Saturday, February 17, 2024

1295. பெண் மனம்!

 "இவ்வளவு நாளா ஒரே சோகமா இருந்த. இன்னிக்கு உன் புருஷன் வரப்போறாங்கறதாலதான் உன் முகத்தில இவ்வளவு சந்தோஷம்! என்றாள் நாகம்மை தன் மகள் நப்பின்னையைப் பார்த்து.

"எனக்குக் கூட இத்தனை நாளா உன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்தது. இப்ப உன் முகத்தில இருக்கற மலர்ச்சியைப் பார்த்தப்புறம்தான் எனக்கே மனசு ஆறுதலா இருக்கு!" என்றார் நப்பின்னையின் தந்தை வேலவன்

நப்பின்னை பெற்றோர் பேச்சைக் கேட்டு சற்றே கூச்சத்துடன் உள்ளே போனாள். 

"அரண்மனையில வேலை செய்யறவனாச்சேன்னு ரொம்பப் பெருமையா பொண்ணைக் கட்டி வச்சேன். ஆனா வருஷம் முழுக்க அரண்மனையே கதின்னு கிடந்துட்டு எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவான்னு அப்ப தெரியல!" என்று வேலவன் மெல்லிய குரலில் தன் மனைவியிடம் கூறியது நப்பின்னையின் காதில் விழவில்லை.

"என்னம்மா! புருஷன் வந்துட்டான். இப்ப சந்தோஷம்தானே?" என்றார் வேலவன் நப்பின்னையைப் பார்த்து.

நப்பின்னை ஏதும் பதில் கூறாமல் உள்ளே சென்று விட்டாள்.

"ஏன் பதில் சொல்லாம போறா? அதோட ஒரு மாதிரியா இருக்காளே, ஏன்?" என்றார் வேலவன் தன் மனைவியிடம்.

"இன்னும் ஒரு வாரத்தில திரும்பிப் போயிடுவாரு இல்ல? அதை நினைச்சு இப்பவே வருத்தப்பட ஆரம்பிச்சுட்டா!" என்றாள் நாகம்மை.

"இது என்ன கூத்தா இருக்கு? இத்தனை நாளா புருஷன்காரன் வெளியூர்ல இருக்கானேன்னு நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா. இன்னிக்குப் புருஷன் ஊர்லேந்து வந்ததும் அதுக்காக சந்தோஷப்படாம இன்னும் ஒரு வாரத்தில ஊருக்குப் போயிடுவாரேன்னு கவலைப்படறா!" என்றார் வேலவன்.

"பொம்பளைங்க மனசு அப்படித்தான். நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல நீங்க வந்துட்டு வந்துட்டுப் போயிக்கிட்டே இருப்பீங்களே, அப்ப நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கெல்லாம் அது எங்கே புரியப் போகுது?" என்றாள் நாகம்மை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...