சந்தியா அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து பேசியபோது, "ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணாதே!" என்று ஒரே வரியில் பதில் சொல்லி, ஃபோனை வைத்து விட்டான் அரவிந்தன்.
வேறு என்ன செய்வது? அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்க்கலாமா என்ற யோசனை தோன்றியது. அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால், அந்த யோசனையைக் கைவிட்டு விட்டாள் சந்தியா.
அரவிந்தனின் நண்பன் முத்துவை அவள் ஒரு முறை தற்செயலாகச் சந்தித்தபோது, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு முத்து அவளிடம் சொன்னான்: "சாரி, சந்தியா! நான் அரவிந்தோட நண்பன்தான். ஆனா, உங்க மேல இரக்கப்பட்டு இதைச் சொல்றேன். அவன் இப்ப வேற ஒரு பெண்ணோட பழகிக்கிட்டிருக்கான். இதுக்கு மேல என்னை ஒண்ணும் கேக்காதீங்க!"
சந்தியாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அரவிந்தன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக, அரவிந்தன் அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்ததை அவள் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள். இப்போது முத்து சொன்னதை வைத்துப் பார்த்தபோது, எல்லாம் பொருந்திப் போவது போல்தான் தோன்றியது.
'ஏன் இப்படிச் செய்தான்? நான் ஏதாவது தவறு செய்து, அதனால் என் மேல் கோபித்துக் கொண்டு, என்னை விட்டு விலகி விட்டானா? அல்லது அவன் காதலில் உறுதி இல்லாத ஒரு பச்சோந்தியா?'
அவளுக்குப் புரியவில்லை.
அரவிந்தனின் பிரிவுக்குப் பிறகு, சந்தியா வாழ்க்கையை இயந்திரத்தனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் அளித்த ஏமாற்றம் அவள் மனதை விடாமல் அழுத்திக் கொண்டேதான் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், எதிர்பாராமல், அரவிந்தனிடமிருந்து அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.
"சாரி, சந்தியா! நான் தப்புப் பண்ணிட்டேன். ஆனா, நீ என்னை மன்னிச்சுடுவேன்னு நினைக்கறேன். சீக்கிரமே நாம சந்திக்கலாம். ரெண்டு நாள்ள நானே ஃபோன் பண்றேன்" என்றான் அவன்.
சென்ற முறை சுருக்கமாகப் பேசி ஃபோனை வைத்து போல்தான், இந்த முறையும் செய்தான் அரவிந்தன்.
பல நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செடி, தண்ணீர் பட்டதும் சிலிர்ப்பது போல், சந்தியாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
அன்று வீட்டுக்குச் சென்றபோது, அவள் அம்மா கேட்டாள்:
"கொஞ்ச நாளா, எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தே. என்னன்னு கேட்டப்ப, ஒண்ணுமில்லேன்னுட்ட. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா இருக்கும்னு நினைச்சேன். இன்னிக்குத்தான் உன் முகத்தில ஒரு சந்தோஷம் தெரியுது. ஆஃபீஸ்ல இருந்த பிரச்னை தீர்ந்து போச்சா? இல்லை, புரொமோஷன் ஏதாவது கொடுத்திருக்காங்களா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்" என்றாள் சந்தியா.
அறையில் வந்து தனியே உட்கார்ந்தபோது, 'பாவம்! அம்மாவை ஏமாற்றுகிறோமே!' என்ற எண்ணம் தோன்றியது.
'அம்மாவை மட்டுமா?' என்ற கேள்வி உடனே எழுந்தது.
'எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீர்னு உன்னை அந்த அரவிந்தன் கைவிட்டுட்டான். அதை நினைச்சு, இத்தனை நாளா நெருப்பில விழுந்த புழு மாதிரி துடிச்சுக்கிட்டிருந்த. இப்ப அவன் 'சாரி' ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் திரும்பக் கூப்பிட்டதும், அவன் பின்னால ஓடத் தயாரா இருக்கியே, அது ஏன்? உனக்கு அவனை விட்டால் வேற துணை இல்லையா?'
தன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியைப் பெரிதாக்கி, அதில் கவனம் செலுத்தினாள் சந்தியா.
கற்பியல்
No comments:
Post a Comment