Thursday, November 30, 2023

1284. கமலியின் கோபம்!

"உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறேன். எனக்கு என்ன தருவ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ராதிகா.

"நான் என்ன ராஜாவா, நீ நல்ல செய்தி சொன்னா, உனக்குப் பரிசு கொடுக்க? அதோட, இப்ப எனக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியா இருக்காதுடி!" என்றாள் கமலி.

"உன் காதலர் திரும்பி வந்துட்டார்னு சொன்னா, அது கூட நல்ல செய்தி இல்லையா?"

"என்னடி சொல்ற?" என்றாள் கமலி, வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"ஆமாண்டி. பிரகாஷ் வந்துட்டாரு. இன்னிக்குக் காலையிலதான் வந்தாராம். நான் தற்செயலா அவர் வீட்டுப் பக்கமாப் போய்க்கிட்டிருந்தப்ப, என்னைப் பார்த்துட்டு, உங்கிட்ட இதைச் சொல்லச் சொன்னாரு. இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு, நீங்க வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு உன்னை வரச் சொன்னாரு. அது என்னடி வழக்கமாச் சந்திக்கிற இடம்?" என்றாள் ராதிகா, கேலியுடன்.

கமலி அவளுக்கு பதில் சொல்லாமல், மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி, பதில் சொல்ல மாட்டேங்கற?"

"ஆஃபீஸ் வேலையா கல்கத்தாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம், எனக்கு ஒரு தகவலும் இல்லை. இப்ப அவரைச் சந்திக்கச் சொல்லி, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறாரு. என்னை என்ன கிள்ளுக் கீரைன்னு நினைச்சுக்கிட்டிருக்காரா?"

"ஏண்டி, உன் வீட்டில என்ன ஃபோனா இருக்கு, தினம் உங்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசறதுக்கு? இன்னிக்குக் காலையிலதான் ஊர்லேந்து வந்திருக்காரு. என்னைப் பார்த்ததால, எங்கிட்ட தவல் சொல்லி அனுப்பினாரு. இதில என்ன தப்பு?"

"ஃபோன் இல்லாட்டா என்ன? கல்கத்தாவில போஸ்ட் ஆஃபீஸ் இல்லையா என்ன? எனக்கு ஒரு கார்டு கூட எழுதலையே அவரு! சரி, ஊருக்கு வந்தவர் நேரா என்னைப் பாக்க வந்திருக்க வேண்டாம்? அது என்ன, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறது?" என்று குமுறினாள் கமலி.

"அப்ப, சாயந்திரம் அவரைப் பாக்கப் போகப் போறதில்லையா நீ?"

"போவேன். கண்டிப்பாப் போவேன். போய், நல்லா சண்டை போட்டுட்டு வரப் போறேன்!"

வழக்கமாக பிரகாஷைச் சந்தித்துப் பேசும் பூங்காவுக்குச் சென்றாள் கமலி. அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்ச்சில் பிரகாஷ் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் கமலி. 

பிரகாஷ் அவள் தோள்களை அணைத்துக் கொள்ள, கமலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

"இது மாதிரி உங்க தோள்ள சாஞ்சு எவ்வளவு நாளாச்சு!" 

இது போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டே விடிய விடிய அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, 'சண்டை போட்டாயா?' என்று நாளை தோழி கேட்டால், அவளிடம் என்ன சொல்வது என்று சங்கடத்துடன் நினைத்துப் பார்த்தாள் கமலி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

பொருள்:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

Tuesday, November 28, 2023

1283. எப்போ வருவாரோ!

என்ன காரணமென்று தெரியவில்லை, சில நாட்களாக, அரவிந்தனின் போக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.

முன்பெல்லாம், அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே, ஓடி வந்து சுகுணாவை அணைத்துக் கொள்வான். அதன் பிறகு, தூங்கப் போகும் வரை அவளுடன் பேசிக்  கொண்டிருப்பான். அவள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது கூட, அங்கே போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பான்.

