Friday, May 29, 2020

1106. மூலப்பொருள்!

"எனக்கு என்னவோ கடவுள் உன்னோட உடம்பில ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பொருள்ளேந்து செஞ்சிருப்பார்னு தோணுது.''

''ஆரம்பிச்சுட்டியா? சரி, சொல்லு!''

''உன் கால்களை வாழைத் தண்டுலேந்து செஞ்சிருக்காரு.''

'''வாழைத் தோட்டம் போட்டது போல் கால்களிரண்டு அதில்
வட்டம் போட்டுத் திரிவதென்ன கண்களிரண்டு' ன்னு அலையற உன் கண்ணையும் சேத்து அன்னிக்கே பாடிட்டார் கண்ணதாசன்.''

"அப்புறம், உன் இடுப்பு இருக்கே அதை உடுக்கையிலேந்து செஞ்சிருப்பாரு.''

''ஐயே! இது நல்லாவா இருக்கு''

''உடுக்கை பாத்திருக்கியா? மேலேயும் கீழேயும் பருமனா, நடுவில மட்டும் குறுகலா. அது மாதிரி உன் குறுகிய இடை, அதுக்கு மேலே...''

''சரி, போதும்.'' 

''அப்புறம், உன் முகம் நிலாவேதான். அதில சின்னதா ரெண்டு குளம் வெட்டி ஒவ்வொண்ணிலேயும் ஒரு மீனை நீஞ்ச விட்ட மாதிரி கண்கள்.''

''அடக் கடவுளே!''

''கடவுள் உன்னை எப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு நினைச்சு, நீயே ஆச்சரியப் படறே பாரு.''

''போதும்டா சாமி!'' 

''முக்கியமானதை மட்டும் சொல்லி முடிச்சுடறேன்''

''வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!''

''நீ நினைக்கிற மாதிரி இல்ல. உன் தோளை எதிலேந்து செஞ்சிருக்கார்னு தெரியுமா?''

''நீ மணிக்கணக்கா என் தோள்ளேயே சாஞ்சுக்கிட்டிருக்கறதைப் பாத்தா, அதை ஏதாவது மரத்திலதான் செஞ்சிருப்பார்னு நீ நினைக்கற போலிருக்கு!''

''நீ பாயின்ட்டுக்கு வந்துட்ட. ஆனா உன் முடிவு தப்பு. நான் ஒரு சேல்ஸ்மேன். தினமும் நுறு பேரைப் பாத்து, எங்க கம்பெனியோட தயாரிப்பை வாங்கிக்கங்கன்னு கெஞ்சிக் கூத்தாடி, பல பேர் கிட்ட விக்க முடியாம தோத்துப் போய், மேலதிகாரிகிட்ட திட்டு வாங்கி நொந்து போய், உயிரே போன மாதிரி உடம்பும் மனசும் சோர்ந்து போய் வந்து, உன் தோளை அணச்சுக்கிட்டா, போன உயிர் வந்த மாதிரி அப்படி ஒரு தென்பும், புத்துணர்வும் வருது. அமிர்தத்துக்குத்தான் இப்படிப்பட்ட சக்தி இருக்குன்னு சொல்லுவாங்க. அதனால, உன் தோளைக் கடவுள் அமிர்தத்திலேந்துதான் செஞ்சிருக்கணும்.''

அவள் தோளில் தன் தலையை அழுத்தமாக வைத்துச் சாய்ந்து கொண்டான் அவன்.

அவளுக்கு வலிக்கவில்லை!

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
. 
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

பொருள்
தழுவிக் கொள்ளும்போதெல்லாம் புத்துயிர் அளிப்பது போன்ற உணர்வைத் தருவதால், இவளுடைய தோள்கள் அமிர்தத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Read 'From Legs to Shoulders' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Tuesday, May 26, 2020

1105. மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்!!

''இன்னிக்கு என்ன கதை சொல்லப் போற?' என்றாள் விமலா.

''அதான், நீ கதை சொல்லி முடிச்சுட்டியே!'' என்றான் கணேஷ்.

