Sunday, August 27, 2023

1233. அம்மா வீட்டுக்கு வந்தபோது...

"புருஷன் பிரிஞ்சு போன அப்புறமும் தனியா உன் வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டிருந்தே. இப்பவாவது அம்மா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே!" என்றபடியே மகள் ரேவதியை வரவேற்றாள் துர்க்கா.

மாலையில் பள்ளியிலிருந்து திரும்பிய ரேவதியின் தங்கை ரோகிணி ஓடி வந்து அக்காவை அணைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து, ரேவதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, உள்ளே ரோகிணி அம்மாவிடம் மெல்லிய குரலில் பேசியது ரேவதியின் காதில் விழுந்தது.

"ஏம்மா, அக்கா இவ்வளவு இளைச்சுப் போயிட்டா? தோள் எலும்பெல்லாம் தெரியுது. அவளைப் பின்னாலேந்து கட்டிக்கிட்டப்ப அவ தோள் எலும்பு என் கையில அழுந்தி வலிக்கிற மாதிரி இருந்தது!" என்றாள் ரோகிணி.

"அவ புருஷன் ஊருக்குப் போனதிலேந்து அவரை நினைச்சு நினைச்சு ரேவதி ரொம்ப இளைச்சுட்டா. எனக்கே அவளைப் பார்த்தப்ப, நம்ம ரேவதியா இவன்னு தோணிச்சு. என்ன செய்யறது? அவ புருஷன் திரும்பி வந்தப்புறம்தான் அவ பழையபடி ஆவா!" என்றாள் துர்க்கை.

கணவன் அவளுடன் இருந்தபோது, அவன் அடிக்கடி அவள் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு, "எவ்வளவு இதமா இருக்கு, மெத்தையில தலையை வைச்சுக்கிட்ட மாதிரி!" என்று சொன்னது ரேவதிக்கு நினைவு வந்தது.

'இப்போது சிறுமியான தங்கை கூட கவனிக்கும்படித் தோள் எலும்புகள் தெரியும் அளவுக்கு இளைத்து விட்டேனா என்ன?'

தெருவில் செல்லும் சிலர் தன்னை உற்றுப் பார்த்து விட்டுப் போவதாக ரேவதிக்குத் தோன்றியது.

ஒருவேளை அவர்கள் தன் தோள்கள் இளைத்திருப்பதைப் பார்த்துத் தன் காதலன் தன்னை விட்டுப் பிரிந்திருப்பதைத் தெரிந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் தன் சேலைத் தலைப்பால் தோள்களை நன்றாக மூடிக் கொண்டாள் ரேவதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

பொருள்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...