ஒருமுறை, அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சுகுணாவின் தாய் பார்வதி, "என்னடி, பூனைக்குட்டி காலைச் சுத்திச் சுத்தி வர மாதிரி, உன் புருஷன் உன்னையே சுத்திக்கிட்டிருக்காரு!" என்று கேலி செய்தாள், தன் மகளிடம் அவள் கணவன் இவ்வளவு அன்பாக இருக்கிறானே என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தபடி.

ஆனால், அவையெல்லாம் இப்போது மாறி விட்டன.

இப்போதெல்லாம், அரவிந்தன் அலுவலகத்திலிருந்து வந்ததும், அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். சுகுணா காப்பி எடுத்துக் கொண்டு வந்தால், "வச்சுட்டுப் போ!" என்கிறான். சில சமயம், "வேண்டாம். நான் வரும்போதே ஹோட்டல்ல குடிச்சுட்டேன்" என்கிறான்.

"முன்னாடியே சொல்லி இருந்தா, நான் காப்பி கலந்திருக்க மாட்டேன் இல்ல?" என்று அவள் ஒருமுறை கேட்டபோது, "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று எரிந்து விழுந்தான், ஏதோ இயலாத ஒன்றைச் செய்யும்படி அவள் சொல்லி விட்டது போல்.

முன்பெல்லாம், விடுமுறை நாட்களில் சுகுணாவை வெளியே எங்காவது அழைத்துச் சென்றது போல், இப்போது அழைத்துச் செல்வதில்லை. அவளே, "வெளியில எங்கேயாவது போகலாமா?" என்று கேட்டால் கூட, "எனக்கு வேற வேலை இருக்கு" என்று தட்டிக் கழித்து விடுகிறான். 

அவன் மட்டும் தனியே எங்காவது போய்விட்டு வருகிறான். எங்கே போகிறான், எப்போது வருவான் என்றெல்லாம் சொல்வதில்லை.

"எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போகக் கூடாதா?" என்று சுகுணா ஒருமுறை கேட்டபோது, "எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.

"ஆஃபீஸ் வேலையா வெளியூர் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்" என்றான் அரவிந்தன்.

அரவிந்தன் இல்லாத இரண்டு நாட்களில், சுகுணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்து விட்டது போல் உணர்ந்தாள். கணவன் எப்போது திரும்பி வருவான், எப்போது அவன் முகத்தை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

மூன்றாம் நாள் காலையிலிருந்தே, வாசற்படியில் அமர்ந்து கொண்டு, அரவிந்தன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

'எனக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாள் கூட என்னால அவரைப் பிரிஞ்சு இருக்க முடியலியே! அவர் என்னைக் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட பேசறது கூட இல்ல. அவர் இஷ்டத்துக்கு எங்கேயாவது போறாரு, வராரு. வீட்டில இருக்கறப்பவும், என்னை ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்குமோ, அதனாலதான் இப்படி நடந்துக்கறாரோங்கற சந்தேகம் கூட எனக்கு வருது. ஆனா, அவரைப் பாக்காம இருக்கறது எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?'

சுகுணாவுக்குப் புரியவில்லை. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

பொருள்:
என் கணவன் என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

Monday, November 27, 2023

1282. தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால்...

"என்னை ஒரு இடத்துக்கு வரச் சொல்றது, நான் அங்கே போய் அவருக்காகக் காத்துக்கிட்டிருந்தா, ஃபோன் பண்ணி, 'சாரி டியர், ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்,' 'சொந்தக்காரர் ஒத்தரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகணும்,' 'அம்மா என்னை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க' இது மாதிரி ஒரு காரணத்தைச் சொல்லி, வராம என்னை ஏமாத்தறது! இது மாதிரி நாலைஞ்சு தடவை ஆயிடுச்சு. இதைப் பத்தி, இன்னிக்கு அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுடப் போறேன்!" என்றாள் ஸ்வப்னா, தன் தோழி கல்பனாவிடம்.

