Monday, March 29, 2021

1132. காத்திருந்த கண்களே!

நர்மதா!

ஒரு சினிமா தியேட்டரில்தான் பழனி அவளைப் பார்த்தான். 

தியேட்டரில் அவன் உட்கார்ந்திருந்தபோது, ஒரு இருக்கை தள்ளி அவள் அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த அந்த இருக்கை, கடைசி வரை காலியாகத்தான் இருந்தது.

படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் வரை கூட, அந்தப் பெண் உள்ளே வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால், அவளுடன் வர வேண்டிய யாரோ வரவில்லை என்று அவன் புரிந்து கொண்டான். 

படத்தின் சில காட்சிகளை ரசித்தபோது, அவள் முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தது போல் தோன்றியது.

இடைவேளையின்போது, அவள் அவன் பக்கம் திரும்பி, "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றாள்.

"என்ன? காப்பி, டீ ஏதாவது வாங்கிக்கிட்டு வரணுமா?" என்றான் பழனி.

அவள் பெரிதாகச் சிரித்து விட்டு, "அதில்லை! என் தோழி வரதாச் சொன்னா. ஆனா வரலை. படம் முடிஞ்சதும், பஸ் ஸ்டாப் வரை துணைக்கு வர முடியுமா?" என்றாள்.

'சாயந்திர வேளையில் எதற்குத் துணை' என்று மனதில் தோன்றிய கேள்வியைப் புறம் தள்ளி விட்டு, "ஓ, நிச்சயமா!" என்றான் பழனி.

தியேட்டரிலிருந்து பஸ் நிறுத்தம் அதிக தூரம் இல்லை.

"ஒரு பொண்ணு தனியா நடந்து போனா, யாராவது வந்து வம்பு பண்ணுவாங்க. அதுக்குத்தான் உங்களைத் துணைக்கு வரச் சொன்னேன்" என்றாள் அவள், நடந்து செல்லும்போது. 

தொடர்ந்து, "உங்களைப் பாத்தா நல்லவராத் தோணுது. உங்களை மாதிரி வாலிபர்கள், நண்பர்கள் இல்லாம தனியா சினிமாவுக்கு வரதே அதிசயம்தான்!" என்றாள் அவள். 

"கூப்பிட்டேன். யாரும் வரமாட்டேன்னுட்டாங்க. ஜெமினி படம் பாக்கறதில அவங்களுக்கு அதிக ஆர்வம் இல்ல. சிவாஜி, எம் ஜிஆர் படம்னாதான் அடிச்சுப் புடிச்சுக்கிட்டு ஓடுவாங்க."

"நீங்க மட்டும்தான் காதல் மன்னன் ரசிகராக்கும்?" என்றாள் அவள், குறும்பாகச் சிரித்தபடி.

"ஆமாம்... நீங்க என்ன சாவித்திரிக்காக வந்தீங்களா?" என்றான் பழனி.

"இல்லை. நானும் காதல் மன்னன் ரசிகைதான்!" என்றாள் அவள், அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

அவள் கூறியதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்குமா என்று அவன் யோசித்தான்.

பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

பஸ் வந்து விடப் போகிறதே என்ற அவசரத்தில், "உங்க பேரு? நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்தானே?" என்றான், பழனி பரபரப்புடன்.

"பேரு நர்மதா. காமாட்சி காலேஜ், பி.எஸ்.சி. பாட்டனி" என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, பஸ் வந்து விட்டது.

"தாங்க்ஸ். அப்புறம் பாக்கலாம்!" என்ற நர்மதா, அவன் எதிர்பாராமல், அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு, பஸ்ஸில் ஏறி விட்டாள்.

'எங்கே, எப்படிச் சந்திப்பது? என் பெயரைக் கூட அவள் கேட்டுக் கொள்ளவில்லையே!' என்று குழம்பியபடி நின்றான் பழனி.

"உன்னை மாதிரி மடையன் இருக்க முடியாதுடா! முதலிலேயே அவளைப் பத்தின விவரங்களைக் கேட்டுக்கிட்டு, உன்னைப் பத்தின விவரங்களைச் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு, காதல் மன்னனைப் பத்திப் பேசிட்டுக் காதலைக் கோட்டை விட்டுட்ட!" என்றான் பழனியின் நண்பன்  கோவிந்த்.

"அப்பதான் அவளை முதல்ல பாக்கறேன். அவளை பஸ் ஸ்டாண்டில விட்டப்பறம், நான் யாரோ அவ யாரோன்னு போயிடுவேன்னுதான் நினைச்சேன். அவ எங்கிட்ட பேசினதை வச்சுத்தான், அவளுக்கு என் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்னு தோணிச்சு. அதுக்கப்பறம்தான், அவ மேல எனக்கு ஈடுபாடு வந்தது. அவகிட்ட மேல பேசறதுக்குள்ள பஸ் வந்து, எல்லாம் ரொம்ப வேகமா நடந்து முடிஞ்சு போச்சு."

"அவளுக்கு உன்கிட்ட ஈடுபாடு இருந்தா,அவ அந்த பஸ்ஸை விட்டுட்டு உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, அடுத்த பஸ்ல போயிருக்கலாமே!"

"டேய்! தியேட்டர்லேந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்க அஞ்சு நிமிஷம் கூட ஆயிருக்காது. அதுக்குள்ள, எல்லாத்தையும் யோசிச்சு செயல்பட முடியுமா?" என்றான் பழனி, எரிச்சலுடன்.

"ஆனா, அதுக்குள்ள காதல் மட்டும் வந்துடுச்சாக்கும்!"

"ஆமாண்டா. இந்த ஒரு மாசமா, அவளை மறுபடி பாக்க முடியலியேன்னு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்!"

"சரி. அவ காலேஜுக்குப் போய்ப் பாத்தியா?"

"பாத்தேன். ஒரு வாரம் காலேஜ் விடற நேரத்தில காலேஜ் கேட்கிட்ட நின்னேன். அவ வரலை. யார்கிட்டயாவது விசாரிக்கலாம்னா, அவளைப் பத்தித் தப்பா நினைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. அவளுக்கே அது பிடிக்காம போகலாம். இது என்ன சங்க காலமா, காதலை தைரியமா சொல்ல? 1962ஆம் வருஷம்!"

"எந்த காலேஜ்ல படிக்கிறா அவ?"

"காமாட்சி காலேஜ்."

"டேய்! உனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு அந்த காலேஜ்லதான் படிக்கிறா. ஆனா, அவ பி.எஸ்.சி.கெமிஸ்ட்ரி முடிக்கப் போறா. அவகிட்ட நான் ஒரு தடவை தனியா பேசணும்னு சொன்னதால, நாளைக்கு என்னை அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. நர்மதாங்கற பி.எஸ்.சி. பாட்டனி படிக்கிற பொண்ணைப் பத்தி விசாரிச்சு சொல்லுன்னு அவகிட்ட கேக்கறேன்!"

"நான் நர்மதாவுக்கு ஒரு கடிதம் தரேன். அதை அவகிட்ட கொடுத்துடச் சொல்றியா?" என்றான் பழனி.

"அவளுக்கு உன் ஆளைத் தெரியுமோ என்னவோ? அதோட கடிதம்லாம் கொடுத்தா, ஏதாவது தப்பா ஆயிடப் போகுது!" என்றான் கோவிந்த்.

