Sunday, September 25, 2022

1146. ஒரே நாள் உனை நான்....

"இன்னிக்கு சந்திர கிரகணம். எங்கேயும் வெளியில போகாதே!" என்றாள் அலர்மேல்மங்கை, தன் மகள் செல்வியிடம்.

"கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாது?" என்றாள் செல்வி.

"எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக் கேள்வி கேக்காதே! இந்த ராத்திரியில நீ எதுக்கு வெளியில போகணும்?"

"நான் எங்கேயும் போகப் போறதில்லம்மா! கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேக்கறேன்."

"ஏன்னா, நான் உங்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! அதுவும் உங்கப்பா வரத்துக்குள்ள பேசணும்!" என்றாள் அலர்மேல்மங்கை.

"பேசு! அதுக்கு ஏன் கிரகணத்தைக் காரணம் சொல்ற?" என்ற செல்வி, முற்றத்துக்குப் போய் வானத்தைப் பார்த்து விட்டு, "இப்பதான் கிரகணம் பிடிக்க ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. அதுக்குள்ள பாதி நிலாவை முழுங்கிடிச்சே இந்த ராகு!" என்றாள்.

"ஆமாம். இன்னும் அரை மணியில முழுசாப் புடிச்சுடும்னு நினைக்கிறேன்" என்ற அலர்மேல்மங்கை, மகளின் தோளைப் பிடித்து அழுத்தி, "இப்படி உக்காரு" என்றாள்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "செல்வி! நீ  பெருமாளைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும். உங்கப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கறேன். அதுவரைக்கும் அவனோட அதிகமாப் பழகாதேன்னு உங்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா?" என்றாள் அலர்மேல்மங்கை.

"ஆமாம்மா! நீ சொன்னபடிதானே நடந்துக்கிறேன்!"

"பொய் சொல்லாதேடி! நீ பெருமாளோட குளத்தங்கரையில உட்கார்ந்து பேசினதைப் பெரியநாயகம் பாத்திருக்கா. 'என்ன மங்கை, உன் பொண்ணு பெருமாளோட சுத்திக்கிட்டிருக்காளே!'ன்னு அவ எங்கிட்ட வந்து சொல்றா."

"ஏம்மா, பெருமாளைப் பாக்கப் போறேன்னு  உங்கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்?" என்றாள் செல்வி, சற்றே கோபத்துடன்.

"ஒரு நாளைக்கு எங்கிட்ட சொல்லிட்டுப் போன. சரி. அப்புறம், ஒருநாள் உங்களைக் கோவில்ல பார்த்ததா கோமளம் வந்து சொன்னாளே, அது?"

"அப்புறம்?"

"இன்னொரு நாள் நீங்க ஆத்தங்கரை ஓரமா நடந்து போனதைப் பார்த்ததா பர்வதம் வந்து சொன்னா!"

"இன்னும் யார் என்ன சொன்னாங்க? எல்லாத்தையும் சொல்லிடு!" என்றாள் செல்வி. இப்போது அவள் முகத்தில் கோபம் மறைந்து, ஒருவிதக் குறும்பு குடிகொண்டிருந்தது.

"ஏண்டி, நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன், ஒவ்வொருத்தர் சொன்னதையும் விவரிச்சுச் சொல்ல? ரெண்டு மூணு நாள் நீ பெருமாளோட சுத்தினதை மத்தவங்க பாத்திருக்காங்கன்னு சொல்றேன். அது போதாதா? அதுக்கு என்ன சொல்ற?" என்றாள் அலர்மேல்மங்கை, கோபத்துடன்.

செல்வி பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிற? சிரிக்கிற விஷயமா இது?"

"அம்மா, அம்மா! நான் பெருமாளை வெளியில சந்திச்சது ஒருநாள்தான். கோவிலுக்குப் போனோம். கொஞ்ச நேரம் குளத்தங்கரையில உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் ஆத்தங்கரை ஓரமா நடந்தோம். வேற எங்கேயாவது மரத்தடியில கூட உட்கார்ந்திருக்கலாம். இந்த ஒரு நாள் சந்திப்பை, ஏதோ பல நாள் நடந்த மாதிரி இந்த ஊர்க்காரங்க பேசறாங்கன்னா, நீயும் அதைக் கேட்டுட்டு என்னைக் கண்டிக்க வரியே! உன் பேச்சை மீறி நான் எப்பவுமே நடந்துக்க மாட்டேம்மா!" என்று சொல்லித் தாயின் முகத்தைத் தன் கைகளால் அன்புடன் அழுத்தினாள் செல்வி.

உடனே முற்றத்துக்கு ஓடி நிலவைப் பார்த்தவள், "அம்மா, இங்கே பாரேன்! இந்தப் பாம்பு நிலாவை முக்கால்வாசி முழுங்கிடுச்சு!" என்று கூவினாள், உற்சாகமாக.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

பொருள்:
காதலரைக் கண்டது ஒருநாள்தான், அதனால் உண்டாகிய அலரோ (ஊர்ப் பேச்சோ), திங்களைப் பாம்பு கொண்டது போல் எங்கும் பரந்து விட்டது.

Read 'The Lunar Eclipse' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, September 24, 2022

1145. பூங்குழலியின் போதை!

"இந்தக் குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி உங்கிட்ட எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டிருக்கேன்? நிறுத்த மாட்டேங்கறியே!" என்றாள் பூங்குழலி.

"முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், ஆனா முடியல. அந்த போதை வேண்டி இருக்கே!" என்றான் இளங்குமரன்.

"உனக்கு மட்டும் ஏன் போதை வேண்டி இருக்கு? எனக்கு வேண்டி இருக்கலையே!"

"எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேண்டித்தான் இருக்கும். உனக்கு போதை கொடுக்கற விஷயம் எதுன்னு எனக்குத் தெரியல!"

"உன்னால குடிப்பழக்கத்தை விட முடியலைங்கறதுக்காக எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேணும்னு சொல்லாதே!" என்ற பூங்குழலி, சற்றுத் தொலைவில் எதையோ பார்த்து விட்டு, "இங்கேயே ஒரு ஓரமா நில்லு. நான் இதோ வந்துடறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு பூங்குழலி திரும்பி வந்ததும், "எங்கே போயிட்டு வந்தே?" என்றான் இளங்குமரன்.

"அங்கே ரெண்டு பெண்கள் நம்மைப் பாத்து ஏதோ பேசற மாதிரி தெரிஞ்சது. பக்கத்தில போய் அவங்களுக்குப் பின்னால நின்னு, என்ன பேசறாங்கன்னு கேட்டுட்டு வந்தேன்."

"என்ன பேசினாங்க?"

"என்னத்தைப் பேசுவாங்க? நீயும் நானும் சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கமாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு சுத்தினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க."

"என்னைப் பத்தி ஏன் வம்பு பேசறீங்கன்னு அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா?"

"நான் எதுக்கு சண்டை போடணும்? அவங்க உண்மையைத்தானே பேசறாங்க?" என்றாள் பூங்குழலி, வெட்கம் கலந்த சிரிப்புடன்.

"நான் உன் பின்னால வந்து உன்னை கவனிச்சேன். அவங்க பேசினதைக் கேட்டப்ப, உன் முகத்தில தெரிஞ்ச ஆனந்தத்தை கவனிச்சேன்!" என்றான் இளங்குமரன், சிரித்தபடியே.

