Saturday, May 18, 2024

1314. மைவிழியின் சந்தேகம்!

மைவிழி மிகவும் அறிவுக் கூர்மை உடையவள் என்பதில் பரிதிக்குப் பெருமை உண்டு. 

பொதுவாக, ஆண்கள்தான் அறிவுசார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் மைவிழி, ஆண்களுக்கு நிகராகப் பல விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள்.

இவ்வளவு அறிவாளியான பெண் தன்னிடம் காதல் கொண்டிருப்பது பற்றிப் பரிதிக்குப் பெருமை உண்டு.

தான் ஒரு சாதாரண வியாபாரிதான், மைவிழியைப் போல் கல்வி அறிவோ, அறிவுக் கூர்மையோ இல்லாதவன் என்றபோதிலும், தன்னிடம் ஏதையோ கண்டு தன்னைக் காதலிக்கிறாளே இந்தப் பெண் என்று அடிக்கடி நினைத்து மகிழ்வான் பரிதி.

"நீங்கள் வியாபாரத்துக்காகப் பல இடத்துக்குப் போகிறவர். போகிற இடங்களில் பல பெண்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் யாரிடமாவது மையல் கொண்டு விடாதீர்கள்!" என்றாள் மைவிழி, ஒருமுறை.

"சேச்சே! உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்!" என்றான் பரிதி.

"ஆண்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆனால் வேறொரு பெண் உங்களை விரும்பினால், உடனே உங்கள் மனம் அலைபாயத் தொடங்கி விடும்!"

"நான் அப்படி இல்லை!"

மைவிழி ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னதாகத்தான் முதலில் பரிதி நினைத்தான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் எங்காவது பயணம் சென்று விட்டு வந்தாலும், "அங்கே யாராவது பெண்ணைப் பார்த்தீர்களா?" என்று துருவித் துருவிக் கேட்பாள் மைவிழி.

'இவள் சந்தேகப்படும் இயல்பு கொண்டவள், இவளிடம் கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான் பரிதி.

ருநாள் இரவு, நிலவொளியில், ஒரு நந்தவனத்தில் அமர்ந்து, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மைவிழி அவன் மீது மிகவும் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தாள். 'இந்தப் பெண்ணின் காதலைப் பெற நான் என்ன பேறு செய்திருக்கிறேனோ!' என்று மீண்டும் நினைத்துக் கொண்டான் பரிதி.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு, இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

"மைவிழி! எந்தக் காதலர்களிடமும் இருக்கும் அன்பை விட நம் இருவரிடையே இருக்கும் அன்புதான் மிக அதிகம்!" என்றான் பரிதி, உணர்ச்சிப் பெருக்குடன்.

சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகிய மைவிழி, "என்ன சொன்னீர்கள்?" என்றாள், கோபத்துடன்.

"தவறாக எதுவும் சொல்லவில்லையே! நம் இருவரிடையே உள்ள காதல்தான் மிக உயர்ந்தது என்றுதானே சொன்னேன்?" என்றான் பரிதி, பதட்டத்துடன்.

"இதன் பொருள் என்ன? உங்களுக்குப் பல காதலிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு உள்ள காதலை விட, என்மீது உள்ள காதல் அதிகம் என்பதுதானே?"

"இல்லை. நான் மற்ற காதலர்களுடன்தான் நம்மை ஒப்பிட்டேன்."

"மற்ற காதலர்களிடையே உள்ள காதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு உங்கள் மற்ற காதலிகளிடம் உள்ள காதலை விட, என்மீது அதிகக் காதல் என்பதைத்தான் உங்களை அறியாமலேயே வெளிப்படுத்தி விட்டீர்கள். நான் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது. யார் யாரிடமெல்லாம் உங்களுக்கு இருக்கும் காதலை விட என்னிடம் அதிகக் காதல் இருக்கிறது? சொல்லுங்கள்!" என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் மைவிழி புலம்பியபோது, 'இவள் அறிவாளியா, முட்டாளா? அல்லது அறிவாளியாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கிறாளா?' என்ற சிந்தனை பரிதியின் மனதில் தோன்றியது. 

அதே சமயம் 'இவளை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறேன்!' என்ற கவலையும் அவன் மனதில் எழுந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள்:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...