"ஒரே காலேஜ்தானே? பி.எஸ்.சி. பாட்டனி எந்த வருஷம்னு தெரியல. ஆனா, சுலபமா கண்டு பிடிச்சுடலாம்னு நினைக்கிறேன். கடிதம் ரொம்ப சுருக்கமாத்தான் இருக்கும். நீயே பாரேன்" என்ற பழனி, ஒரு தாளை எடுத்து இரண்டு வரிகள் எழுதி, அவனிடம் கொடுத்தான்.

"நர்மதா! அன்று உன்னை பஸ் ஏற்றி அனுப்பிய பின், உன்னை மீண்டும் சந்திக்க முடியவில்லை. வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு, அதே பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறேன் - காத்திருந்த கண்கள்."

"என்னடா, உன் பெயரைப் போடாம 'காத்திருந்த கண்கள்'னு போட்டிருக்க?"

"அதுதான் நாங்க பாத்த படம். அவ புரிஞ்சுப்பா!" என்றான் பழனி.

ஞாயிற்றுக்கிழமை மாலை, அதே பஸ் நிறுத்தத்தில், அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறம் தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

Read 'Eyes That Were Waiting' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Thursday, March 25, 2021

1131. காலங்கள் மாறினாலும்...

ஆண்டு: 1721

அன்பரே!

உங்கள் ஆருயிர்க் காதலியின் வணக்கங்கள்.

என் நாணத்தைச் சற்று ஒதுக்கி விட்டு, இந்த ஓலையைத் தங்களுக்கு எழுதுகிறேன். 

அதுவும் என் உயிர்த் தோழி மேகலை தஞ்சை நகருக்குச் செல்வதால், அவள் மூலம் இந்த ஓலையை அனுப்பக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி, இந்த மடலை வரைந்து அனுப்புகிறேன். 

அவள் உறவினர் தஞ்சையில் ஒரு வியாபாரி என்பதால், வியாபார வேலையாக அங்கே சென்றிருக்கும் உங்கள் இருப்பிடத்தை, அவர் மூலம் கண்டறிந்து, இந்த  ஓலையைத் தங்களிடம் சேர்த்து விடுவதாக, அவள் எனக்கு உறுதி அளித்திருக்கிறாள். 

என் காதலுக்கு உதவுவதில் அவளுக்கு எவ்வளவு ஆர்வம் பாருங்கள்!

அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற ஆண்தகையே! இந்த ஏழையின் மீது நீங்கள் ஏன் அன்பு காட்டினீர்கள்? 

அன்பு காட்டியதோடு நில்லாமல், பலமுறை என்னைத் தனிமையில் சந்தித்துக் காதல் மொழிகள் பேசி, என்னைக் கட்டியணைத்து... (இதற்கு மேல் சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது!)

இதை எழுதும்போது கூட, நீங்கள் என்னைத் தழுவிய இன்பத்தை எண்ணி, என் மனம் களிப்பையும், வேதனையையும் ஒருங்கே அனுபவிக்கிறது.

காதல் இன்பத்தில் என்னைத் துய்க்க வைத்த பின், திடீரென்று ஒருநாள் வியாபார வேலையாகத் தஞ்சைப் பட்டணத்துக்குச் செல்வதாகச் சொல்லி, என்னைத் துன்பக் கடலில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டீர்கள். 

நீந்தவும் முடியாமல், மூழ்கவும் மனம் வராமல், இந்தத் துன்பக் கடலில் அல்லாடியபடி நான் படும் தவிப்பை உங்களுக்கு உணர்த்தவே இந்த மடல்.

இந்த மடல் கண்டதும், விரைந்து வந்து, இந்த மங்கையைக் கைதூக்கிக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் அன்பு என்னும் மழைநீருக்காக, நான் சாதகப் பறவை போல் தாகத்துடனும், தவிப்புடனும் காத்திருக்கிறேன்.

                                                                                        உங்கள் ஆருயிர்க் காதலி

                                                                                            அபலை மதிவதனி.

ஆண்டு: 1921

அன்புள்ளவரே!

உங்கள் திருவடியில் ஆயிரம் முறை விழுந்து வணங்கி, உங்கள் அன்புக் காதலி பார்வதி எழுதிக் கொள்வது.

நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது தவறு என்று நினைத்தால், என்னை மன்னித்து விடுங்கள். 

இது உங்கள் கைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக, இதை ரிஜஸ்டர்ட் தபாலில் அனுப்புகிறேன். ரிஜஸ்டர்ட் போஸ்ட் கட்டணத்துக்காக, முகப்பவுடர் வாங்க வேண்டும் என்று அம்மாவிடம் பொய் சொல்லிக் காசு வாங்கி இருக்கிறேன். அம்மா கேட்டால், பழைய பவுடர் டப்பாவைக் காட்டிப் புதுசு என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்!

தறசெயலாகக் கோவிலில் சந்தித்த என்னைப் பின் தொடர்ந்து வந்து, உங்கள் காதலைச் சொல்லி, என் மனதை மயக்கினீர்கள்.  

அதன் பிறகு, நாம் சில தனிமையான இடங்களில் சந்தித்துப்பேசி நெருக்கமானோம். 

உங்கள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று திடீரென்று ஊருக்குப் போனீர்கள். ஒரு மாதமாகி விட்டது. உங்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. உங்கள் தந்தை நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால், என் பெற்றோர் பார்த்து விடுவார்கள் என்பதால்தான் நீங்கள் எழுதவில்லை என்று எனக்குப் புரிகிறது.

ஆனால், உங்கள் பிரிவைத் தாங்க முடியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் விரைவிலேயே இங்கே திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறேன். 

நீங்கள் என் முகத்தை அன்புடன் பார்த்து, என் கையை ஆதுரத்துடன் பற்றினால்தான் என் ஏக்கம் தீரும்.

கீழே உள்ள என் தோழியின் விலாசத்துக்கு எனக்கு எழுதவும். அவள் பெற்றோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவள் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்வாள். 

உடன் பதில்.

                                                                                                        உங்கள் அன்பள்ள

                                                                                                            பார்வதி.

ஆண்டு: 2021

 ஷைலு தன் அலைபேசியிலிருந்து விஸ்வாஸின் அலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி.

டேய்! 

நீ பாட்டுக்கு வருவே, என்னைக் காதலிக்கறேம்பே, சினிமா, மால்னு ரெண்டு மாசம் சுத்திட்டு, ஆஃபீஸ் வேலையா மும்பைக்குப் போறேன், நாலு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டு, திடீர்னு காணாமப் போவ. 

ஆஃபீஸ் வேலையா ரொம்ப பிஸியா இருப்பேன்னுட்டு நான் உனக்கு ஃபோன் கூடப் பண்ணாம இருந்தா, நீ பாட்டுக்கு கமுக்கமா இருக்க!

உனக்கு ஃபீலிங்ஸ் இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு இருக்கு. அதனாலதான் பிரஸ்டீஜ் பாக்காம, உனக்கு மெஸ்ஸேஜ் பண்றேன். 

இன்னிக்கு ஈவினிங் நீ எனக்கு வீடியோ கால் பண்ணலே, அப்புறம் இருக்குடா உனக்கு!  

யுவர் லவ் 

ஷைலு.                                                                                    

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

பொருள்:
காமத்தால் துன்புற்று  வருந்துபவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

Read 'Times Are Changing, But...' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Tuesday, March 23, 2021

1130. உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி!

"ஏண்டி மரகதம், திருமாறன் ஊருக்குப் போய் நாலு மாசம் இருக்காது?" என்றாள் கோதையம்மாள்.

கோதையம்மாள் மரகத்ததுக்கு தூரத்து உறவு. அடுத்த தெருவில் வசிப்பவள். மரகதத்தின் அம்மாவிடம் பேசுவதற்காக, அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவாள். வரும்போதெல்லாம், அவள் மரகதத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருப்பதில்லை!

