Friday, May 17, 2024

1313. கார்குழலியின் கோபம்!

காதலியைக் காணக் கிளம்பிய மதிமாறன், தன் உடைகளைச் சரிபார்த்துக் கொண்டான். 

சிகையை முடிந்து கொண்டதும், கையில் வேப்பெண்ணெய் வாடை அடித்தது. தலையில் உள்ள பொடுகு நீங்க, மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில், வேப்பெண்ணெய் தடவிக் கொண்டு வருகிறான். 

இந்த வாடை பற்றிக் கார்குழலி என்ன சொல்லப் போகிறாளோ என்ற இலேசான கவலையுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான் மதிமாறன்.

மதிமாறனும், கார்குழலியும் தாங்கள் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருந்த, நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த, அந்தப் பாழடைந்த வீட்டை நோக்கி மதிமாறன் நடந்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் நறுமணம் வீசியது. அருகில் இருந்த ஒரு மரத்தில் மலர்ந்திருந்த மலர்களின் நறுமணம்தான் அது என்று உணர்ந்ததும், மதிமாறன் அந்த மரத்துக்கு அருகே சென்றான். 

மஞ்சள் நிறத்தில், அழகான தோற்றத்துடன் இருந்த மலர்களிலிருந்துதான் அந்த நறுமணம் வந்து கொண்டிருந்தது. அந்த மலரின் பெயர் அவனுக்குத் தெரியவில்லை. அதில் ஒன்றைப் பறித்துச் சிகையில் செருகிக் கொண்டு பார்த்தான். தலையிலிருந்த மலரின் மணத்தை அவனால் நுகர முடிந்தது.

இந்த மலரை அணிந்து கொண்டால், வேப்பெண்ணெய் நாற்றம் தெரியாமல் இருக்குமோ என்று யோசித்தான். அவனைப் போன்ற இளைஞர்களில் பலர், தலையில் பூச்சுட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், மதிமாறன் தலையில் பூச்சூட்டிக் கொள்வதை விரும்பியதில்லை.

ஆயினும், வேப்பெண்ணெய் வாடையை மறைக்க உதவும் என்பதால், இன்று இந்த மலரை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்து, சில மலர்களைக் கொய்து, அவற்றைத் தலையில் சரியாகப் பொருத்திக் கொண்டு, நடையைத் தொடர்ந்தான். 

மலர் சூடி இருப்பது நறுமணத்தை அளிப்பதுடன், தோற்றப் பொலிவையும் அளிக்கும் என்பதால், கார்குழலி இதனால் மகிழ்ச்சி அடைவாள் என்று தோன்றியது.

சந்திப்புக்கான இடத்தை மதிமாறன் அடைந்தபோது, கார்குழலி அங்கே முன்பே வந்து காத்திருந்தாள்.

"ஏன் இவ்வளவு தாமதம்? எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்!" என்று பொய்க் கோபத்துடன் சிணுங்கிய கார்குழலியின் முகம், மதிமாறனிடமிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்ததும் சற்றே மாறியது.

"என்ன இது வாசனை?" என்று கேட்ட கார்குழலி, அவன் தலையில் மலர் சூடிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

"என்ன இது, என்றைக்கும் இல்லாமல்.." என்று ஆரம்பித்தவள், "ஓகோ, அப்படியா?" என்றாள் , கோபத்துடன்.

"அப்படியா என்றால்?" என்றான் மதிமாறன், புரியாமல்.

"எப்போதும் சிகையில் மலர் சூட்டிக் கொள்ளாத நீங்கள், இன்று சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது ஏன்? இன்னொருத்திக்குக் காட்டுவதற்காக இந்த மலரைச் சூடிக் கொண்டு விட்டு, அவளைச் சென்று பார்த்து, உங்கள் சிகை அழகைக் காட்டி விட்டு, என்னைப் பார்க்க வரும்போது தாமதமாகி விட்டதால், அதை அகற்றி விட்டு வர வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் வந்திருக்கிறீர்கள். உங்களுக்காகக் காத்திருந்த நான்தான் ஏமாளி!"

கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் கார்குழலி.

"கார்குழலி! நான் சொல்வதைக் கேள்!" என்றபடியே, அவள் பின்னால் சென்றான் மதிமாறன்,  காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்தபடியே.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...