Tuesday, May 9, 2023

1186. ஒளி அகன்றதும்...

"ஒருநாள்தானே ஊருக்குப் போயிட்டு வந்தேன்? அதுக்குள்ள இப்படி முகம் சிறுத்து, தோல் வெளுத்து, சோகை பிடிச்சவ மாதிரி ஆயிட்ட!" என்றான் மலையரசன்.

"அதான் திரும்பி வந்துட்டீங்களே, இனிமே சரியாயிடுவேன்!" என்றாள் பரிவாதினி, சிரித்தபடி.

ரவில் படுக்கையறையில் இருந்தபோது, "இனிமே நீங்க என்னைப் பிரிஞ்சு எங்கேயும் போகக் கூடாது!" என்றாள் பரிவாதினி.

"சரி, போகல!" என்ற மலையரசன், "ஒருநாள் பிரிவுக்கா இப்படி வாடிப் போவ, சோகை பிடிச்ச மாதிரி!" என்றான், சிரித்தபடி.

"அதுக்குப் பேர் சோகை இல்லை. அதைப் பசலைன்னு சொல்லுவாங்க. காதலனையோ, கணவனையோ பிரிஞ்சா, பெண்களுக்கு வர நோய் அது. நீங்க ஆம்பளை. உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகுது?" என்றாள் பரிவாதினி.

"ஒரு நாள் பிரிவுக்கெல்லாம் கூடவா இப்படியெல்லாம் ஆகும்?"

"ஒரு நாள் என்னங்க, ஒரு கணம் பிரிஞ்சாலே வரும்! இப்ப நீங்க என்னை அணைச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருக்கீங்க இல்ல? உங்க அணைப்பு கொஞ்சம் விலகினா கூட, என் உடம்பில மாறுதல் ஏற்பட்டு, பசலை நோய் அறிகுறிகள் உருவாகறதை என்னால உணர முடியும்!"

"அது எப்படி? எதுக்குமே கொஞ்சம் நேரம் ஆகணும் இல்ல? உடனே எப்படி..? என்னால இதை நம்ப முடியல!"

"இப்ப இந்த விளக்கு எரியுது இல்ல? அதனால இங்கே இருள் இல்ல. இந்த விளக்கை அணைச்சா, உடனே இருள் பரவும் இல்ல? அதுக்கு நேரம் பிடிக்குமா என்ன? அது மாதிரிதான்!" என்ற பரிவதினி, வாயால் ஊதி விளக்கை அணைத்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

பொருள்:
விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப் போல், இறுகத் தழுவிய காதலன் பிடி சற்றுத் தளரும்போது, காதலியின் உடலில் பசலை நிறம் படர்ந்து விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1185. விடைபெற்றுச் சென்றதும்....

கனகத்துக்கு இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. 

பொழுது விடிந்ததும், அவள் கணவன் சபாபதி அவளைப் பிரிந்து வெளியூர் சென்று விடுவான். அவன் திரும்பி வரும் வரை அவனைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற நினைவினால் அவள் தூக்கம் தொலைந்தது.

கணவன் கிளம்பிச் சென்றதும் தனக்கு ஏற்படப் போகும் பிரிவுத் துயரை ஓரளவுக்காவது குறைக்க, தன் தோழி ரத்னமாலாவை வரச் சொல்லி இருந்தாள் கனகம். அவளும் கனகத்துடன் இரண்டு நாட்கள் தங்கி இருக்க ஒப்புக் கொண்டாள்.

சபாபதி கிளம்ப வேண்டிய நேரத்துக்குச் சிறிது நேரம் முன்பே வந்து விட்டாள் ரத்னமாலா.

கனகத்திடம் விடைபெற்றுக் கொண்டு சபாபதி கிளம்பினான். விடைபெறும்போது, சபாபதி கனகத்திடம் நெருக்கமாக இருந்து அவளைத் தழுவி அணைத்து விடைபெறக் கூடும் என்பதால், சபாபதி கிளம்பும் நேரத்தில் ரத்னமாலா வாசலுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.

சபாபதிக்கு விடைகொடுத்து விட்டுக் கனகம் வீட்டுக்குள் வந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.

கனகத்தின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட ரத்னமாலா, அவள் கையை உற்றுப் பார்த்து விட்டு, "ஏண்டி, உன் கணவர் தெருக்கோடி வரை போயிருப்பாரா?" என்றாள்.

"போயிருப்பாரு. ஏன் கேக்கற?" என்றாள் கனகம், புரியாமல்.