"நல்லாக் கேட்டுடுடி. தட்டிக் கேக்கலைன்னா, ஆம்பளைங்க இப்படித்தான் நம்மை அலைக்கழிப்பாங்க!" என்றாள் கல்பனா.

"நீ சொல்றதைப் பார்த்தா, உனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் போலருக்கே!"

"சேச்சே! உன்னை மாதிரி தோழிகள் சொல்றதை வச்சு சொல்றேன். எனக்குத்தான் காதலனே கிடையாதே! நான் இந்தக் காதல்ல எல்லாம் மாட்டிக்க மாட்டேன்."

"என்னடி, உன் காதலர்கிட்ட கேக்கப் போறேன்னியே, கேட்டியா?" என்றாள் கல்பனா.

"இல்லைடி. கேக்கணும்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா முடியல" என்றாள் ஸ்வப்னா.

"ஏன்?"

"ஏன்னா, எனக்கு அவர் மேல அவ்வளவு காதல் இருக்கு!"

"அதுக்காக? தட்டிக் கேக்கக் கூடாதா என்ன?"

"கேக்கலாம். ஆனா, இதனால எங்களுக்குள்ள சண்டை வந்துட்டா?"

"என்ன சண்டை வரப் போகுது? வந்தாலும், சின்னச் சண்டையாதானே இருக்கும்!"

"அதேதான்! எனக்கு அவர் மேல இவ்வளவு காதல் இருக்கறப்ப, அது ஒரு சின்னச் சண்டையால பாதிக்கப்படக் கூடாது இல்ல, நிறைய காத்து உள்ள பலூன் ஒரு சின்னக் குண்டூசி முனை பட்டு வெடிச்சுப் போற மாதிரி? அதனாலதான், கேக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."

கல்பனா தோழியை வியப்புடன் பார்க்க, "இதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்குத்தான் காதலன் இல்லையே!" என்றாள் ஸ்வப்னா, சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பொருள்:
பனையளவாகக் காதல் பெருகிடும்போது, தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Friday, November 24, 2023

1281. மது உண்டால் போதையைக் கொடுக்கும்!

மரகதம் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள். கோபமாகப் பேசுவது முதல், காலில் விழாத குறையாகக் கெஞ்சுவது வரை, எல்லா விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டாள்.

ஆனால், அவள் மகன் மனோகரனால் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.

ஒரு கட்டத்தில், தன் மகன் இனித் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்து, தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாள் மரகதம்.

சில நாட்களாக மனோகரனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது என்ன மாற்றம் என்று புரியவே மரகதத்துக்கு இரண்டு நாட்கள் ஆயின.

"என்னடா, இப்பல்லாம் நீ குடிக்கறது இல்ல போலருக்கே!" என்றாள் மரகதம், வியப்புடன்.

"ஆமாம்மா. குடியை விட்டுட்டேன்."

"எப்படிடா?" என்றாள் மரகதம், நம்ப முடியாமல்.

"நீ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்க இல்ல? அதனாலதான்!"

"அப்படியெல்லாம் குடியை சட்டுனு விட முடியாதே!"

"இல்லம்மா. குடியைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா, விட்டுட லாம்."

"என்ன புரிஞ்சுக்கிட்ட? எப்படி விட்ட? என்னவோ எனக்குப் புரியல. நீ நிரந்தரமாக் குடியை விட்டுட்டா, எனக்கு சந்தோஷம்தான்!"

"நிரந்தரமாத்தான், அம்மா" என்றான் மனோகரன்.

"ஏண்டா, உங்கம்மா எவ்வளவோ சொல்லியும் குடியை விடாதவன், காதலிக்க ஆரம்பிச்சவுடனே விட்டுட்டியா? அம்மா சொன்னா கேக்காதவன், காதலி சொன்னதும், உடனே விட்டுட்டியே!" என்றான் மனோகரனின் நண்பன் பிரகாஷ்.