"இப்படிப்பட்ட திருட்டு வேலையெல்லாம் செய்யறியா நீ?" என்றாள் பூங்குழலி, பொய்க் கோபத்துடன்.

"நீ மட்டும் என்ன செய்யற? நம்மைப் பத்தி யார் வம்பு பேசறாங்கன்னு தேடிப் போய்ப் பாத்து, அவங்க பேசறதைக் கேட்டு ரசிச்சுக்கிட்டு வர. அதில உனக்கு ஒரு போதை கிடைக்குதுன்னு நினைக்கிறேன்."

"போதையும் இல்ல, எதுவும் இல்ல!"

"இல்லை, போதைதான். அந்தப் பேச்சைக் கேட்கும்போது உன் கண்ணு சொக்கறதைப் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குக் கள்ளு குடிக்கிறதில கிடைக்கிற போதை, உனக்கு மத்தவங்க நம்ம காதலைப் பத்திப் பேசறதைக் கேக்கறதில கிடைக்குது!" என்றான் இளங்குமரன்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

பொருள்:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல், எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Read 'What Makes Poonguzhali Intoxicated' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, June 30, 2022

1144. சிவகாமி செய்த உதவி!

"அப்புறம்?" என்றாள் மணிமேகலை.

"அப்புறம் என்ன? உட்புறம், வெளிப்புறம்னு எல்லாம் பேசிட்டமே!" என்றான் சந்திரன்.

"அப்படின்னா, நாம பேசறதுக்கு எதுவுமே இல்லையா? இப்பவே இப்படின்னா, கல்யாணம் ஆனப்பறம் எப்படி?"

"அப்ப சண்டை போட நிறைய விஷயம் இருக்கும். சண்டை, சமாதானம்னு வாழ்க்கை சுவாரசியமாப் போகும்!"

"அப்படின்னா, நம் காதல்ல சுவாரசியம் இல்லைங்கறியா?" என்றாள் மணிமேகலை, சற்றே கோபத்துடன்.

"அடக் கடவுளே! காதலிக்கும்போது, சண்டை வராம ஜாக்கிரதையா இருப்போம். ஏன்னா, சண்டை வந்தா காதல் முறிஞ்சுடுமோங்கற பயம்!  கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அந்த பயம் இருக்காது இல்ல, அதைச் சொன்னேன்!" என்றான் சந்திரன், சமாதானமாக.

"நம்ம காதல்ல சுவாரசியம் இல்லேங்கறது உண்மைதான். பொதுவா, காதலுக்குக் கொஞ்சமாவது எதிர்ப்பு இருக்கும். ஆனா, நம் விஷயத்தில அது இல்ல. உனக்குப் பெற்றோர்கள் இல்ல. எங்க அப்பா அம்மாகிட்ட என் காதலைப் பத்தி இன்னும் சொல்லனேன்னாலும், அவங்க என் விருப்பத்தை ஏத்துப்பாங்க. ஏன்னா, அவங்களே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான். அதனால, நம் காதல் ஒரு பிரச்னையும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. ஏதாவது பிரச்னை வந்தாதானே, ஒரு சுவாரசியம் இருக்கும்?"  

அதற்குப் பிறகு, ஐந்து நாட்கள் அவர்கள் சந்திக்கவில்லை. அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்கு தினமும் சந்திரன் வந்து காத்திருந்து விட்டு ஏமாந்து திரும்பிப் போனான்.

ஆறாவது நாள் மணிமேகலை வந்தபோது, அவள் முகம் சோர்ந்திருந்தது.

"என்ன ஆச்சு, மணிமேகலை? உடம்பு சரியல்லையா?" என்றான் சந்திரன்.

"ஏன்யா, ஊரில நடக்கறது எதுவுமே உனக்குத் தெரியாதா?" என்றாள் மணிமேகலை, கோபத்துடன்.

"என்ன நடக்குது, ஊர்ல?"

"உன்னையும், என்னையும் பத்தி சில பேர் கண்டபடி பேசிக்கறாங்களே, அது உன் காதில விழலியா?"

"என்ன பேசிக்கிறாங்க?"

"நீயும் நானும் பொது இடத்தில கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துக்கிட்டமாம்!"

"அடிப்பாவி! உன்னை நான் தொட்டது கூட இல்லையே! யார் இப்படியெல்லாம் சொன்னது?"

"நம் ஊர்ல சிவகாமி அத்தைன்னு இருக்காங்க. வம்பு பேசறதுதான் அவங்க முழு நேர வேலை. அன்னிக்கு நாம பேசிக்கிட்டிருந்ததைப் பாத்துட்டாங்க போலருக்கு. நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசிக்கிட்டிருந்ததைக் கண்ணும் காதும் வச்சு, கட்டிப் பிடிச்சுக்கிட்டோம், முத்தம் கொடுத்துக்கிட்டோம்னெல்லாம் நிறைய பேர்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அப்புறம்?"

"எங்க அப்பா அம்மா காதுக்கும் விஷயம் போச்சு. அவங்க என்னைக் கேட்டாங்க. நான் உண்மையைச் சொன்னேன். அந்த சந்திரனை சீக்கிரமே வந்து பெண் கேக்கச் சொல்லுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத்தான், வெளியில வந்தாலே, என்னைப் பாக்கற ஊர்க்காரங்க என்ன நினைச்சுப்பங்களோன்னு பயமா இருந்தது. அதனாலதான், நாலஞ்சு நாளா உன்னைப் பார்க்க வல்ல!"

"அப்பா! நம் காதல்ல சுவாரசியம் இல்லையேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம் இல்ல, அந்தக் கவலையை அந்த சிவகாமி அத்தை தீர்த்து வச்சுட்டாங்க. அவங்களைப் போய்ப் பார்த்து நன்றி சொல்லிட்டு வரலாம்!" என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த மணிமேகலை, பிறகு தானும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால், அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போயிருக்கும்.

Read 'Sivakami Aunty' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 13, 2022

1143. உள்ளூர் கிசுகிசு!

"நம்ம ஊர்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகை வருதே, தெரியுமா உனக்கு?" என்றான் முரளி, அவன் நண்பன் கல்யாணசுந்தரத்திடம்.

"தெரியாதே! என்ன பத்திரிகை?" என்றான் கல்யாணசுந்தரம்.

"உள்ளூர் கிசுகிசு!"

"பேரே ஒரு மாதிரி இருக்கே! என்ன பத்திரிகை இது?"

"பேர்ல இருக்கற மாதிரிதான்! ஊர்ல நடக்கிற ரகசியமான விஷயங்கள், வதந்திகள் போன்ற விஷயங்களை வெளியிடுவாங்க!"

"எப்படி இதை நடத்தறாங்க, எப்படி சர்க்குலேட் பண்றாங்க?"

"வாரா வாரம் பத்து பக்கம் கையால எழுதி வெளியிடுவாங்க. இதைத் தொடர்ந்து படிக்கிறவங்க இருக்காங்க, புதுசா சேருகிற வாசகர்களும் இருக்காங்க. ஒவ்வொத்தரும் தாங்க படிச்சப்புறம், வேற யார்கிட்டயாவது கொடுப்பாங்க. அப்படித்தான் சர்க்குலேஷன் ஆகுது."

"அது சரி. அவங்களுக்கு எப்படி விஷயங்கள் கிடைக்கும்? அதோட, இப்படியெலாம் எழுதறது அவதூறு இல்லையா?"

