ப, ஆறு மணிக்கு மேல கிளம்பறேன். ஆனா, உன் வீட்டுக்கு வரப்ப ஏழு மணி ஆயிடுமே!"

"பரவாயில்லை" என்றாள் விநோதினி.

மாலில் சற்று நேரம் சுற்றிய பிறகு, இருவரும் அங்கிருந்த ஒரு உணவகத்துக்குச் சென்றனர். 

இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ரவீந்திரனுக்கு திடீரென்று தும்மல் வந்தது. கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு, ஒரு பெரிய தும்மல் போட்டான்.

"நூறாண்டு வாழ்க!" என்றாள் விநோதினி.

ரவீந்திரன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, "இங்கே யாராவது பிறந்த நாள் கொண்டாடறாங்களா என்ன? யாரை நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தின?" என்றான்.

"உன்னைத்தான். யாராவது தும்மல் போட்டால், நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தணும். அப்படி வாழ்த்தினா, அவங்களுக்கு ஆயுள் கூடும்!" என்றாள் விநோதினி, அவனை உற்றுப் பார்த்தபடி.

"ரெண்டு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு விஞ்ஞான உண்மைகளா! என்னால தாங்க முடியாதும்மா!" என்ற ரவீந்திரன், "ஏன் என்னை அப்படிப் பாக்கற? திடீர்னு சீரியசாயிட்ட!" என்றான், விநோதினியின் முகத்தைப் பார்த்து.

"பொதுவா, சாப்பிடும்போது தும்மல் போட்டா, நமக்கு நெருக்கமானவங்க யாரோ நம்மை நினைச்சுக்கறாங்கன்னு அர்த்தம். உனக்கு நெருக்கமானவங்க என்னைத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன? பொதுவாகவே, ஆண்கள் சபல புத்தி உள்ளவங்க. என்னை ஏமாத்திட மாட்டியே!" என்றாள் விநோதினி. 

ரவீந்திரன் அவள் முகத்தைப் பார்த்தபோது, அதில் ஒரு வாட்டம் இருப்பது போல் தெரிந்தது.

"அம்மா, விநோதினி! ஏதேதோ விஷயங்களையெல்லாம் நம்பற. உன் காதலனை நம்ப மாட்டியா? நீயே என்னை விரட்டி விட்டாலும், நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்!" என்றபடியே அவள் கையைப் பற்றினான் ரவீந்திரன்.

"சாரி. அவசரத்தில எச்சில் கையால தொட்டுட்டேன். அதுக்கு வேணும்னா, 'நம் காதல் நூறாண்டு வாழ்க'ன்னு சொல்லிடலாமா?" என்றான் ரவீந்திரன், தொடர்ந்து.

மேகமூட்டத்துக்கிடையே தோன்றும் நிலவொளி போல், விநோதினியின் வாடிய முகத்தில் ஒரு புன்னகை அரும்புவதற்கான அறிகுறி தெரிந்தது போல் ரவீந்திரனுக்குத் தோன்றியது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

பொருள்:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு, யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

Saturday, May 18, 2024

1316. தோழி செய்த எச்சரிக்கை!

கல்லூரி வாசலில் சுந்தரின் பைக் வந்து நின்றபோது, கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சில மாணவிகள் அவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் கடந்து சென்றனர். 

ஒரு மாணவி மட்டும் சற்று தூரம் சென்று விட்டுத் திரும்ப வந்து, சுந்தர் அருகில் வந்து, அவனிடம் ஏதோ சொல்லி விட்டுத் திரும்பினாள்.

"என்னடி சொன்ன அவன்கிட்ட?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அவன் ரம்யாவோட காதலன்."

"அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! நீ அவன்கிட்ட போய் என்ன பேசிட்டு வந்தேன்னுதான் கேக்கறோம்" என்றாள் முதலில் கேள்வி கேட்டவள்.

"ரம்யா இன்னிக்குக் காலேஜுக்கு வரலை இல்ல?"

"ஆமாம். அதனால அவளுக்கு பதிலா பார்க்குக்கோ பீச்சுக்கோ என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்களான்னு கேட்டியா?" என்றாள் மற்றொரு தோழி.

இதைக் கேட்டதும் மற்றவர்கள் கொல்லென்று சிரிக்க, "சீ! என்னடி பேச்சு இது? ரம்யா ரொம்ப சென்சிடிவ். அவகிட்ட கவனமாப் பழகுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்!" என்றாள் சுந்தரிடம் சென்று பேசி விட்டு வந்த பெண்.