"என் காதலி எதுவும் சொல்லல. நானாத்தான் விட்டேன்!" என்றான் மனோகரன்.

"அது எப்படி நீயா விடுவ?"

"டேய்! என் காதலியைப் பாத்தாலே எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ஏன், அவளை நினைச்சாலே சந்தோஷம் கிடைக்குது. ஆனா, மதுவுக்கு இந்த குணம் இல்லையே! மதுவைக் குடிச்சாத்தானே போதை கிடைக்குது. அப்ப எதுக்கு மது குடிக்கணும்னு நினைச்சேன், விட்டுட்டேன்!" என்றான் மனோகரன்.

"உங்கம்மா பாவம், இது தெரியாம, தன்னோட பேச்சைக் கேட்டுத்தான் நீ குடிக்கறதை விட்டுட்டதா நினைச்சு, அதை எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க!" என்றான் பிரகாஷ்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

பொருள்:
நினைத்த அளவிலே களிப்படைதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மைகளும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

Wednesday, November 22, 2023

1280. கண்ணால் ஒரு சேதி!

தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மனைவியைப் பெருமையுடன் பார்த்தான் சீவகன்.

வேலைக்காக வெளியூருக்குப் போவதென்று அவன் முடிவு செய்தபோது, மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்வோம் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

அன்றைய தினத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.

"குமுதா! என் நண்பன் அமுதன் வேலை தேடி வெளியூர் போனான், இல்ல? அவன்கிட்டேந்து எனக்கு ஒரு மடல் வந்திருக்கு" என்றான் சீவகன்.

'என்ன?' என்பது போல் அவனைப் பார்த்தாள் குமுதா.

"அவனுக்கு அங்கே ஒரு செல்வந்தர்கிட்ட வேலை கிடைச்சிருக்காம். 'நல்ல வேலை, நிறையப் பொருள் கொடுக்கறாரு, உன்னைப் பத்திச் சொன்னேன், உன் நண்பனை இங்கே வரச் சொல்லு, அவனுக்கும் வேலை கொடுக்கறேன்' னு சொன்னாராம். ஒரு ஆண்டு வேலை செஞ்சா போதும், அதுக்குள்ள நிறையப் பணம் சம்பாதிச்சுக்கிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடலாம்னு எழுதி இருக்கான். அதனால, நான் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்."

குமுதா பதில் சொல்லவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அடுத்த நாள், சீவகன் ஊருக்குக் கிளம்புவதற்காகத் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த குமுதா, அவன் முகத்தைப் பார்த்தாள்.

முதல்நாள் பார்த்த அதே பார்வை!

சீவகனுக்குச் சுருக்கென்று ஏதோ உறுத்தியது.

"சரி. நீயும் என்னோட வா!" என்றான்.

அப்போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி!

'உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்று அவள் வாய் திறந்து சொல்லவில்லை. 

அவள் பார்வையே அதை அவனுக்கு உணர்த்தி விட்டது. 

திருமணம் ஆனதிலிருந்தே, பெண்மையின் மென்மையையும், நளினத்தையும் குமுதாவிடம் அவன் உணர்ந்திருக்கிறான்.

ஆனால், அன்று அவள் தன் கண்களாலேயே தன்னிடம் பேசித் தன் மனதிலிருந்த ஏக்கத்தையும் விருப்பத்தையும் குறிப்பால் உணர்த்தியதைக் கண்டபோது, அவள் பெண்மைக்கு இன்னும் சற்றுப் பெண்மை கூடுதலாகச் சேர்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றயது.

அந்த உணர்வுடன், தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த குமுதாவைப் பெருமையுடன் மீண்டும் பார்த்தான் சீவகன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

பொருள்:
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது, பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

1279. வனவாசம் போனாலும் பிரியாத சீதை!

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றான் சோமன்.

"இந்த நேரத்தில சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமா என்ன?" என்றாள், அவன் அணைப்பிலிருந்த வைசாலி.

