அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் சென்று விட்ட கடந்த நான்கு மாதங்களாவே இப்படித்தான்.
மாலைப் பொழுதைக் காணவே கூடாது என்று உள்ளே படுத்திருந்தால், "பொழுது சாயற நேரத்தில் வீட்டுக்குள்ளே படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கு ஆகாது. வாசல்ல போய் நில்லுடி!" என்று சொல்லி, அவள் அம்மா அவளை வெளியே துரத்தி விடுவாள்.
தினமும் இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது மாலினிக்குப் பெரும்பாடாக இருந்தது.
'கணவன் எப்போது திரும்புவான், இந்தத் துயரத்திலிருந்து நான் எப்போது விடுபடுவேன்?'
தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள் மாலினி.
பலரும் சிரித்துப் பேசியபடி உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தனர்.
'இந்த மாலைப் பொழுது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது?'
தெருவில் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றவர்களைப் பார்த்தபோது, அவர்கள் மீது அந்தக் கணத்தில் ஏற்பட்ட பொறாமையினால், மாலினியின் மனதுக்குள் இந்த எண்ணம் தோன்றியது.
ஏ, ஊர் மக்களே! இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தால் நான் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் இந்த மாலைப் பொழுதில் உல்லாசமாக இருக்கிறீர்களே! நீங்களும் இந்த மாலைப் பொழுதால் துன்பத்துக்கு ஆளாகி வருந்தும் நாள் வரும்!' என்று தன் மனதுக்குள் சாபமிட்டாள் மாலினி.
கற்பியல்
பொழுது கண்டிரங்கல்
பொருள்:
அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி, என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.