ஆனால் இந்த முறை, நான்கு நாட்கள் ஆகியும், இருவருக்கும் இடையிலான பிணக்கு தீரவில்லை. சண்டை போட்டுக் கொண்ட அன்று இரவு, பேசி வைத்துக் கொண்டது போல் இருவருமே ஒருவர் மற்றவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பாமல் வீம்பாக இருந்தனர்.
நான்கு நாட்களாக நிலைமை அப்படியே இருந்து வந்தது. ஷாலினிக்கு இதைப் பற்றி யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை.
சற்று நேரம் யோசித்த பிறகு, அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. திரைப்படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ, தங்கள் மனச்சாட்சியிடம் பேசுவது போல் காட்சிகள் வரும். அது போல் தானும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்து பார்த்தால், மனதில் ஒரு தெளிவு இருக்கும் என்று நினைத்தாள்.
மனச்சாட்சிக்கு பதிலாகத் தன் மனத்துடன் பேசலாம் என்று தோன்றியது. இரண்டு நாற்காலிகளை எதிரெதிரே போட்டுக் கொண்டாள். ஒன்றில் தான் அமர்ந்து கொண்டு, எதிர் நாற்காலியில், தன் மனம் அமர்ந்து கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, பேச ஆரம்பித்தாள்.
"ஏண்டி, மனமே! எல்லாம் உன்னால்தானே வந்தது? நீதானே அவனை விரும்பின? இப்ப அவனோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாளா நாங்க எங்களுக்குள்ள பேசிக்காம இருக்கோம். இதை எப்படி சரி செய்யறதுன்னு சொல்லு!" என்றாள் ஷாலினி.
மனத்தின் பதிலாக, அவள் மனதில் தோன்றியதை, எதிரில் அமர்ந்திருக்கும் மனம் பேசுவதாக நினைத்துக் கேட்டாள்.
'நானா சண்டை போடச் சொன்னேன்? உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம, அவனோட வாதம் பண்ணின. அது சண்டையில போய் முடிஞ்சது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?'
"இதுக்கு முன்னால சண்டை போட்டப்பல்லாம், அன்னிக்கு ராத்திரியே 'சாரி'ன்னு' மெசேஜ் அனுப்பி, உடனே சமாதானமாயிட்டமே! ஆனா, இந்தத் தடவை ஏன் அப்படி நடக்கல?"
'எனக்கு எப்படித் தெரியும்?'
"சாரின்னு ஒரு மெசேஜ் அனுப்புன்னு நீதானே உத்தரவு போடணும்?"
'உத்தரவு போட்டேனே! ஆனா, நீதான் அதைக் கேக்கல. நான் சொன்னதை நீ ஏன் கேக்கலேன்னு நீதான் சொல்லணும்?'
"உத்தரவு போட்டியா? அப்ப சரி!" என்று சொல்லிச் சிரித்தாள் ஷாலினி.
'ஏன் சிரிக்கற? 'அப்ப சரி'ன்னா என்ன அர்த்தம்?'
"உனக்குப் புரியாது. காதலர்களுக்குள்ள ஊடல்னு ஒண்ணு இருக்கு. சண்டை போட்டுக்கிட்டுக் கொஞ்ச நாள் பேசாம இருப்போம். அப்புறம் கூடிப்போம். அதில ஒரு தனி இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை அனுபவிக்கணும்னுட்டுதான், 'சாரி' சொல்லாம அவனோட சண்டையை நீட்டிக்கிட்டிருக்கேன். இது எனக்கே இப்பதான் புரிஞ்சுது - உங்கிட்ட பேசினப்புறம் . போதும். நீ உள்ளே போ' என்றபடி மனம் 'அமர்ந்திருந்த' நாற்காலியை நகர்த்தினாள் ஷாலினி.
கற்பியல்
No comments:
Post a Comment