"வியாபார விஷயமா நான் வெளியூர் போகணும்."

அவன் அணைப்பிலிருந்து சட்டென்று தன்னை விலக்கிக் கொண்ட வைசாலி, "ரெண்டு மூணு நாள்ள வந்துடுவீங்க இல்ல?" என்றாள்.

"இல்லை வைசாலி. ரொம்ப தூரம் போறேன். திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்."

வைசாலி தன் முகத்தைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்தாள். பிறகு, தன் இரு கைகளையும் உயர்த்தித் தன் இரண்டு மணிக்கட்டுகளையும் பார்த்தாள்.

"என்ன செய்யற?" என்றான் சோமன், குழப்பத்துடன். 

"புரியலையா? உங்களை விட்டுப் பிரிஞ்சப்பறம் இந்தத் தோள்கள் எந்த அளவுக்கு இளைச்சு, எலும்பு தெரியற மாதிரி ஆயிடும், கைகள் மெலிஞ்சப்புறம், கைவளைகள் எப்படி நழுவிக் கீழே விழும்னு நினைச்சுப் பார்த்தேன்."

"நம்ம எதிர்காலத்துக்குப் பணம் சம்பாதிக்கணும் இல்ல? போய்த்தான் ஆகணும். வேற வழி இல்லையே!" என்றான் சோமன்.

"ராமாயணம் படிச்சிருக்கீங்களா?" என்றாள் வைசாலி.

"படிச்சிருக்கேன். ஏன் கேக்கற?"

"வனவாசம் போனாலும் பிரியாத சீதை!" என்ற வைசாலி, குனிந்து தன் பாதங்களைப் பார்த்தாள்.

தான் போகுமிடம் எதுவாக இருந்தாலும், அங்கே தன்னுடன் வரத் தயாராக இருப்பதை அவள் உணர்த்தியதை சோமன் புரிந்து கொண்டான்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பொருள்:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள், காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.

1278. சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

பரிவாதினி தெருவில் நடந்து சென்றபோது, அவளுக்குத் தெரிந்தவர்கள் அவளை உற்றுப் பார்த்தனர்.

"ஏன் பரிவாதினியோட உடம்பு வெளிறிப் போன மாதிரி இருக்கு?"

"மாதிரி என்ன? வெளிறித்தான் போயிருக்கு. அவளோட கணவர் நேத்திக்கு ஊருக்குப் போயிட்டார் இல்ல? அதான், பசலை வந்து தோல் வெளிறிப் போயிருக்கு."

"நேத்திக்குத்தான் ஊருக்குப் போனாரா? ஆனா, நான் நாலைஞ்சு நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்தபோது கூட, அவ இப்படித்தானே இருந்தா?"

"நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே!"

தனக்குக் காதில் விழாது என்று நினைத்து, ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது பரிவாதினியின் காதில் விழுந்தது.

அந்தப் பெண்களைக் கடைக்கண்ணால் பார்த்த பரிவாதினி, கடைசியாகப் பேசிய பெண்ணிடம் பேசுவது போல், மனதுக்குள் பேசினாள்:

'உன் தோழி சொல்றது சரிதான். அவ சரியாதான் கவனிச்சிருக்கா. நாலைஞ்சு நாளுக்கு முன்னால இல்ல, ஏழு நாளைக்கு முன்னாலேயே, என் மேனியில பசலை படர ஆரம்பிச்சுடுச்சு. தான் ஊருக்குப் போகப் போறதை ரகசியமா வச்சிருந்து, அவர் முதல்நாள்தான் எங்கிட்ட சொன்னார். ஆனா, அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறார்ங்கறது என் மனசுக்கு ஒரு வாரம் முன்னாலேயே தெரிஞ்சு, அது என் உடம்பில பசலை படர வச்சுடுச்சு. இதை நான் சொன்னா, நீங்க ரெண்டு பேரும் நம்பவா போறீங்க?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

பொருள்:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி, என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாட்களாகி விட்டன.