"இல்லை. இப்பதான் உன் கணவர் கிளம்பினாரு. தெருக்கோடிக்குக் கூடப போயிருக்க மாட்டாரு. அதுக்குள்ள உன் தோல் வெளிற ஆரம்பிச்சுட்டுதே, பசலை வந்த மாதிரி! உடம்பு கூடக் கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு!" என்றாள் ரத்னமாலா.

தோழி தன்னைக் கேலி செய்கிறாளா, அல்லது உண்மையாகவே தனக்குப் பசலை வந்து விட்டதா என்று புரியாமல் ரத்னமாலாவின் கண்களைப் பார்த்தாள் கனகம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

பொருள்:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 7, 2023

1184. நினைவாலே சிலை செய்து...

கோதையின் கணவன் அவளை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.

நீண்டஇடைவெளிக்குப் பிறகு கோதையைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வந்த அவள் பழைய தோழி நாயகி, சற்று நேரம் அவளிடம் பேசிய பிறகு, "ஆமாம், உன் புருஷனை எங்கே காணோம்? வேலைக்குப் போயிருக்காரா?" என்றாள்.

"ஆமாம். வேலைக்குத்தான் போயிருக்காரு. ஆனா, வெளியூருக்கு!" என்றாள் கோதை, சிரித்தபடி.

"என்னடி இது? புருஷன் உன்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூருக்குப் போயிருக்காருன்னு சிரிச்சுக்கிட்டே சொல்ற! கணவனைப் பிரிஞ்சிருக்கறது வருத்தமா இல்லையா?" என்றாள் நாயகி, வியப்புடன்.

"பிரிஞ்சிருக்கறது வருத்தமாத்தான் இருக்கு. ஒரு நாளைக்கு அறுபது நாழிகையும் அவர் நினைப்பாகவேதான் இருக்கேன். மனசுக்குள்ள அவர் உருவத்தை சிலை மாதிரி உருவாக்கி வச்சிருக்கேன். எப்பவும் அவரைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருக்கேன். ஏன், பல சமயம் அவரோட நேர்ல பேசற மாதிரியே, மனசளவில பேசிக்கிட்டுக் கூட இருக்கேன். அதனால மகிழ்ச்சியாகவும் இருக்கேன்!" என்றாள்.

அப்போது உள்ளிருந்து வந்த கோதையின் தாய், "இவ இப்படி சொல்றா. ஆனா இவ உடம்பு இளைச்சு தோலெல்லாம் வெளுத்து, பசலை படர்ந்திருக்கு. நீயே பாரு!" என்றபடி, கோதையின் தோல் வெளுத்திருந்த கையைப் பிடித்து, நாயகியிடம் காட்டினாள்.

"அவர் இங்கே இருக்கும்போது, நான் அவரோட இருந்தேன். அவர் வெளியூர் போனப்பறம், அவர் நினைப்பாகவே இருக்கேன். முன்னே இருந்த மாதிரி, இப்பவும் அவரோடதானே இருந்துக்கிட்டிருக்கேன்! அப்புறம் ஏன் பசலை வருது? இது தப்பு இல்லையா?" என்றாள் கோதை, தன் தாயைப் பார்த்து.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

பொருள்:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வதெல்லாம் அவர் குணங்களைத்தான். இருந்தும், இந்தப் பசலை வந்துவிட்டதே! இது வஞ்சகம் அல்லவா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, May 6, 2023

1183. எடுத்துக் கொண்டதும், கொடுத்துச் சென்றதும்!

வீட்டுக்கு வந்த மணிமேகலையை வரவேற்ற அழகம்மை, "வா, வா! ஒரு மாசமா வீட்டிலேயே முடக்கிக் கிடந்தவ, இன்னிக்குத்தான் உன்னோட அங்காடிக்கு வரேன்னு சொல்லி இருக்கா" என்றாள்.

பிறகு உள்ளே திரும்பி, "லட்சுமி! மணிமேகல வந்திருக்கா பாரு!" என்றாள், தன் மகளுக்குக் கேட்கும்படி.

உள்ளிருந்து வந்த லட்சுமி, மணிமேகலையைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.

