Monday, June 12, 2023

1197. மன்மதன் அம்பு!

"இன்னிக்குக் காமன் பண்டிகை. ராத்திரி முழுக்க நடக்குமாம். வாடி, போயிட்டு வரலாம்!" என்று அழைத்தாள் வள்ளி.

"ராத்திரி முழுக்கவா? எப்படியும் ராத்திரி முழுக்க நான் தூங்கப் போறதில்ல. அங்கே போய்தான் உக்காந்துட்டு வரேனே!" என்று  கூறியபடியே வள்ளியுடன் கிளம்பினாள் மீனாட்சி.

இரவு முழுவதும் காமன் பண்டிகை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டுத் தோழிகள் இருவரும் விடிகாலையில் விடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

"பல நாள் தூங்காத அலுப்போ என்னவோ தெரியலை. விழாவைப் பாக்காம தூங்கி வழிஞ்சுக்கிட்டு இருந்த. 'என்ன இவ, சாமி ஆடற மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இருக்கா!'ன்னு பக்கத்தில உக்காந்திருந்தவங்கல்லாம் கேலி செஞ்சாங்க!" என்றாள் வள்ளி.

"நான் உண்மையாகவே சாமி ஆடிக்கிட்டுத்தான் இருந்தேன். ஒத்தர் சாமி ஆடறப்ப, அவங்க மேல சாமி வந்து பேசும்னு சொல்லுவாங்க. ஆனா, நான்  சாமிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றாள் மீனாட்சி.

"சாமிகிட்ட பேசினியா? எந்த சாமிகிட்ட, என்ன பேசின?" என்றாள் வள்ளி, கேலிச் சிரிப்புடன்.

"காமன் பண்டிகைன்னா என்ன சொல்லு, பாக்கலாம்!"

"ஏண்டி, நீ நல்லாத் தூங்கிட்டு, எங்கிட்ட கதை கேட்டு சமாளிக்கறியா? காமன்னா யாரு? மன்மதன்! மன்மதன்கிட்ட ஒரு வில் இருக்கும். அதைக் கரும்பு வில்னு சொல்லுவாங்க. அந்த வில்லிலேந்து அவன் யார் மேலயாவது அம்பை விட்டா, அவங்க காதல்ல ஈடுபட்டுடுவாங்க. 'மன்மதன் அம்பு' ன்னு கமல் நடிச்ச ஒரு படம் கூட வந்திருக்கே! காமன் கணைன்னு இலக்கியங்கள்ள கூட வரும். 

"அந்தக் காமன் ஒரு  தடவை சிவபெருமான் மேலேயே அம்பை விட்டுட்டான். அவருக்குக் கோபம் வந்து, தன் நெற்றிக் கண்ணால காமனை அதாவது மன்மதனை எரிச்சுட்டாரு. அப்புறம் மன்மதனோட மனைவி ரதி கேட்டுக்கிட்டப்பறம், காமனை உயிர்ப்பிச்சாரு. 

"இந்தக் கதையைத்தான் ராத்திரி பூரா தெருவில ஊர்வலம் போயும், நெருப்பு மூட்டியும் நடிச்சுக் காட்டினாங்க. நீதான் தூங்கி வழிஞ்சிக்கிட்டிருந்தியே, இல்லை, சாமி ஆடிக்கிட்டிருந்தியே, உனக்கு எப்படிக் கதை புரிஞ்சிருக்கும்?"

"புரிஞ்சதனாலதாண்டி கண்ணை மூடிக்கிட்டு அந்தக் காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன்!" என்றாள் மீனாட்சி.

"என்ன வேண்டிக்கிட்டிருந்த?" என்றாள் வள்ளி.