Monday, November 20, 2023

1277. நேற்றே தெரியும்!

"வைகை! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் அவள் தோழி திருச்செல்வி, தயங்கிக் கொண்டே.

"சொல்லுடி!" என்றபோதே, வைகையின் உடலில் ஒரு பதட்டம் தெரிந்தது.

"ஏன் பதட்டப்படற?"

"நீ சொல்லப் போற விஷயம் எப்படி இருக்குமோங்கற பதட்டம்தான். சொல்லு." 

"ஆமாம். உங்கிட்ட ஏதோ ஒரு மாறுதல் தெரியுதே!" என்ற திருச்செல்வி, வைகையின் கையைப் பற்றியபடி, "ஏண்டி, நேத்து பாத்தப்ப, கையில வளையல்கள் இருந்ததே, இப்ப இல்ல! கழட்டி வச்சிருக்கியா?" என்றாள்.

வெடுக்கென்று தன் கையை விடுவித்துக் கொண்ட வைகை, "சுத்தி வளைக்காம விஷயத்தைச் சொல்லு!" என்றாள், அதட்டலாக.

திருச்செல்வி சற்றுத் தயங்கி விட்டு, "உன் புருஷனைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். முதல்ல நான் அதை நம்பல. ஆனா, நானே கண்ணால பாத்தப்பறம் உங்கிட்ட சொல்லாம இருக்க முடியல!"

"என்ன கேள்விப்பட்ட? என்ன பாத்த?"

"உனக்குப் பூங்கொடியைத் தெரியும் இல்ல. அவ ஊர்ல பல ஆண்களை மயக்கி வச்சிருக்கான்னு கேள்விப்பட்டிருப்பியே! உன் புருஷனுக்கும் அவளோட தொடர்பு இருக்குன்னு சில பேர் எங்கிட்ட சொன்னாங்க. நான் நம்பல. ஆனா, அவர் பூங்கொடி வீட்டிலேந்து வந்ததை நானே பாத்தேன்!"

செய்தியைச் சொல்லி விட்டு, வைகை அதை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிய, அவள் முகத்தைப் பார்த்தாள் திருச்செல்வி.

வைகை தன் கைகளைப் பார்த்தபடி, "எனக்கு இது நேத்திக்கே தெரியும்!" என்றாள்.

"நேத்திக்கே தெரியுமா? எப்படி?" என்றாள் திருச்செல்வி, வியப்புடன்.

'எனக்குன்னா, எனக்கு இல்லை. என் கைவளையல்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. நேத்து ராத்திரி அவர் என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டப்பவே, அவர் உடலளவில என்னோட கூடி இருந்தாலும், மனசளவில எங்கிட்டேந்து பிரிஞ்சு இருந்ததை என் கைவளையல்கள் புரிஞ்சுக்கிட்டு, என் கையிலேந்து நழுவி விழுந்துடுச்சு' என்று நினைத்துக் கொண்ட வைகை, "நேத்து என் கையில போட்டிருந்த வளையல்கள் நழுவி விழுந்து உடைஞ்சுது. அதனால, தப்பா ஏதோ நடக்கப் போகுதுன்னு நினைச்சு பயந்துக்கிட்டே இருந்தேன்!" என்றாள் தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.


காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

பொருள்:
குளிர்ந்த துறையை உடைய அவர் என்னை உடலால் கூடி, உள்ளத்தால் பிரிந்திருப்பதை, என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்து விட்டன.

Sunday, November 19, 2023

1276. பிரிந்தவர் கூடினர்!

எத்தனை நாட்கள் ஆகி விட்டன குலசேகரன் அவளைப் பிரிந்து! நாட்கள் இல்லை, மாதங்கள்!

சொந்த ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்து விட்டுப் பத்து நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவன்தான்! இப்போது, பத்து மாதங்கள் கழித்து வந்திருக்கிறான்.