"ஏண்டி, இப்படியேவா போவ? முகத்தில எண்ணெய் வழியுது. கையில, முகத்தில எல்லாம் அங்கங்கே தோல் நிறம் மாறி இருக்கு. முகத்தைக் கழுவிக்கிட்டு, நல்ல புடவை கட்டிக்கிட்டு, தோல் நிறம் மாறி இருக்கிற இடங்கள்ள கொஞ்சம் எண்ணெயைத் தடவி கொஞ்சாமாவது நிற மாற்றங்களைச் சரி செஞ்சுக்கிட்டுப் போ!" என்றாள் அழகம்மை.

அழகம்மை பேசி முடிப்பதற்குள், லட்சுமி தெருவில் இறங்கி விட்டாள். வேறு வழியில்லாமல், மணிமேகலையும் அழகம்மையைப் பார்த்து விடைபெறுவது போல் தலையாட்டி விட்டு, லட்சுமியைப் பின்தொடர்ந்தாள்.

தெருவில் சிறிது தூரம் நடந்ததும், "ஏண்டி, உங்கம்மா சொல்றது சரிதானே! நீ எவ்வளவு அழகா இருப்பே! இப்ப உன் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. பசலை படர்ந்து, தோல் வேற அங்கங்க நிறம் மாறி இருக்கு. தெருவில நடந்து போறவங்க கூட உன்னை ஒரு மாதிரியாதான் பாக்கறாங்க. உன் அம்மா சொன்னபடி கொஞ்சம் ஒப்பனை செஞ்சுக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?" என்றாள் மணிமேகலை.

"என்னவோ தெரியல. அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போனப்பறம், நான் வெளியிலேயிலேயும் சரி, உள்ளுக்குள்ளேயும் சரி, அடியோட மாறிட்ட மாதிரி இருக்கு. என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்ப, அவர் என்னோட அழகையும், வெட்கத்தையும் எடுத்துக்கிட்டு, பதிலுக்கு இந்தக் காதல் நோயையும், பசலை நோயையும் கொடுத்துட்டுப் போயிட்டாரோ என்னவோ!" என்றாள் லட்சுமி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

பொருள்:
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு, அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, May 5, 2023

1182. மேனியில் படர்ந்த பசலை!

காலையில் கண் விழித்ததும், பைங்கிளி தன் கைகளைப் பார்த்தாள். 

நேற்று கைகளில் தோல் சற்றே வெளுத்திருந்தது போல் தோன்றியது. இன்று, இன்னும் சற்று அதிகமாக வெளுத்திருந்தது. பளபளவென்று இருந்த சருமம், இப்போது தன் பளபளப்பை இழந்து, சாம்பல் பூத்திருந்தது போல் காணப்பட்டது

பைங்கிளி கோபத்துடன் கிணற்றடிக்குச் சென்றாள்.

கிணற்றிலிருந்து நீர் இழுக்கப்படும் சத்தம் கேட்டு அங்கே வந்த பைங்கிளியின் தாய், "என்னடி இது, அதிசயமா இருக்கு? குளி குளின்னு நான் சொல்றப்பல்லாம் சோம்பல்பட்டுக்கிட்டுக் குளிக்காம இருப்ப. இன்னிக்குக் காலையில எழுந்தவுடனேயே குளிக்கப் போயிட்டே!" என்றாள்.

பைங்கிளி தன் தாய்க்கு பதில் சொல்லவில்லை.

வாளியிலிருந்த தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டவள், மஞ்சளைத் தரையில் தேய்த்து, மஞ்சள் குழைவை எடுத்து, சாம்பல் படர்ந்தது போல் வெளிறி இருந்த கைகள் மீது அழுத்தித் தேய்த்தாள்.

தேய்க்கும்போதே, தன் மேனியில் படர்ந்திருந்த பசலையைப் பார்த்துப் பேசுவது போல் "ஏண்டி பசலை! என் கணவனோட பிரிவைத் தாங்க முடியாம, சாப்பாடு பிடிக்காம, தூக்கம் வராம நான் தவிச்சுக்கிட்டிருக்கேன. நீ என்னடான்னா அவரோட பிரிவுதானே உன்னை உண்டாக்கிச்சுங்கற பெருமையோட என் உடம்பு மேல ஏறிப் பரவிக்கிட்டிருக்க! இந்த மஞ்சளைத் தேய்ச்சு உன்னை அழிச்சுடறேன் பாரு!" என்றாள் பைங்களி.

"ஏண்டி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லாம, உன் காலைப் பாத்து ஏதோ பேசிக்கிட்டிருக்க! உன் கணவன் ஊருக்குப் போனாலும் போனான், நாளுக்கு நாள் உன் கிறுக்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றபடியே உள்ளே திரும்பினாள் பைங்களியின் தாய்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பொருள்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு, இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனி மேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, May 1, 2023

1181. காதலன் சென்றான்!