''அது நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்ச கதை. எப்பவும், அந்தக் கதை முடிஞ்சதும், நீ ஒரு கதை சொல்லுவியே, அதைக் கேட்டேன்''

''ஓ, ரொம்ப நேரம் உன் தோள்ள சாஞ்சு புலம்பிட்டு, அப்புறம்தானே எழுந்திருப்பேன், அதைச் சொல்றயா?''

''அதேதான்!'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? உன்னை விட்டுப் பிரிய மனசில்லாம, உன் தோள்ள சாஞ்சுக்கிட்டிருப்பேன். உன் தோள் வலிக்கக் கூடாதேங்கறதுக்காக, உங்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டிருப்பேன். அதைக் கதைன்னு சொல்லிட்டியே!''

''நீ சொல்றதெல்லாம் கேக்க சுவாரசியமா இருக்கும். நீ என் தோள்ள சாஞ்சுக்கிட்டிருக்கற வலியே எனக்குத் தெரியாது. சுவாரசியமா இருக்கறதால, கதைன்னு சொன்னேன். அது தப்பா?'' என்றாள் விமலா.

''தப்பு இல்ல. ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போறது ஒரு உண்மை'' என்றான் கணேஷ்.

''சொல்லு. ஒரு நாளைக்காவது உண்மையைச் சொல்லு!''

''சின்ன வயசில, அடிக்கடி என் அம்மா மடியில போய்ப் படுத்துப்பேன். கொஞ்சம் பெரியவனானப்பறம், என் அம்மா அதை நிறுத்தச் சொன்னாங்க. 'உன் மடியில படுத்துக்கிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா'ன்னு சொன்னேன். 'நீ பெரியவனாயிட்ட. இனிமே, என் மடியில படுத்துக்க முடியாது. உனக்கு சந்தோஷமா இருக்கற வேற விஷயத்தைக் கண்டுபிடின்னு சொன்னாங்க. அப்புறம், என் தாத்தாவையோ, பாட்டியையோ, கதை சொல்லச் சொல்லிக் கேப்பேன். அது சந்தோஷமா இருந்தது. அப்புறம், நான் வளர வளர, நண்பர்கள்கிட்ட பேசறது, விளையாடறது, புத்தகம் படிக்கிறதுன்னு எனக்கு சந்தோஷம் கொடுக்கற பல விஷயங்களைக் கண்டுபிடிச்சேன். இப்ப...''

''இப்ப?"

'இப்பல்லாம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கறது உன்னோட தோள்கள்தான்!' என்ற கணேஷ், அவள் தோள்களிலிருந்து தலையை எடுத்து , திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் நீண்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தை மூச்சை இழுத்து அனுபவித்தபடியே, ''ஆஹா! என்ன ஒரு மணம்!'' என்றபடியே, அவள் தோள்களை இரு கைகளாலும் அழுத்தினான்.

''அழுத்தாதையா! வலிக்குது. நீ தோள்ள ரொம்ப நேரம் சாஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட எனக்கு வலிக்கல!'' என்றாள் விமலா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
. 
குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

பொருள்
நமக்கு விருப்பமான பொருள் ஒன்று நாம் விரும்பும்போதெல்லாம் நமக்கு இன்பமளிப்பது போல், மலரணிந்த கூந்தலைக் கொண்ட இவளுடைய தோள்கள் எனக்கு இன்பமளிக்கின்றன.

Read 'Discovering Happiness' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, May 21, 2020

1104. வெப்பநிலை மாறுதல்!

"ஏண்டா இப்படிப் படுத்தற? இது டிசம்பர் மாசம். அதுவும், இந்த வருஷம் குளிர் அதிகமா இருக்கு. நான் ஃபேனே வேண்டாம்னுட்டு போத்திக்கிட்டுப் படுத்திருக்கேன். நீ என்னடான்னா, ஏசி போடணும்னு பிடிவாதம் பிடிக்கற? ஏசி போட்டா, நான் வெளியில போய்தான் படுத்துக்கணும்" என்றான் நிகில்.

"போய்ப் படுத்துக்க!" என்றான் கார்த்திக்.

"டேய்! இது என் வீடுடா!"

"இருந்தா என்ன? நான் உன்னோட கெஸ்ட். கெஸ்ட்டோட வசதிக்கு முன்னுரிமை கொடுக்கறதுதானே பண்பாடு?"

"வசதிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்டா. பைத்தியக்காரத்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது! நீ வேணும்னா கொஞ்சம் வெளியில போய்த் தெருவில நடந்து பாத்துட்டு வா. யார் வீட்டிலேயாவது ஏசி ஓடுதான்னு பாரு!" என்றான் நிகில்.

"டேய்! எனக்கு உடம்பு வேகுது, ஏசி போடுன்னு கேட்டா மத்தவங்க வீட்டில எல்லாம் ஏசி ஓடுதான்னு பாக்கச் சொல்ற?" என்றான் கார்த்திக்.

"நேத்து ராத்திரி ஃபேன் கூட வேண்டாம், குளிருதுன்னு சொன்னே! இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா? மத்தியானம் எங்கேயோ போயிட்டு வந்ததில, உனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். எங்கே போயிட்டு வந்தே?" 

"அதெல்லாம் சொல்ல முடியாது!" என்றான் கார்த்திக்.

அன்று பிற்பகல் நடந்த விஷயம் அவன் நினைவில் ஓடியது. 

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவன் மாமா பெண் கமலி, விடுமுறையில் அவள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து, அவளைப் பார்க்க, அவள் வீட்டுக்குச் சென்றான் கார்த்திக். 

மாமா வீட்டில், கமலியின் அறையில், அவளிடம் ஒரு மணி நேரம் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வது என்று இருவரின் பெற்றோர்களும் முன்பே நிச்சயித்து விட்டதால், அவன் கமலியுடன் தனியே பேசுவதை அவள் பெற்றோர் அனுமதித்தார்கள். 

கமலியின் அறை மாடியில் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடி என்பதால், மாடியறையில் வெப்பம் அதிகமாக இருந்தது. டிசம்பர் மாதம் என்றால் கூட, சென்னையைப் பொருத்தவரை, பகல் வேளைகள் எப்போதுமே கோடைதானே! கமலியின் அறையில் ஏசி இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை. எனவே, ஃபேன் ஓடிக் கொண்டிருந்தது.

கமலியிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக், சற்று நேரத்துக்குப் பின், அவளிடம், "கமலி! குளிருதே! ஃபேனை அணைச்சுடறியா?" என்றான். 

"குளிருதா? ஃபேன் ஓடறப்பவே, எனக்கு ஒரே சூடா இருக்கு. உனக்கென்ன ஜுரமா என்ன?" என்றாள் கமலி.

"இல்ல, முதல்ல எனக்கும் சூடாத்தான் இருந்தது. ஆனா, உன் பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கச்சே, சூடெல்லாம் போய், குளிர ஆரம்பிச்சுடுச்சு!" என்றான் கார்த்திக்.

கமலி அவனை முறைத்தாள், ஆனால், ஃபேனை அணைக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த மீதி நேரமும் கார்த்திக்கிற்கு உடல் குளிருவதாகத்தான் தோன்றியது.

'குளிருகிறது, ஃபேனை அணை என்றால் கமலி கேட்கவில்லை. இப்போது என்னவென்றால், சூடாக இருக்கிறது ஏசி போடு என்றால் நண்பன் முடியாது என்கிறான்! என்ன ஆயிற்று இவர்களுக்கு?' என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

பொருள்:
நீங்கினால் சுடுகிறது, நெருங்கினால் குளிர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதுவிதமான தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

Read 'Change of Weather' the English version of this story by the same author
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, May 7, 2020

1103. தோள் கண்டேன் தோளே கண்டேன்!

அங்கே போவது விப்ரநாராயணர்தானே?" 

"ஆமாம். அவரேதான்." 

"ஆஹா! என்ன ஒரு இறை பக்தி! ஒரு குடலை நிறையப் பூக்களுடன் கிளம்பி விட்டாரே, அரங்கன் ஆலயத்துக்கு!"

"அவர் செல்வது அரங்கன் ஆலயத்துக்கல்ல! அரங்கன் ஆலயத்துக்குச் செல்வதென்றால், காலைப்பொழுதில்தானே பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி எடுத்துச் செல்வார்? இது போல் இருட்டும் நேரத்திலா செல்வார்?"

"ஆமாம். உண்மைதான். பின்னே, வேறு எங்கு போகிறார்?"

