Saturday, February 17, 2024

1295. பெண் மனம்!

"இவ்வளவு நாளா ஒரே சோகமா இருந்த. இன்னிக்கு உன் புருஷன் வரப்போறாங்கறதால உன் முகத்தில இவ்வளவு சந்தோஷம்! என்றாள் நாகம்மை, தன் மகள் நப்பின்னையைப் பார்த்து.

"எனக்குக் கூட, இத்தனை நாளா உன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்தது. இப்ப உன் முகத்தில இருக்கற மலர்ச்சியைப் பார்த்தப்புறம்தான், எனக்கே மனசு ஆறுதலா இருக்கு!" என்றார் நப்பின்னையின் தந்தை வேலவன்

நப்பின்னை பெற்றோர் பேச்சைக் கேட்டு, சற்றே கூச்சத்துடன் உள்ளே போனாள். 

"அரண்மனையில வேலை செய்யறவனாச்சேன்னு ரொம்பப் பெருமையா பொண்ணைக் கட்டி வச்சேன். ஆனா, வருஷம் முழுக்க அரண்மனையே கதின்னு கிடந்துட்டு, எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவான்னு அப்ப தெரியல!" என்று வேலவன் மெல்லிய குரலில் தன் மனைவியிடம் கூறியது நப்பின்னையின் காதில் விழவில்லை.

"என்னம்மா! புருஷன் வந்துட்டான். இப்ப சந்தோஷம்தானே?" என்றார் வேலவன், நப்பின்னையைப் பார்த்து.

நப்பின்னை ஏதும் பதில் கூறாமல் உள்ளே சென்று விட்டாள்.

"ஏன் பதில் சொல்லாம போறா? அதோட ஒரு மாதிரியா இருக்காளே, ஏன்?" என்றார் வேலவன், தன் மனைவியிடம்.

"இன்னும் ஒரு வாரத்தில திரும்பிப் போயிடுவார் இல்ல? அதை நினைச்சு, இப்பவே வருத்தப்பட ஆரம்பிச்சுட்டா!" என்றாள் நாகம்மை.

"இது என்ன கூத்தா இருக்கு? இத்தனை நாளா, புருஷன்காரன் வெளியூர்ல இருக்கானேன்னு நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா. இன்னிக்குப் புருஷன் ஊர்லேந்து வந்ததும், அதுக்காக சந்தோஷப்படாம, இன்னும் ஒரு வாரத்தில ஊருக்குப் போயிடுவாரேன்னு கவலைப்படறா!" என்றார் வேலவன்.

"பொம்பளைங்க மனசு அப்படித்தான். நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல, நீங்க வந்துட்டு வந்துட்டுப் போயிக்கிட்டே இருப்பீங்களே, அப்ப நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கெல்லாம் அது எங்கே புரியப் போகுது?" என்றாள் நாகம்மை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர்கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

Friday, February 16, 2024

1294. உனக்குப் புரியாது!

இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. 

ஷாலினியும், சந்தனுவும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வார்கள். கோபித்துக் கொண்டு பிரிவார்கள். ஆனால் அன்று இரவே, ஒரு சில குறுஞ்செய்திகளில் அவர்கள் சண்டை தீர்ந்து, சமாதானமாகி விடுவாரகள்.

ஆனால் இந்த முறை, நான்கு நாட்கள் ஆகியும், இருவருக்கும் இடையிலான பிணக்கு தீரவில்லை. சண்டை போட்டுக் கொண்ட அன்று இரவு, பேசி வைத்துக் கொண்டது போல் இருவருமே ஒருவர் மற்றவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பாமல் வீம்பாக இருந்தனர்.

நான்கு நாட்களாக நிலைமை அப்படியே இருந்து வந்தது. ஷாலினிக்கு இதைப் பற்றி யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. 

சற்று நேரம் யோசித்த பிறகு, அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. திரைப்படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ, தங்கள் மனச்சாட்சியிடம் பேசுவது போல் காட்சிகள் வரும். அது போல் தானும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்து பார்த்தால், மனதில் ஒரு தெளிவு இருக்கும் என்று நினைத்தாள். 