"காமதேவனே! கடவுள்கிட்ட கூட உன் வேலையைக் காட்டற. ஆனா, ஏன் என் காதலன் மேல உன் அம்பை வீச மாட்டேங்கற? என்னோட காதலைக் கண்டுக்காம அவன் அலட்சியமா இருக்கறதால, என்னைக் காதல் நோய் பிடிச்சு வாட்டறதும், என் மேனியில பசலை படறதும் உனக்குத் தெரியலியா?" என்று மீனாட்சி கூறும்போதே, அவள் கண்களில் நீர் படர்ந்தது.

"அதான் காமன் பண்டிகைக்கு வந்து காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருக்கியே, காமன் நிச்சயமா உன் வேண்டுதலை நிறைவேத்துவான்!" என்று கூறி, தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள் வள்ளி.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

பொருள்:
காமன் ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ள மாட்டான் போலும்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, June 10, 2023

1196. கவிதாவின் மனச்சுமை

கவிதாவும், அவள் தோழி யாமினியும் தெருவில் காவடி தூக்கிச் சென்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

"காவடி ரொம்ப கனமா இருக்கும் இல்ல? எப்படி அதைத் தோளிலே சுமந்துக்கிட்டு நடக்கறாங்க? சில பேர் ஆடிக்கிட்டே வேற நடக்கறாங்க!" என்றாள் கவிதா.

"காவடியோட எடை ரெண்டு பக்கமும் சமமா இருக்கும். மையப்பகுதியைத் தோளிலே வச்சுக்கிட்டிருக்கறதால, எடையோட அழுத்தம் ரெண்டு பக்கமும் சமாமாப் பரவி இருக்கும். நாம கடையில போய் பொருட்கள் வாங்கிக்கிட்டு வரச்சே, எல்லாப் பொருட்களையும் ஒரே பையில போட்டுத் தூக்கிக்கிட்டு வரதை விட, பொருட்களை ரெண்டு பையில போட்டு ரெண்டு கையிலேயும் பையோட நடந்தா, எடையோட அழுத்தம் குறைவா இருக்கும் இல்ல? அது மாதிரி!" என்று விளக்கினாள் யாமினி.

கவிதாவின் பார்வை காவடி சுமந்து நடந்து கொண்டிருந்தவர்களை விட்டு அகலவில்லை.

"என்னடி, அங்கேயே பாத்துக்கிட்டிருக்கே?" என்ற யாமினி, காவடி சுமந்து வருபவர்களை உற்றுப் பார்த்து விட்டு, "ஓ, உன்னோட ஆளும் காவடி தூக்கிக்கிட்டு  வராறா? நான் கவனிக்கலையே!" என்றாள்.

'என்னோட ஆளுன்னு நான்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா, அவர் இன்னும் என்னோட காதலை ஏத்துக்கலையே! அப்படி ஏத்துக்கிட்டா, எனக்கு மனச்சுமை இல்லாம இருக்கும். ஒருபக்கக் காதலை மனசில சுமந்துக்கிட்டு இருக்கறது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் கவிதா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, June 6, 2023

1195. விரும்பியது கிடைத்தும்...

"வாழ்த்துக்கள், மலர்! பிடிவாதமா இருந்து, நீ காதலிச்சவரையே கைப்பிடிச்சுட்டியே!"

"அவ காதலிச்சுக் கைப்பிடிச்சது அவ அத்தை பையனைத்தானே? அதில என்ன ஆச்சரியம் இருக்கு?"

"இருக்கே! மலரோட காதலை அவ அத்தை பையன் அவ்வளவு சுலபமா ஏத்துக்கலையே! ஆனா, இவ பிடிவாதமா இருந்து அவரைத் தன் காதலை ஏத்துக்க வச்சு, அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டா!"

திருமண நிகழ்வில், தனிமையில் சிறிது நேரம் தோழிகளுடன் இருந்தபோது, தோழிகள் இவ்வாறு பேசியதைக் கேட்க மலர்விழிக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

லர்விழிக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் கழித்து, அவள் நெருஙுகிய தோழி பல்லவி அவளைப் பார்க்க வந்தாள்.