"அவர் அரங்கனை மறந்துப் பல மாதங்கள் ஆகி விட்டன. இப்போது, தன்  குடிலையே தேவதேவியின் ஆலயமாக அல்லவா மாற்றி விட்டார் விப்ரநாராயணர்! இப்போது அவர் பூக்களை எடுத்துச் செல்வது அவருடைய அன்புக்குரிய தேவிக்குத்தான்!"

"அடப்பாவமே! அரங்கனின் அடியே கதி என்று இருந்தவர், இன்று ஒரு அணங்கின் மடியே கதியென்று கிடக்கிறார் என்று சொல்லுங்கள்!"

"பொழுது விடிந்து விட்டது அன்பரே, எழுங்கள்!" என்றாள் தேவதேவி.

"என்னால் முடியாது. நீ வேண்டுமானால் எழுந்து செல்!" என்றார் விப்ரநாராயணர்.

"ம்? நான் எப்படி எழுந்திருப்பது? என் தோளில் அல்லவா தாங்கள் தலை வைத்துப் படுத்திருக்கிறீர்கள், ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் அரங்கன் போல்!" 

விப்ரநாராயணர் சட்டென்று எழுந்து கொண்டார்.

"என்ன பிரபு, ஏன் எழுந்து விட்டீர்கள்?"

"நீ அரங்கன் பெயரைச் சொன்னதும், கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். அரங்கனை தரிசித்துப் பல வாரங்கள் ஆகி விட்டனவே!" என்றார் விப்ரநாராயணர்.

"அரங்கனை தரிசிக்க இப்போது கிளம்பிச் செல்லப் போகிறீர்களா?" என்றாள் தேவதேவி, எழுந்து அமர்ந்தபடி.

"இல்லை" என்ற விப்ரநாராயணர், தேவதேவியின் தோள்களைப் பிடித்து அழுத்தி, அவளை மஞ்சத்தில் தள்ளி, அவள் தோள்களில் மீண்டும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார். "உன் தோள்களில் சாய்ந்து உறங்குவதை விட, ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருக்கும் தாமரைக்கண் கொண்ட அந்த அரங்கனின் உலகம் இனிமையானதா என்ன?" என்று சொல்லி விட்டுக் கண்களை மூடி, மீண்டும் உறங்கத் தலைப்பட்டார்.

"அடப்பாவி மனிதரே!" என்று நினைத்த தேவதேவி, "அரங்கநாதா! என்னிடம் பித்துக் கொண்டு, உன்னையே மறந்து விட்ட உன் பக்தருக்கு நீதான் அருள் புரிய வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தது போல், அரங்கனின் ஆலய மணி ஒலித்தது. 

விப்ரநாராயணரின் மீது திருட்டுப் பட்டம் விழ வைத்து, அவரை ஆட்கொண்டு, மீண்டும் தன் பக்தராக்கித் தன் மீது திருமாலை என்ற பாமாலையும், திருப்பள்ளி எழுச்சி என்ற சுப்ரபாதமும் பாடி, தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற பெயர் பெற்று, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் புகழ் பெற்றவராக ஆக்க அரங்கன் போட்டிருக்கும் திட்டம்  துவங்கப்போவதன் அறிவிப்புதான் அந்த மணி என்பதை தேவதேவி அப்போது அறிந்திருக்கவில்லை!   

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

பொருள்:
தான் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதை விட தாமரைக் கண்ணனின் உலகம் இனிமையானதா என்ன?

Read 'Vipranarayana' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, May 4, 2020

1102. குருராஜனுக்கு வந்த நோய்

"என்னடா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா என்ன?"

கடந்த சில நாட்களாக குருராஜனைப் பார்த்துப் பலரும் கேட்கும் கேள்வி இது.

"இல்லையே! நல்லாத்தானே இருக்கேன்!" என்று குருராஜன் பதில் சொன்னாலும், தன்னிடம் ஒருசோர்வு இருப்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். 

மருத்துவரிடம் சென்றான். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "உடம்பில ஒண்ணும் பிரச்னை இல்ல. நல்லாத்தான் இருக்கீங்க. ரெண்டு நாள் எங்கேயாவது வெளியூர் போயிட்டு வாங்க. சில சமயம் சின்ன இட  மாறுதல், சூழ்நிலை மாறுதல் உடம்புக்கும் மனசுக்கும் ஒரு சக்தியைக் கொடுக்கும்" என்றார்.  

