Friday, August 4, 2023

1230. தோழியின் அழைப்பு

"அல்லி! உன் தோழி கலை வந்திருக்கா பாரு!" என்று கூவினாள் அல்லியின் தாய் சங்கரி.

அல்லி அறையிலிருந்து வெளியே வந்ததும், "வாடி! கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்" என்று அழைத்தாள் கலை.

"இந்த நேரத்திலேயா? வேண்டாம்" என்றாள் அல்லி தலையை பலமாக ஆட்டியபடி.

"ஏண்டி, நான் என்ன உன்னை உச்சி வெயில் நேரித்திலேயா வெளியே கூப்பிடறேன்? வெய்யில் அடங்கிப் போன சாயங்கால வேளையிலதானே கூப்பிடறேன்?" என்றாள் கலை.

"உச்சி வெயில் நேரத்தில கூப்பிட்டா கூட அவ வெளியே வருவா. சாயங்கால நேரத்தில வர மாட்டா. உள்ளேயே முடங்கிக் கிடக்கறா. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். கேக்கறதில்லை" என்றாள் சங்கரி உள்ளிருந்தே.

அல்லியின் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்ட கலை, "உன் பிரச்னை எனக்குப் புரியுது அல்லி. என் வீட்டுக்காரர் என்னை விட்டுப் பிரிஞ்சபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது" என்றாள்.

"உனக்கு எப்படி இருந்ததோ தெரியல. ஆனா ஒவ்வுரு நாளும் மாலைப் பொழுது வந்தா எனக்கு என் உயிரே போற மாதிரி இருக்கு. அதனாலதான் எழுந்து வரக் கூட சக்தி இல்லாம படுத்துக் கிடக்கேன். இன்னிக்கு நீ வந்ததால எழுந்து வந்தேன். நீ என்னன்னா என்னை வெளியே வரச் சொல்றே!"

கலை பேசாமல் இருந்தாள்.

"ஆனா எனக்கு இது வேண்டியதுதான்!" என்றாள் அல்லி.

"என்னடி சொல்ற?"

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்பவே இந்த உயிர் போயிருக்க வேண்டாமா? அப்படிப் போகாம இப்ப  செத்துச் செத்துப் பிழைக்கற மாதிரி தினமும் மாலை நேரத்தில என் உயிர் போயிட்டு போயிட்டு வருது!" என்று அல்லி கூறியபோது அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள் கலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

பொருள்:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரைப் பிரிந்தபோது மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...