"உன் கல்யாணத்துக்கு வர முடியல. சாரி!" என்றாள் பல்லவி.

"நீதான் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டியே, உன்னால எப்படி வர முடியும்" என்றாள் மலர்விழி.

"ஏண்டி, மும்பையில இருந்துக்கிட்டு சென்னையில நடந்த உன்னோட திருமணத்துக்கு என்னால வர முடியலைங்கறதை சொல்லிக் காட்டறியா?" என்ற பல்லவி, "ஆமாம், ஏன் கிண்டலாப் பேசறப்ப கூட உன் முகம் இவ்வளவு சீரியஸா இருக்கு. உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே!" என்று மலர்விழி சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவளிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், தோழியின் தோளில் சாய்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.

"என்னடி ஆச்சு? ஏன் அழறே?" என்றாள் பல்லவி, திகைப்புடன்.

சில விநாடிகள் கழித்து, அழுது ஓய்ந்தபின், மெல்லத் தலையை நிமிர்த்தினாள் மலர்விழி. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு, இயல்பு நிலைக்கு வர முயன்றாள்.

பல்லவி தோழியின் தோளை ஆதரவுடன் அணைத்தபடி மௌனமாக இருந்தாள்.

"உனக்குத் தெரியுமே, என் அத்தை பையன் முரளியைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு..." என்று ஆரம்பித்தாள் மலர்விழி.

"ஏன், உனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கறதில விருப்பம் இல்லையா? உங்க அப்பா அம்மாவோட வற்புறுத்தலினாலதான் ஒத்துக்கிட்டியா?"

"வற்புறுத்தினது நான்தாண்டி! சின்ன வயசிலேந்தே முரளி மேல எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனா, அவருக்கு என் மேல அந்த மாதிரி விருப்பம் எதுவும் இருந்ததில்ல போலருக்கு. என் விருப்பத்தை நான் என் அப்பாகிட்ட சொன்னப்ப, என் அப்பா முரளியைக் கேட்டாரு. முதல்ல முரளி தனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாரு. ஆனா, நான் அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு பிடிவாதமா இருந்ததால, என் அப்பா என் அத்தைகிட்ட, அதான் முரளியோட அம்மாகிட்ட, பேசி இருக்காரு. தன்னோட அம்மாவும் வற்புறுத்ததினதால, முரளி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு போல இருக்கு. இப்ப கல்யாணத்துக்கப்புறம், ஏதோ கடமைக்காக என்னோட கணவனா இருக்கற மாதிரி நடந்துக்கறாரு. அவருக்கு என்கிட்ட அன்பு இருக்கற மாதிரி தெரியல. திருமண வாழ்க்கையில, எனக்குக் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்ல."

சொல்லி முடித்ததும், மலர்விழியின் கண்களில் மீண்டும் நீர் வழிய ஆரம்பித்தது.

"கவலைப்படாதேடி! கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்!" என்றாள் பல்லவி, ஆறுதலாக.

"எனக்கு அப்படித் தோணல!" என்றாள் மலர்விழி

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

பொருள்:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால், நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 5, 2023

1194. "கொடுத்து வைத்தவள்"

சுகன்யாவுக்குத் திருமணம் ஆனதிலிருந்தே பலரும் அவளிடம் அடிக்கடி கூறும் சொற்கள்: "நீ கொடுத்து வச்சவடி."

எடுப்பான தோற்றம், நல்ல வேலை, வசதியான பெற்றோருக்கு ஒரே பையன் ஆகிய தகுதிகளுடன் சதீஷ் அவளுக்கு மணமகனாக அமைந்தபோது, 'ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படிக்காத, வேலைக்குப் போகாத எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை எப்படிக் கிடைத்தார்? அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள எப்படிச் சம்மதித்தார்? நான் என்ன அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனோ!' என்று மலைத்தாள் சுகன்யா.