ஒரு கிராமத்திலிருந்த அவன் நண்பன் ஒருவன், நீண்ட நாட்களாக, குருராஜனைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் யோசனையைச் செயல்படுத்தும் விதமாக, நண்பனின் கிராமத்துக்குச் சென்றான் குருராஜன்.

கிராம சூழ்நிலை ரம்மியமாகத்தான் இருந்தது. நண்பனோடு இருந்ததும் மனதுக்கு உற்சாகமாகத்தான் இருந்தது. ஆயினும், அப்போதும் குருராஜன் சோர்வை உணர்ந்து கொண்டிருந்தான்.

நண்பன் கூட, "ஏண்டா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா? எங்க ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. அவரு நாடியைப் பாத்தே என்ன பிரச்னைன்னு சொல்லிடுவாரு" என்றான்.

நாட்டு வைத்தியரிடம் சென்றார்கள். அவர் நாடியைப் பார்த்து விட்டு,  "நாடி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட்டணத்துத் தம்பிக்கு கிராம வாழ்க்கை சலிப்பா இருக்கலாம். ஊருக்குப் போனவுடனே சரியாயிடும்!" என்றார் அவர்.

குருராஜனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

கிராமத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய பிறகும், குருராஜனின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்களால் கூடக் கண்டு பிடிக்க முடியாத பெரிய நோய் தனக்கு வந்திருக்குமோ என்ற அச்சம் குருராஜனுக்கு ஏற்பட்டது. 

ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இத்தனை நாட்களாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தான்.

அடுத்த நாள் காலை, பஸ் பிடித்துப் பக்கத்து ஊரிலிருந்த அத்தை வீட்டுக்குப் போனான் குருராஜன்.

"என்னடா? இத்தனை நாளா, இந்த அத்தை இருக்கறதையே மறந்துட்டேன்னு  நெனச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து நின்ன. ஒரு மாசம் கழிச்சு இப்ப மறுபடி வந்திருக்க. அத்தை மேல இப்பதான் பாசம் வர ஆரம்பிச்சிருக்கா உனக்கு?" என்றாள் அத்தை.

"என்ன அத்தை இது? சின்ன வயசிலேயே, என் அம்மா போயிட்டாங்க. இப்ப அப்பாவும் போயிட்டாரு. எனக்கு இருக்கற உறவு நீ மட்டும்தானே!" என்றான் குருராஜன்.

"உன் அப்பா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பதான் உனக்கு இது தோணிச்சாக்கும்!" என்றாள் அத்தை. 

சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்காக, அத்தை உள்ளறைக்குப் போய் விட்டாள்.

தாழ்வாரத்தில் அவன் தனியே அமர்ந்திருந்தபோது, அத்தை பெண் வனஜா அங்கே வந்தாள். அவனுக்குப் பின்னே வந்து நின்று, அவன் தோளைத் தொட்டாள்.

வனஜாவின் ஸ்பரிசம் குருராஜின் உடலில் சிலீரென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. திரும்பி அவளைப் பார்த்தான். 

"என்ன வனஜா! உன்னைப் பாக்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இத்தனை நேரம் உன்னைக் கண்ணிலேயே காணோம்?" என்றான் குருராஜன்.

"ம்? நீ என்னைப் பாக்கவா வந்தே? உன் அத்தையைப் பாக்கத்தானே வந்தே?" என்றாள் வனஜா, குறும்பாகச் சிரித்தபடி.

"சொல்ல மாட்ட? உன்னைச் சின்னப் பொண்ணாதான் பாத்திருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு, அத்தையைப் பாக்க போன மாசம் வந்தப்பத்தான், முதல் தடவையா, உன்னைப் பெரிய பொண்ணாப் பாத்தேன். அப்ப உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போனப்பறம், இந்த ஒரு மாசமா, என் உடம்பும் மனசும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாக்கறவங்கள்ளாம் உனக்கு என்னடா ஆச்சுங்கறாங்க. சரி, மறுபடி உன்னைப் பாத்துப் பேசினாத்தான் சரியாப் போகும்னு நெனச்சு, ஆசையா ஓடி வந்திருக்கேன். அத்தையைப் பாக்கத்தானே வந்தேன்னு சொல்லிக் காட்டற?" என்றான் குருராஜன், பொய்க் கோபத்துடன். 