"புரட்டாசி பிறந்தால், ஆறு மாசம் ஆயிடும்!" என்றாள் மரகதம்.

"என்னவோ குழந்தைக்கு வயசு சொல்ற மாதிரி, ஆறு மாசம் ஆகப் போகுதுன்னு சாதாரணமா சொல்ற! அப்படி என்ன வேலை அவனுக்கு, ஆறு மாசமா?"

"அத்தை! அவர் ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறவரு. ஒரு தடவை கிளம்பிப் போனா, பல ஊர்களுக்கும் போயிட்டுத்தானே வருவாரு? போன இடத்திலேந்தெல்லாம் எனக்கு ஓலை அனுப்ப, அவர் ராஜகுமாரரா என்ன? எப்பவும் ரெண்டு மூணு மாசத்தில வந்துடுவாரு. போன வருஷம் போன சில இடங்கள்ள மறுபடியும் வரச் சொல்லி இருக்கறதால, திரும்பி வர ஆறு மாசம் ஆகும்னு சொல்லிட்டுத்தான் போயிருக்காரு."

"உனக்கும் அவனுக்கும்தான் கல்யாணம்னு முடிவாயிடுச்சு. உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டிட்டுப் போகக் கூடாது?" என்றாள் கோதையம்மாள்.

"அப்ப மட்டும்?"

"தாலியைக் கட்டினா, நீ அவனை இழுத்துப் பிடிச்சு வச்சுக்கலாம் இல்ல? என்னவோ போ! கட்டிக்கப் போறவகிட்ட அன்பு இருந்தா, இப்படி ஊர் ஊராப் போவானா?" என்று சொல்லியபடியே அங்கிருந்து சென்றாள் கோதையம்மாள்.

'போங்க! வேற யார் வீட்டுக்காவது போய், அவங்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கான்னு பார்த்து வம்பு பேசுங்க!' என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள் மரகதம்.

மரகதம் பெரிய நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று தன்னைப் பார்த்தாள். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும், எப்போதும் ஏற்படும் பரவசம் ஏற்பட்டது. திருமாறன் பிரிந்து சென்றதிலிருந்து இப்படித்தான்.

ஊருக்குக் கிளம்புமுன், திருமாறன் அவளிடம் விடை பெற வந்தபோது, "நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டு, ஆறு மாசம் எங்கேயோ போகப் போறீங்களே! உங்களைப் பாக்காம நான் எப்படி இருக்கறது?" என்றாள் மரகதம், கம்மிய குரலில். அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

"மரகதம்! ராமானுஜரோட விக்கிரகம் ஒண்ணு ஶ்ரீபெரும்புதூர்ல இருக்கு. தான் ஶ்ரீபெரும்பூதூர்ல இல்லாதப்ப, தன் சீடர்கள் தன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதா நினைக்கக் கூடாதுங்கறதுக்காக, அவர் அந்த விக்கிரகத்தைத் தழுவிக்கிட்டுத் தன்னையே அதுக்குள்ள செலுத்தினாராம். அதுக்கப்புறம், அவர் வேற ஊருக்குப் போனாக் கூட, அவரோட சீடர்கள் அந்த விக்கிரகத்தைப் பாத்து, ராமானுஜரையே பாக்கற மாதிரி உணருவாங்களாம். அந்த விக்கிரகத்தைத் 'தாம் உகந்த திருமேனி'ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி, நான் ஊருக்குப் போனப்பறமும் என் உருவத்தை நீ எப்பவும் பாக்கற மாதிரி, என்னை உன் உள்ளத்துக்குள்ள செலுத்தப் போறேன்!" என்று கூறியபடி, அவளை இறுகத் தழுவிக் கொண்டான் திருமாறன். அப்போது அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்தச் சிலிர்ப்பில், அவன் தன் உள்ளத்துக்குள் நிலை பெற்றதை அவள் உணர்ந்தாள்.

அன்றிலிருந்து தினமும் பலமுறை நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டு, தனக்குள் இருக்கும் தன் காதலனை அவள் பார்த்து மகிழ்வது கோதையம்மாள் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.

"என்னடி இது? ஒரு நாளைக்குப் பத்து தடவை கண்ணாடி முன்னால நின்னுகிட்டு?  பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? திருமாறன் வந்ததுமே, முதல்ல உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டச் சொல்லணும். இல்லேன்னா, பைத்தியம் முத்திடும்!" என்றாள் மரகதத்தின் அம்மா.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.

பொருள்:
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல், அவர் அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

குறள் 1131 
குறள் 1129

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Saturday, March 20, 2021

1129. தூங்காத கண்ணென்று ஒன்று!

"என்ன பிரச்னை?" என்றார் டாக்டர்.

"டாக்டர்! கொஞ்ச நாளா இவ சரியாவே தூங்கறதில்ல" என்றாள் சுகந்தியின் தாய் சாரதா.

"ஏம்மா, தூக்கம் வரதில்லையா?" என்றார் டாக்டர்.

"அப்படி ஒண்ணும் இல்ல, டாக்டர்" என்றாள் சுகந்தி.

டாக்டர் சுகந்தியைப் பொதுவாகப் பரிசீலித்து விட்டு, "பிரச்னை எதுவும் இருக்கறாதாத் தெரியல. நீ கல்லூரியில படிக்கிறியா?" என்றார்.

"ஆமாம்."

"அப்படின்னா, படுக்கையில படுத்துக்கிட்டு, ஏதாவது பாடப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்னா, உடனே துக்கம் வந்துடுமே!" என்றார் டாக்டர், சிரித்தபடி.

"எங்கே டாக்டர்! படுத்துக்கவே மாட்டேங்கறா? முழிச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னாலேயே உக்காந்திருக்கா" என்றாள் சாரதா.

"அதான் பிரச்னை. தூக்கம் வராட்டாலும், தினமும்  குறிப்பிட்ட நேரத்துக்குப் படுத்துக்கப் போறதுன்னு பழக்கப்படுத்திக்கிட்டா, தூக்கம் வர ஆரம்பிச்சு, கொஞ்ச நாள்ள இந்தப் பிரச்னை சரியாயிடும்" என்றார் டாக்டர், அதுதான் தன் பிரிஸ்க்ரிப்ஷன் என்பது போல்.

"நேத்திக்கு சாயந்திரம் வீட்டுக்கு வரேன்னு சொன்னியே, ஏன் வரலை?" என்று சுகந்தியிடம் கேட்டாள் அவள் தோழி தேன்மொழி.

"டாக்டர்கிட்ட போயிருந்தேன்!" என்றாள் சுகந்தி.

"என்ன ஆச்சு? யாருக்கு உடம்பு சரியில்ல?"

"எனக்குத்தான்! எனக்குத் தூக்கமே வரலைன்னு சொல்லி, எங்கம்மா என்னை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனாங்க."

"அப்படி ஒரு பிரச்னை இருக்கா உனக்கு? எனக்குத் தெரியாதே! டாக்டர் என்ன சொன்னாரு?"

"படுத்துக்கிட்டுக் கண்ணை மூடிக்கிட்டா, தூக்கம் வரும்னு சொன்னாரு!"

"அவ்வளவுதானா? நீ அப்படிச் செய்ய வேண்டியதுதானே?"

"முடியாதுடி. ராஜேஷ் என் எதிரில இருந்தாலும், இல்லாட்டாலும், அவன் உருவம் என் கண்ணிலேயே இருக்கு. கண்ணை மூடினா அவன் உருவம் மறைஞ்சுடுமோங்கற பயத்திலதான் என்னால கண்ணை மூட முடியலியோ என்னவோ!" என்றாள்.