எதிர்பார்த்தது போலவே, சுகபோக வாழ்க்கை. பெரிய வீடு, வீட்டில் சமையல் உட்பட எல்லா வேலைகளுக்கும் ஆட்கள், சுகன்யா எங்காவது போக வேண்டுமென்றால் அவளுக்காக டிரைவருடன் தயாராக இருக்கும் கார், அதற்கும் மேல் அவளிடம் அன்பு காட்டிய அவள் மாமியார் எல்லாம் அவள் நினைத்துப் பார்க்காத அளவில் அமைந்து விட்டன.

திருமணத்துக்குப் பிறகு, சுகன்யா தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், அவளுடைய அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் ஆகிய அனைவரும், "இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்று கூறுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை அவள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம், அவர்களும் இதையேதான் சொன்னார்கள்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் உனக்குக் குழந்தை உண்டாகலியே! நீயும் உன் புருஷனும் ஒரு நல்ல டாக்டரைப் பாருங்களேன்!" என்றாள் அம்மா.

"அதெல்லாம் வேண்டாம்மா!" என்றபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுகன்யா - தன் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை அம்மா பார்த்து விடக் கூடாதே என்று.

முதலிரவன்று தனக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்து விட்டான் என்ற களிப்பில் இருந்த தன்னிடம், "இங்கே பாரு, சுகன்யா! நான் உன்னை விரும்பிக் கல்யாணம் செஞ்சுக்கல. நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். அவ வேற ஜாதிங்கறதால, அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க என் அம்மா சம்மதிக்கல. அவங்க வற்புறுத்தலாலதான் நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். வெளியுலகத்துக்கு மட்டும்தான் நாம் கணவன் மனைவி! மத்தபடி நம்ம ரெண்டு பேருக்கு நடுவில எந்த உறவும் கிடையாது!" என்று சதீஷ் கூறி விட்டதையும், அப்போதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக மனதில் மகிழ்ச்சி இல்லாமல், 'இதுதான் என் விதி போலும்'  என்ற விரக்தியில் தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தன் அம்மாவிடம் சொல்லி அவளுக்கு வருத்தம் ஏற்படுத்த விரும்பவில்லை சுகன்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாத நிலையில் மனைவி இருந்தால், அவள் தீவினை வசப்பட்டவளே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, June 2, 2023

1193. செங்கமலத்தின் செருக்கு!

"செங்கமலத்தோட புருஷன் வியாபாரத்துக்கு வெளியூர் போயிருக்காரு இல்ல?"

"ஆமாம். அதுக்கு என்ன?"

"ஆனா அவளைப் பாத்தா, கணவனைப் பிரிஞ்ச வருத்தம் கொஞ்சம் கூட இருக்கறவ மாதிரி தெரியலையே!"

"இல்லையே! வருத்தமாத்தான் இருக்கா. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லன்னு அவ அம்மா எங்கம்மாகிட்ட வருத்தப்பட்டு சொன்னாங்களே!"

"அவ அம்மா சொல்றது இருக்கட்டும். நீ அவகிட்ட பேசிப் பாத்திருக்கியா?"

"இல்லை. அவளை எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. என் அம்மாவுக்கு அவ அம்மாவைத் தெரியும். ஒரு தடவை கோவில்ல என் அம்மாகிட்ட பேசினதைக் கேட்டதை வச்சு சொல்றேன்."

"அதானே பாத்தேன்! நீ செங்கமலத்துக்கிட்ட பேசி இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும்."

"நீ பேசினியா? அவ என்ன சொன்னா?"

