"இருங்க, இருங்க" என்று அவனைத் தடுத்தாள் கமலி.
"என்ன ஆச்சு?"
"மொதல்ல ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணுங்க!"
"எதுக்கு?"
"பூனை குறுக்கே போச்சே, பாக்கலியா?"
"அதுக்கு?"
"பூனை குறுக்கே போனா, நல்ல சகுனம் இல்ல. அதனாலதான் ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணச் சொன்னேன். இருங்க. கீழே இறங்கிட்டு, மறுபடி ஏறி உக்காந்து அப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க!"
"சரியாப் போச்சு!" என்றபடியே, அவள் சொன்னபடியே செய்தான் அரவிந்த்.
"இந்தக் காலத்தில இப்படிப்பட்ட மூட நம்பிக்கையெல்லாம் வச்சிருக்கியே!" என்றான் அரவிந்த், தொடர்ந்து.
"காலத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. சில விஷயங்கள் எல்லாக் காலத்துக்கும பொருந்தும்!" என்றபடியே, ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் கமலி.
திருமணமான ஆறு மாதங்களில், இது போல் பல நிகழ்வுகளைப் பார்த்து விட்டான் அரவிந்த். தினமும் அவன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன், கமலி வீட்டுக்கு வெளியே வந்து, சகுனம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கூறிய பிறகுதான், அவன் கிளம்புவது என்பது வழக்கமாகி விட்டது.
ஆனால், கடந்த ஐந்தாறு நாட்களாக இது நடப்பதில்லை. ஒரு சிறிய விஷயம் குறித்து நடந்த விவாதத்தினால், கமலி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள். அவனிடம் பேசுவதில்லை. அவன் அலுவலகத்துக்குக் கிளம்புமுன், வாசலுக்கு வந்து சகுனம் பார்ப்பதில்லை. சமைத்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவாள். அவனே எடுத்துப் போட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும்.
அன்று இரவு, உணவு மேசையில் அமர்ந்து உணவை உண்ணத் தயாரானபோது, அரவிந்துக்கு ஒரு பலமான தும்மல் வந்தது.
பக்கத்து அறையிலிருந்த கமலி, கணவனின் தும்மல் சத்தத்தைக் கேட்டு விட்டு, ஒருவேளை அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து, என்னவென்று பார்க்க எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போது, அவளுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
சில நாட்களுக்கு முன், ஒருமுறை அரவிந்த் தும்மியபோது, அருகிலிருந்த கமலி, 'தீர்க்காயுசு!' என்றாள்.
"அப்படின்னா?" என்றான் அரவிந்த்.
"தீர்க்காயுசுன்னா தெரியாதா? நீடூழி வாழ்கன்னு அர்த்தம்!"
"அது சரி. அதை எதுக்கு இப்ப சொல்ற?"
"ஒத்தர் தும்மும்போது, அவங்க வாயிலேந்து கெட்ட ஆவி வெளியில போகுமாம். அப்ப தீர்க்காயுசுன்னு சொன்னா, அந்தக் கெட்ட ஆவி அதைக் கேட்டு பயந்து, மறுபடி அவங்க பக்கமே வராதாம். அதனால, அவங்க நோய்நொடி இல்லாம, தீர்க்காயுசா இருப்பாங்களாம்!' என்று விளக்கினாள் கமலி.
அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த அரவிந்த், "எந்த விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது?" என்றான்.
"எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி. அதனாலதான், நான் அதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன்!" என்றாள் கமலி.
'அந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, தும்மல் போட்டால், நான் உடனே வந்து 'தீர்க்காயுசு' என்று சொல்லுவேன், அப்புறம் எங்கள் ஊடல் சரியாகி விடும் என்று நினைத்துப் பொய்த் தும்மல் போடுகிறார் போலிருக்கிறது. ஆனால், நான் இதற்கு ஏமாறப் போவதில்லை' என்று நினைத்த கமலி, எடுத்த அடியைப் பின் வைத்து இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
கற்பியல்
No comments:
Post a Comment