"செய்திகளை எப்படிச் சேகரிக்கறாங்கங்கறது எனக்குத் தெரியாது. நீயும் நானும் பேசறதை ஒட்டுக் கேட்டு, அதைக் கூட "உள்ளூர் கிசுகிசு பற்றி நண்பர்கள் உரையாடல்"னு செய்தி போடலாம்! யாரோட பெயரையும் நேரடியா வெளியிட மாட்டாங்க. ஆனா, படிக்கிறவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எழுதுவாங்க. உதாரணமா, 'சிவபெருமானின் இளைய குமாரன் தெருவில் வசிக்கும் தசரதகுமாரரின் மனைவி, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்'னு எழுதினா, சுப்பிரமணியம் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவின்னு எல்லாரும் புரிஞ்சுப்பாங்களே! அவங்க உண்மையாகவே ஊருக்குப் போயிருந்தா, செய்தி உறுதியான மாதிரி இருக்குமே!"

"அடப்பாவிங்களா! அப்ப, அந்த ராமசாமி அதைப் படிச்சுட்டுக் கோவிச்சுக்க மாட்டாரா?"

"அப்படிக் கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டா, அவர் தன்னையே காட்டிக் கொடுத்துக்கிட்ட மாதிரிதானே இருக்கும்? அதனால, திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருப்பாரு. அதோட, இதை வெளியிடறவங்க யாருன்னு தெரியாதபோது, யார்கிட்ட போய் சண்டை போட முடியும்?"

"இது ரொம்ப அநியாயமா இருக்கே! என்னைப் பத்தி ஏதாவது எழுதினா நான் அந்தப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு போலீசுக்குப் போயிடுவேன். அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க!"

"அப்படின்னா, நீ போலீசுக்குப் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!"

"என்னடா சொல்றே?" என்றான் கல்யாணசுந்தரம்.

"இதோ பார்!" என்ற முரளி, தன் கையில் வைத்திருந்த 'உள்ளூர் கிசுகிசு' இதழைப் பிரித்து, அதிலிருந்த செய்தியைப் படித்தான்.

"மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் திருமண அழகர், தனியார் நிறுவனத்தில் டைப் அடிக்கும் பச்சைக்கல் நங்கையைத் திருட்டுத்தனமாகக் காதலிக்கிறார். பச்சைக்கல்லின் தந்தை மலையைப் போல் கடினமானவர் என்பதால், அவரை அண்ணாந்து பார்த்துத் தன் காதலைச் சொல்ல அழகர் அஞ்சுகிறார்!" என்று படித்த முரளி, "இன்னும் கொஞ்சம் விவரங்கள் கீழே இருக்கு!" என்றான்.

"அடப்பாவி! கல்யாணசுந்தரம், மரகதம், அவ அப்பா அண்ணாமலை எல்லார் பெயரும் சுலபமாப் புரியற மாதிரி எழுதி இருக்காங்களே!" என்றான் கல்யாணசுந்தரம்.

"இந்தா, பத்திரிகை! போலீசுக்குப் போறதுன்னா போ!" என்றான் முரளி, சவால் விடுவது போல்.

கல்யாணசுந்தரம் தயக்கத்துடன் 'உள்ளூர் கிசுகிசு'வைக் கையில் வாங்கிக் கொண்டான்.

அடுத்த நாள் கல்யாணசுந்தரத்தைப் பார்க்க வந்த முரளி, "என்ன, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனியா?" என்றான்.

"இல்லை!"

"ஏன் போகல?"

"இந்தப் பத்திரிகை வந்து ஒரு வாரம் ஆயிடுச்சு. இதை நிறைய பேர் படிச்சிருப்பாங்க. நான்தான் இதைக் கடைசியாப் பாத்திருப்பேன் போல இருக்கு!"

"சரி, என்ன செய்யப் போற?"

"இந்தப் பத்திரிகையை வெளியிடறவங்க யாருன்னு தெரிஞ்சா, அவங்களைப் பார்த்து..."

"கழுத்தை நெரிக்கப் போறியா?"

"இல்லை, நன்றி சொல்லப் போறேன்!"

"எதுக்கு?"

"அவங்க எழுதினபடி, மரகதத்தோட அப்பாகிட்ட என் காதலைச் சொல்ல நான் பயந்துகிட்டுதான் இருந்தேன். இந்த 'உள்ளூர் கிசுகிசு' மூலமா அவர் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, மரகதத்துக்கிட்ட கேட்டிருக்காரு. மரகதம் எங்க காதலைப் பத்தி சொன்னதும், எங்க அப்பா அம்மாவை அழைச்சுக்கிட்டு பெண் கேக்க என்னை வரச் சொல்லி இருக்காரு. நேத்திக்கு சாயந்திரம்தான் மரகதம் எங்கிட்ட விஷயத்தைச் சொன்னா. அதனால, என் காதல் நிறைவேற உதவி செய்த 'உள்ளூர் கிசுகிசு'வுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?" என்றான் கல்யாண சுந்தரம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

பொருள்:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணம் செய்து கொள்ள) முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

Read 'Local Gossip' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, April 10, 2022

1142. பவளக்கொடி!

அந்த நவரத்தினக் கடையில்தான், அஜன் அவளை முதலில் சந்தித்தான்.

அஜன் ஒரு நவரத்தினக் கடையில் சில காலம் வேலை செய்ததால், நவரத்தினங்களை நன்றாக இனம் கண்டு, அவற்றின் தரத்தை அறியும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தான்.

நவரத்தினக் கடையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சொந்தத் தொழில் செய்ய விருப்பம் கொண்டதால், அஜன் தன் வேலையை விட்டு விட்டு, சிறிதளவு முதல் போட்டு தானிய வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். 

தானிய வியாபாரத்தில் வருமானம் குறைவாகத்தான் வந்தது என்றாலும், அவன் எளிய வாழ்க்கைக்கு அது போதுமானதாக இருந்தது. திருமணம் செய்து கொண்டால் கூட, தான், தன் தாய், தன் மனைவி, தனக்குப் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆகியோரைக் காப்பாற்றும் அளவுக்குத் தன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததால், தன் தாயின் விருப்பப்படி அவன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான்.

அவன் தாய் தன் மகனுக்கு ஏற்ற சிறந்த மனைவியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

தன் கடைக்கு ஒரு முக்கிய வாடிக்கையாளர் வர இருப்பதாகவும், அவர் வரும் நாளன்று அஜன் தன் கடைக்கு வந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்றும் அவன் பழைய முதலாளி தன் ஊழியர் ஒருவன் மூலம் அவனுக்குச் செய்தி அனுப்பி இருந்தார். இது போன்ற உதவிகளுக்காக அவ்வப்போது அவர் அவனை அழைப்பார். அவன் பணிக்கு ஈடாக ஒரு சிறிய தொகையை அவனுக்கு அளிப்பார்.

பழைய முதலாளி கேட்டுக் கொண்டபடி, மறுநாள் அஜன் அவருடைய கடைக்குச் சென்றிருந்தான்.

அங்குதான் அவன் அவளைப் பார்த்தான்.

நவரத்தினங்கள் வாங்குவதற்காக வந்திருந்த அந்தப் பெண் பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது அவள் நடை, உடை, பேச்சு, தோரணை அனைத்திலும் வெளிப்பட்டது. கடை முதலாளி உட்பட யாரிடம் அவள் பேசினாலும், அதில் ஒரு அதிகார தொனி இருந்தது.