"ஒரு ஆறுதலுக்காக, 'பாவம் உன் புருஷன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே!'ன்னு சொன்னேன். அதுக்கு அவ, 'போனா என்ன? ரெண்டு மூணு மாசத்தில வந்துடப் போறாரு. அவர் வியாபாரத்துக்குத்தானே போயிருக்காரு! வீட்டில பொண்டாட்டி இருக்கறப்ப, இன்னொரு காதலி வீட்டுக்கா போயிருக்காரு?' அப்படின்னு பதில் சொன்னா. என் புருஷனுக்கு இன்னொரு காதலி இருக்கறதை சொல்லிக் காட்டறாளாம்! எவ்வளவு திமிர் பாத்தியா!"

"உன் புருஷனும், என் புருஷனும் ஊர்ல இருக்கறப்பவும் நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்க. அவங்க வெளியூர் போயிட்டு வந்தாலும், முதல்ல தங்களோட காதலி வீட்டுக்குத்தான் போவாங்க. செங்கமலத்தோட கணவனுக்கு அவ மேல அவ்வளவு அன்பு இருக்கு. அவளுக்கு ஏன் திமிர் இருக்காது?"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, May 24, 2023

1192. மழையினில் நனைந்து...

"நாலு மாசமா அவ பின்னால அலையறேன். திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்கறா!" என்றான் விநாயக்.

"அப்ப அவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாக்க வேண்டியதுதானே?" என்றான் கல்யாண்.

"இப்படியெல்லாம் பேசினா, உன்னை விட்டுட்டு வேற நண்பனைத் தேடிக்க வேண்டி இருக்கும்!" என்றான் விநாயக், கோபமாக.

"அடேயப்பா! என்னையே தூக்கிப் போட்டுடுவேங்கற! காதல்ல அவ்வளவு ஈடுபாடா? 2023-இல இப்படி ஒரு காதலா?"

"நீ கிண்டலாச் சொன்னாலும், உண்மை அதுதான். உண்மையான காதல்ங்கறது எல்லாக் காலத்திலேயும் இருக்கும். கி.மு. 2023-இல மட்டும்தான் இருந்ததுன்னு நினைக்காதே. கி,பி. 2023-இலேயும் இருக்கு."

"சாரி. எனக்குத் தெரியாது. எனக்கு அந்த அனுபவமே இன்னும் வரல. சரி, ஒருவேளை அவ உன் காதலை ஏத்துக்கலேன்னா?" என்றான் கல்யாண்.

ஒரு நிமிடம் யோசித்த விநாயக், "தெரியல. மழை பேஞ்சாதான் உலகத்தில உள்ள உயிர்கள் எல்லாம் பிழைக்க முடியும். 'ஒருவேளை மழை பெய்யலேன்னா?'ன்னு கேட்டா, என்ன பதில் சொல்ல முடியும்?" என்றான்.

"டேய் கல்யாண்! அவ என் காதலை ஏத்துக்கிட்டாடா!" என்றான் விநாயக், உற்சாகமாக.

"வாழ்த்துக்கள்!" என்ற கல்யாண், வெளியே பார்த்து விட்டு, "அன்னிக்கு 'உன் காதலை உன் காதலி ஏத்துக்கலேன்னா?'ன்னு நான் கேட்டதுக்கு, 'மழை பெய்யலேன்னா என்ன ஆகும்?'னு பதில் கேள்வி கேட்ட. இன்னிக்கு உன் காதலி உன் காதலை ஏத்துக்கிட்ட செய்தியை நீ எங்கிட்ட சொல்றப்ப மழை பெய்யுது. நல்ல பொருத்தம்தான்!" என்றான்.

"என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியல. மழையில நனையறதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற என்ன இருக்கு? அதனால நான் கொஞ்ச நேரம் மழையில நனைஞ்சு என் மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டு வரேன்!" என்றபடியே வெளியே ஓடினான் விநாயக்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

பொருள்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உலகில் வாழ்பவர்களுக்கு மேகம் மழை பெய்து அவர்களைக் காப்பாற்றுதலைப் போன்றது.