மனச்சாட்சிக்கு பதிலாகத் தன் மனத்துடன் பேசலாம் என்று தோன்றியது. இரண்டு நாற்காலிகளை எதிரெதிரே போட்டுக் கொண்டாள். ஒன்றில் தான் அமர்ந்து கொண்டு, எதிர் நாற்காலியில், தன் மனம் அமர்ந்து கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, பேச ஆரம்பித்தாள்.

"ஏண்டி, மனமே! எல்லாம் உன்னால்தானே வந்தது? நீதானே அவனை விரும்பின? இப்ப அவனோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாளா நாங்க எங்களுக்குள்ள பேசிக்காம இருக்கோம். இதை எப்படி சரி செய்யறதுன்னு சொல்லு!" என்றாள் ஷாலினி.

மனத்தின் பதிலாக, அவள் மனதில் தோன்றியதை, எதிரில் அமர்ந்திருக்கும் மனம் பேசுவதாக நினைத்துக் கேட்டாள்.

'நானா சண்டை போடச் சொன்னேன்? உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம, அவனோட வாதம் பண்ணின. அது சண்டையில போய் முடிஞ்சது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?'

"இதுக்கு முன்னால சண்டை போட்டப்பல்லாம், அன்னிக்கு ராத்திரியே 'சாரி'ன்னு' மெசேஜ் அனுப்பி, உடனே சமாதானமாயிட்டமே! ஆனா, இந்தத் தடவை ஏன் அப்படி நடக்கல?"

'எனக்கு எப்படித் தெரியும்?'

"சாரின்னு ஒரு மெசேஜ் அனுப்புன்னு நீதானே உத்தரவு போடணும்?"

'உத்தரவு போட்டேனே! ஆனா, நீதான் அதைக் கேக்கல. நான் சொன்னதை நீ ஏன் கேக்கலேன்னு நீதான் சொல்லணும்?'

"உத்தரவு போட்டியா? அப்ப சரி!" என்று சொல்லிச் சிரித்தாள் ஷாலினி.

'ஏன் சிரிக்கற? 'அப்ப சரி'ன்னா என்ன அர்த்தம்?'

"உனக்குப் புரியாது. காதலர்களுக்குள்ள ஊடல்னு ஒண்ணு இருக்கு. சண்டை போட்டுக்கிட்டுக் கொஞ்ச நாள் பேசாம இருப்போம். அப்புறம் கூடிப்போம். அதில ஒரு தனி இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை அனுபவிக்கணும்னுட்டுதான், 'சாரி' சொல்லாம அவனோட சண்டையை நீட்டிக்கிட்டிருக்கேன். இது எனக்கே இப்பதான் புரிஞ்சுது - உங்கிட்ட பேசினப்புறம் . போதும். நீ உள்ளே போ' என்றபடி மனம் 'அமர்ந்திருந்த' நாற்காலியை நகர்த்தினாள் ஷாலினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)
குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

பொருள்:
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து, பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே, அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

1293. மீண்டும் அரவிந்தன்!

அரவிந்தன் சந்தியாவைக் கடைசியாகச் சந்தித்து ஆறு மாதங்கள் ஆகி இருக்கும். அதற்கு முன்பு வரை, அவளை அவன் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டுதான் இருந்தான். திடீரென்று சந்திப்புகள் குறைந்து, பின்பு நின்றே போய் விட்டன.

சந்தியா அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து பேசியபோது, "ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணாதே!" என்று ஒரே வரியில் பதில் சொல்லி, ஃபோனை வைத்து விட்டான் அரவிந்தன்.

வேறு என்ன செய்வது? அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்க்கலாமா என்ற யோசனை தோன்றியது. அதை அவன்  விரும்ப மாட்டான் என்பதால், அந்த யோசனையைக் கைவிட்டு விட்டாள் சந்தியா.

அரவிந்தனின் நண்பன் முத்துவை அவள் ஒரு முறை தற்செயலாகச் சந்தித்தபோது, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு முத்து அவளிடம் சொன்னான்: "சாரி, சந்தியா! நான் அரவிந்தோட நண்பன்தான். ஆனா, உங்க மேல இரக்கப்பட்டு இதைச் சொல்றேன். அவன் இப்ப வேற ஒரு பெண்ணோட பழகிக்கிட்டிருக்கான். இதுக்கு மேல என்னை ஒண்ணும் கேக்காதீங்க!"