"உன் மேல தப்பு இல்லடி. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கானே உன் ஆள் ராஜேஷ், அவனைத்தான் குத்தம் சொல்லணும்!" என்றாள் தேன்மொழி.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

பொருள்:
என் கண்கள் இமைத்தால், உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து, நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத ஊரார், அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

Read 'A Prescription for Sleeplessness' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Saturday, January 30, 2021

1128. ஆறிய காப்பி!

"என்ன, நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி.

"ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூடாதா?" என்றாள் அவர் மனைவி சிவகாமி.

"நான் அடிக்கடி காப்பி கேக்கறேன்னு நீ குத்தம் சொல்லுவியே, அதுக்காகச் சொன்னேன்."

"சும்மா உக்காந்துக்கிட்டிருக்கற உங்களுக்கே அடிக்கடி காப்பி தேவைப்படும்னா, அடுப்படியிலேயே நின்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்குத் தேவைப்படாதா? நானும் அப்பப்ப குடிச்சுப்பேன்தான்!"

"ஓ, அப்படியா சங்கதி! ஆனா, நான் மட்டும் அடிக்கடி காப்பி கேக்கறதுக்குத் திட்டு வாங்கிக்கணும் போலருக்கு!" என்ற சபாபதி, சமையலறையிலிருந்து தன் மகள் செல்வி கையில் காப்பி தம்ளருடன் வருவதைப் பார்த்து விட்டு, "இன்னிக்கு எத்தனாவது காப்பி இது?" என்றார், மகளிடம்.

செல்வி சிரித்துக் கொண்டே காப்பியை ரசித்து உறிஞ்சினாள்.

"ஏண்டி, காப்பி குடி, வேண்டாங்கல. ஆனா, ஏன் இவ்வளவு சூடாக் குடிக்கற? தம்ளரைக் கையால பிடிக்க முடியாத அளவுக்கு சூடு. துணியால புடிச்சுக்கிட்டுக் குடிக்கற! இவ்வளவு சூடா காப்பி நெஞ்சுக்குள்ள இறங்கினா, சூட்டை நெஞ்சு தாங்குமா?" என்றாள் சிவகாமி.

"நல்லா, இதமா இருக்கு. சூடும் ஒரு சுவைன்னு ஒரு பழமொழி இருக்கே!" என்றாள் செல்வி.

"அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய பயனுள்ள பழமொழிதான் போ!" என்றார் சபாபதி, சிரித்தபடி.

"ஏண்டி, இப்பல்லாம் காப்பி குடிக்கறதைக் குறைச்சுட்ட. அதோட காப்பியை நல்லா ஆத்தி, அது பச்சைத் தண்ணி மாதிரி ஆனப்பறம் குடிக்கற! என்ன ஆச்சு உனக்கு?" என்றாள் சிவகாமி.

"நீதானேம்மா சொன்னா, சூடாக் குடிச்சா, சூடு நெஞ்சுக்குள்ள இறங்கிடும்னு?"

"நான் அப்படிச் சொன்னதுக்கு, சூடும் ஒரு சுவைன்னு பழமொழில்லாம் சொன்னே!"

"ஆறிப் போனா, அதிலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யுது. அதோட, காப்பி குடிக்கறதைக் குறைச்சுக்கணும்னு நினைக்கிறேன். ஆறின காப்பி குடிச்சா, அடிக்கடி குடிக்கணும்னு தோண்றதில்ல!"

"என்னவோ போ! இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் நாளுக்கு ஒரு பேச்சுப் பேசறீங்க!" என்றாள் சிவகாமி.

"ஆமாம், ஒரு விஷயம் கவனிச்சேன். முன்னெல்லாம் காப்பி ரொம்ப சூடா வேணும்னு கேப்பே. ஒரு தடவை சூடு போறலேன்னு சொல்லி,சர்வரை வேற காப்பி எடுத்துக்கிட்டு வரச் சொன்னே. இப்பல்லாம், காப்பியை இவ்வளவு ஆற வச்சுக் குடிக்கற. ஏன் அப்படி?" என்றான் முருகன், செல்வியுடன் ஓட்டலில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தபோது.

"ஒரு மாறுதலுக்காகத்தான், எல்லாத்துக்கும் காரணம் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?" என்றாள் செல்வி.

"காரணம் இருக்கும். ஆனா, நீ சொல்ல மாட்டே. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து, பல விஷயங்கள்ள கவனிச்சிருக்கேன். நீ சரியான அழுத்தக்காரியாச்சே! செல்விங்கறதுக்கு பதிலா, உனக்குக் கள்ளின்னு பேர் வச்சிருக்கலாம்."

"முருகனான உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கறதால, வள்ளிங்கற பேர்தான் எனக்குப் பொருத்தமா இருக்கும்!" என்ற செல்வி, 'காப்பி என் நெஞ்சுக்குள் இறங்கும்போது, என் நெஞ்சுக்குள் இருக்கும் உன் மீது சூடு படக் கூடாது என்பதற்காகத்தான் நான் காப்பியைச் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை விட்டு விட்டு, காப்பியை ஆற வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னால், யாராவது நம்பவா போகிறார்கள்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

பொருள்:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால், சூடான பொருளை உண்டால், அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

Read 'Your Coffee Is Getting Cold' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்


Friday, January 29, 2021

1127. கண்ணுக்கு மையழகு!

"உன் தோற்றத்தில ஒரு மாற்றம் தெரியுதே!" என்றாள் யுவா.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் பாக்கறதால அப்படித் தெரியுது!" என்றாள் ஶ்ரீநிதி.

"ஒரு வாரம்தான் நான் ஊருக்குப் போயிருந்தேன். அதுக்குள்ள என்ன பெரிய மாற்றம் வந்திருக்கும்?" என்று யோசிப்பது போல் கேட்ட யுவா, "நீங்கள்ளாம் இதை கவனிக்கலியா?" என்றாள், தன் பிற தோழிகளிடம்.

"கவனிக்காம என்ன? முதல்நாளே கவனிச்சுக் கேட்டுட்டோம். அவ சொல்ல மாட்டேங்கறா! அது இருக்கட்டும். ஒரு மாற்றம்னு சொல்றியே, என்ன மாற்றம்னு உனக்குத் தெரியலையா? அப்படின்னா, நீ ஒரு டியூப்லைட்னு அர்த்தம்! இத்தனைக்கும், அவளுக்கு எங்களையெல்லாம் விட நெருங்கிய தோழி நீதான்!" என்றாள் வனிதா என்ற மற்றொரு தோழி.

"தெரியாம என்ன? ஶ்ரீநிதியோட தனித்தன்மையே அவ கண்ணையே மறைக்கிற மாதிரி அவ இட்டுக்கற மைதான். அதுதான் இப்ப இல்ல. அவ வாயாலேயே சொல்லுவாளோன்னு நினைச்சேன்" என்ற யுவா, ஶ்ரீநிதியைப் பார்த்து, "நீ மை தீட்டிக்கறப்ப நான் பாத்திருக்கேன். அப்படியே கண்ணோட கீழ்ப்பகுதி முழுக்க பெயின்ட் பண்ற மாதிரி மையை லாவகமாத் தடவி, அதைக் கண்ணுக்கே ஒரு பார்டர் மாதிரி அழகாப் பண்ணிக்கறதைப் பார்த்து நான் எத்தனையோ தடவை ஆச்சரியப் பட்டிருக்கேன். உங்கிட்டயும் சொல்லி இருக்கேன். மை கரைஞ்சு கண்ல பட்டுக் கண் கரிக்கறதைக் கூடப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கறதில அப்படி ஒரு ஆர்வம் உனக்கு! ஏன் திடீர்னு மை தடவிக்கறதை நிறுத்திட்ட?" என்றாள்.

