Sunday, August 27, 2023

1232. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்?

பார்ப்பவர்கள் எல்லாம் இதையே கேட்கிறார்கள்.

"என்ன பூங்கொடி, உன் காதலனோட ஏதாவது பிணக்கா?"

"அதெல்லாம் இல்லையே!" என்று பூங்கொடி சமாளித்தாலும், கேள்வியில் இருந்த உண்மை அவள் மனதை நெருப்பாகச் சுட்டது.

ஆனால் ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்பது பூங்கொடிக்குப் புரியவில்லை, அவள் காதலனோடு பிணக்கு ஏற்பட்டிருப்பது அவள் முகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன?

அவள் மீது அன்பைப் பொழிந்து வந்த கந்தமாறன் ஏனோ சில நாட்களாக அவளிடம் பராமுகமாக இருக்கிறான். அவளை வந்து பார்ப்பதில்லை. அவன் வீட்டுக்கும், அவன் வேலை செய்யும் இடத்துக்கும் ஓரிரு முறை சென்று அவனைப் பார்க்க பூங்கொடி முயன்றபோதும் அவன் ஏதோ சாக்குச் சொல்லி அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டான்.

விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.

கந்தமாறன் மீண்டும் தன்னிடம் முன்பு போல் அன்பு காட்டுவானா?

"என்னடி? உன் காதலனோட உனக்கு என்ன பிணக்கு?" என்றாள் பூங்கொடியின் தோழி கலையரசி.

பொங்கி வந்த அழுகையைச் சட்டென்று மறைத்துக் கொண்ட பூங்கொடி, "அதெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள்.

"நீ ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும் உன் கண் காட்டிக் கொடுக்குதே!"

"என்ன காட்டிக் கொடுக்குது?"

"உன் கண்கள்ள பசலை வந்து வெளுத்துப் போயிருக்கு. கண்ணில எப்பவும் ஈரம் கசிஞ்சுக்கிட்டே இருக்கு. நீ கண்ணாடியைப் பாக்கறதே இல்லையா"

ஓ! இதை வைத்துத்தான் எல்லாரும் என்னிடம் கேட்கிறார்களா? அட, காட்டிக் கொடுத்த கண்களே!

"சொல்லுடி!" என்று கலைச்செல்வி அவள் முகவாயைப் பிடித்துக் கேட்டபோது, பூங்கொடியின் கணிகளிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பொருள்:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை என்பதைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

குறள் 1233 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...