சந்தியாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அரவிந்தன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக, அரவிந்தன் அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்ததை அவள் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள். இப்போது முத்து சொன்னதை வைத்துப் பார்த்தபோது, எல்லாம் பொருந்திப் போவது போல்தான் தோன்றியது.

'ஏன் இப்படிச் செய்தான்? நான் ஏதாவது தவறு செய்து, அதனால் என் மேல் கோபித்துக் கொண்டு, என்னை விட்டு விலகி விட்டானா? அல்லது அவன் காதலில் உறுதி இல்லாத ஒரு பச்சோந்தியா?' 

அவளுக்குப் புரியவில்லை.

அரவிந்தனின் பிரிவுக்குப் பிறகு, சந்தியா வாழ்க்கையை இயந்திரத்தனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் அளித்த ஏமாற்றம் அவள் மனதை விடாமல் அழுத்திக் கொண்டேதான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், எதிர்பாராமல், அரவிந்தனிடமிருந்து அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. 

"சாரி, சந்தியா! நான் தப்புப் பண்ணிட்டேன். ஆனா, நீ என்னை மன்னிச்சுடுவேன்னு நினைக்கறேன். சீக்கிரமே நாம சந்திக்கலாம். ரெண்டு நாள்ள நானே ஃபோன் பண்றேன்" என்றான் அவன்.

சென்ற முறை சுருக்கமாகப் பேசி ஃபோனை வைத்து போல்தான், இந்த முறையும் செய்தான் அரவிந்தன்.

பல நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செடி, தண்ணீர் பட்டதும் சிலிர்ப்பது போல், சந்தியாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

அன்று வீட்டுக்குச் சென்றபோது, அவள் அம்மா கேட்டாள்: 

"கொஞ்ச நாளா, எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தே. என்னன்னு கேட்டப்ப, ஒண்ணுமில்லேன்னுட்ட. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா இருக்கும்னு நினைச்சேன். இன்னிக்குத்தான் உன் முகத்தில ஒரு சந்தோஷம் தெரியுது. ஆஃபீஸ்ல இருந்த பிரச்னை தீர்ந்து போச்சா? இல்லை, புரொமோஷன் ஏதாவது கொடுத்திருக்காங்களா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்" என்றாள் சந்தியா.

அறையில் வந்து தனியே உட்கார்ந்தபோது, 'பாவம்! அம்மாவை ஏமாற்றுகிறோமே!' என்ற எண்ணம் தோன்றியது.

'அம்மாவை மட்டுமா?' என்ற கேள்வி உடனே எழுந்தது.

'எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீர்னு உன்னை அந்த அரவிந்தன் கைவிட்டுட்டான். அதை நினைச்சு, இத்தனை நாளா நெருப்பில விழுந்த புழு மாதிரி துடிச்சுக்கிட்டிருந்த. இப்ப அவன் 'சாரி' ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் திரும்பக் கூப்பிட்டதும், அவன் பின்னால ஓடத் தயாரா இருக்கியே, அது ஏன்? உனக்கு அவனை விட்டால் வேற துணை இல்லையா?'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியைப் பெரிதாக்கி, அதில் கவனம் செலுத்தினாள் சந்தியா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)
குறள் 1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

பொருள்:
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

Thursday, February 15, 2024

1292. அழைப்பு இல்லை!

"ஏண்டி, நம்ம காலேஜ்ல எத்தனையோ ஆண்கள் உன்னோட கடைக்கண் பார்வை தன் மேல படாதான்னு தவம் கிடக்கறாங்க. ஆனா, நீ அவங்களையெல்லாம் விட்டுட்டு, அந்த பிரகாஷ் பின்னால அலையறியே!" என்றாள் மஞ்சுளா.

"எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு!" என்றாள் ரூபா, சுருக்கமாக.

'ஆனா அவனுக்கு உன்னைப் பிடிச்ச மாதிரி தெரியலையே!' என்று சொல்ல நினைத்த மஞ்சுளா, தன் தோழியின் மனம் புண்படுமோ என்று நினைத்து, மௌனமாக இருந்தாள்.