"காரணம் ஒண்ணுமில்ல. சும்மாதான். நீ சொன்ன மாதிரி, எதுக்குக் கண் கரிக்கறதைப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கணும்னுதான்!" என்றாள் ஶ்ரீநிதி.

"சமாளிக்காதேடி. உண்மையான காரணம் எனக்குத் தெரியும். சொல்லட்டுமா?" என்றாள் யுவா, விடாமல்.

ஶ்ரீநிதி 'வேண்டாம்' என்று கெஞ்சுவது போல் தலையாட்டினாள்.

"சொல்லத்தான் போறேன்" என்ற யுவா, மற்ற தோழிகளைப் பார்த்து, "விஷயம் ஒண்ணுமில்லீங்கடி. இவ வீட்டில மார்கழி மாசத்தில விரதம் இருந்து, திருப்பாவை படிப்பாங்க. திருப்பாவையில ஆண்டாள் 'மையிட்டெழுதோம்'னு சொல்லி இருப்பாங்க. அதனால இவங்க வீட்டில பெண்கள் யாரும் மார்கழி மாசத்தில கண்ணுக்கு மை வச்சுக்க மாட்டாங்க. இதைச் சொன்னா, நாம இவளைக் கிண்டல் பண்ணுவோம்னு பயந்துதான் இவ காரணத்தைச் சொல்லாம மழுப்பி இருக்கா" என்று சொல்லி விட்டு, ஶ்ரீநிதியைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, "என்னடி நான் சொல்றது சரிதானே?" என்றாள்.

ஶ்ரீநிதி மௌனமாகத் தலையாட்டினாள்.

"இவ்வளவுதானா? சப்புனு போயிடுச்சே!" என்று சொல்லி விட்டு, மற்ற தோழிகள் ஒவ்வொரொவராகக் கலைந்து சென்றனர்.

மற்ற தோழிகள் சென்றதும், "இப்ப எங்கிட்ட உண்மையைச் சொல்லு. நீ ஏன் மை இட்டுக்கலேன்னு எனக்குத் தெரியாது. ஆனா யாரோ ஒத்தன் உனக்கு மை போட்டதுதான் இதுக்குக் காரணமா இருக்கும்னு எனக்குத் தெரியும். யாருடி அவன்?" என்றாள் யுவா.

"அஸ்வின்!" என்றாள் ஶ்ரீநிதி, நெளிந்தபடி.

"ஓ, பரவாயில்ல. நல்ல பையனைத்தான் செலக்ட் பண்ணி இருக்கே! மை இட்டுக்கிட்டா உனக்கு நல்லா இல்லேன்னு அவன் சொன்னானா என்ன? அப்படிச் சொல்லி இருந்தா, அவனுக்கு ரசனை இல்லேன்னுதான் அர்த்தம்!"

"சேச்சே! அவன் அப்படிச் சொல்லல. அவன் கூட நான் ஏன் மை இட்டுக்கறதில்லேன்னு கேட்டுக்கிட்டிருக்கான். அவன்கிட்டயும் மழுப்பலாதான் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்."

"பின்னே ஏன் மை இட்டுக்கறதை நிறுத்திட்ட? நான் சொன்ன மாதிரி நிஜமாகவே ஏதாவது விரதமா, ஐ மீன், காதலுக்காக விரதமா?"

"காணத்தைச் சொன்னா, என்னைக் கிண்டல் பண்ணுவ. என்னைப் பைத்தியக்காரின்னு நினைப்பே!"

"பரவாயில்ல, சொல்லு. கிண்டல் எல்லாம் பண்ண மாட்டேன்!" என்று ஊக்கினாள் யுவா.

"இப்பல்லாம் அவன் நினைவு எப்பவும் என் மனசிலேயே இருந்துக்கிட்டிருக்குடி. கண்ணை மூடினா கூட அவன் முகம்தான் தெரியுது - ஏதோ கண்ணுக்குள்ளேயே அவன் குடியிருக்கிற மாதிரி. நான் மையிட்டுக்கறப்ப, மையோட கருப்பு பட்டு, கண்ணுக்குள்ள இருக்கற அவன் உருவம் அழிஞ்சு போயிடுமோன்னு பயந்துதான், மை தடவிக்கறதை நிறுத்திட்டேன்!" என்றாள் ஶ்ரீநிதி, சங்கடத்துடன் நெளிந்தபடி.

"நீ பைத்தியக்காரிதாண்டி. சந்தேகமே இல்லை" என்றாள் யுவா, செல்லாமாகத் தன் தோழியின் கன்னத்தில் தட்டியபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

பொருள்:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுத மாட்டோம்!

Read 'The Secret Hidden by Shreenidhi' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்



Tuesday, January 19, 2021

1126. கண் மூடும் வேளையிலும்


"உன்னை எப்பவும் என் இதயத்துக்குள்ளேயே வச்சிருக்கேன்" என்றான் ராம்.

"இது மாதிரியெல்லாம் பேசறது ஆம்பளைங்களுக்கு வழக்கம். இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்" என்றாள் அஞ்சனா.

"உன்னை நம்ப வைக்கறதுக்கு நான் என்ன செய்யணும்? ராமருக்கு அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்டினாராமே, அப்படிக் காட்ட முடியுமா?"

"முடியாதுதான். ஏன்னா, நான் ராமர் இல்ல, நீதான் ராம். அதோட, நான் அஞ்சனா. அஞ்சனாவோட பிள்ளைதான் ஆஞ்சநேயர். அதனால, இங்க ரோல் மாறி இருக்கு!"

"அப்ப, உன் இதயத்தில என்னை வச்சிருக்கறதா சொல்றியா?"

"இதயத்தில வைக்கறது பெரிய விஷயம் இல்ல. இதயத்தில எத்தனையோ விஷயங்களை வச்சிருக்கேன். அதுல நீயும் ஒண்ணு. உன் இதயத்தில நான் இருக்கறதும் அப்படித்தான்!"

"அடிப் போடி! இப்படியெல்லாம் ஏதாவது ரொமான்ட்டிக்கா சொல்றதுதான் காதல்ல கிக்கான விஷயம். என் இதயத்தில உன்னை வச்சிருக்கேன்னு நான் சொன்னா, பதிலுக்கு, நீயும் என்னை உன் இதயத்தில வச்சிருக்கறதாச் சொன்னா, எனக்கு சந்தோஷமா இருக்கும். அதை விட்டுட்டு, என்னென்னவோ விளக்கமெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கே!"

"டேய் முட்டாள்! உன்னை நான் என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேண்டா!"

"நான் உன்னை இதயத்தில வச்சிருக்கேன்னு சொன்னேன். ஏட்டிக்குப் போட்டியா, நீ என்னைக் கண்ல வச்சிருக்கறதா சொல்ற. ரெண்டும் ஒரே மாதிரிதானே!"

"ஏட்டிக்குப் போட்டியா சொல்லல. இதயம் ஒரு குப்பைக் கூடை. அதில கண்டதெல்லாம் கிடக்கும். கண் அப்படி இல்ல. அது ரொம்ப சென்சிடிவ். கண்ணுக்குள்ள எல்லாத்தையும் வைக்க முடியாது. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்னா, நீ என் கண்ணுக்கு எதிரில இல்லாட்டாலும், உன் உருவம் என் கண்ல இருந்துக்கிட்டே இருக்கும்னு அர்த்தம்."

