Saturday, September 9, 2023

1235. காட்டிக் கொடுத்த வளையல்கள்

செங்கமலத்தின் உறவினர்கள் சிலர் ஊரிலிருந்து வந்திருந்தனர். செங்கமலத்திடம் சற்று நேரம் உரையாடிய பின், "உன் பெண் கயல் எப்படி இருக்கா?" என்றனர்.

"இங்கேதான் இருக்கா. அவ புருஷன் வியாபாரத்துக்காகக் கப்பல்ல போயிருக்கறதால ரெண்டு மாசமா எங்க வீட்டிலதான் இருக்கா. அறைக்குள்ள இருப்பா. கூப்பிடறேன்!" என்று செங்கமலம் கூறிக் கொண்டிருந்தபோதே தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழுந்து கயல்விழியே வெளியே வந்தாள்.

"எப்படி இருக்கீங்க?"என்றாள் கயல்விழி வந்திருந்தவர்களைப் பார்த்து.

"நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீ ஏண்டி இப்படி இளைச்சுட்டே? போன தடவை பாக்கறப்ப நல்ல தெம்பா ஆரோக்கியமா பப்பாளிப் பழம் மாதிரி இருந்தே. இப்ப கொத்தவரங்கா வத்தல் மாதிரி வாடி வதங்கி இருக்கியே!" என்றாள் மங்களம் என்ற பெண்.

"ஏன் உன் தோள்பட்டை எலும்புக்கூடு மாதிரி இருக்கு?" என்றாள் நாகம்மை என்ற பெண்.

"ஆமாம், ஏன் கையில வளையலே போட்டுக்கல?" என்றாள் இன்னொருத்தி.

"அவ கொஞ்சம் இளைச்சுட்டாளா! அதனால வளையல் எல்லாம் நழுவிக் கீழே விழுந்துடும் போல இருந்தது. அதனால நான்தான் வளையல்களைக் கழற்றி வைக்கச் சொல்லிட்டேன். கொஞ்சம் சின்னதா வேற வளையல்கள்தான் வாங்கிப் போடணும்" என்றாள் செங்கமலம் அவசரமாக.

"பாத்துடி! இவ இன்னும் இளைச்சு அந்த வளையல்களும் நழுவிக் கீழே விழுந்துடப் போகுது!" என்று சொல்லிச் சிரித்தாள் மங்களம்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்!" என்று அவர்களிடம் சொல்லி விட்டு விரைந்து வாசலுக்கு வந்தாள் கயல்விழி.

எங்கோ தொலைதுரத்தில் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவன் முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, 'கொடியவரே! நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் உங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும் இளைச்சு அழகை இழந்த என் உடம்பும், எலும்பு தெரிய இளைச்ச தோளும், வளையல்கள் கழன்று விழுந்ததால வெறுமையா இருக்கிற என் கைகளும் நீங்க எனக்கு செஞ்ச கொடுமையை எல்லாருக்கும் காட்டிக் கொடுக்குதே! நான் என்ன செய்ய?' என்று உரையாடியபடியே பொங்கி வந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...