"நேத்திக்கு சாயந்திரம் எங்கே போயிருந்தே? ஃபோன் பண்ணினேன். எடுக்கவே இல்லையே!" என்றாள் ரூபா.

"ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தேன்!" என்றாள் மஞ்சுளா.

"யாரோட பர்த்டே பார்ட்டி?"

மஞ்சுளா சற்றுத் தயங்கி விட்டு, "சாரிடி. பிரகாஷோட பர்த்டே பார்ட்டிதான். நம்ம கிளாஸ்ல சில பேரைத்தான் அவன் கூப்பிட்டிருந்தான் போல இருக்கு. உன்னை அவன் கூப்பிட்டானா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஒருவேளை கூப்பிடலேன்னா, நீ வருத்தப்படுவியேன்னுதான் பார்ட்டிக்குப் போறதைப் பத்தி உங்கிட்ட சொல்லல" என்றாள் மஞ்சுளா.

ரூபாவின் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டவளாக, "அதனால என்ன? எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கலாம்னு நினைச்சிருப்பான்!" என்றாள். 

மஞ்சுளா தோழியை வியப்புடன் பார்த்து விட்டுப் பேசாமல் இருந்தாள்.

அன்று இரவு படுக்கச் செல்லும்போது , 'என்னை ஏன் கூப்பிடலேன்னு பிரகாஷ்கிட்ட சண்டை போடத்தான் போறேன். எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கணும்னு கேக்கப் போறேன். எப்படி மாட்டேன்னு சொல்றான்னு பாக்கறேன்!' என்று நினைத்துக் கொண்டாள் ரூபா.

"ஏண்டி, முட்டாள்! அவன் உன்னை மதிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவன்கிட்ட பழகி, அவனோட அன்பைப் பெறலாம்னு நினைக்கறியே! இது பைத்தியக்காரத்தனம் இல்லை?"

திடுக்கிட்டுக் கண் விழித்தாள் ரூபா. யார் இப்படிக் கேட்டது? 

கண்களைக் கசக்கிக் கொண்டு, முழு விழிப்பு நிலையை அடைந்த பிறகுதான், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது, தன் நெஞ்சிடம் தான் கேட்ட கேள்விதான் அது என்பது அவளுக்குப் புரிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

பொருள்:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே!

1291. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!

இன்று மூன்றாவது நாள். 

சவிதா பூங்காவுக்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். பாலன் இன்றும்  வரவில்லை. 

இத்தனைக்கும் இந்த மூன்று நாட்களிலுமே, அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து, மாலை 6 மணிக்குப் பூங்காவில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டுத்தான் அவள் வந்து காத்திருந்தாள்.

முதல்நாள் காத்திருந்து, ஏமாற்றமடைந்து வீட்டுக்குத் திரும்பினாள். அடுத்த நாள், பாலனிடமிருந்து ஃபோன் வரும் என்று மதியம் வரை எதிர்பார்த்துக் காத்திருந்து விட்டுப் பிற்பகலில் அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்தாள்.

"ஓ, சாரி! நேத்து ஆஃபீஸ்லேந்து கிளம்ப லேட் ஆயிடுச்சு. அதான் வர முடியல" என்றான் பாலன்.

"அது சரி. இன்னிக்குக் காலையிலேயே எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லி இருக்க வேண்டாமா? காலையிலேந்து உங்ககிட்டேந்து ஃபோன் வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்" என்றாள் சவிதா.

"சாரி, மறந்துட்டேன்!" என்றான் பாலன், சாதாரணமாக. 

'மறந்துட்டேன்னு எப்படி சாதாரணமா சொல்றாரு!' என்று மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சவிதா, "சரி. அப்ப இன்னிக்கு?" என்றாள்.

அலுவலகத் தொலைபேசியைப் பயன்படுத்தியதால், தான் பேசுவதை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அவள் பேச வேண்டி இருந்தது.

"இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம். அதே இடம், அதே டைம்!" என்றான் பாலன்.

ஆனால் அன்றும் அவன் வரவில்லை.