(குறிப்பு; இந்தக் குறள் ஒரு பெண்ணைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இந்த உணர்வு ஒரு ஆணுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது)

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 21, 2023

1191. விதையில்லா திராட்சை

தோழிகள் உணவு அருந்திக் கொண்டே தங்கள் காதல் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னை ஒத்தன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். ஆனா, அவனை எனக்குப் பிடிக்கலையே!" என்றாள் ரஞ்சிதா.

"என் விஷயத்திலேயும் முதல்ல அப்படித்தான் ஆச்சு. ரமேஷ் என் பின்னால அலைஞ்சுக்கிட்டிருந்தப்ப, ஆரம்பத்தில எனக்கு அவன் மேல அவ்வளவா ஈடுபாடு இல்ல. ஆனா கொஞ்ச நாள்ள, எனக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு! இப்ப நாங்க மனம் ஒத்த காதலர்கள்!" என்றாள் பிரியா.

"அவனை விட்டுட்டா வேற ஆள் கிடைக்க மாட்டான்னு நினைச்சு பயந்து அவனோட காதலையே ஏத்துக்கறதுங்கற முடிவுக்கு வந்திருப்ப!" என்றாள் மதுவந்தி.

"ஏய்!" என்று பொய்க் கோபத்துடன் கையை ஓங்கிய பிரியா, "சாப்பிட்டுட்டு வந்து உன்னை வச்சுக்கறேன்!" என்று கூறி, ஓங்கிய கையை இறக்கினாள்.

"நான் உங்களை மாதிரில்லாம் இல்லப்பா. நான்தான் ரகுவை முதல்ல விரும்பினேன். எனக்கு அவர் மேல ஈடுபாடு இருக்குன்னு தெரிஞ்சதும், அவரும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டாரு. இப்ப நாங்க எங்க கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நந்தினி.

"அதான் எங்களை மாதிரில்லாம் காதலனை அவன் இவன்னு பேசாம ரொம்ப மரியாதையா அவர் இவர்னு பேசறே. சரியான தர்மபத்தினிதான் நீ!" என்ற ரஞ்சிதா, வாணியிடம் திரும்பி, "என்னடி, நாங்கள்ளாம் எங்க காதலைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம். நீ மட்டும் மௌனமா இருக்கே!" என்றாள்.

"அவ ரொம்ப மும்முரமா திராட்சைப் பழத்தை சாப்பிட்டிருக்கறதைப் பாத்தா அந்த திராட்சைப் பழம் ரொம்ப சுவையா இருக்கும் போலருக்கு. அதான் அதோட சுவையில ஈடுபட்டிருக்கா!" என்றபடியே, அவள் முன்பிருந்த தட்டிலிருந்து ஒரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட நந்தினி, "ஆஹா! ரொம்ப இனிப்பா இருக்கே! சீட்லெஸ் வேற. எனக்கு திராட்சையில விதை இருந்தாலே பிடிக்காது. சீட்லெஸ் கிரேப்ஸ்தான் பெஸ்ட்!" என்று சொல்லி, இன்னொரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

"உனக்கென்ன? உன் காதலும் இந்த விதையில்லா திராட்சை மாதிரி இனிப்பா, தடை இல்லாததா அமைஞ்சிடுச்சு!" என்ற வாணி, 'என்னை மாதிரியா? நான் விரும்பற காதலன் இன்னும் என்னை விரும்பலையேன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன்! என் சோகத்தை நான் எப்படி உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, "உங்களை மாதிரியெல்லாம் எங்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை!" என்றாள் வாணி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொருள்:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 14, 2023

1190. கேட்டதும், கேட்காததும்!

"புருஷன் ஊருக்குப் போனதிலேந்து வீட்டை விட்டு எங்கேயும் வெளியில போகாம இருந்தே. இன்னிக்கு நீயே வெளியில போயிட்டு வரேன்னு கிளம்பி இருக்க. ரொம்ப நல்லது. அப்பதான் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும். இந்தப் பத்து நாள்ள உன் தோல் வெளிறி, நிறம் மாறி இருக்கு. உடம்பில கொஞ்சம் வெய்யில் பட்டா, அது கூட சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றாள் மரகதம்.