"என்னடி, கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கே?" என்றாள் வாசவியின் தாய்.

"எப்படி இருக்கேன்?" என்றாள் வாசவி.

"உடம்பெல்லாம் இளைச்சு, சோகை பிடிச்ச மாதிரி இருக்கு. தோல் கூட வெளுத்திருக்கு!"

"பரவாயில்லம்மா. நான் கருப்புதானே? கொஞ்சம் தோல் வெளுத்தால் நல்லதுதானே!"

"கருப்புத்தோல் வெளுத்து, ஒரு மாதிரி பச்சையா இல்ல இருக்கு, பாசி படர்ந்த மாதிரி!"

'நாளானால் பாசி படரத்தானே செய்யும்?' என்று முணுமுணுத்தாள் வாசவி.

'நீண்ட நாள் பராமரிக்கப்படாத தரையில் பாசி படர்வது போல், காதலனைப் பிரிந்து வாடும் உடலில், நாட்பட நாட்படப் பசலை படரத்தானே செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் வாசவி. 

'உன்னைப் பிரிந்து வெளியூர் செல்கிறேன், திரும்பி வரப் பல நாட்கள் ஆகும் என்று காதலன் சொன்னபோது மறுப்புச் சொல்லாமல் தலையாட்டி விட்டு, இன்று உடல் சோர்ந்து தோல் நிறம் மாதிரி, என் மன வருத்தத்தை உடல் பிரதிபலிக்கிறதே என்று வருந்தி என்ன பயன்!'

"என்னடி, பதில் சொல்ல மாட்டேங்கற? மருத்துவர்கிட்ட போகலாமா?" என்றாள் தாய்.

"வேண்டாம்மா! தானே சரியாயிடும்" என்ற வாசவி, 'காதலன் திரும்பியதும் சரியாகி விடும்தான். ஆனால், அதுவரை 'ஏன் உன் உடல் இளைத்து நிறம் மாறி இருக்கிறது?' என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே!' என்று கவலை கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

பொருள்:
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்து விட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என் உடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, April 27, 2023

1180. பறையொலி கேட்டபோது...

"இதுக்குத்தான் நான் அந்தத் திருமண விழாவுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்!" என்றாள் முத்தழகி.

"அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்தது உனக்கு மாறுதலா இருந்திருக்குமே! உன்னோட துயரம் கொஞ்சம் குறைஞ்சிருக்குமே!" என்றாள் அவள் தாய் மரகதம்.

"நான் ஒரு ஓரமாத் தனியா உக்காந்திருந்தேன். அங்கே இருந்த இளம்பெண்கள் எல்லாம், "நீ ஏன் தனியா உக்காந்திருக்கே?"ன்னு சொல்லி என்னை அவங்களோட அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. பத்துப் பதினைஞ்சு பேரா சேர்ந்துக்கிட்டு என்ன ஒரு பேச்சு, ஆட்டம், பாட்டம்!"

"உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருந்திருக்குமே!"

"எப்படிம்மா? அவங்கள்ளாம் அவங்க காதலர்களைப் பத்திப் பேசினாங்க. காதலனை சந்திச்சது எப்படி, காதலன் தன்னை எப்படிக் கொஞ்சுவான், காதலனோட சண்டை போட்டது, அப்புறம் சமாதானமாகி சேந்துக்கிட்டதுன்னு ஒவ்வொருத்தியும் பேசின காதல் கதைகளை வச்சு ஒரு புராணமே எழுதலாம்."

"நீ பேசாம கேட்டுக்கிட்டிருந்தியா?"

"ஆமாம். அவங்க பேசறதையெல்லாம் கேட்டப்ப, 'எனக்கும் இப்படிப்பட்ட அனுபவமெல்லாம் இருந்ததே, ஆனா. என் காதலன் என்னை விட்டுட்டுப் போயிட்டானே!' ன்னு நினைச்சு மனசு ரொம்ப சங்கடப்பட்டுச்சு. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கிட்டிருந்தேன். ஆனா, அவங்க என்னன்னா, 'நீ ஏண்டி சும்மா இருக்கே? உன்னோட அனுபவத்தைச் சொல்லு' ன்னு என்னைத் தூண்டிக்கிட்டே இருந்தாங்க!"