அடுத்த நாள் காலை, அவனே ஃபோன் செய்து, "சாரி. நேத்திக்கு அம்மாவை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். அதை மறந்து, உங்கிட்ட வரதா சொல்லிட்டேன். ஆனா, இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம்" என்று சொல்லி, அவள் வேறு ஏதாவது கேட்டு விடப் போகிறாளோ என்று அஞ்சியது போல், ஃபோனை வைத்து விட்டான்.

ஆனால், இன்றும் அவன் வரவில்லை. நாளைக்கு ஃபோன் செய்து, ஏதாவது காரணம் சொல்லுவான். நாளை பார்க்கலாம் என்று சொல்லுவான். அவளும் முட்டாளைப் போல், நாளை போய்க் காத்திருப்பாள்!

அன்று இரவு வீட்டுக்குப் போன பிறகும், அவன் நினைவாகவே இருந்தாள் சவிதா.

திடீரென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'நான் எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுபோல், அவரும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாரா?' 

தூரத்திலிருந்து ஒரு பாடல் வரி காற்றில் மிதந்து வந்து அவள் காதில் ஒலித்தது.

'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?'

சவிதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது. 

'நான் என் காதலனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் என்னைப் பற்றி நினைப்பதே இல்லை, போலும்! அதனால்தான், எனக்கு இத்தனை ஏமாற்றங்கள் நிகழ்கின்றன.'

'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?' என்ற வரி மீண்டும் அவளைத் தாக்கியது.

'அவருக்கு என்னைப் பற்றிய எண்ணம் இல்லாதபோது, நான் மட்டும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால், அதற்குக் காரணம் என்ன?

'என் நெஞ்சுதான்!

'அவர் நெஞ்சு அவரைப் பற்றித்தான் நினைக்கிறது. ஆனால், என் நெஞ்சு என்னைப் பற்றி நினைக்காமல், அவரைப் பற்றி நினைக்கிறது! 

'இந்த நிலையில், நான் அடையும் ஏமாற்றங்களுக்கு அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

பொருள்:
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல், அவரையே நினைக்கக் காரணம் என்ன?

Friday, February 9, 2024

1290. குறையாத கோபம்

"இனிமே என்னைப் பாக்காதே! என்னோட பேசாதே!" என்றாள் விசித்ரா, கோபத்துடன்.

"நான் சொல்றதைக் கேளு!" என்று மன்றாடினான் வைபவ்.

"நீ சொன்னதைக் கேட்டு நான் ஏமாந்ததெல்லாம் போதும்!"

கோபமாக வெளியேறினாள் விசித்ரா. காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல், கையைப் பிசைந்து கொண்டு நின்றான் வைபவ்.

இது நடந்து நான்கைந்து நாட்கள் கடந்து விட்டன. அவளைத் தொடர்பு கொள்ள வைபவ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஃபோன் செய்தால், உடனே துண்டித்தாள். 

மன்னிப்புக் கேட்டும், வருத்தம் தெரிவித்தும், தன் காதலைத் தெரிவித்தும் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளும் பலனளிக்கவில்லை. 

'ஜனனி' திரைப்படத்தில் வரும் 'மன்னிக்க மாட்டாயா மனமிரங்கி' என்ற பாடலின் யூடியூப் வீடியோவை அனுப்பினான். அதற்கும் பலன் இல்லை.

மாலை நேரத்தில், விசித்ராவின் அப்பாவும் அம்மாவும் நடைப் பயிற்சி செய்யப் போய் விடுவார்கள் என்பதால், அப்போது விசித்ரா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று அவள் ஒருமுறை கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அதனால், மாலை 6 மணிக்கு, அவள் வீட்டுக்குச் சென்றான் வைபவ்.

அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த விசித்ரா, அவனைப் பார்த்தும், திரும்பி உள்ளே போய் விட்டாள். நல்லவேளை, அவனை வெளியே நிற்க வைத்துக் கதவைச் சாத்தவில்லை!

வைபவ் முன்னறையில் போய் சோஃபாவில் அமர்ந்தான். சற்று நேரத்தில், விசித்ரா உள்ளிருந்து வந்து அவன் எதிரே உட்கார்ந்து, 'எங்கே வந்தாய்?' என்பது போல் அவனைப் பார்த்தாள்.