பூங்கொடி எதுவும் சொல்லாமல் வெளியில் கிளம்பினாள்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய பூங்கொடியின் முகத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது. பத்து நாட்களாக முகத்தில் அப்பியிருந்த சோகம் கூட சற்றுக் கலைந்திருந்தாற்போல் தோன்றியது.

'வெளியில் போனால் யாராவது ஏதாவது பேசி இவள் சோகத்தை அதிகமாக்கி விடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கவில்லை!" என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.

"வழியில யாரையாவது பாத்தியா? ஏதாவது கேட்டங்களா?" என்றாள் மரகதம்.

"பாத்தேன். எல்லாருமே எனக்கு வந்திருக்கிற பசலை நோயைப் பத்தித்தான் கேட்டாங்க. ஏன் உடம்பு இப்படி இளைச்சிருக்கு, ஏன் கண் சிவந்திருக்கு, ஏன் தோல் வெளுத்திருக்குன்னெல்லாம் கேட்டாங்க."

"வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டாங்களே! அதையெல்லாம் நீ பொருட்படுத்தாதே!"

"இல்லம்மா! 'உன் சம்மதத்தோடதான் உன் புருஷன் உன்னைப் பிரிஞ்சு போனாரு, அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பசலை வந்திருக்கு?'ன்னு கேட்டாங்களே தவிர, 'உன் புருஷன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே, அவருக்கு உன் மேல அன்பு இல்லையா?'ன்னு யாருமே கேக்கல, அதுவே எனக்கு ஆறுதலா இருக்கு!" என்றாள் பூங்கொடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பொருள்:
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்ற மாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லதுதான்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, May 13, 2023

1189. நானும் அப்படித்தானே இருந்தேன்!

கணவன் பிரிந்து சென்ற இரண்டு மாதங்களாக மங்கை அனுபவித்து வந்த வேதனையை அவள் உடல் மாற்றங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

தூக்கம் இல்லாததால் எப்போதும் சோர்வுடன் காணப்படும் கண்கள், சரியாக உணவு அருந்தாததால் இளைத்துப் போன உடல், வெளிறிப் போய் நிறம் மாறிய சருமம் என்று பசலை நோயின் தாக்கம் அவள் மீது முழுவதுமாகப் படர்ந்திருந்தது.

"நல்லா இருந்த பொண்ணை இப்படி ஆக்கிட்டுப் போயிட்டானே!" என்று புலம்பினாள் மங்கையின் தாய்.

"நான் சம்மதிச்சதாலதானே அவர் போனாரு?" என்றாள் மங்கை.

"பொண்டாட்டிகிட்ட நைச்சியமாப் பேசி அவளை சம்மதிக்க வைக்கறது ஒரு ஆம்பளைக்குக் கஷ்டமான காரியமா என்ன? உங்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிக்கிட்டு வெளியூர் போனவன் அங்கே மதுவைக் குடிச்சுக்கிட்டு, வகையாத் தின்னுக்கிட்டு, இன்னும் எதையெல்லாமோ பண்ணிக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டிருப்பான். நீ மட்டும் பசலை நோயால வாடிக்கிட்டிருக்க!" 

"இந்தப் பிரிவுக்கு என்னை சம்மதிக்க வச்சுட்டு, அவர் மட்டும் இந்தப் பிரிவால பாதிக்கப்படாம மகிழ்ச்சியா இருப்பார்னா, இந்தப் பசலை நோயை நான் மகிழ்ச்சியா ஏத்துக்கறேன்!" என்றாள் மங்கை.

