"அதான் எனக்கும் சேர்த்து நீ பருத்திருக்கியே!" என்றாள் பவளக்கொடி.
"நான் ஒண்ணும் பருக்கல. உண்டாயிருக்கறதால, கொஞ்சம் பூசின மாதிரி தெரியறேன். அவ்வளவுதான்!"
"நீ கொடுத்து வச்சவடி! உன் புருஷனோட சந்தோஷமா இருக்க. குழந்தை வேற வரப் போகுது!"
"உன்னோட நிலைமையை நினைச்சா, எனக்கு வருத்தமாத்தான் இருக்கு. உன் புருஷன் எப்ப திரும்பி வருவாராம்?" என்றாள் கண்மணி, தோழியின் தோளைப் பரிவுடன் பற்றியபடி. பவளக்கொடியின் தோள் எலும்பு கையை அழுத்தியதால், உடனே கையை எடுத்து விட்டு, "ரொம்பதான் இளைச்சுட்ட. உன் தோள் எலும்பு என் கையைக் குத்துது!" என்றாள்.
பவளக்கொடி பதில் சொல்லாமல், தன் கையை ஆட்டி, அதில் இருந்த வளையல்களைச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.
"என்னடி இது! உன் புருஷனைப் பிரிஞ்சதைப் பத்தி உனக்கு வருத்தமே இருக்கற மாதிரி தெரியல. இளைச்சுட்டியேன்னு நான் பரிதாபப்பட்டுக் கேட்டா, நான் பருத்துட்டதைச் சொல்லிக் கேலி செய்யற. குழந்தை மாதிரி கையை ஆட்டி, வளையல்களைச் சுத்திக்கிட்டிருக்க!" என்றாள் கண்மணி.
கையை ஆட்டுவதைச் சட்டென்று நிறுத்தி விட்டுத் தோழியை உற்றுப் பார்த்த பவளக்கொடி, "எனக்கு வருத்தம் இல்லையா? எலும்பு தெரிய இளைச்சிருக்கேன்னு நீயே சொல்ற. அவர் எப்ப திரும்பி வருவார்னு எனக்கே தெரியாதபோது, உனக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த வளையல்களைப் பார்த்தியா? அவர் ஊருக்குப் போறதுக்கு முன்னால, இதெல்லாம் எவ்வளவு இறுக்கமா இருந்தது தெரியுமா? கையை அழுத்தற மாதிரி! அவர் கூடக் கேலி செய்வாரு - இந்த வளையல் எல்லாம் உன் கையை இறுக்கிக்கிட்டிருக்கறதைப் பார்த்தா, எந்த நேரத்திலேயும் வெடிச்சுச் சிதறிடற மாதிரி இருக்குன்னு! இப்ப பார், நான் கையை அசைச்சாலே, வளையல்கள் சுழலுது. அவ்வளவு இளைச்சிருக்கேன்! இந்த வளையல் எல்லாம் என் கையிலேந்து நழுவிக் கீழே விழுந்துடுமோன்னு பயந்து, அப்பப்ப கையைத் தூக்கிக்கறேன். எனக்கு வருத்தம் இல்லேன்னு நீ சொல்றியா?" என்றாள் படபடவென்று.
பேசிக் கொண்டிருக்கும்போதே, பவளக்கொடியின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் தெறித்து அவள் கன்னங்களில் விழுந்தன.
கற்பியல்
உறுப்பு நலனழிதல்
பொருள்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து, வளையல்களையும் கழலச் செய்கின்றன.
No comments:
Post a Comment