"எங்கே?" என்றான் வைபவ்.

"என்ன எங்கே?"

"இல்லை. உள்ளே போனியே, எனக்கு காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரத்தானே? அதுதான் எங்கேன்னு கேட்டேன்!"

விசித்ரா சிரிக்கவில்லை. "உன் மூஞ்சில ஊத்தறதுக்காக, வெந்நீர் போடத்தான் போனேன். இன்னும் கொதிக்கல. கொதிச்சதும் எடுத்துக்கிட்டு வரேன்!" என்றாள், சூடாக.

சற்று நேரம் மௌனமாக இருந்த பிறகு, "நீ இங்கே வரியா?" என்று சோஃபாவில் தன் பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்டினான் வைபவ்.

"வரேன். ஆனா நீ இங்கே வந்து உக்காரணும்!" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினாள் அவள்.

இருவரும் இடம் மாற்றிக் கொண்டனர்.

சில விநாடிகள் கழித்து, வைபவ் மெல்ல எழுந்து போய், சோஃபாவில், விசித்ராவின் அருகே அமர்ந்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்துச் சற்று நெருக்கமாக, அவள் மேல் இடிப்பது போல் உட்கார்ந்தான். அவள் அவனைத் தள்ளவோ, தான் தள்ளி உட்காரவோ முயற்சி செய்யவில்லை. 

தன் கையை சோஃபாவின் பின்புறமாக மெதுவாக எடுத்துச் சென்று, விசித்ராவின் தோளின் மீது வைத்தான் வைபவ். அவள் அவன் கையை உதறித் தள்ளவில்லை.

ஆனால், அவள் முகத்தில் மட்டும் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை கவனித்தான் வைபவ்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

பொருள்:
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

Saturday, December 9, 2023

1289. நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன்!

"என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? ஆனா, ஏன் கல்யாணம் ஆனதிலேந்து ஒரு மாதிரியாவே இருக்க?" என்றான் கார்த்திக், மலரிடம்.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் மலர். அப்படிச் சொல்லும்போதே, அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.

"எனக்குத் தெரியும்!" என்ற கார்த்திக், அவள் காதருகில் குனிந்து, "முதலிரவு தள்ளிப் போய்க்கிட்டே இருக்கேன்னுதானே?" என்றான், சிரித்துக் கொண்டே.

"சீச்சீ!" என்றாள் மலர், இன்னும் அதிகப் பதட்டத்துடன்.

"இந்தப் பெரியவங்க இப்படித்தான்! நாள் நட்சத்திரம்னு பார்த்து, நாம ஒண்ணு சேரறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதான் இப்ப தேதி குறிச்சுட்டாங்களே! இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு!" என்றான் கார்த்திக்.

"போன வாரம் முழுக்க டல்லா இருந்த. இப்ப முதலிரவு முடிஞ்சப்புறம், நாலு நாளா எவ்வளவு உற்சாகமா இருக்க! நான் சொன்னபடி, முதலிரவு தள்ளிப் போகுதேங்கற கவலையினாலதானே முதல்ல டல்லா இருந்தே?" என்றான் கார்த்திக்.

மலர் பதில் சொல்லவில்லை.

சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த அவள் தோழி வாணி,  முதலிரவின்போது அவள் கணவன் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும், அதற்குப் பிறகும், அவளுடைய உணர்வுகளை மதிக்காமல், தொடர்ந்து அவ்வாறே நடந்து கொள்வதாகவும், ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று தான் வருந்துவதாகவும் மலரிடம் சொல்லி இருந்தாள்.

அத்துடன், "என்னோட தோழிகள் சில பேருக்கும் இதே அனுபவம்தான். எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு!" என்று வாணி கூறியதால், தன் கணவனும் அப்படி இருப்பானோ என்ற பதட்டத்தில் தான் இருந்ததையும், கார்த்திக்கின் மென்மையான அணுகுமுறையால், அந்தப் பதட்டம் நீங்கி உற்சாகமாக இருப்பதையும் மலர் கார்த்திக்கிடம் கூறவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

பொருள்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

1288. மன்னிக்க முடியாதுதான், ஆயினும்...

