Friday, August 25, 2023

1231. மலர்களின் சிரிப்பு!

"பொதுவாகப் பெண்களோட கண்ணை மலருக்கு ஒப்பிடுவாங்க" என்றான் ராசேந்திரன்.

"ஆமாம். குவளை மலருக்கு ஒப்பிடுவாங்க!" என்றாள் குமுதினி.

"குவளை மலர் மட்டும் இல்ல, தாமரை மலர், அல்லி மலர் மாதிரி வேறு சில மலர்களுக்கும் ஒப்பிடுவாங்க. ஆனா உன் கண்களை நான் மலர்களுக்கு ஒப்பிட மாட்டேன்!"

"ஏன், என்னோட கண்கள் அந்த அளவுக்கு அழகா இல்லையா?" என்றாள் குமுதினி சற்றே கோபத்துடன்.

"இல்லை. உன் கண்களோட ஒப்பிடற அளவுக்கு அந்த மலர்களுக்கு அழகு போதாது!"

"இது ரொம்ப மிகையா இருக்கே!"

"மிகை இல்லை, உண்மைதான். இந்த மலர்களைப் பார். உன் கண்களைப் பார்த்துட்டு அந்த அளவுக்கு நாம அழகா இல்லையேன்னு அதெல்லாம் தலை குனிஞ்சக்கிட்டு இருக்கிறதைப் பார்!"

பார்த்தாள். ஆமாம் அவை தலை குனிந்திருப்பது போல்தான் தோற்றமளித்தன. அதற்குக் காரணம் காற்றின் அழுத்தமும், அவற்றின் எடையின் அழுத்தமும்தான் என்பது குமுதினிக்குத் தெரியும். ஆயினும் கணவனின் புகழ்ச்சி அவளுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.

ந்த அனுபவம் இன்று பழங்கதை ஆகி விட்டது.

கொருள் ஈட்டுவதற்காக ராசேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்றபின், அவன் கொடுத்து விட்டுப் போன பிரிவுத் துன்பத்தால் அழுது அழுது அவள் கண்கள் வீங்கி விட்டன.

தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து நின்று, செடிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களைப் பார்த்தாள் குமுதினி.

அன்று அவளுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்த மலர்களா இவை?

இன்று அந்த மலர்கள் நிமிர்ந்து கம்பீரமாக அவள் கண்களைப் பார்த்தன. அழுது வீங்கியதால் அழகிழந்து விட்ட அவள் கண்களைப் பார்த்து அந்த மலர்கள் ஏளனமாகச் சிரித்தது போல் தோன்றியது குமுதினிக்கு.

அவற்றின் ஏளனப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் குமுதினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பொருள்:
பிரிவுத் துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...