"அது அவ்வளவு முக்கியமா? எனக்கென்னவோ நீ அவனுக்குத் தூண்டில் போடறியோன்னுதான் சந்தேகமா இருக்கு!" என்றாள் இன்னொரு தோழி.

"போங்கடி! நீங்க என்ன வேணும்னா சொல்லிட்டுப் போங்க. நான் சொன்னது எவ்வளவு முக்கியமான விஷயம்னு அவன் புரிஞ்சுப்பான்."

"நீங்க ரம்யாவைக் காதலிக்கறது ரொம்ப நல்ல விஷயம். ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அவ ரொம்ப சென்சிடிவ். சென்சிடிவ்னா, நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்! அதனால, அவகிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும்" என்று அந்தப் பெண் சொல்லி விட்டுப் போனது சுந்தரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரம்யாவுடன் பழகிய வகையில், அவள் சென்சிடிவ் என்பது சுந்தருக்குத் தெரிந்ததுதான். ஆனால் 'நீங்கள் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று சொல்லி விட்டுப் போகிறாளே, அதன் பொருள் என்னவாக இருக்கும் என்று  அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

து நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், அன்று மாலை தன்னால் வர முடியாது என்று ரம்யாவுக்கு ஃபோன் செய்யலாம் என்று சுந்தர் நினைத்தபோது, ரம்யாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

"இப்பதான் உன்னைப் பத்தி நினைச்சேன். அதுக்குள்ள நீயே ஃபோன் பண்ணிட்டே!" என்றான் சுந்தர், உற்சாகத்துடன்.

"என்னது, இப்பதான் என்னைப் பத்தி நினைச்சியா? அப்படின்னா, இவ்வளவு நேரம் என்னைப் பத்தி மறந்துட்டியா? நான் எப்பவும் உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா, நீ எப்பவாவதுதான் என்னை நினைப்பே போல இருக்கு!" என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு, ஃபோனை வைத்து விட்டாள் ரம்யா .

'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்?' என்று திகைத்து நின்ற சுந்தருக்கு, 'நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று அன்றொரு நாள் ரம்யாவின் தோழி தன்னிடம் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பொருள்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

1315. பரிவாதினியின் பதற்றம்!

"இரண்டு ஆண்டுகளாகக் காதலிக்கிறோம். இன்னும் நமக்குத் திருமணம் ஆகவில்லை. எனக்குக் கவலையாக இருக்கிறது" என்றாள் பரிவாதினி.

"என்ன கவலை? வயதாகிக் கொண்டே இருக்கிறதே என்ற கவலையா?" என்றான் வீரவர்மன், சிரித்துக் கொண்டே.

"நீங்கள் தாமதிப்பதைப் பார்க்கும்போது, அந்தக் கவலையும் நியாயமானதுதான். ஆனால் என் கவலை என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?"

"பரிவாதினி! நம் இருவர் வீட்டிலும் நம் காதலை அங்கீகரித்து விட்டார்கள். நான் அமைச்சரின் அந்தரங்க உதவியாளனாக இருப்பதால், தேசப் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஒரு முக்கியமான வேலை முடிய வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும், எனக்கு இந்த ஊரிலேயே நிலையான வேலை என்று அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் நம் காதல் பற்றியும், திருமணம் தாமதமாவது பற்றியும் தெரியும். 'உன் காதலியிடம் சொல். இன்னும் சில மாதங்கள்தான். அதற்குப் பிறகு, திருமணம் செய்து கொண்டு தலைநகரிலேயே இருக்கலாம். உன் மனைவியுடன் குடித்தனம் நடத்த ஒரு பெரிய வீடு ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று அவர் நேற்று கூட என்னிடம் கூறினார்." 

"அப்படியா? நீங்கள் இப்படிச் சொல்வது நிம்மதியாக இருக்கிறது. ஆனால், திருமணம் தாமதமாவது கவலை அளிக்கிறது. எங்கே நீங்கள் என்னைப் பிரிந்து விடுவீர்களோ என்ற அச்சம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது."

"கவலைப்படாதே, பரிவாதினி. உனக்கு ஒரு உறுதி தருகிறேன். இந்தப் பிறவியில் உன்னைப் பிரிய மாட்டேன். இது சத்தியம்."