மரகதம் மகளுக்கு ஆதரவாக ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, தெருவில் பறையடிக்கும் சத்தம் கேட்டது.

"பறையடிக்கறாங்களே! ஏதாவது முக்கியமான அறிவிப்பா இருக்கப் போகுது. வா, வாசலுக்குப் போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்!" என்று மகளின் கையைப் பற்றி வாசலுக்கு அழைத்துச் செல்ல யத்தனித்தாள் மரகதம், மகளின் கவனத்தைத் திருப்பி அவள் துயர நினைவுகளைச் சற்றே பின்தள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து.

முத்தழகி சட்டென்று தன் தாயின் கைகளைப் பற்றி, அவளை அருகில் இழுத்தாள்.

"ஏம்மா, தெருக்கோடியில பறையடிச்சது, வீட்டுக்குள்ள இருக்கறப்பவே உனக்குக் கேட்டுதில்ல?" என்றாள் முத்தழகி.

"ஆமாம், கேட்டது. அதனாலதானே உன்னையும் அழைச்சுக்கிட்டு வாசலுக்குப் போறேன்?" என்றாள் மரகதம்.

"என் கண்ணைப் பாரும்மா! எங்கேயோ அடிக்கற பறையோட சத்தம் வீட்டுக்குள்ள இருக்கற நமக்குக் கேக்கற மாதிரி, என் மனசுக்குள இருக்கற துயரம் என் கண்ல தெரியல? ஆனா. ஏம்மா சில பேர் இதை கவனிக்காம என் துயரத்தை அதிகமாக்கற மாதிரி நடந்துக்கறாங்க?" என்றாள் முத்தழகி, விம்மலுடன்.

மரகதம் தன் மகளை ஆறுதலுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

பொருள்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, April 22, 2023

1179. விழியே, விழியே!

தோழியின் வீட்டுக்கு மூச்சிரைக்க ஓடி வந்த சத்தியவதி, படபடவென்று கதவைத் தட்டினாள்.

பரிவாதினி கதவைத் திறந்ததும், அவளை அணைத்துக் கொண்ட சத்தியவதி, "அவர் நாளைக்கு வராருடி!" என்றாள்.

"அதுக்குத்தான் இப்படி மூச்சிரைக்க ஓடி வந்து படபடன்னு கதவைத் தட்டினியா? நாளைக்கு வரப் போறார்னு எப்படிச் சொல்ற? சோதிடர் யாராவது சொன்னாரா, இல்லே விடியற்காலையில அப்படிக் கனவு கண்டியா? ஆனா, நீதான் தூங்கறதே இல்லையே, அப்புறம் எங்கே கனவு காண்றது?" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கிட்ட சொல்லலாம்னு ஓடி வரேன். இப்படிக் கேலி செய்யறியே!" என்றாள் சத்தியவதி, சற்றே கோபத்துடன்.

"மன்னிச்சுக்கடி. உன் வீட்டுக்காரர் போனதிலேந்தே உன் முகத்தில மலர்ச்சியைப் பாக்கவே முடியல. பல மாதங்களுக்கப்பறம் இப்பதான் உன் முகத்தில மலர்ச்சி தெரியுது. அந்த உற்சாகத்திலதான் கொஞ்சம் கேலி செஞ்சேன். ஆமாம், உனக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைச்சதுன்னு சொல்லலியே!"

"அவர் வேலை செய்யற கப்பல் துறைமுகத்துக்கு வந்துடுச்சம். அதில அவரோட வந்த ஒத்தர் தன் வீட்டுக்கு வந்துட்டார். என் வீட்டுக்காரருக்கு கப்பல்ல வந்த சரக்குகளை ஒப்படைக்கிற வேலை இருக்கறதால, அதை முடிச்சுட்டு நாளைக்கு வரதா அவர் மூலமா செய்தி சொல்லி அனுப்பி இருக்காரு!" என்றாள் சத்தியவதி, மகிழ்ச்சியுடன்.

"அப்பா! எனக்கே எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போனதிலேந்து, அவர் எப்ப திரும்ப வருவாருன்னு பார்த்துக்கிட்டு நீ தூங்காம இருக்கறதையும், அதனால உன் கண்கள் எப்பவுமே சோர்ந்திருக்கறதையும் என்னால பாக்கவே முடியல! இத்தனை நாளா தூங்காம இருந்ததுக்கெல்லாம் சேத்து வச்சு இனிமேயாவது நல்லாத் தூங்கு!" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, உன் வீட்டுக்காரர் வந்து ஒரு மாசமாச்சு. இப்ப நீ சந்தோஷமாத்தானே இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"ஆமாம். ஏன் கேக்கற?" என்றாள் சத்தியவதி.