"ஓ, அப்படியா! கேக்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, ஜாக்கிரதை. நீ கண்ணை இமைக்கறப்ப, கண்ணை மூடித் திறக்கறப்பல்லாம் என்னை அழுத்திக் கசக்குவியே! அப்ப எனக்கு வலிக்காதா?"

"வலிக்காது. ஒரு சின்னத் தூசி கண்ல இருந்தாக் கூட, கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கும், இல்ல? ஆனா, நீ எப்பவுமே என் கண்ணுக்குள் இருந்தாலும், எனக்கு ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லையே! அப்படின்னா, நீ தூசியை விட நுட்பமா, காத்து மாதிரிதான் என் கண்ல இருக்கேன்னுதானே அர்த்தம்? அப்புறம் எப்படி உனக்கு வலிக்கும்?" என்றாள் அஞ்சனா.

"முதல்ல, நான் உன் நாக்கில இருந்து, உன்னை மாதிரி புத்திசாலித்தனமாப் பேசக் கத்துக்கணும்!" என்றான் ராம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.

பொருள்:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும், அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

Read 'One Who Dwells in My Eye' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்



Thursday, January 14, 2021

1125. ஐந்து கேள்விகள்

"ஒரு விஷயத்தில மனைவியோட விருப்பம் எதுன்னு கணவன்கிட்ட தனியா கேப்பாங்களாம். அப்புறம், மனைவிகிட்ட இதைக் கேட்டு, கணவன் சொன்னது சரியா இருக்கான்னு பார்த்து மார்க் போடுவாங்களாம். இதெல்லாம் ஒரு கேம்!" என்றான் செல்வகுமார்.

"ஏன், அதில என்ன தப்பு? மனைவியோட விருப்பங்கள் எவைன்னு தெரிஞ்சுக்க கணவனுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனா, பெரும்பாலான கணவர்கள் அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க மாட்டாங்க. 'எனக்கு இது பிடிக்காதுன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?'னு மனைவி கணவன்கிட்ட சொல்றது அடிக்கடி நடக்கறதுதானே!" என்றாள் குழலி.

"மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா, நான் அப்படி இல்ல."

"அப்படியா? அதை சோதிச்சுப் பாத்துடலாமே! வர ஞாயித்துக் கிழமை, நாம என் தோழி ரமா வீட்டுக்கு சாப்பிடப் போறோம் இல்ல? அப்ப ஒரு போட்டி வச்சுக்கலாம். என்னோட விருப்பம் என்னங்கறதைப் பத்தின அஞ்சு கேள்விகள் தயார் பண்ணி, அந்தக் கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் எழுதி, ரமாகிட்ட கொடுத்துடறேன். அவ அந்தக் கேள்விகளை உங்கிட்ட கேப்பா. எத்தனை கேள்விக்கு நீ சரியா பதில் சொல்றேன்னு பாக்கலாம்" என்றாள் குழலி.

"செல்வா, ரெடியா இருக்கீங்களா?" என்றாள் ரமா.

"கேளுங்க, ரமா!" என்றான் செல்வகுமார்.

"முதல் கேள்வி. குழலிக்குக் கல்லூரியில பிடிச்ச சப்ஜெக்ட் எது?"

"தமிழ்."

"ரெண்டாவது கேள்வி. அவளுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் எது?"

"கணக்கு."

"அவளுக்குப் பிடிச்ச இசை அமைப்பாளர்?."

"எம் எஸ் வி."

"பிடிச்ச எழுத்தாளர்?"

"இந்திரா பார்த்தசாரதி."

"கடைசிக் கேள்வி. அவளோட வாழ்க்கையில அவளுக்கு இருக்கற லட்சியம் என்ன?"

"லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது. சும்மா ஜாலியா இருக்கறதுதான் வாழ்க்கைன்னு நினைக்கறவ அவ. ஆனா லட்சியம்னு ஒண்ணைச் சொல்லணும்னா, தன் அம்மாவைக் கடைசி வரையில சந்தோஷமா வச்சுக்கணுங்கறதுதான்."

"கங்கிராட்ஸ் செல்வா! நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி இருக்கீங்க!" என்றாள் ரமா 

"அடப்பாவி! பிட் அடிச்சுப் பரீட்சை எழுதற மாதிரி அத்தனையையும் சரியா சொல்லிட்டியே! இது எதையுமே நான் உங்கிட்ட சொல்லவே இல்லையே! எப்படி இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சுது?" என்றாள் குழலி, வியப்புடன்.

"நீ சொல்லாட்டா என்ன? எல்லாமே உன்னை கவனிச்சு நான் புரிஞ்சுக்கிட்டதுதான். ஒவ்வொரு கேள்விக்கா வரேன். உனக்குத் தமிழ் இலக்கியத்தில ஆர்வம் இருக்குன்னு உன்னோட பேச்சிலேந்து தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, உனக்குத் தமிழ்தான் விருப்பமான பாடமா இருக்கும்னு நினைச்சேன். 

"நீ பி எஸ்சியில கெமிஸ்ட்ரி எடுக்க விரும்பின. ஆனா, உனக்கு பிஎஸ் சி மாத்ஸ்லதான் சீட் கிடைச்சது. ஆனாலும், மாத்ஸ்ல நீ நல்ல மார்க் வாங்கினதாச் சொல்லி இருக்கே. அதனால உனக்கு மாத்ஸ்ல அவ்வளவு விருப்பம் இல்ல, ஆனாலும், கஷ்டப்பட்டுப் படிச்சேன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"அப்புறம், உன் வீட்டுக்கு நான் எப்ப வந்தாலும், நீ முரசு டிவிதான் பாத்துக்கிட்டிருப்ப. இதை வச்சும், நீ அடிக்கடி முணுமுணுக்கற பாட்டுகளைக் கேட்டும், நீ எம் எஸ் வி பாடல்களை விரும்பறவன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"உன் வீட்டுக்கு வரப்பல்லாம், நீ லைப்ரரிலேந்து எடுத்துட்டு வந்திருக்கற புஸ்தகங்கள்ள, இந்திரா பார்த்தசாரதி புஸ்தகங்கள் அதிகம் இருக்கறதை கவனிச்சிருக்கேன்."

"அடப்பாவி! என்னை வேவு பாக்கற மாதிரி இவ்வளவு உன்னிப்பா கவனிச்சிருக்கியே! உங்கிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் போலருக்கே! அது சரி. எனக்கு லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது, என் அம்மாவை சந்தோஷமா வச்சுக்கறதுதான் என் லட்சியம்னு சொன்னியே! அது எப்படி? இந்தக் கேள்விக்கு உன்னால நிச்சயமா விடை சொல்ல முடியாதுன்னுல்ல நினைச்சேன்!" என்றாள் குழலி. 

"எல்லாத்தையும் விட சுலபமான கேள்வி இதுதான். எல்லாருமே தங்களோட லட்சியத்தைப் பத்தித்தான் அதிகமாப் பேசுவாங்க. நீ அதிகம் பேசறது உன் அம்மாவை நல்லா வச்சுக்கணுங்கறதைப் பத்தித்தானே! அதோட, உன் அம்மாகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தானே, என் காதலையே ஏத்துக்கிட்ட!" என்றான் செல்வகுமார் சிரித்தபடி.