"என்ன பொண்ணோ!" என்று அலுத்துக் கொண்ட மங்கையின் தாய், 'இவ வயசில நானும் இப்படித்தானே இருந்தேன், நான் கஷ்டப்பட்டா பரவாயில்ல, என் புருஷன் நல்லா இருக்கணும்னு நினைச்சு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பொருள்:
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர் நலமாக இருப்பார் என்றால், என் மேனி பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, May 11, 2023

1188. உடம்புக்கு என்ன?

நாகம்மை தெருவில் நடந்து சென்றபோது, அவளுக்கு அறிமுகமானவர்கள் பலர் அவளை உற்றுப் பார்த்தனர்.

ஒரு இளம்பெண் அவள் அருகில் வந்து, "என்னடி, ஒரு வாரம் முன்னால உன்னைப் பார்த்தேன். அதுக்குள்ள இப்படி இளைச்சுட்ட. உடம்பெல்லாம் வெளிறிப் போயிருக்கு. உடம்பு சரியில்லையா என்ன?" என்றாள்.

நாகம்மை 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையாட்டினாள். அதற்குள், அருகில் நடந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, "உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பசலை பிடிச்சிருக்கு!" என்றாள்.

"பசலையா? அப்படின்னா?"

"உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலருக்கு! காதலன் இருக்கானா? அப்பவும் உனக்கு இந்த அனுபவம் வரும்!" என்று அந்தப் பெண்மணி கூறியதைக் கேட்டு, அந்த இளம்பெண் ஒன்றும் புரியாமல் நின்றாள்.

நாகம்மை விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நடந்தாள்.

வீட்டுக்குச் சென்ற நாகம்மை, தன் அம்மாவிடம், "என்னம்மா இது, வீட்டை விட்டு வெளியிலே போனாலே, எல்லாரும், 'என்னடி இப்படி இளைச்சுட்டே!'ங்கறாங்க, என் பசலை நோயைப் பத்திப் பேசறாங்க. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா!" என்றாள், வருத்தமும், கோபமும் கலந்த குரலில்.

"நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி, உன்னைத்தான் எல்லாரும் குத்தம் சொல்லுவாங்க. கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்திலேயே உன்னை விட்டுட்டு வியாபாரம் பண்ணப் போறேன்னு வெளியூருக்குப் போயிட்டானே உன் புருஷன், அவனைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க!" என்றாள் நாகம்மையின் தாய், அவளைப் பரிவுடன் அணைத்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

பொருள்:
இவள் உடலில் பசலை படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம் காதலன் பிரிந்து சென்றிருப்பதுதான் என்று சொல்பவர் இல்லையே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, May 10, 2023

1187. தூக்கத்திலிருந்து எழுப்பியது ஏன்?

தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்பட்ட மணிமேகலை, கண் விழித்தாள்.

"பொழுது விடிஞ்சுடுச்சா என்ன? " என்றாள் மணிமேகலை, கண்களைக் கசக்கிக் கொண்டு.

"இல்லை. விடியறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு!" என்றான் அவள் கணவன் கதிரவன்

"பின்னே ஏன் அதுக்குள்ள எழுப்பினீங்க?" என்றாள் மணிமேகலை, சிணுங்கியபடி.

"முழிப்பு வந்ததும் உன்னைப் பார்த்தேன். உன் உடம்பு நடுங்கின மாதிரி இருந்துச்சு. அதான் எழுப்பினேன். உடம்புக்கு ஒண்ணுமில்லையே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன்! படுத்துக்கங்க. அதான் பொழுது விடியலையே!" என்றாள் மணிமேகலை.

'தூக்கத்தில் கணவனின் அணைப்பிலிருந்து சற்று விலகியதுமே, உடலில் வேகமாகப் பசலை படர்ந்திருக்கிறது. அது உடல் நடுங்குவது போல் கணவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தப் பசலை படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள் மணிமேகலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

பொருள்:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை அள்ளிக் கொள்வது போல் வந்து பரவி விட்டதே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...