"அம்மணி! இவன் நவரத்தினங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். உங்களுக்கு வேண்டிய பவளங்களைத் தேர்ந்தெடுக்க இவன் உதவுவான்" என்று கடை முதலாளி அவளுக்கு அஜனை அறிமுகம் செய்து வைத்தபோது, முதலில் அவனை அலட்சியமாகப் பார்த்த அந்தப் பெண், சற்று நேரத்திலேயே பவளங்களின் வகை, தன்மை, மதிப்பு ஆகியவை பற்றி அவன் கூறிய பல விஷயங்களைக் கேட்டு பிரமிப்படைந்து, அவனைச் சற்று மதிப்புடனேயே பார்க்கத் தொடங்கினாள்.

இறுதியில் சில பவளங்களை வாங்கிக் கொண்டு அவள் சென்றபோது, கடை முதலாளி மகிழ்ச்சியுடன் அஜனுக்கு நன்றி தெரிவித்தார். 

"யார் இந்தப் பெண்மணி? இவ்வளவு அதிகார தோரணையுடன் இருக்கிறார்களே!" என்றான் அஜன்.

"இருக்க மாட்டார்களா? அவர் தந்தை அரண்மனையில் ஒரு பெரிய அதிகாரியாயிற்றே!" என்றார் கடை முதலாளி.

"அவர்கள் பெயர் என்ன?"

"அது எனக்குத் தெரியாது. பவளம் வாங்கியதால் பவளக்கொடி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளேன்!" என்றார் அவன் பழைய முதலாளி, சிரிப்புடன்.

சில நாட்களுக்குப் பிறகு, 'பவளக்கொடி' அஜனைத் தன் விட்டுக்கு வரச் சொல்லி இருப்பதாகக் கடை முதலாளியிடமிருந்து தகவல் வந்தது.

ஒருவேளை, தன் யோசனைப்படி அவள் வாங்கிய பவளங்கள் அவளுக்குப் பிடிக்காமல் போய், தவறான ஆலோசனை கூறியதற்காகத் தன்னைக் கடிந்து கொள்வதற்காக அழைத்திருப்பாளோ என்ற அச்சத்துடனேயே அஜன் அவள் வீட்டுக்குப் போனான்.

ஆனால் அஜன் அவள் வீட்டுக்குச் சென்றதும், அவனுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அவன் மறுத்தும் கேட்காமல், அவனுக்கு உணவளித்தார்கள். 

"உங்களுக்கு உணவளித்த பிறகுதான் தன்னிடம் அழைத்து வர வேண்டும் என்பது சின்னம்மாவின் உத்தரவு!" என்றாள் அவனுக்கு உணவளித்த அந்தப் பணிப்பெண்.

உணவருந்திய பின், 'சின்னம்மா'வின் அறைக்கு அஜன் அழைத்துச் செல்லப்பட்டான்.

"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவனை உற்சாகமாக வரவேற்ற 'பவளக்கொடி,' "நவரத்தினங்களைப் பற்றி நன்கறிந்த எத்தனையோ விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களைப் போன்ற துல்லியமான அறிவுள்ளவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் வேறு சில நவரத்தினங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்த்து அவற்றின் தரம், மதிப்பு பற்றி எனக்கு ஆலோசனை கூற வேண்டும். நான் அவ்வபோது நவரத்தினங்களை வாங்கிக் கொண்டும், விற்றுக் கொண்டும் இருப்பேன். அதிக மதிப்புள்ள கற்களை விற்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உங்கள் உதவி வேண்டும்!" என்றாள்.

அவள் எடுத்துப் போட்ட நவரத்தினங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து ஆராய்ந்து, அவற்றின் மதிப்பு பற்றி அவளிடம் விளக்கினான் அஜன்.

அஜன் கிளம்பியபோது, அவனுடைய சேவைக்குப் பரிசாக அவள் அளித்த தங்க நாணயங்களை வாங்க மறுத்த அவன், "உங்களைப் போன்ற ஒரு உயர்ந்த நபரின் தொடர்பு கிடைத்ததே எனக்குப் பெரும் பேறு!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

பவளக்கொடி பற்றிய நினைவு அஜன் மனதை எப்போதும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. 

'எப்படிப்பட்ட பெண்! என்ன ஒரு கம்பீரம், மலர்ச்சி, சிரிப்பு! அவள் என்னை நேரே பார்த்தபோதெல்லாம் என் உடலில் புளகாங்கிதம் ஏற்பட்டதே! அது ஏன்? பொதுவாகப் பெண்களின் கண்கள் குவளை மலர் போல் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். அவற்றையெல்லாம் படித்தால் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அவளுடைய கண், மலர் போல்தானே இருக்கிறது! 

'அவளை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? சே! என்ன ஒரு முட்டாள்தனம்! அவள் எங்கே, நான் எங்கே! அவள் வீட்டில் ஒரு வேலைக்காரனாக இருக்கத்தான் நான் தகுதி பெற்றவன். அப்படி ஒரு வேலைக்காரனாக இருந்து, அவளால் அதிகாரம் செய்யப்பட்டு, அவளுடைய மலர்க் கண்களைப் பார்த்துக் கொண்டு, அவள் கம்பீரத்தைப் பக்கத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தாலே போதுமே! சே! என்ன ஒரு சிந்தனை இது!'

ஆனால், இது போன்ற எண்ண ஓட்டங்கள் தன் மனதில் அடிக்கடி ஏற்படுவதை அஜனால் தவிர்க்க முடியவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு, 'பவளக்கொடி' மீண்டும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.

இந்த முறை அவள் சற்றுக் கோபமாக இருந்தாள்.

"என்ன ஐயா இது? என் ரத்தினங்களைப் பார்த்து மதிப்பிடத்தானே உங்களை அழைத்தேன்! ஆனால், ஊரில் உங்களையும் என்னையும் இணைத்துப் பேசுகிறார்களே, தெரியுமா?" என்றாள் அவள், கோபத்துடன்.

அஜனுக்கும் இது போன்ற பேச்சுக்கள் காதில் விழுந்தாலும், அவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இப்போது அவளே தன்னைக் கூப்பிட்டுப் பேசியதும், விஷயம் விபரீதமாகப் போய்விட்டதோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.

"இல்லை, அம்மணி! இதில் என் தவறு எதுவும் இல்லை."

"என்ன, அம்மணியா? திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை அம்மணி என்றா கூப்பிடுவார்கள்? என் பெயர் பரிவாதினி!" என்றாள் பவளக்கொடி- இல்லை பரிவாதினி - சிரித்துக் கொண்டே!

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆமாம்! ஊரார் பேச்சு என் காதில் விழுந்ததும், முதலில் எனக்குக் கோபம் வந்தது. அப்புறம் யோசித்துப் பார்த்தபோதுதான், ஊரார் பேச்சு என் உள்மனதில் இருந்த எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்று தோன்றியது. உங்களுக்கு இந்தப் பரிவாதினியைப் பிடித்திருந்தால் சொல்லுங்கள். என் தந்தையிடம் பேசி, நம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறேன்."

சொல்லி முடித்ததும், தன்னை அறியாமலே தலையைக் குனிந்து கொண்டாள் பரிவாதினி.

அதிகார தோரணை கொண்ட கம்பீரமான பவளக்கொடி, பரிவாதினியாக நாணத்துடன் தலை குனிந்து நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் அஜன்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

பொருள்:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் அவளை எளியவளாகக் கருதி அலர் கூறி (வம்பு பேசி) எமக்கு உதவி செய்தனர்.