இதைக் கேட்டதும், பரிவாதினி வீரவர்மனை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் தளும்பி இருந்ததை கவனித்த வீரவர்மன், "இன்னும் ஏன் கண்ணீர்?" என்றபடியே, அவள் கண்களைத் துடைக்க வந்தான்.

சட்டென்று விலகிப் பின்னால் சென்ற பரிவாதினி, "சொன்னதுதான் சொன்னீர்கள், 'இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி எந்தப் பிறவியிலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்' என்று சொல்லி இருக்கலாமே. 'இவள் இந்தப் பிறவியோடு போதும், அடுத்த பிறவியில் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்ளலாம்' என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது போலும்!" என்றாள் கோபத்துடன்.

'இவள் உண்மையாகவே இப்படி நினைக்கிறாளா? இவளை எப்படிச் சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தவித்தான் வீரவர்மன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்:
காதல் மிகுதியில், இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால், அடுத்த பிறவியில் பிரியப் போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1314. மைவிழியின் சந்தேகம்!

மைவிழி மிகவும் அறிவுக் கூர்மை உடையவள் என்பதில் பரிதிக்குப் பெருமை உண்டு. 

பொதுவாக, ஆண்கள்தான் அறிவுசார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் மைவிழி, ஆண்களுக்கு நிகராகப் பல விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள்.

இவ்வளவு அறிவாளியான பெண் தன்னிடம் காதல் கொண்டிருப்பது பற்றிப் பரிதிக்குப் பெருமை உண்டு.

தான் ஒரு சாதாரண வியாபாரிதான், மைவிழியைப் போல் கல்வி அறிவோ, அறிவுக் கூர்மையோ இல்லாதவன் என்றபோதிலும், தன்னிடம் எதையோ கண்டு தன்னைக் காதலிக்கிறாளே இந்தப் பெண் என்று அடிக்கடி நினைத்து மகிழ்வான் பரிதி.

"நீங்கள் வியாபாரத்துக்காகப் பல இடத்துக்குப் போகிறவர். போகிற இடங்களில் பல பெண்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் யாரிடமாவது மையல் கொண்டு விடாதீர்கள்!" என்றாள் மைவிழி, ஒருமுறை.

"சேச்சே! உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்!" என்றான் பரிதி.

"ஆண்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆனால் வேறொரு பெண் உங்களை விரும்பினால், உடனே உங்கள் மனம் அலைபாயத் தொடங்கி விடும்!"

"நான் அப்படி இல்லை!"

மைவிழி ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னதாகத்தான் முதலில் பரிதி நினைத்தான். ஆனால், ஒவ்வொரு முறை அவன் எங்காவது பயணம் சென்று விட்டு வரும்போதும், "அங்கே யாராவது பெண்ணைப் பார்த்தீர்களா?" என்று துருவித் துருவிக் கேட்பாள் மைவிழி.

'இவள் சந்தேகப்படும் இயல்பு கொண்டவள், இவளிடம் கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான் பரிதி.

ருநாள் இரவு, நிலவொளியில், ஒரு நந்தவனத்தில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மைவிழி அவன் மீது மிகவும் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தாள். 'இந்தப் பெண்ணின் காதலைப் பெற நான் என்ன பேறு செய்திருக்கிறேனோ!' என்று மீண்டும் நினைத்துக் கொண்டான் பரிதி.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு, இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி, ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

"மைவிழி! எந்தக் காதலர்களிடமும் இருக்கும் அன்பை விட நம் இருவரிடையே இருக்கும் அன்புதான் மிக அதிகம்!" என்றான் பரிதி, உணர்ச்சிப் பெருக்குடன்.

சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகிய மைவிழி, "என்ன சொன்னீர்கள்?" என்றாள், கோபத்துடன்.

"தவறாக எதுவும் சொல்லவில்லையே! நம் இருவரிடையே உள்ள காதல்தான் மிக உயர்ந்தது என்றுதானே சொன்னேன்?" என்றான் பரிதி, பதட்டத்துடன்.

"இதன் பொருள் என்ன? உங்களுக்குப் பல காதலிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு உள்ள காதலை விட, என்மீது உள்ள காதல் அதிகம் என்பதுதானே?"

"இல்லை. நான் மற்ற காதலர்களுடன்தான் நம்மை ஒப்பிட்டேன்."