 அஸ்வின் அப்படிச் செய்வான் என்று அனுபமா எதிர்பார்க்கவில்லை.

அஸ்வினும் அனுபமாவும் காதலர்கள் என்பது அனுபமாவின் தோழிகளுக்குத் தெரியும்.

அப்படி இருக்கும்போது, அனுபமாவை அவள் தோழிகள் முன்னிலையில் அஸ்வின் கேலி செய்தது அனுபமாவை அதிர்ச்சி அடையச் செய்தது.

அனுபமா கிராமத்துப் பெண்ணாம். அவளுக்கு நாகரீகமான பழக்கங்கள் கிடையாதாம். ஓட்டலில் ஸ்பூனால் சாப்பிடும்போது தன் உடைகளில் சிந்திக் கொள்வாளாம். ஸ்பூனால் சாப்பிடத் தெரியாதவள், கையால் சாப்பிட  வேண்டியதுதானே, ஏன் ஸ்பூனால் சாப்பிட முயற்சி செய்து தன் உடைகளைப் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? கல்யாணத்துக்குப் பிறகு, துணிகளின் கறைகளைப் போக்கும் சோப்புத் தூள் வாங்கவே அவன் சம்பளத்தில் பாதி போய் விடுமாம்.

அஸ்வின் பேசியதைக் கேட்கக் கேட்க, அனுபமாவின் மனதில் அவமான உணர்வு பீறிட்டு எழுந்தது. அஸ்வின் பேச்சைக் கேட்டு அவள் தோழிகள் சிரித்தது, அவள் அவமான உணர்வை இன்னும் அதிகமாக்கியது.

விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் அனுபமா. தான் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்து, அஸ்வின், "சாரி! சும்மா விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்" என்று கூறியதைக் கூட அனுபமா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பத்து நாட்களுக்குப் பிறகு, தனிமையில் அஸ்வினின் மார்பில் தன் தலையைச் சாய்த்தபடி நின்றிருந்தாள் அனுபமா.

"நல்லவேளை! அன்னிக்கு நீ கோவிச்சுக்கிட்டுப் போனதைப் பாத்தப்புறம், நீ எங்கிட்ட திரும்பி வர மாட்டியோன்னு பயந்துட்டேன்!" என்றான் அஸ்வின், அவள் தலைமுடியைக் கோதியபடி.

'நீ அப்படிப் பேசினதை என்னால மன்னிக்கவே முடியாது. ஆனாலும், என்ன செய்யறது? உன் மார்பில என் தலையை சாய்ச்சுக்கிட்டு இருக்கறப்ப கிடைக்கிற சுகத்தை என்னால மறக்க முடியலியே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனுபமா. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

பொருள்:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களை (நீ) செய்தாலும், கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

1287. எத்தனை நாள் ஆயிற்று?

 "எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் லதா.

"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.

"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"

"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"

"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."

"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேன்னு!"

"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"

"முந்தா நாள்."

"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"

"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"

"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம்னு பாக்கறேன்!"

"ஏண்டி, அன்னிக்கு என்னமோ, அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா சொன்ன. இப்ப, நீயே வலுவில  போய்ப் பேசறேன்னு சொல்ற!"

"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"

"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா, அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும், ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.

தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள்:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல், வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?

Thursday, December 7, 2023

1286. குறை ஒன்று இல்லை (பல உண்டு!)

"என்கிட்ட உனக்குப் பிடிச்சது என்னென்ன சொல்லு, பாக்கலாம்!" என்றான் கோவிந்த்.

"உங்கிட்ட எனக்கு எல்லாமே பிடிக்கும். எதைன்னு சொல்றது?" என்றாள் சுகன்யா.

"பொதுவாச் சொன்னா எப்படி? குறிப்பா சிலதையாவது சொல்லு."

"நீ நல்லா டிரஸ் பண்ணிக்கிற. இனிமையாப் பேசற. கோபப்படறதே இல்லை. சிகரெட், மது மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லை. உன் அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்க."