"இதுக்கு முன்னால, நீ சரியாத் தூங்காததால, உன் கண்கள் சோர்வா இருந்துச்சு. இப்பவும் அதே மாதிரி சோர்வாத்தானே இருக்கு, அதுதான் கேட்டேன்!"

"என்ன செய்யறது? அவர் மறுபடி எப்ப கிளம்பிப் போயிடுவாரோன்னு நினைச்சு இப்பவும் எனக்குத் தூக்கம் வரதில்ல!" என்றாள் சத்தியவதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

பொருள்:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி்த் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, April 16, 2023

1178. பேசும் பொம்மை!

பொருட்காட்சியைப் பார்த்து விட்டு வெளியே வந்த தோழிகள் நால்வரும் அங்கே அவர்கள் பார்த்த "பேசும் பொம்மை" என்ற 'அதிசயத்தைப்' பற்றிப் பேசிக் கொண்டனர்.

"அந்த ஆள் கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த பொம்மை பதில் சொல்லிச்சே! ஆச்சரியமா இல்ல?" என்றாள் வனிதா.

"இதில ஆச்சரியம் என்ன இருக்கு?அஞ்சாறு கேள்விகளுக்கு பதிலை ரிகார்ட் பண்ணி வச்சிருக்காங்க. அந்த ஆள் வரிசையாக் கேள்விகளைக் கேக்கறாரு. பொம்மைக்குப் பின்னால திரை இருக்கு. அவர் ஒரு கேள்வியைக் கேட்டதும், திரைக்குப் பின்னால ஒத்தர் இருந்துக்கிட்டு, மறைவா இருக்கற பிளே பட்டனை அழுத்தறாரு. உடனே ரிகார்ட் பண்ணின பதில் பிளே ஆகுது. கேள்வியை மாத்திக் கேக்கச் சொன்னதுக்கு அவர் ஒத்துக்கல. ரொம்ப எளிமையான தொழில் நுட்பம்! இப்ப கம்ப்யூட்டர்னு ஒண்ணு வந்திருக்கு. அதை வச்சு என்னென்னவோ அற்புதங்களையெல்லாம் உருவாக்கிக்கிட்டிருக்காங்க. இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி ஆச்சரியப்படறியே!" என்றாள் அனு.

"சும்மாவா சொல்றோம் உன்னை, விஞ்ஞானி அனுன்னு!" என்றாள் உமா.

"அப்படின்னா, அந்த பொம்மை பேசினது அதோட உதட்டிலேந்துதான் வந்திருக்கு, உள்ளத்திலேந்து வரலை, அப்படித்தானே?'" என்றாள் வனிதா.

"இவளைப் பாரு, கண்ணதாசன் பாட்டுக்கு விளக்க உரை கொடுக்கறா?" என்ற உமா, 

"உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததை உள்ளமே நினைத்ததா?"

என்ற வரிகளைப் பாடினாள்.

"ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சா போதும், உடனே ஒரு பாட்டை எடுத்து விட்டுடுவா!" என்று அனு உமாவைக் கேலி செய்ததை ராதா கவனிக்கவில்லை. அவள் மனம் அந்தப் பாடல் வரிகளிலேயே நிலைத்திருந்தது.

'என்னை உயிருக்குயிராக் காதலிக்கறதா சொன்னானே, அது வெறும் உதட்டளவில்தானா? உள்ளத்திலேந்து அந்த வார்த்தை வந்திருந்தா, ரெண்டு மாசமா என்னைப் பாக்காம, என்னைத் தொடர்பு கொள்ளாம இருப்பானா? நானும் அவன் எங்கேயாவது கண்ல பட மாட்டானான்னு எல்லா இடங்களிலேயும் தேடிக்கிட்டிருக்கேன். ஒருவேளை, அவனும் இந்தப் பொருட்காட்சிக்கு வந்திருக்கானோ, என்னவோ! அப்படி வந்திருந்தா, என் கண்ல படலாமே!' என்று நினைத்தபடியே, கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டாள் ராதா.

"ஏண்டி, நீ ரொம்ப டல்லா இருக்க, உனக்கு ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னுதானே இங்கே வந்திருக்கோம்? நாங்க பேசறதைக் கேக்காம, நீ பாட்டுக்கு எங்கேயோ பாத்துக்கிட்டு வந்தேன்னா என்ன அர்த்தம்?" என்று ராதாவைக் கடிந்து கொண்டாள் உமா.