"மற்ற காதலர்களிடையே உள்ள காதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு உங்கள் மற்ற காதலிகளிடம் உள்ள காதலை விட, என் மீது அதிகக் காதல் என்பதைத்தான் உங்களை அறியாமலேயே வெளிப்படுத்தி விட்டீர்கள். நான் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது. யார் யாரிடமெல்லாம் உங்களுக்கு இருக்கும் காதலை விட என்னிடம் அதிகக் காதல் இருக்கிறது? சொல்லுங்கள்!" என்று கோபமும், அழுகையும் கலந்த குரலில் மைவிழி புலம்பியபோது, 'இவள் அறிவாளியா, முட்டாளா? அல்லது அறிவாளியாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கிறாளா?' என்ற சிந்தனை பரிதியின் மனதில் தோன்றியது. 

அதே சமயம் 'இவளை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறேன்!' என்ற கவலையும் அவன் மனதில் எழுந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள்:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

Friday, May 17, 2024

1313. கார்குழலியின் கோபம்!

காதலியைக் காணக் கிளம்பிய மதிமாறன், தன் உடைகளைச் சரிபார்த்துக் கொண்டான். 

சிகையை முடிந்து கொண்டதும், கையில் வேப்பெண்ணெய் வாடை அடித்தது. தலையில் உள்ள பொடுகு நீங்க, மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில், வேப்பெண்ணெய் தடவிக் கொண்டு வருகிறான். 

இந்த வாடை பற்றிக் கார்குழலி என்ன சொல்லப் போகிறாளோ என்ற இலேசான கவலையுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான் மதிமாறன்.

மதிமாறனும், கார்குழலியும் தாங்கள் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருந்த, நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த அந்தப் பாழடைந்த வீட்டை நோக்கி மதிமாறன் நடந்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் ஒரு நறுமணம் வீசியது. அருகில் இருந்த ஒரு மரத்தில் மலர்ந்திருந்த மலர்களின் நறுமணம்தான் அது என்று உணர்ந்ததும், மதிமாறன் அந்த மரத்துக்கு அருகே சென்றான். 

மஞ்சள் நிறத்தில், அழகான தோற்றத்துடன் இருந்த மலர்களிலிருந்துதான் அந்த நறுமணம் வந்து கொண்டிருந்தது. அந்த மலரின் பெயர் அவனுக்குத் தெரியவில்லை. அதில் ஒன்றைப் பறித்துச் சிகையில் செருகிக் கொண்டு பார்த்தான் மதிமாறன். தலையிலிருந்த மலரின் மணத்தை அவனால் நுகர முடிந்தது.

இந்த மலரை அணிந்து கொண்டால் வேப்பெண்ணெய் நாற்றம் தெரியாமல் இருக்குமோ என்று யோசித்தான் மதிமாறன். அவனைப் போன்ற இளைஞர்களில் பலர் தலையில் பூச்சுட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், மதிமாறன் தலையில் பூச்சூட்டிக் கொள்வதை விரும்பியதில்லை.

ஆயினும், இந்த மலரை அணிந்து கொண்டால், அது வேப்பெண்ணெய் வாடையை மறைக்க உதவும் என்று நினைத்து, சில மலர்களைக் கொய்து, அவற்றைத் தலையில் சரியாகப் பொருத்திக் கொண்டு, நடையைத் தொடர்ந்தான் மதிமாறன். 

மலர் சூடி இருப்பது நறுமணத்தை அளிப்பதுடன், தோற்றப் பொலிவையும் அளிக்கும் என்பதால், கார்குழலி இதனால் மகிழ்ச்சி அடைவாள் என்று நினைத்தான் அவன்.

ந்திப்புக்கான இடத்தை மதிமாறன் அடைந்தபோது, கார்குழலி அங்கே முன்பே வந்து காத்திருந்தாள்.

"ஏன் இவ்வளவு தாமதம்? எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்!" என்று பொய்க் கோபத்துடன் சிணுங்கிய கார்குழலியின் முகம், மதிமாறனிடமிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்ததும் சற்றே மாறியது.

"என்ன இது வாசனை?" என்று கேட்ட கார்குழலி, அவன் தலையில் மலர் சூடிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

"என்ன இது, என்றைக்கும் இல்லாமல்.." என்று ஆரம்பித்தவள், "ஓகோ, அப்படியா?" என்றாள், கோபத்துடன்.

"அப்படியா என்றால்?" என்றான் மதிமாறன், புரியாமல்.