தன் கணவனைப் பார்த்து, "பாத்தீங்களா இவரை? உங்களுக்கு நான் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா, நீங்க இருபது மார்க் கூட வாங்கி இருக்க மாட்டீங்க!" என்றாள் ரமா

"அவர் இப்ப காதலனாத்தானே இருக்காரு? கல்யாணம் ஆனப்பறம் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா, தம்பியும் என் லெவலுக்கு வந்துடுவாரு. மனைவி பத்தின விஷயங்களை மறக்கறதுதான் ஒரு கணவனோட இயல்பு!" என்று சொல்லிச் சிரித்தான் அவள் கணவன் ரமேஷ்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை, பிரதர். நான் இவளைப் பத்தின எதையுமே ஞாபகம் வச்சுக்கறதில்ல. ஞாபகம் வச்சுக்கிட்டாத்தானே மறக்கறதுக்கு?"

"ஞாபகம் வச்சுக்கறதில்லையா? அப்புறம் எப்படி?" என்றாள் ரமா.

"நான் அவளைப் புரிஞ்சுக்கறேன். அவ்வளவுதான்!" என்றான் செல்வகுமார், குழலியின் முகத்தைப் பார்த்தபடி.

குழலியின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

பொருள்:
ஒளி பொருந்திய விழிகளையுடைய இவள் பண்புகளை நான் நினைப்பதேயில்லை; அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?

Read 'Five Questions' the English version of this story by the same author.

                                                                        குறள் 1126                                                                         குறள் 1124

                     அறத்துப்பால்                                                                     பொருட்பால்        


Wednesday, October 14, 2020

1124. உயிர் போய் உயிர் வந்து...

காலில் கட்டுப் போடப்பட்டு மருத்துவமக் கட்டிலில் படுத்திருந்த அரவிந்தனைப் பார்த்ததும், மீராவுக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது.

"எப்படி ஆச்சு இது? நீ ரொம்ப மெதுவா, கவனமா பைக் ஓட்டறவனாச்சே?" என்றாள் அவள். 

"அது நீ பின்னால உக்கந்திருக்கறப்ப. தனியா ஓட்டறப்ப நான் எப்படி ஒட்டுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று சொல்லிச் சிரித்தான் அரவிந்தன்.

"இவ்வளவு வலியிலேயும் எப்படித்தான் சிரிக்கிறியோ!"

"ஆ..."

"என்ன ஆச்சு, ரொம்ப வலிக்குதா? நர்ஸைக் கூப்பிட்டடுமா?" என்றாள் மீரா, பதறியவளாக.

"வேண்டாம். உங்கிட்ட பேசினதில வலியை மறந்திருந்தேன். நீ இவ்வளவு வலியிலேயும் எப்படி சிரிக்கிறேன்னு கேட்டு, என் வலியை ஞாபகப்படுத்திட்ட! அதான் கத்தினேன். நர்ஸைக் கூப்பிட்டுடாதே. அப்புறம் பிரச்னை ஆயிடும்" என்றான் அரவிந்தன்.

"என்ன பிரச்னை ஆயிடும்? ஊசி போட்டுடுவாங்கன்னு பயமா? நீ என்ன சின்னக் குழந்தையா?"

"ஊசிக்கெல்லாம் பயப்படற உடம்பா இது? ரெண்டு நாள்ள எவ்வளவு ஊசி பாத்துடுச்சு தெரியுமா?"

"பின்னே என்ன பிரச்னை?"

"கண் முன்னால ரெண்டு பெண்கள் இருந்தா, யாரை சைட் அடிக்கறதுன்னு குழப்பம் வருமே, அந்தப் பிரச்னையைச் சொன்னேன்!"

"ஏற்கெனவே அடிபட்டுப் படுத்திருக்கே. இல்லேன்னா, உன் மண்டையிலேயே போட்டிருப்பேன்" என்றாள் மீரா, சிரிப்பை அடக்க முடியாமல். விபத்தில் அடிபட்ட காதலன் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

"அது சரி. எப்படி அடிபட்டுதுன்னு சொல்லவே இல்லையே!"

"பைக்கில வேகமாப் போய்க்கிட்டிருந்தேன். ஏதோ ஒரு பெரிய வண்டியிலேந்து ரோடில நிறைய எண்ணெய் கசிஞ்சிருக்கும் போலருக்கு. அதில வழுக்கி, வண்டி விழுந்திடுச்சு. இந்தக் கால்ல ஒரு எலும்பு உடைஞ்சிருக்கு. அதை நேரா வச்சுக் கட்டி இருக்காங்க. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் காலை அசைக்காம படுத்திருக்கணுமோ தெரியல."

"ரொம்ப வலிக்குதா?" என்றாள் மீரா, அனுதாபத்துடன்.

"ரொம்ப ஒண்ணும் இல்ல. உயிர் போற அளவுக்கு வலிக்குது. அவ்வளவுதான்!"

"உயிர் போற அளவுக்கு வலிக்குதுன்னு எப்படிச் சொல்ற? இதுக்கு முன்னாடி உனக்கு உயிர் போனதில்லேயே!" என்றாள் மீரா, அவன் பாணியிலேயே அவனைச் சீண்டியவளாக.

"ஏன் போனதில்ல? எத்தனையோ தடவை போயிருக்கே!"

"என்ன உளறரே?"

"உண்மையைத்தான் சொல்றேன். நீ  என்னோட இருந்துட்டு, அப்புறம் என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்ப எல்லாம் என் உயிர் போயிடும். மறுபடி உன்னைப் பாக்கறப்பதான், போன உயிர் திரும்ப வரும். இது மாதிரி எத்தனையோ தடவை நடந்திருக்கே!"

சற்று நேரம் அரவிந்தனுடன் பேசி விட்டுக் கிளம்பினாள் மீரா. கிளம்பும்போது, "கவலைப்படாதே! சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க" என்றாள்.

மீரா அறை வாசலுக்குப் போனதும், அரவிந்தனிடமிருந்து "ஆ" என்ற அலறல் கேட்டது.

திரும்பிப் பார்த்த மீரா, "என்ன வலிக்குதா?" என்றாள்.

"வலிக்கல. உயிர் போகுது. நீ போற இல்ல, அதான்!" என்றான் அரவிந்தன், சிரித்தபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

பொருள்:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்திருக்கும் இவள் கூடும்போது, உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும்போது, உயிர்க்கு சாவு போன்றவள்.

Read 'When the Soul Leaves the Body' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்




Sunday, October 11, 2020

1123. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு!

 "உன் மொபைலோட ரிங்டோனை மாத்தி இருக்க போலருக்கே? 'கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு'ன்னு ஒரு பழைய பாட்டு வருது?" என்றாள் விஜி.

"ஆமாம். இப்ப, நீ என் கண்ணுக்குள்ளதானே இருக்கே! கண்ணை மூடினா கூட, உன் முகம்தான் தெரியுது" என்றான் கோபி.

"அப்படியா? எங்கே, பாக்கறேன்!" என்ற விஜி, அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.

"என்ன, நீ இருக்கறது தெரியுதா?"

"ஒரு ஓரத்தில இருக்கிற மாதிரி இருக்கு!" என்றாள் விஜி, விளையாட்டாக.

"சரி. என் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, எப்ப வரப் போற?" என்றான் கோபி.

"நீ தனியா ஒரு ரூம்ல இருக்க. நான் அங்க வந்தா, நல்லாவா இருக்கும்?"

"ரொம்ப நல்லா இருக்கும். கீழ் வீட்டில இருக்கற வீட்டுக்காரர், நான் அவர் பொண்ணைக் காதலிக்கறேனோன்னு சந்தேகப்படறாரு. உன்னை என் காதலின்னு அவருக்கு அறிமுகப்படுத்தினா, அவரு நிம்மதியாத் தூங்குவாரு!"