"தன்னோட ஆள் இங்கே எங்கேயாவது இருக்கானோன்னு பாக்கறாளோ என்னவோ!" என்று வனிதா விளையாட்டாகச் சொல்ல, ராதாவின் மனம் புண்பட்டு விடுமோ என்ற பயத்தில், அனு வனிதாவை முறைத்துப் பார்த்தாள்.

ஆனால் ராதா, 'நீ சொல்றது சரிதாண்டி!" என்றபடியே, வனிதாவின் தோளை அன்புடன் பற்றினாள்.

"கள்ளமில்லை தோழி
உள்ளதைத்தான் சொன்னாய்!" 

என்று பாடி, நிலைமையின் இறுக்கத்தைக் குறைக்க முயன்றாள் உமா! 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

பொருள்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கிறார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, April 14, 2023

1177. தமயந்தி கொடுத்த சாபம்!

அல்லியின் தந்தை இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். தினமும் தன் வீட்டுக்கு வரும் சிலரிடம் அவர் சில புராணக் கதைகளை விரிவாகக் கூறுவது வழக்கம்.

"என் அப்பா சொல்ற கதையை ஒருநாள் கேட்டுப் பாரு. உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்!" என்று அல்லி தன் தோழி தமயந்தியிடம் கூறியதால், தமயந்தி அல்லியின் வீட்டுக்கு வந்தாள். 

தன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டு, தன் கம்பீரமான குரலில் அல்லியின் தந்தை கதை கூற, அவரைச் சுற்றிக் கூடத்திலும், தாழ்வாரத்திலும், முற்றத்திலும் அமர்ந்திருந்த சுமார் இருபது நபர்கள் அவர் கூறுவதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அல்லியும், தமயந்தியும் ஒரு ஓரமாக அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர்.

"என்னடி, கதை நல்லா இருந்ததா?" என்றாள் அல்லி.

தமயந்தி ஏதோ யோசனையுடன் மௌனமாகத் தலையாட்டினாள்.

"இன்னிக்கு துஷ்யந்தன்-சகுந்தலை கதை சொல்லுவார்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா, உன்னை இன்னிக்கு வரச் சொல்லாம, இன்னொரு நாள் வரச் சொல்லி இருப்பேன்!" என்றாள் தமயந்தி.

'இன்று பார்த்தா, சகுந்தலையைக் காதலித்து மணந்த பின், முனிவர் சாபத்தால் அவளை மறந்து விட்ட துஷ்யந்தன் கதையை அப்பா சொல்ல வேண்டும்! காதலன் கைவிட்டு விட்டதால் மனம் நொந்து போயிருக்கும் தோழிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துச் செய்த செயல், அவள் துயரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்குமோ?' என்று நினைத்தாள் அல்லி. 

"என்னடி, பதிலே சொல்லமாட்டேங்கற?" 

"தன் அப்பாவோட ஆசிரமத்துக்கு வந்த துர்வாசருக்கு சகுந்தலை கஷ்டப்பட்டு சேவை செஞ்சா. ஆனா, அவ ஏதோ குறை வச்சுட்டாங்கறதுக்காக, அவள் கணவன் அவளை மறந்துடுவான்னு முனிவர் சாபம் கொடுத்துட்டாரு. நான் உண்மையா ஒத்தரைக் காதலிச்சேன். அவர் என்னைக் கைவிட்டுட்டுப் போயிட்டாரு. இது யார் கொடுத்த சாபமோ தெரியல!" என்றாள் தமயந்தி.

"சாபமாவது, மண்ணாவது! உன்னை மாதிரி ஒரு பெண் மனைவியாகக் கிடைக்க அவனுக்குக் கொடுத்து வைக்கல. விட்டுத் தள்ளு!" என்றாள் அல்லி.

 "துர்வாசர் சகுந்தலைக்கு சாபம் கொடுத்த மாதிரி, நானும் ஒரு சாபம் கொடுக்கப் போறேன்!" என்றாள் தமயந்தி, திடீரென்று.

"யாருக்கு? உன்னைக் கைவிட்ட காதலனுக்கா?"