"எப்போதும் சிகையில் மலர் சூட்டிக் கொள்ளாத நீங்கள், இன்று சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது ஏன்? இன்னொருத்திக்குக் காட்டுவதற்காக இந்த மலரைச் சூடிக் கொண்டு விட்டு, அவளைச் சென்று பார்த்து, உங்கள் சிகை அழகைக் காட்டி விட்டு, என்னைப் பார்க்க வரும்போது தாமதமாகி விட்டதால், அதை அகற்றி விட்டு வர வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் வந்திருக்கிறீர்கள். உங்களுக்காகக் காத்திருந்த நான்தான் ஏமாளி!"

கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் கார்குழலி.

"கார்குழலி! நான் சொல்வதைக் கேள்!" என்றபடியே, அவள் பின்னால் சென்றான் மதிமாறன், காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்தபடியே.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1312. ஏமாறப் போவதில்லை!

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த அரவிந்த், "ஏறிக்க!" என்றான்.

"இருங்க, இருங்க" என்று அவனைத் தடுத்தாள் கமலி.

"என்ன ஆச்சு?" 

"மொதல்ல ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணுங்க!"

"எதுக்கு?"

"பூனை குறுக்கே போச்சே, பாக்கலியா?"

"அதுக்கு?"

"பூனை குறுக்கே போனா, நல்ல சகுனம் இல்ல. அதனாலதான் ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணச் சொன்னேன். இருங்க. கீழே இறங்கிட்டு, மறுபடி ஏறி உக்காந்து, அப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க!"

"சரியாப் போச்சு!" என்றபடியே, அவள் சொன்னபடியே செய்தான் அரவிந்த்.

"இந்தக் காலத்தில இப்படிப்பட்ட மூட நம்பிக்கையெல்லாம் வச்சிருக்கியே!" என்றான் அரவிந்த், தொடர்ந்து.

"காலத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. சில விஷயங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்!" என்றபடியே, ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் கமலி.

திருமணமான ஆறு மாதங்களில், இது போல் பல நிகழ்வுகளைப் பார்த்து விட்டான் அரவிந்த். தினமும் அவன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன், கமலி வீட்டுக்கு வெளியே வந்து, சகுனம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கூறிய பிறகுதான் அவன் கிளம்புவது என்பது வழக்கமாகி விட்டது.

ஆனால், கடந்த ஐந்தாறு நாட்களாக இது நடப்பதில்லை. ஒரு சிறிய விஷயம் குறித்து நடந்த விவாதத்தினால், கமலி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள். அவனிடம் பேசுவதில்லை. அவன் அலுவலகத்துக்குக் கிளம்புமுன், வாசலுக்கு வந்து சகுனம் பார்ப்பதில்லை. சமைத்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவாள். அவனே எடுத்துப் போட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும்.

ன்று இரவு, உணவு மேசையில் அமர்ந்து உணவை உண்ணத் தயாரானபோது, அரவிந்துக்கு ஒரு பலமான தும்மல் வந்தது.

பக்கத்து அறையிலிருந்த கமலி, கணவனின் தும்மல் சத்தத்தைக் கேட்டு விட்டு, ஒருவேளை அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து, என்னவென்று பார்க்க எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போது, அவளுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

சில நாட்களுக்கு முன், ஒருமுறை அரவிந்த் தும்மியபோது, அருகிலிருந்த கமலி, 'தீர்க்காயுசு!' என்றாள்.

"அப்படின்னா?" என்றான் அரவிந்த்.

"தீர்க்காயுசுன்னா தெரியாதா? நீடூழி வாழ்கன்னு அர்த்தம்!"

"அது சரி. அதை எதுக்கு இப்ப சொல்ற?"

"ஒத்தர் தும்மும்போது, அவங்க வாயிலேந்து கெட்ட ஆவி வெளியில போகுமாம். அப்ப தீர்க்காயுசுன்னு சொன்னா, அந்தக் கெட்ட ஆவி அதைக் கேட்டு பயந்து, மறுபடி அவங்க பக்கமே வராதாம். அதனால, அவங்க நோய்நொடி இல்லாம, தீர்க்காயுசா இருப்பாங்களாம்!' என்று விளக்கினாள் கமலி.

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த அரவிந்த், "எந்த விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது?" என்றான்.

"எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி. அதனாலதான் நான் அதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன்!" என்றாள் கமலி.