திடீரென்று ஒருநாள், தன் வீட்டு வாசலில் குலசேகரன் வந்து நின்றதைக் கண்ட கோதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரவில் தூக்கம் பிடிக்காததால், பகலிலேயே தூங்குகிறோமோன்று கூட நினைத்தாள்.

இல்லை. இது கனவு இல்லை, நிஜம்தான்.

"பத்து நாள் ஆகும்னு சொன்னீங்க. அதுக்குள்ள வந்துட்டீங்களே! ஏதாவது பறவை முதுகில உக்காந்து வந்தீங்களா?" என்றாள் கோதை.

கோதை கோபமாகப் பேசாமல், கேலியாகப் பேசியது குலசேகரனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

கோதையின் கைகளைப் பற்றிக் கொண்டு, சொந்த ஊரில் தனக்கு இருந்த பணிகளையும், அதனால் அங்கே பல நாட்கள் தங்க வேண்டி இருந்ததைப் பற்றியும் கூறினான் குலசேகரன்.

"கடல் கடந்தா போனீங்க? இங்கேந்து பத்து காத தூரம்தானே உங்க ஊர்? ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கலாம். இல்லேன்னா, யார் மூலமாவது செய்தி சொல்லியாவது அனுப்பி இருக்கலாம்."

"பல மாதங்கள் பிரிவுக்கப்புறம் உன்னோட சேரறது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு! உனக்கு அப்படி இல்லையா?" என்றான் குலசேகரன், அவளை அணைத்தபடியே.

"ஏன் இல்லாம? என் முகத்தைப் பார்த்தா தெரியலியா?" என்ற கோதை, 'அதோட, இத்தனை நாள் நீங்க என்னைப் பிரிஞ்சிருந்ததை நினைக்கறப்ப, என் மேல அன்பு இருந்தா அப்படி இருந்திருப்பீங்களாங்கற எண்ணமும்தானே வருது?' என்று நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்

குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பொருள்:
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

Friday, November 17, 2023

1275. பார்வையில் கிடைக்குமா பதில்?

"நீயும் அவளை ஒரு மாசமாக் காதலிக்கற. ஆனா, அவ இன்னும் உன் காதலை ஏத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"

"என்ன செய்யறது? அவகிட்ட என் காதலைச் சொன்னேன். பதிலே சொல்லாம போயிட்டா. மறுபடி போய்ப் பேசறதுக்கு எனக்குத் தயக்கமா இருக்கு."

"அதுக்கப்புறம் அவளை நீ சந்திக்கவே இல்லையா?"

"தினமும் சந்திச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் வீடு இருக்கிற அதே தெருவிலதானே அவ வீடும் இருக்கு!"

"அப்ப, தினமும் அவ வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன்னு சொல்லு!"

"அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அவ எப்ப வீட்டை விட்டுக் கிளம்பறான்னு தெரியும். அந்தச் சமயத்தில, அவ கண்ணில படற மாதிரி ஒரு இடத்தில நிப்பேன்."

"அவ உன்னைப் பாப்பாளா, பாக்காமலே போயிடுவாளா?"

"நிச்சயமாப் பாப்பா. ஒரு தடவை கூட திரும்பி என்னைப் பாக்காம இருந்ததில்ல. அவ தினமும் வெவ்வேற வண்ணங்கள்ள வளையல் போட்டுக்கிட்டு வருவா. என்னைப் பாக்கும்போது, தன் கையை ஒரு தடவை மேல தூக்கி இறக்குவா. ஒருவேளை, அவ பல வண்ணங்கள்ள வளையல் போட்டுக்கிட்டிருக்கறதை நான் கவனிக்கறேனான்னு பாக்கறாளான்னு கூட எனக்குத் தோணும் "

"அப்புறம் என்ன? அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்குன்னுதான் அர்த்தம்!"

"அப்படி இருந்தா, வாயைத் தொறந்து சொல்லலாமே? எதுவுமே சொல்லாம என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறா!"

