Saturday, May 18, 2024

1316. தோழி செய்த எச்சரிக்கை!

கல்லூரி வாசலில் சுந்தரின் பைக் வந்து நின்றபோது, கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சில மாணவிகள் அவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் கடந்து சென்றனர். 

ஒரு மாணவி மட்டும் சற்று தூரம் சென்று விட்டுத் திரும்ப வந்து, சுந்தர் அருகில் வந்து, அவனிடம் ஏதோ சொல்லி விட்டுத் திரும்பினாள்.

"என்னடி சொன்ன அவன்கிட்ட?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அவன் ரம்யாவோட காதலன்."

"அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! நீ அவன்கிட்ட போய் என்ன பேசிட்டு வந்தேன்னுதான் கேக்கறோம்" என்றாள் முதலில் கேள்வி கேட்டவள்.

"ரம்யா இன்னிக்குக் காலேஜுக்கு வரலை இல்ல?"

"ஆமாம். அதனால அவளுக்கு பதிலா பார்க்குக்கோ பீச்சுக்கோ என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்களான்னு கேட்டியா?" என்றாள் மற்றொரு தோழி.

இதைக் கேட்டதும் மற்றவர்கள் கொல்லென்று சிரிக்க, "சீ! என்னடி பேச்சு இது? ரம்யா ரொம்ப சென்சிடிவ். அவகிட்ட கவனமாப் பழகுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்!" என்றாள் சுந்தரிடம் சென்று பேசி விட்டு வந்த பெண்.

"அது அவ்வளவு முக்கியமா? எனக்கென்னவோ நீ அவனுக்குத் தூண்டில் போடறியோன்னுதான் சந்தேகமா இருக்கு!" என்றாள் இன்னொரு தோழி.

"போங்கடி! நீங்க என்ன வேணும்னா சொல்லிட்டுப் போங்க. நான் சொன்னது எவ்வளவு முக்கியமான விஷயம்னு அவன் புரிஞ்சுப்பான்."

"நீங்க ரம்யாவைக் காதலிக்கறது ரொம்ப நல்ல விஷயம். ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அவ ரொம்ப சென்சிடிவ். சென்சிடிவ்னா, நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்! அதனால, அவகிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும்" என்று அந்தப் பெண் சொல்லி விட்டுப் போனது சுந்தரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரம்யாவுடன் பழகிய வகையில், அவள் சென்சிடிவ் என்பது சுந்தருக்குத் தெரிந்ததுதான். ஆனால் 'நீங்கள் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று சொல்லி விட்டுப் போகிறாளே, அதன் பொருள் என்னவாக இருக்கும் என்று  அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், அன்று மாலை தன்னால் வர முடியாது என்று ரம்யாவுக்கு ஃபோன் செய்யலாம் என்று சுந்தர் நினைத்தபோது, ரம்யாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

"இப்பதான் உன்னைப் பத்தி நினைச்சேன். அதுக்குள்ள, நீயே ஃபோன் பண்ணிட்டே!" என்றான் சுந்தர், உற்சாகத்துடன்.

"என்னது, இப்பதான் என்னைப் பத்தி நினைச்சியா? அப்படின்னா, இவ்வளவு நேரம் என்னைப் பத்தி மறந்துட்டியா? நான் எப்பவும் உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா, நீ எப்பவாவதுதான் என்னை நினைப்பே போல இருக்கு!" என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,  ஃபோனை வைத்து விட்டாள் ரம்யா .

'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்?' என்று திகைத்து நின்ற சுந்தருக்கு, 'நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று அன்றொரு நாள் ரம்யாவின் தோழி தன்னிடம் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பொருள்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...