'அந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, தும்மல் போட்டால், நான் உடனே வந்து 'தீர்க்காயுசு' என்று சொல்லுவேன், அப்புறம் எங்கள் ஊடல் சரியாகி விடும் என்று நினைத்துப் பொய்த் தும்மல் போடுகிறார் போலிருக்கிறது. ஆனால், நான் இதற்கு ஏமாறப் போவதில்லை' என்று நினைத்த கமலி, எடுத்த அடியைப் பின் வைத்து, இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

பொருள்:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1311. கல்லூரிச்சாலை - நோ என்ட்ரி!

கல்பனாவின் கல்லூரிக்கு வந்து, அவளைத் தன் ஸ்கூட்டரின் பின்னே உட்கார வைத்துக் கொண்டு, அவர்கள் வழக்கமாகச் செல்லும் பூங்காவுக்குச் சென்றான் பார்த்திபன்.

பூங்காவில், ஒதுப்புறமாக ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.

எப்போதும் உற்சாகமாகப் பேசும் கல்பனா, அன்று ஏதும் பேசாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பார்த்திபன், "என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கிளாஸ் டெஸ்ட்ல உன்னை விட உன் ஃப்ரண்டஸ் யாராவது அதிகமா மார்க் வாங்கிட்டாங்களா?" என்றான், அவளைச் சீண்டும் விதமாக.

கல்பனா அவனை முறைத்துப் பார்த்து விட்டு, மௌனமாகவே இருந்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்த பார்த்திபன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கல்பனாவின் கையை மெதுவாகப் பற்றினான்.

சட்டென்று கையை உதறிய கல்பனா, "தொடாதே!" என்றாள், கோபமாக.

"ஏன், பார்க்ல நிறைய பேர் உக்காந்திருக்காங்களேன்னு பாக்கறியா? யாரும் நம்மை கவனிக்கல!" என்றான் பார்த்திபன்.

"இங்கே நீயும் நானும் மட்டுமே இருந்தாக் கூட, நீ என்னைத் தொடக் கூடாது!"

"ஏன் அப்படி?"

"ஏனா? இனிமே என்னை அழைச்சுக்கிட்டுப் போக என் காலேஜுக்கு வராதே!"

"என்ன கல்பனா, சம்பந்தம் இல்லாம பேசற? உன்னைத் தொடக் கூடாதுன்னு சொன்ன. ஏன்னு கேட்டா, காலேஜுக்கு வராதேங்கற!"

"நீ காலேஜுக்கு வரப்ப என்ன நடக்குது, தெரியுமா?"

"என்ன நடக்குது? உனக்கு இப்படிப்பட்ட அழகான காதலன் கிடைச்சிருக்கானேன்னு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பொறாமைப்படறாங்களா?"

"அப்படி அவங்க பொறாமைப்பட்டா, நான் கவலைப்பட மாட்டேன். ஒவ்வொத்தியும் உன்னை அப்படியே கண்ணால முழுங்கற மாதிரி பாக்கறா. சில பேர் உங்கிட்ட வலுவில வந்து சிரிச்சுப் பேசறாங்க. நீயும் அவங்களோட சிரிச்சுப் பேசற!"

"யாராவது என்னைப் பார்த்து 'ஹாய்'னு சொன்னா, பதிலுக்கு நானும் 'ஹாய்'னு சொல்றேன். அதில என்ன தப்பு?"

"தப்புதான். எனக்குச் சொந்தமான ஒரு பொருளை, ஏதோ பொதுச் சொத்து மாதிரி, என் தோழிகள் கண்ணால முழுங்கறதும், பேச்சுக் கொடுத்து நெருக்கமாக்கிக்க முயற்சி செய்யறதும், எனக்குப் பிடிக்கல. இனிமே, நீ என் காலேஜுக்கு வர வேண்டாம். என் காலேஜ் இருக்கற சாலைக்கே நீ வரக் கூடாது! நானே பஸ் பிடிச்சு, நேரா பார்க்குக்கு வந்துடறேன்!" என்றாள் கல்பனா.

"மகாராணியோட உத்தரவு எப்படியோ, அப்படியே நடந்துக்கறேன். இனிமே, கல்லூரிச் சாலையில எனக்கு நோ என்ட்ரி!" என்றபடியே, கல்பனாவின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் பார்த்திபன். 

இப்போது, கல்பனா தன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பொருள்:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம் தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு உன்னை நுகர்கின்றார்கள்; ஆகையால், உன் மார்பைப் பொருந்தேன்.

அறத்துப்பால்                                                         பொருட்பால் 


1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...