Read 'Miss Pearl' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, March 26, 2022

1141. ஊர்க்காரர்கள் செய்த உதவி!

கடைத்தெருவிலிருந்து வாங்கிய பொருட்கள், காய்கறிகள் கொண்ட மூன்று நான்கு பைகளைச் சுமந்து கொண்டு, ஒரு வித்தைக்காரரின் லாகவத்துடன் பைகளை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு அவ்வப்போது  மாற்றிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைத் தன் வீட்டு வாசலிலிருந்து சற்று வியப்புடனும், நிறைய ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான் முத்தையன்.

அப்போது ஒரு மாட்டு வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணுக்குப் பின்புறமாக வந்தது. 

அந்தப் பெண் தனக்குப் பின்னால் மாட்டு வண்டி வருவதை உணராதவளாகத் தன் பைகளைச் சமாளித்துச் சுமந்து நடப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள், 

வண்டிக்காரர் மாடுகளை இழுத்துப் பிடித்து வண்டியை நிறுத்த முயன்றாலும், அந்தப் பெண்ணின் அருகில் வருவதற்குள் மாடுகள் நின்று விடும் என்றோ, அல்லது அந்தப் பெண்ணே வண்டியை கவனித்துப் பாதுகாப்பாக  ஒதுங்குவாள் என்றோ முத்தையனுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, அவன் விரைந்து ஓடி, அந்தப் பெண்ணைப் பிடித்து ஓரமாக இழுத்தான். இழுக்கும்போது அவள் கையிலிருந்த பைகள் கீழே விழுந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

ஓரமாக இழுக்கப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து, என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாட்டு வண்டி தன்னைத் தாண்டிச் செல்வதையும், வண்டிக்காரர் தன்னைக் கைகாட்டித் திட்டிக் கொண்டே செல்வதையும் கவனித்து, நடந்ததை உணர்ந்து கொண்டாள்.

தன்னைக் காப்பாற்றியது யார் என்று திரும்பிப் பார்த்தபோதுதான், அவன் தன்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள் அவள். 

நன்றி சொல்வது போல் அவனைப் பார்த்து விட்டு அவள் கிளம்ப யத்தனித்தபோது, "உன்னால தூக்க முடியல போலருக்கே! நான் வேணும்னா ரெண்டு பையை வாங்கிக்கறேன், உன் விடு வரையிலும் வந்து விட்டுட்டுப் போறேன்" என்றான் முத்தையன். 

"யோவ்! யாராவது பாத்து ஏதாவது தப்பா நினைச்சுப்பாங்களோன்னு நான் ஏற்கெனவே பயந்துக்கிட்டிருக்கேன். நீ என்னோட வீடு வரைக்கும் நடந்து வரேங்கற! இந்த ஊர்க்காரங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா? வம்பு பேசறத்துக்கே பொறந்தவங்க இந்த ஊர்க்காரங்க!" என்று சொல்லியபடியே, விருட்டென்று கிளம்பினாள் அவள்.

அந்தப் பெண் பயந்தது உண்மையாகி விட்டது!

"நான் வண்டி ஓட்டிக்கிட்டு வேகமா வரப்ப, ஒரு பொண்ணு ஏகப்பட்ட மூட்டைகளைத் தூக்கிக்கிட்டு வண்டிக்கு முன்னால போய்க்கிட்டிருந்தா. வண்டி அவ மேல இடிச்சுடுமேன்னு பயந்தேன். நல்லவேளை, அவளோட காதலன் வந்து அவளைக் காப்பாத்திட்டான், காப்பாத்தறப்ப கூட, அவளை  எப்படிக் கட்டிப் புடிச்சான் தெரியுமா?" என்று வண்டிக்காரன் யாரிடமோ சொல்ல, செய்தி ஊர் முழுவதும் பரவி விட்டது.

சம்பவத்தைப் பார்த்தவர்களில், அந்தப் பெண்ணை அறிந்த ஒருவர் அவள் பெயர் அன்னபூரணி என்ற விவரத்தையும், முத்தையனை அறிந்த ஒருவர், அந்தக் காதலன் முத்தையன்தான் என்ற விவரத்தையும் அந்தச் செய்தியில் கோர்த்து விட, முத்தையன் - அன்னபூரணி காதல் விவகாரம் ஊர் முழுவதும் பேசப்பட்டது.

"ஏண்டா! அந்தப் பொண்ணு அன்னபூரணியை நீ காதலிக்கிறியாமே!" என்று ஒரு சிலர் அவனிடம் கேட்டபோதுதான், அவள் பெயர் அன்னபூரணி என்பதே முத்தையனுக்குத் தெரிய வந்தது!

"நீதான் முத்தையனா?" என்றாள் அந்தப் பெண்.

"ஆமாம், நீ யாரு?" என்றான் முத்தையன்.

"நான் அன்னபூரணியோட தோழி கண்ணம்மா. நீ செஞ்ச வேலையைப் பாத்தியா? இப்ப இந்த ஊர் முழுக்க உன்னையும் அன்னபூரணியையும் பத்தித் தப்பாப் பேசுது!" என்றாள் கண்ணம்மா.

"நான் என்ன செஞ்சேன்? உன் தோழி மேல வண்டி வந்து மோதிடாம அவளைக் காப்பாத்தினேன். அது தப்பா?"

"உங்களைப் பத்தி ஊர்ல தப்பாப் பேசறாங்களே, அதுக்கு என்ன செய்யப் போற?"

"அவங்க பேசறது எனக்கு நல்லதாத்தான் படுது!"

"என்னய்யா சொல்ற நீ?" என்றாள் கண்ணம்மா.

"உன் தோழி என்ன நினைக்கறான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அன்னிக்கு அவளை நான் காப்பத்தினப்பவே, அவ மேல எனக்கு ஒரு விருப்பம் வந்துடுச்சு. அவளை மறுபடி பாத்து, அவ மனசைத் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா பயமாவும் இருந்தது. என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் ஊர்க்காரங்க இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, என் மனசில இருக்கறதை ஊர்க்காரங்க வெளிப்படுத்தினதால, என் காதல் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சு. உன் தோழிக்கு விருப்பம்னா சொல்லு. அவங்க அப்பாகிட்ட வந்து நான் பெண் கேக்கறேன்!" என்றான் முத்தையன்.

"இனிமே என்னடி? மறைஞ்சிருந்தது போதும். வெளியில வா!" என்று கண்ணம்மா சற்று உரத்த கூரலில் கூறியதும், அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து, நிரம்பி வழிந்த நாணத்துடனும், ததும்பி வழிந்த புன்னகையுடனும், தலையைக் குனிந்து கொண்டே வெளிப்பட்டாள் அன்னபூரணி. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

பொருள்:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான், அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறிய மாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

Read 'Welcome Gossip' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, January 22, 2022

1140. குமுதினிக்கு வந்த நோய்!

என் எதிர் வீட்டில் வசிக்கும் குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலரும் கூறினர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை.

குமுதினி எனக்கு நெருக்கமானவள் ஒன்றும் இல்லை. எதிர்வீட்டில் வசிப்பதால், இருவரும் சில சமயம் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி நேரும். அப்போதெல்லாம் அறிமுகமானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வகையில், இருவரும் வலுவில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்சிரிப்பைப் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். 

குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகச் சிலர் நினைப்பதற்குக் காரணம், சில நாட்களாக அவள் நடவடிக்கைகளில் காணப்பட்ட சில விசித்திரங்கள்தான்.