"வர ஞாயித்துக் கிழமை அன்னிக்கு வரேன்" என்றாள் விஜி.

ஞாயிறன்று காலை தன் வீட்டுக்கு வந்த விஜியைத் தான் மணந்து கொள்ளப் போகும் பெண் என்று வீட்டுக்காரருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவளை மேலே இருக்கும் தன் அறைக்கு அழைத்து வந்தான் கோபி.

ஒரு அறை, ஒரு சமையலறை என்று இரண்டு சிறிய அறைகளைக் கொண்டிருந்தது கோபியின் 'வீடு.'

உள்ளே நுழைந்ததுமே விஜி, "என்ன இது? அறை முழுக்க அடைச்சுக்கற மாதிரி கட்டிலைப் போட்டு வச்சிருக்கே. அறைக்குள்ள கால் வைக்கவே இடம் இல்லையே!" என்றாள்.

"என்ன செய்யறது? இது சின்ன அறை. எனக்குக் கட்டில்ல படுத்தாதான் தூக்கம் வரும். நான் மட்டும்தானே இருக்கேன்? இப்பதான் முதல் தடவையா ஒரு விருந்தாளியா நீ வந்திருக்க! கவலைப்படாதே. கல்யாணத்துக்கப்பறம், நாம வேற பெரிய வீட்டிலதான் இருக்கப் போறோம்!" என்றான் கோபி.

சற்று நேரம் கட்டிலில் உட்கார்ந்து அவனிடம் பேசி விட்டு, விஜி போய் விட்டாள்.

அடுத்த சனிக்கிழமை விஜியைச் சந்தித்தபோது, "நாளைக்கும் நீ என் வீட்டுக்கு வரணும்" என்றான் கோபி.

"போன வாரம்தானே வந்தேன்? மறுபடி எதுக்கு வரச் சொல்ற?" 

"வா. ஓரு சர்ப்ரைஸ் இருக்கு!"

அடுத்த நாள் கோபியின் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, விஜிக்கு அந்த வியப்பு காத்திருந்தது. அறையில் கட்டில் இல்லை. அறை இப்போது பெரிதாகத் தோன்றியது.

"கட்டில் எங்கே?" என்றாள் விஜி, வியப்புடன்.

"வித்துட்டேன்!"

"வித்துட்டியா? ஏன்?'

"கட்டில் போட்டதால, அறையில கால் வைக்கக் கூட இடம் இல்லேன்னு நீதானே சொன்ன?"

 "கட்டில்ல படுத்தாதான் தூக்கம் வரும்னு சொன்ன?"

"நாலு நாளா தரையிலதான் படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கேன். பழகிடும்னு நினைக்கிறேன்" என்றான் கோபி, சிரித்தபடி.

அவனை வியப்புடன் பார்த்த விஜி, அவன் முகத்தைத் தன் கைகளால் பிடித்து, அவன் கண்களைப் பார்த்தாள். "இப்ப சொல்றேன். உன் கண்ணுக்குள்ள நான் முழுக்க இருக்கேன்" என்றாள்.

"ஒரு ஓரத்தில இருக்கற மாதிரி இருக்குன்னு அன்னிக்கு சொன்னியே!" என்றான் கோபி, அவளைச் சீண்டும் விதமாக.

"உன் அறைக்குள்ள நான் கால் வைக்க இடம் இல்லைன்னு சொன்னதுக்காகக் கட்டிலையே தூக்கிப் போட்டவன், உன் கண்ணுக்குள்ள எனக்கு இடம் போதலை, அதான் ஓரத்தில இருக்கேன்னு நினைச்சு, உன் கண்மணியையே தூக்கிப் போட்டுடுவியோன்னு பயந்துதான், உன் கண்ணுக்குள்ளே முழுக்க இருக்கேங்கறதை இப்ப ஒத்துக்கிட்டேன்" என்றாள் விஜி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

பொருள்:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, நான் விரும்பும் காதலிக்கு இடம் போதவில்லையே!

Read 'See Yourself Inside My Eyes' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Friday, October 9, 2020

1122. ஒரு காதலனின் ஆன்மீக அனுபவம்!

"என்ன புதுசா நெத்தியில குங்குமம் எல்லாம்? திடீர்னு பக்திமான் ஆயிட்டியா?"

"ஆமாம். திடீர்னுதான். அதுக்கு நீதான் காரணம்!" 

"நானா? நான் ரெண்டு நாளா ஊர்லயே இல்ல. நான் எப்படி உனக்கு பக்தி உணர்வை ஊட்டி இருக்க முடியும்?"

"நீ ஊர்ல இல்லாததுதான் காரணம்! ரெண்டு நாளா உன்னைப் பாக்க முடியாம, பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகித் தெருவில சுத்திக்கிட்டிருந்தேன். அப்ப, ஒரு கோவில்லேந்து ஒத்தர் உபன்யாசம் பண்ணிக்கிட்டிருந்தது என் காதில விழுந்தது. காதல்னு ஏதோ காதில விழுந்ததும், உள்ளே போய் உக்காந்து உபன்யாசம் கேட்டேன்."

"அட, முட்டாளே! பக்தர்கள் கடவுள் கிட்ட அன்பு செலுத்தறதைக் கூட சில சமயம் காதல்னு சொல்லுவாங்க. இது தெரியாம, ஏதோ எதிர்பாத்து ஏமாந்தியாக்கும்!"

"பாத்தியா? உனக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்குத் தெரியல! ஆனா, நான் ஒண்ணும் ஏமாந்து போகல."

"ஆமாம். தலை குப்புற விழுந்த, ஆனா மீசையில மண் ஒட்டல! காதல்னு நினைச்சுப் போய் ஏமாந்து உபன்யாசத்துக்குப் போனதை நியாயப்படுத்தறதுக்காக, பக்திமானாத் திரும்பி வந்துட்ட. அப்படித்தானே?"

"காதல்ங்கற வார்த்தையைக் கேட்டு உள்ள போய் உட்காந்து, அவரு பக்தியைப் பத்திப் பேசினதைக் கேட்டப்ப, முதல்ல கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்தது. ஆனா, ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் தங்களை நாயகிகளாகவும், கடவுளைத் தங்கள் நாயகராகவும் நினைச்சு பக்தி செலுத்தினாங்கன்னு புரிஞ்சதும், பக்தி காதலை மதிக்கிறப்ப, காதலிக்கிற நானும் பக்தியை மதிக்கணும்னுதான் இந்தக் குங்குமம் எல்லாம்!"

"கதை ரொம்ப நல்லா இருக்கு!"

"கதை இன்னும் முடியலை. நான் புரிஞ்சுக்கிட்ட முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லவே இல்லையே!"

"அது என்ன விஷயம்?"

"நாம எல்லாம் உடம்பு, கடவுள் உடம்புக்குள்ள இருக்கற உயிர்னு புரிஞ்சுக்கிட்டதாலதான், ஆழ்வார்கள் ஒரு கணம் கூடக் கடவுளை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாம, அவரோட சேரணும்னு துடிச்சாங்களாம். உயிர் இல்லாம உடம்பு இருக்க முடியாது இல்லையா?'

"சரி. அதுக்கு?"

"உன்னைப் பிரிஞ்சு ஒருநாள் கூட என்னால ஏன் இருக்க முடியலன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, நான் உடம்பு, நீ உயிர்!" 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு..

பொருள்:
எனக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையிலான உறவு, உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

Read 'The Spiritual Experience o A Man in Love?' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...