"அடேயப்பா! எங்கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கறது எனக்கே தெரியாதே!" என்றான் கோவிந்த், சிரித்தபடி.

"தினம் உன் காதலனைச் சந்திச்சுட்டு வந்தப்புறம் ஏதாவது புலம்பிக்கிட்டே இருக்கியே, ஏன்?" என்றாள் நளினி.

"அவன்கிட்ட இருக்கற குறைகளை யார்கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. என்னோட நெருங்கிய தோழியான உங்கிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லுவேன்?"

"எல்லார்கிட்டேயும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்."

"ஆனா, அவன்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு."

"அப்படி என்ன குறைகள்?"

"சில சமயம், என்னைப் பாக்க வரேன்னு சொல்லிட்டு, வரதில்ல. கேட்டா, ஏதாவது பொய்யான காரணம் சொல்றான். அவன் படிச்ச படிப்புக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா, இப்ப இருக்கற வேலையே திருப்தியா இருக்குன்னு சொல்றான். முன்னேறணுங்கற ஆசை வேண்டாம்? அப்புறம், எப்பவும் தன்னோட அம்மாவைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கான். என் மேல அக்கறை காட்டறதில்ல. நான் புதுசா ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தா, அதைக் கூட கவனிக்கிறதில்ல. அப்புறம்..."

"சரி. இதையெல்லாம் அவன்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே?"

"என்னவோ தெரியலடி. அவனோட இருக்கறப்ப, இதெல்லாம் எதுவுமே என் ஞாபகத்துக்கு வரதில்ல" என்றாள் சுகன்யா, சற்றே சங்கடத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

பொருள்:
அவரைக் காணும்போது, அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபோது, அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

Sunday, December 3, 2023

1285. குற்றப் பத்திரிகை!

கிருத்திகா மேஜை மீது ஒரு தாளை வைத்து மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ நின்று கொண்டு பார்ப்பதாக உணர்ந்து, ஒரு கையால் தான் எழுதியதை மூடிக் கொண்டு, திரும்பிப் பார்த்தாள்.

பின்னால் நின்று கொண்டிருந்த அவள் தோழி கனகா, "நீ எழுதிக்கிட்டிருந்த காதல் கடிதத்தைப் பார்த்துட்டேன்" என்றாள் சிரித்துக் கொண்டே.

"இது காதல் கடிதம் இல்லை. அதனால, நீ பார்த்ததா சொன்னது பொய்! எங்கே பாத்திருப்பியோன்னு நினைச்சேன். நல்லவேளை, நீ பாக்கல!"

"சரிடி. நான் பொய்தான் சொன்னேன். நீதான் நான் பாக்கறதுக்குள்ள மூடிட்டியே! சரி, சொல்லு. என்ன அது?"

"அது ஒரு லிஸ்ட்!" என்றாள் கிருத்திகா.

"லிஸ்டா? என்ன லிஸ்ட்? மளிகை சாமான் லிஸ்டா? அப்படி இருந்தா, அதை மறைச்சிருக்க மாட்டியே!"

"சுதாகர்கிட்ட எனக்கு நிறையக் குற்றம் குறைகள் இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் அவரைச் சந்திக்கறப்ப, அதையெல்லாம் அவர்கிட்ட சொல்லப் போறேன். ஞாபகமா எல்லாத்தையும் சொல்லணுங்கறதுக்காகத்தான், எல்லாத்தையும் எழுதி வைக்கறேன்."

"ஓ, குற்றப் பத்திரிகையா? என்னென்ன குற்றம்? ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"

"அதெல்லாம் நான் அவர்கிட்ட எதிர்பார்த்து, அவர் செய்யாத விஷயங்கள். அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது" என்றாள் கிருத்திகா.

மாலையில், சுதாகரைச் சந்தித்து, இரண்டு மணி நேரம் பேசி விட்டு, வீட்டுக்குத் திரும்பும்போதுதான், காலையில் தான் எழுதி வைத்திருந்த பட்டியலிலிருந்து ஒரு குறையைக் கூட அவனிடம் சொல்லவில்லை என்பது கிருத்திகாவுக்கு நினைவு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்றை
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

பொருள்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு்கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும், அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...