சாலையில் நடந்து போகும்போது, அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போகிறாளாம்.

அவள் வீட்டில் இருக்கும்போது, சில சமயம் ஒரு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்வாள். அறைக்குள் அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது போல் குரல் கேட்கும். சில சமயம் கோபமாகக் கத்துவாள், சில சமயம் கெஞ்சுவாள். சில சமயம் அறைக்குள்ளேயே அவள் ஓடுவது போல் காலடிச் சத்தம் பெரிதாகக் கேட்கும். 

ஒருமுறை, "எங்கே, என்னைப் பிடித்து விடு, பார்க்கலாம்" என்று சிரித்துக் கொண்டே உரத்த குரலில் கூவி விட்டு, அறைக்குள்ளேயே அவள் ஓடும் சத்தம் கேட்டு, அவள் அம்மா கதவைத் தட்டி இருக்கிறாள். 

கதவைத் தட்டியதும், சத்தமெல்லாம் நின்று அமைதியாகி விட்டது. இரண்டு நிமிடம் கழித்துக் கlவைத் திறந்த குமுதினி, ஒன்றுமே நடக்காதது போல், "என்னம்மா!" என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறாள்.

"என்ன சத்தம்? யாரோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்?" என்று அவள் அம்மா கேட்டதற்கு, "அறைக்குள் எப்படியம்மா ஓடிப் பிடித்து விளையாட முடியும்? அதோடு இங்கே யாரும் இல்லையே!" என்று பதில் சொல்லி இருக்கிறாள் குமுதினி.

குமுதினியின் அம்மா இதைப் பற்றிப் பலரிடமும் சொல்லிப் புலம்பி இருக்கிறாள். அதனால் குமுதினியைப் பார்த்தாலே, பலரும் அவளைக் கேலி செய்வது போல் சிரிக்கிறார்கள்.

ஆனால், நான் அப்படிச் சிரிப்பதில்லை. குமுதினிக்கு என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியும். 

குமுதினிக்கு வந்திருப்பது காதல் என்னும் நோய். இந்த நோய் வந்தவர்கள் ஆரம்பத்தில் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அது பல விதங்களில் வெளிப்பட்டு, வெளி உலகத்துக்கு அவர்களைப் பைத்தியக்காரர்களாகக் காட்டி அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க வைக்கும். 

காதல் விஷயம் பெற்றோருக்குத் தெரிந்து, அதை அவர்கள் அங்கீகரித்தால்தான் அந்த நோய் நீங்கும்.

என் விஷயத்தில் அப்படித்தானே நடந்தது? அப்போது இந்தக் குமுதினியும் என்னைப் பார்த்துச் சிரித்தவள்தானே!

இப்போது மற்றவர்கள் குமுதினியைப் பார்த்துச் சிரிக்கும்போது, நான் மட்டும் சிரிக்காமல் இருக்கும்போது, குமுதினி என்னைப் பார்க்கும் பார்வையில், 'அன்று உன்னைப் பார்த்துச் சிரித்தேனே! நீ அனுபவித்தவற்றை நான் அனுபவிக்கும்போதுதானே, நான் எவ்வளவு அறிவற்றவளாக இருந்திருக்கிறேன் என்று புரிகிறது!' என்ற அவள் எண்ண ஓட்டம் வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள்:
இந்த அறிவற்ற மக்கள் என் கண்ணுக்கெதிரிலேயே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

Read 'What Ails Kumudhini' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, January 20, 2022

1139. குதிரை வீரன்!

தமயந்தி தன் தாயுடன் அங்காடிக்குச் சென்றபோது, தன் தாய் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா, பாகற்காய் வாங்கலியா?" என்றாள் தமயந்தி.

அவளை வியப்புடன் பார்த்த அவள் தாய், "உனக்குத்தான் பாகற்காய் பிடிக்காதே? அப்புறம் ஏன் பாகற்காய் வாங்கலியான்னு கேக்கறே?" என்றாள்.

"இல்லை. அவருக்குப் பிடிக்குமே, அதனால, நானும் சாப்பிட்டுப் பழக்கிக்கலாம்னு பார்த்தேன்."

"அவருக்கா? எவருக்கு?" என்றாள் அவள் தாய், அவளை ஏறிட்டுப் பார்த்து.

சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்ட தமயந்தி, "அவருக்குன்னு சொல்லல அம்மா! அப்பாவுக்குன்னு சொன்னேன்" என்று சமாளிக்க முயன்றாள்.

"ஏண்டி, அப்பாவுக்கும்தான் பாகற்காய் பிடிக்காதே? உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதுங்கறதாலதான், நான் பாகற்காய் வாங்கறதையே விட்டுட்டேன்" என்றாள் அவள் அம்மா.

இன்னொரு முறை, தமயந்தி தன் தோழிகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு வீரன் குதிரை மீது சென்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "இந்தக் குதிரை அவரோட குதிரைதானே? ஆனா, வேற யாரோ இல்ல அது மேல உக்காந்து போறாங்க?" என்றாள்.

"அவரோட குதிரைன்னா, யாரைச் சொல்ற?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அதாண்டி, அன்னிக்கு நாம குளத்தில குளிச்சுக்கிட்டிருக்கறப்ப, குதிரைக்குத் தண்ணி காட்ட ஒத்தர் வந்தாரே? நாம குளிச்சுக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு, குதிரையைத் தண்ணி குடிக்க வச்சுட்டு, அவரு தள்ளிப் போய் நின்னுக்கிட்டாரே! எவ்வளவு கண்ணியமானவர்! அப்பதானே நான் அவரை முதல்ல பார்த்தேன். அப்புறம், கோவில்ல கூடப் பார்த்துப் பேசினேனே!" என்றாள் தமயந்தி.

தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்னடி உளர்ற? நாம குளத்தில குளிச்ச நாட்கள்ள அப்படி எதுவும் நடக்கவே இல்லையே!" என்றாள் இன்னொரு தோழி.

"ஓ! அப்படியா? அப்ப வேற தோழிகளோட குளிச்சபோது நடந்திருக்கும்."

"எங்களை விட்டா வேற தோழிகள் யாருடி உனக்கு?" என்றாள் தோழி.

"அப்படின்னா, என் அம்மாவோட குளிச்சுக்கிட்டிருந்தப்ப நடந்திருக்கும்!" என்றாள் தமயந்தி, தான் ஏன் இப்படி உளறுகிறோம் என்று நினைத்துக் கொண்டே.

"விடுங்கடி. இவளுக்கு ஏதோ ஆயிடுச்சு! இவ அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே இவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்!" என்று ஒரு தோழி கூற, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

"அப்புறம், எல்லாக் குதிரையும் பாக்கறத்துக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால உண்மையில குதிரையோட வந்த ஒரு ஆளை நீ சந்திச்சிருந்தாலும், இது வேற குதிரையாக் கூட இருக்கலாம். அதனால, இதை நினைச்சுக் குழப்பிக்காதே!" என்றாள் இன்னொரு தோழி.

