பூங்காவில், ஒதுப்புறமாக ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.
எப்போதும் உற்சாகமாகப் பேசும் கல்பனா, அன்று ஏதும் பேசாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பார்த்திபன், "என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கிளாஸ் டெஸ்ட்ல உன்னை விட உன் ஃப்ரண்டஸ் யாராவது அதிகமா மார்க் வாங்கிட்டாங்களா?" என்றான், அவளைச் சீண்டும் விதமாக.
கல்பனா அவனை முறைத்துப் பார்த்து விட்டு, மௌனமாகவே இருந்தாள்.
சுற்றுமுற்றும் பார்த்த பார்த்திபன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கல்பனாவின் கையை மெதுவாகப் பற்றினான்.
சட்டென்று கையை உதறிய கல்பனா, "தொடாதே!" என்றாள் கோபமாக.
"ஏன், பார்க்ல நிறைய பேர் உக்காந்திருக்காங்களேன்னு பாக்கறியா? யாரும் நம்மை கவனிக்கல!" என்றான் பார்த்திபன்.
"நீயும் நானும் மட்டுமே இருந்தாக்கூட, நான் உன்னைத் தொட மாட்டேன்!"
"ஏன் அப்படி?"
"ஏனா? இனிமே என்னை அழைச்சுக்கிட்டுப் போக, என் காலேஜுக்கு வராதே!"
"என்ன கல்பனா, சம்பந்தம் இல்லாம பேசற? என்னைத் தொட மாட்டேன்னு சொன்ன. ஏன்னு கேட்டா, காலேஜுக்கு வராதேங்கற!"
"நீ காலேஜுக்கு வரப்ப என்ன நடக்குது தெரியுமா?"
"என்ன நடக்குது? உனக்கு இப்படிப்பட்ட அழகான காதலன் கிடைச்சிருக்கானேன்னு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பொறாமைப்படறாங்களா?"
"பொறாமைப்பட்டா நான் கவலைப்பட மாட்டேன். ஒவ்வொத்தியும் உன்னை அப்படியே கண்ணால முழுங்கற மாதிரி பாக்கறா. சில பேர் உங்கிட்ட வலுவில வந்து சிரிச்சுப் பேசறாங்க. நீயும் அவங்களோட சிரிச்சுப் பேசற!"
"என்னைப் பார்த்து 'ஹாய்'னு சொன்னா, பதிலுக்கு நானும் 'ஹாய்'னு சொல்றேன். அதில என்ன தப்பு?"
"தப்புதான். எனக்குச் சொந்தமான ஒரு பொருளை, ஏதோ பொதுச் சொத்து மாதிரி, என் தோழிகள் கண்ணால முழுங்கறதும், பேச்சுக் கொடுத்து நெருக்கமாக்கிக்க முயற்சி செய்யறதும், எனக்குப் பிடிக்கல. இனிமே, நீ என் காலேஜுக்கு வர வேண்டாம். என் காலேஜ் இருக்கற சாலைக்கே நீ வரக் கூடாது! நானே பஸ் பிடிச்சு, நேரா பார்க்குக்கு வந்துடறேன்!" என்றாள் கல்பனா.
"மகாராணியோட உத்தரவு எப்படியோ அப்படியே நடந்துக்கறேன். இனிமே, கல்லூரிச் சாலையில எனக்கு நோ என்ட்ரி!" என்றபடியே, கல்பனாவின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் பார்த்திபன்.
இப்போது, கல்பனா தன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.
கற்பியல்
No comments:
Post a Comment