"இல்லை. மகிழ்ச்சியா இருந்த என்னைக் காதல் நீரோட்டத்தில தள்ளி, இப்ப அந்த நீரோட்டம் என்னை அடிச்சிக்கிட்டுப் போய்த் துயரக் கடல்ல தள்ளினதுக்குக் காரணமா அமைஞ்ச என் கண்களுக்குத்தான்! ஏற்கெனவே தான் செஞ்ச பாவத்துக்கு தண்டனையா, என் கண்கள் அழுதுக்கிட்டும், தூக்கமில்லாம தவிச்சுக்கிட்டும் இருக்கு. ஆனா, இந்த தண்டனை போதாது. ஏ கண்களே! அழுது அழுது உங்கள் கண்ணீர் வற்றிப் போகட்டும். பிடி சாபம்!" என்றுபடியே, கையை வீசிப் பெரிதாகச் சிரித்தாள் தமயந்தி.

அல்லி மௌனமாக தமயந்தியின் தோள்களை ஆதரவுடன் பற்றினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்"விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

பொருள்:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள், இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, April 13, 2023

1176. தவறும், தண்டனையும்!

"உலகத்தில பல சமயம் தப்பு செய்யறது ஒருத்தனா இருக்கும், தண்டனையை அனுபவிக்கறது இன்னொருத்தனா இருக்கும். உலகத்திலதான்னு இல்லை, நம் உடம்புக்குள்ளேயே இப்படி நடக்கறதுண்டு. நம்ம நாக்கு இருக்கே, அது, தான் நல்ல ருசிகளை அனுபவிக்கணுங்கறதுக்காகப் பல உணவுகளைக் கட்டுப்பாடு இல்லாம சாப்பிட்டுடும். ஆனா, அதன் விளைவுகளை அனுபவிக்கறது ஜீரண உறுப்புக்களும், உணவில இருக்கற பொருட்களால பாதிக்கப்படற பிற உறுப்புகளும்தான்!"

ஆன்மீகப் பேச்சாளரின் சொற்பொழிவைத் தன் தாயுடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சுகன்யா, "நான் கிளம்பறேம்மா!" என்று சொல்லி விட்டு எழுந்தாள்.

"ஏண்டி, ஒரு மாறுதலுக்காகத்தானே உபன்யாசத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்? பாதியில எழுந்து போற!" என்ற அவள் அம்மா, மகளின் கண்களைப் பார்த்து விட்டு, "கண்ணெல்லாம் எப்படிச் சிவந்திருக்கு! தூங்கினாத்தானே? சரி. வீட்டில போய்ப் படுத்துத் தூங்கு" என்றாள், பரிவுடன்.

உபன்யாசம் நடந்து கொண்டிருந்த மண்டபத்திலிருந்து வீட்டுக்கு நடந்தாள் சுகன்யா. சோர்வடைந்த கண்கள், நடக்கும்போதே சொக்கின. ஆனால், வீட்டுக்குப் போய்ப் படுக்கையில் சாய்ந்தால், அவை உறங்கப் போவதில்லை!

அவள் காதலித்து மணந்த கார்மேகன், தன் நண்பனுடன் வணிகம் செய்ய வடக்குப் பகுதிக்குச் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. அவன் சென்றதிலிருந்து அவள் உறக்கம் போய்விட்டது.

கணவனைப் பிரிந்ததிலிருந்து சுகன்யா சரியாகச் சாப்பிடாததால், அவள் உடல் பலமிழந்து விட்டதாக அவள் அம்மா பலமுறை கூறி இருக்கிறாள்.

உபன்யாசகர் கூறிய கருத்து நினைவுக்கு வந்தது. 

'தவறு செய்வது ஒருவர், தண்டனையை அனுபவிப்பது மற்றொருவர்!'

'உண்மைதான். கார்மேகனைப் பார்த்து, அவன் மேல் காதல் கொண்டவை இந்தக் கண்கள்தான். ஆனால், காமநோயால் வாடுவது இந்த உடல்தானே!'

கண்களில் மீண்டும் சோர்வு ஏற்பட்டது.

'இல்லையே! இந்தக் கண்களும்தானே தூங்க முடியாமல், சோர்வடைந்து அல்லல்படுகின்றன!

'ஆயினும், இந்தக் கண்கள் வருந்துவது நியாயம்தான்! தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பது நியாயம்தானே!'

வீட்டை அடைந்ததும், படுக்கையில் படுத்துக் கொண்டு இன்னொரு உறக்கமில்லாத இரவைக் கழிக்கத் தயாரானாள் சுகன்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

பொருள்:
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...