Sunday, May 5, 2024

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி.

"ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக.

"கிரீஷ் உங்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு?"

"ஒன்பது நாள்!"

"இந்த ஒன்பது நாள்ள, நீ அவருக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணி இருப்ப?"

"கணக்கு வச்சுக்கல!"

"மெஸ்ஸேஜ் அனுப்பினது?"

"ஒரு நாளைக்குப் பத்துக்குக் குறையாது"

"ஆனா, எதுக்கும் அவர்கிட்டேந்து பதில் இல்ல!"

மாதங்கி மௌனமாக இருந்தாள்.

"என்ன செய்யப் போற?" என்றாள் நளினி.

"தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். வேற என்ன செய்ய முடியும்?"

"இத்தனை நாளா இறங்கி வராதவர், இனிமே இறங்கி வருவாரா?"

"நான் திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சா, என் மேல இரக்கப்பட்டாவது இறங்கி வர மாட்டாராங்கற நம்பிக்கைதான்!"

"ஒரு சின்ன சண்டை. அதுக்காக ஒரு நாள் ரெண்டு நாள் பேசாம இருக்கலாம். எனக்கும் பிரதீப்புக்கும் கூட இப்படி நடந்திருக்கு. அடுத்த நாள் அவரே வந்து சமாதானமாப் பேசுவாரு. ஆனா, உன் ஆளு நீ இவ்வளவு தடவை ஃபோன் பண்ணியும், மெஸ்ஸேஜ் அனுப்பியும் சமாதானம் ஆகாம, ஒரு சின்ன ஊடலை இத்தனை நாள் இழுத்துக்கிட்டிருக்காரு. ஆனா, நீ இன்னும் விடாம அவரை சமாதானப்படுத்திக்கிட்டிருக்க!"

"நம்மகிட்ட கொஞ்சம் கூட அன்பு இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறாரே, அவர்கிட்ட நாம ஏன் திரும்பத் திரும்பப் போய்க் கெஞ்சணும்னு எனக்கே சில சமயம் தோணும். ஆனா..."

"ஆனா என்ன?" என்றாள் நளினி.

"அவர் மேல எனக்கு இருக்கற காதல்தான் என்னை இப்படிச் செய்யத் தூண்டுது" என்றாள் மாதங்கி, ஒரு கணம் கண்களை மூடியபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)
குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

பொருள்:
ஊடலைத் தணிக்காமல் வாட விட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் ஆசையே காரணம்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...