அது முழுத் தூக்கமாக இல்லை. விழிப்பா, தூக்கமா என்று இனம் காண முடியாத ஒருவகை மயக்க நிலை.
அந்த அரைத் தூக்க நிலையில், தூரத்திலிருந்து வந்த ஒரு ஒலி சுமந்திரையின் காதில் கேட்டது.
என்ன ஒலி அது?
அந்த ஒலி இன்னும் நெருங்கி வந்தபோது, அது குழலோசையாக இருக்குமோ என்று தோன்றியது.
ஆம், குழலோசைதான் அது!
விழிப்பு வந்து, சுமந்திரை விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
ஓ, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும்போது, வழக்கமாகச் செய்வது போல், புல்லாங்குழலை வாசித்தபடி வருகிறான் ஆயச் சிறுவன்.
அப்படியானால், மாலைப் பொழுது வந்து விட்டதா? தன்னை அறியாமல், சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த தனக்கு, மாலை வந்து விட்டது என்று நினைவூட்டும் விதமாக ஒலிக்கிறதே இந்தக் குழலோசை!
குழல் இனிது என்பார்கள். ஆனால் கணவனைப் பிரிந்திருக்கும் இந்தக் காலத்தில், என்னை வருத்துவதற்கென்றே வரும் மாலையை நினைவூட்டுவது போல் வரும் இந்தக் குழலிசை எனக்கு மனச் சோர்வைத்தானே அளிக்கிறது!
'ஆயச் சிறுவனே! உன்னுடைய குழலோசை என்னை வருத்துவதற்காக மாலை அனுப்பும் தூதா, அல்லது என்னைக் கொல்ல மாலை அனுப்பும் படையா?'
கற்பியல்
பொழுது கண்டிரங்கல்
பொருள்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி, என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
No comments:
Post a Comment