அன்று தமயந்தி தன் காதலனைச் சந்தித்தபோது, "என் காதலைப் பத்தி நான் யார்கிட்டேயும் சொல்லல. ஆனா, என் மனசில நான் பூட்டி வச்சிருக்கற காதல் எனக்குத் தெரியாமலே அப்பப்ப வெளியே வந்து, தன்னை எல்லோருக்கும் வெளிக்காட்டிக்கிட்டிருக்கு. அதனால, சீக்கிரமாவே என் வீட்டுக்கு வந்து என்னைப் பெண் கேளுங்க!" என்றாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்:
நான் அமைதியாக இருப்பதால் என் காதலை எல்லோரும் அறியவில்லை என்று கருதி, என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Read 'The Man Riding A Horse' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, November 28, 2021

1138. தளபதியின் தடுமாற்றம்!

"இந்திரகுமாரி! என்ன ஒரு பெயர்!" என்றான் படைத்தலைவன் கார்த்தவீரியன்.

"பெயரைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், படைத்தலைவரே! என் பெயர்தான் இந்திரகுமாரி. ஆனால் என் தந்தை இந்திரர் அல்ல, உங்களைப் போல் போர்க்கலைகள் தெரிந்த தந்திரரும் அல்ல. சிறு இயந்திரங்களை வைத்துக் கொண்டு படைக்கலன்களைத் தயாரிக்கும் ஒரு எந்திரர், அவ்வளவுதான்!" என்றாள் இந்தரகுமாரி.

"உன் பேச்சைக் கேட்கும்போது, உன் தந்தை தமிழில் தேர்ந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. படைப்புக் கலையிலும் தேர்ந்தவர்! போர்க்களத்தில் எனக்குத் துணை செய்ய இரும்பாலான படைக்கலன்களை உருவாக்குவது போல், வாழ்க்கையில் எனக்குத் துணை நிற்க, பொன்னாலான இந்தக் கலத்தையும் அல்லவா உருவாக்கி இருக்கிறார்!"

கார்த்தவீரியனின் சொற்கள் இந்தரகுமாரிக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தின.

"என் தந்தையிடம் எப்போது இந்தப் பொற்கலத்தைக் கேட்டுப் பெறப் போகிறீர்கள்?"

"நான் ஒரு படைத்தலைவனாக இருந்தாலும், இது போன்ற விஷயங்களில் அதிகத் தயக்கம் உள்ளவன். உன் தந்தையிடம் பேசக் கொஞ்சம் தைரியத்தைத் திரட்டிக் கொள்ள சிறிது அவகாசம் கொடு."

"போருக்குப் போ என்று அரசர் உத்தரவிட்டால், கணத்தில் சைனியத்தைத் திரட்டும் ஆற்றல் பெற்ற தளபதி, தைரியத்தைத் திரட்ட அவகாசம் கேட்கிறார்! உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது படைத்தலைவரே!" என்று சிரித்தாள் இந்தரகுமாரி.

அன்று அரசரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்ற கார்த்தவீரியனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அரசருடன் அரசி, இளவரசி, அமைச்சர் முதலியோர் இருந்தனர். இளவரசிக்குப் பின்னே, அவளுடைய தோழிகள் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி இந்திரகுமாரி!

தான் இளவரசியின் தோழி என்று இவள் சொல்லவே இல்லையே என்று யோசித்துக் கொண்டே, அரசர் கூறியவற்றை இயந்திரத்தனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்தவீரியன்.

"நாட்டில் எதிரிநாட்டு ஒற்றர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், அரசகுலப் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. மந்திரிகுமாரி, திருமணத்துக்குப் பிறகு தன் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாள். அவளுக்கு பலத்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே..."

"இந்திரகுமாரியை நானே பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன், அரசே!" என்றான் கார்த்தவீரியன்.

ஒரு கணம் அனைவரும் மௌனமாக விழிக்க, இளவரசி திரும்பித் தன் பின்னால் நின்ற இந்திரகுமாரியைப் பார்க்க, அவள் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள். 

இதைப் பார்த்த அரசர் உட்பட அனைவரும் கார்த்தவீரியனின் காதலைப் புரிந்து கொண்டவர்களாகக் கொல்லென்று சிரித்தனர்.

மந்திரிகுமாரி என்று சொல்வதற்கு பதிலாக இந்திரகுமாரி என்று தன்னை அறியாமல் சொல்லித் தன் உள்ளக் கிடக்கையை அனைவர் முன்னும் வெளிப்படுத்தி விட்டது கார்த்தவீரியனுக்கு சற்று தாமதாமாகத்தான் புரிந்தது. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்:
இவர் மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

Read 'The Army Chief's Faux Pas' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                பொருட்பால்

Saturday, November 27, 2021

1137. ஊர்மிளையின் கோபம்?

"என்னைப் பிரிந்து கடல் கடந்து சென்று பொருள் ஈட்டத்தான் வேண்டுமா?" என்றாள் ஊர்மிளை.

"திருமணத்துக்குப் பிறகு நாம் மகிழ்ச்சியாக வாழப் பொருள் வேண்டாமா? நான் ஒரு வணிகன். பெரும் பொருள் ஈட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது, அதைத் தவற விடலாமா?" என்றான் வளவன்.

"இங்கேயே உன் வணிகம் நன்றாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது! நீ இங்கே ஈட்டும் பொருள் நம் இருவருக்கும் போதாதா?"

"நம் இருவருக்கும் போதும். ஆனால் நமக்குப் பிறக்கப் போகும் இருபது குழந்தைகளுக்கும் போதுமா?"

"இருபது குழந்தைகளா! அப்படியானால், எனக்குத் திருமணமே வேண்டாம்!"

"சரி. இரண்டு என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆண்டுதான். ஓடி விடும்! ஓடி வந்து விடுவேன்."

"உனக்கு ஓடி விடும். ஏனென்றால், நீ ஓடிக் கொண்டிருப்பாய்! உன் வரவை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கப் போகும் எனக்கு, நாழிகைகள் நகர்வதே நத்தையின் நகர்வு போல்தான் இருக்கும்."

"கவலைப்படாதே! நான் போகும் இடத்திலிருந்து வணிகர்கள் பலர் இங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அங்கிருந்து வரும் ஒவ்வொரு மரக்கலத்திலும் யார் மூலமாகவாவது ஒரு மடல் எழுதி அனுப்புகிறேன். அவர்கள் மூலமே நீ எனக்கு பதிலும் அனுப்பலாம். அதனால், நாட்கள் நகர்வது கடினமாக இருக்காது."

வளவன் கிளம்பிச் சென்று சுமார் ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து ஊர்மிளைக்கு ஒரு மடல் வந்தது. மடலில் தன் அன்பையும், காதலையும் கொட்டி எழுதியிருந்தான் வளவன்.

மடலை ஊர்மிளையிடம் கொடுத்த வணிகர், "இன்னும் 10 நாட்களில் நான் அங்கே திரும்பிச் செல்ல இருக்கிறேன், நீ அவனுக்கு பதில் மடல் எழுதி வை. கிளம்பு முன் நான் வந்து பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

ஆனால் அவர் திரும்பி வந்து கேட்டபோது, "மடல் எதுவும் இல்லை என்று வளவரிடம் சொல்லி விடுங்கள்" என்று சொல்லி விட்டாள் ஊர்மிளை..

மூன்று மாதங்களுக்குப் பிறகு, வளவனிடமிருந்து இன்னொரு மடல் வந்தது. இன்னொரு வணிகர் மூலம் தன் இரண்டாவது மடலை அனுப்பி இருந்தான் வளவன். வழக்கமான காதல் வரிகளுக்குப் பிறகு, "நான் உன்னை விட்டுப் பிரிந்த கோபம் உனக்கு இன்னும் தீரவில்லை போலிருக்கிறது. இப்போதாவது கோபம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று மடலை முடித்திருந்தான் வளவன்.