"அப்ப எதுக்கு அவளைப் பாக்கற? அவளா வந்து, 'எனக்கும் உன்னைப் புடிச்சிருக்கு' ன்னு உங்கிட்ட சொல்லட்டும்!"

"போடா! அவ பார்வையில ஒரு குறும்பு இருக்கு. அந்தக் குறும்புத்தனம்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்குது. அவ பதில் சொல்ல மாட்டேங்கறாளேங்கற ஏக்கத்தைப் போக்கற மாதிரியும் இருக்கு!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

பொருள்:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் காதலியின் குறும்புத்தனமான பார்வையில், என்னை வருத்தும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

Wednesday, November 15, 2023

1274. புன்னகையில் ஒரு பொருள் வந்தது!

"நாம எல்லாரும் நம்ம காதலர்களைப் பத்தி வெளிப்படையாப் பேசறோம். ஆனா, இந்த வேணி மட்டும் பேசவே மாட்டேங்கறாளே" என்றாள் உமா.

"ஒருவேளை, அவ யாரையும் காதலிக்காம இருக்கலாம்!" என்றாள் சாந்தி.

"இல்லையே! நீ யாரையாவது காதலிக்கிறயான்னு கேட்டா, பதில் சொல்லாம சிரிக்கறாளே! காதலன் இல்லைன்னா, இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?"

"நான் ஒரு யோசனை சொல்றேன். நாம எல்லாரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடறப்ப, ஒவ்வொத்தரும் நம்மோட காதலரோட நெருக்கமாப் பழகறதைப் பத்தி ஜாலியாப் பேசுவோம். வேணியும் நம்மோட சேர்ந்துதானே சாப்பிடுவா? அவளோட ரியாக்‌ஷன் என்னன்னு பாக்கலாம்."

"சரி."

"நீ சொன்ன மாதிரி, லஞ்ச் சாப்பிடறப்ப நாம நம்ம காதலர்களைப் பத்தி ஜாலியாப் பேசினோம். வேணி பேசாம கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, அவகிட்டேந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையே!" என்றாள் உமா.

"நீ கவனிச்ச லட்சணம் அவ்வளவுதான்!" என்றாள் சாந்தி.

"நீ என்னத்தை கவனிச்சியாம்?"

"நான் உங்களோட பேசிக்கிட்டிருந்தப்பவே, வேணியை உன்னிப்பா கவனிச்சுக்கிட்டிருந்தேன். யாராவது ஒத்தர் தன்னோட காதலரைப் பத்தி நெருக்கமான விஷயம் ஏதாவது சொன்னப்பல்லாம், வேணி யாரும் கவனிக்காத அளவுக்கு, அமுக்கமா சிரிச்சுக்கிட்டிருந்தா. நான் உன்னிப்பா கவனிச்சதாலதான் எனக்கு அது தெரிஞ்சது."

"அதனால?"

"அதனால, அவளுக்குக் காதலன் இருக்கான்னு அர்த்தம். அவ சிரிக்கறப்பல்லாம் தன்னோட மனசுக்குள்ள தன் காதலனை நினைச்சு சிரிக்கறான்னு அர்த்தம். அவ தன்னோட காதலை சிரிப்பில ஒளிச்சு வச்சுப் பாக்கறா. எவ்வளவு நாளைக்கு?"

"எவ்வளவு நாளைக்குன்னா? சீக்கிரமே அவ தன்னோட காதலை வெளியில சொல்லிடுவான்னு சொல்ல வரியா?"

"பூ அரும்பா இருக்கும்போது வாசனை வெளியில தெரியாது. அது மலரும்போது வாசனை வெளியில வருதில்ல? அது மாதிரிதான், வேணியோட புன்னகையில மறைஞ்சிருக்கற காதலும் ஒருநாள் வெளியில வரும். நான் இப்ப சொல்றது உண்மைன்னு உனக்கு அப்ப தெரியும்!" என்றாள் சாந்தி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

பொருள்:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போல்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...