இந்த முறையும், ஊர்மிளை பதில் மடல் அனுப்பவில்லை.

அதற்குப் பிறகு வளவனிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை.

ஒரு ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய வளவன், ஊர்மிளையின் வீட்டுக்கு வந்தான். 

அவனை வரவேற்ற ஊர்மிளையின் தாயிடம், "ஊர்மிளை எப்படி இருக்கிறாள்?" என்றான் வளவன்.

"நீயே போய்ப் பார்!" என்றாள் அவள், விரக்தியான குரலில்.

உள்ளே சென்ற வளவன் அதிர்ந்து போய் நின்றான்.

கயிற்றுக் கட்டிலில் சேலை கட்டப்பட்ட எலும்புக் கூடு போல் படுத்திருப்பது ஊர்மிளையா?

அறைக்குள் யாரோ வரும் அரவம் கேட்டு விழித்த ஊர்மிளை, சட்டென்று எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தாள். பிறகு ஏதோ வேகம் வந்தவள் போல், கட்டிலிலிருந்து எழுந்து சில அடிகள் ஓடி வந்து வளவனை இறுக அணைத்தபடி, அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

"என்ன ஊர்மிளை, ஏன் இப்படி இளைத்து விட்டாய்? உன் உடம்புக்கு என்ன? என் மடல்களுக்கு ஏன் பதில் மடல் அனுப்பவில்லை? என் மீது அத்தனை கோபமா?" என்றான் வளவன், படபடப்புடன்.

தலையை நிமிர்த்தி வளவனைப் பார்த்த ஊர்மிளை, "கோபமா?  இந்த முகத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் எப்படி உயிரோடு இருந்தேன் என்று என் மேல்தான் கோபம்!" என்றாள்.

"நீ என் மடலுக்கு பதில் மடல் அனுப்பி இருந்தால், நானும் மடல்கள் அனுப்பிக் கொண்டு இருந்திருப்பேன், அது உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அல்லவா?"

"நிச்சயமாக  ஆனால் வணிகத்துக்குச் சென்றிருக்கும் நீ, வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும். உன் முதல் மடலில் பொங்கி வழிந்த காதலைக் கண்டபோது, என் பதில் மடல்கள் உன் காதல் நினைவுகளை அதிகமாக்கி உன் மனத்தை வணிகத்தில் முழுமையாக ஈடுபடச் செய்யாமல் செய்து விடும் என்று தோன்றியது. அதனால்தான், உனக்கு மடல் அனுப்பாமல், பிரிவுத் துயரை முழுவதுமாக அனுபவிக்க முடிவு செய்தேன். ஆனால், என் மனதுக்கு இருந்த உறுதி உடலுக்கு இல்லாததால், அது உன் பிரிவால் வாடி இளைத்து விட்டது. இப்போது நீ வந்து விட்டாய் அல்லவா? இனி என் உடல் நிலை தேறி விடும், இப்போதே பருக்க ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் உடை இறுக்கமாகி விட்டது போல் உணர்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே, வளவனை மீண்டும் இறுகத் தழுவிக் கொண்டாள் ஊர்மிளை.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

பொருள்:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமை உடைய பிறவி இல்லை.

Read 'Urmila's Anger' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Tuesday, September 28, 2021

1136. தினமும் ஒரு மடல்!

மருத்துவர் இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

காரியின் முறை வந்ததும், அவன் உள்ளே போனான்.

"இரவில் தூக்கம் வருவதே இல்லை, மருத்துவர் ஐயா!" என்றான் காரி.

அவன் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உன் உடல் இயக்கம் சீராகத்தான் இருக்கிறது. ஒரு சூரணம் கொடுக்கிறேன். அதை நீரில் கரைத்துக் குடித்து விட்டு உறங்கு. நன்றாக உறங்குவாய்!" என்று சொல்லி, ஒரு குப்பியிலிருந்து ஒரு சிறிய மரக்கரண்டியால் சிறிதளவு சூரணத்தை எடுத்து, ஒரு சிறிய இலையில் வைத்து மடித்துக் கொடுத்தார்.

"ஐயா! ஒருவேளை நள்ளிரவில் விழிப்பு வந்தால், அப்போது மீண்டும் கொஞ்சம் சூரணம் அருந்தலாமா?" என்றான் காரி.

"நள்ளிரவில் விழித்துக் கொண்டால், உடனே மீண்டும் படுத்துக் கொள்ளப் போகிறாய். உடனே உறக்கம் வந்து விடுமே!" 

"இல்லை, ஐயா! உடனே படுத்துக் கொள்ள மாட்டேன். ஒரு வேலை செய்து விட்டு, அப்புறம்தான் படுத்துக் கொள்வேன். அப்போது தூக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது!"

"நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு செய்ய வேண்டிய அந்த வேலை என்ன?"

"என் காதலிக்கு மடல் எழுதுவது!"

"என்ன?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்ட மருத்துவர், "சரி. அது உன் சொந்த விஷயம். ஏன், அதைப் பகல் நேரத்தில் செய்யலாமே!" என்றார்.

"முடியாது, ஐயா. வீட்டில் மற்றவர்கள் இருப்பார்களே! அதனால் எல்லோரும் உறங்கிய பிறகு, சாளரத்தின் அருகே அமர்ந்து, அங்கு தெரியும் மங்கலான ஒளியில் மடல் எழுதுவேன். அதற்குப் பிறகு மீண்டும் உறங்க முயன்றால், உறக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது."

மருத்துவருக்கு முதலில் எழுந்தது கோபம்தான் என்றாலும், அந்தக் கோபத்தை மீறிய ஆவலில், "சில நாட்களாக என்றால்? தினமும் மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"ஒவ்வொரு நாளும் எழுதும் மடலை உடனே கிழித்து, அந்த ஓலையை நெருப்பில் போட்டு விடுவேனே!"

"ஏன் அப்படி?"

"என் காதலி அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கிறாள். ஒருநாள் இளவரசிக்காக ஏதோ பொருள் வாங்க அவள் அங்காடிக்கு வந்தபோதுதான் நான் அவளைப் பார்த்தேன், பேசினேன். என் காதலைக் கூறினேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஆனால், அவள் மீண்டும் அரண்மனையை விட்டு எப்போது வெளியே வருவாள் என்பது அவளுக்கே தெரியாதாம்! அதனால்தான், அவளைப் பார்க்க முடியாமல், தினமும் அவளுக்கு மடல் எழுதுகிறேன். அதை அரண்மனையில் இருக்கும் அவளிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதால், அதைக் கிழித்துப் போட்டு விட்டு, தினமும் புதிதாக இன்னொரு மடல் எழுதுகிறேன். அதனால் என் உறக்கம் கெட்டது!" என்றான் காரி.

"உனக்கு உறக்கம் கெட்டது. உன்னை நோயாளி என்று நினைத்து இவ்வளவு நேரம் பேசியதால் என் நேரம் கெட்டது. வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும், உடல்நிலையும் ஒருங்கே கெட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இங்கிருந்து வெளியேறு!" என்று கோபமாகக் கூறிய மருத்துவர், காரியிடம் தான் கொடுத்த சூரணப் பொட்டலத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பிரித்து, அதிலிருந்த சூரணத்தை அதற்குரிய குப்பியில் கொட்டினார்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

பொருள்:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக, என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

Read 'A Letter A Day' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...