அதற்குப் பிறகு, இருவரும் ஒருவர் கையை மற்றவர் பற்றியபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

காமத்துப்பால்  
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

பொருள்:
நோய்களுக்கு மருந்து வேறு பொருட்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் விளைந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.

Read 'What Ails Gururajan' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, April 26, 2020

1101. காதலில் விழுந்தேன்!

வார இறுதி நாட்களில் கோபாலைப் பிடிக்கவே முடியாது. ஹோட்டல், சினிமா என்று எங்காவது போய்க் கொண்டிருப்பான். 

கோபால் நல்ல வேலையில் இருந்து கை நிறையச் சம்பாதித்து வந்ததால், அவன் பெற்றோர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் வரும்போது திருமணம் செய்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள். 

கோபால் பெரும்பாலும் வெளியில் சுற்றுவது அவன் நண்பன் செந்திலுடன்தான். ஆயினும், எல்லா வார இறுதி நாட்களிலும் கோபாலுடன் வெளியில் சுற்றுவது செந்திலுக்கு சற்று சிரமமாக இருந்தது. 

ஒருபுறம் பொருளாதார ரீதியாக செந்தில் அவ்வளவு வசதியானவன் இல்லை என்பதால், ஹோட்டல், சினிமா என்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணிசமான தொகையைச் செலவழிப்பது அவனுக்கு ஒரு சுமையாக இருந்தது என்றால், மறுபுறம் இந்தப் பழக்கத்தை அவன் பெற்றோர்கள் ஆதரிக்கவில்லை.

ஆயினும், கோபால் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு போய் விடுவான். சில சமயம், செந்தில் வீட்டுக்குச் சென்று. அவன் பெற்றோர்களிடம் பேசிக் கூட செந்திலை அழைத்துச் செல்வான்.

"ஏண்டா இப்படி வெறி பிடிச்ச மாதிரி வாராவாரம் ஹோட்டல், சினிமான்னு சுத்தற, அதுவும் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ளேயும்? சனியோ, ஞாயிறோ, ஒரு நாளைக்கு மட்டும் போனாலாவது பரவாயில்ல!" என்று செந்தில் அவனிடம் பல முறை சொல்லி விட்டான்.

"டேய்! வாழ்க்கையை அனுபவிக்கணும்டா! கடவுள் நமக்கு அஞ்சு புலன்களைக் கொடுத்திருக்கார். அந்த அஞ்சு புலன்களுக்கும் அனுபவ சுகத்தை நாம கொடுக்க வேண்டாமா? நல்ல தியேட்டருக்குப் போனா, படம் பாக்கறது கண்ணுக்கும், காதுக்கும் விருந்து, ஏசியோட இதமான குளிரும், சொகுசான சீட்டில இஷ்டப்படி சாஞ்சுக்கிட்டு உக்காந்துக்கறதும் உடம்புக்கு சுகம், ஏசி தியேட்டர்ல போடற பர்ஃப்யூமோட மணம் மூக்குக்கு சுகம், நல்ல ஹோட்டல்ல ருசியா சாப்பிடறது நாக்குக்கு சுகம். இதாண்டா வாழ்க்கையை அனுபவிச்சு வாழற வழி!" என்பான் கோபால்.

"சரியான ரசிகன்தாண்டா நீ?" என்பான் செந்தில்.

 இரண்டு மூன்று வாரங்களாக, செந்திலால் கோபாலைப் பார்க்க முடியவில்லை. ஒரு வாரஇறுதியில், கோபால் தன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்திருந்த செந்தில், அவன் வராததால் ஏமாற்றமடைந்தான்.

திங்கட்கிழமையன்று, செந்தில் கோபாலுக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஏதோ முக்கியமான வேலை இருந்ததாகச் சொன்னான் கோபால்.

அடுத்த வாரஇறுதியிலும் கோபால் வரவில்லை. செந்தில் ஃபோன் செய்தபோது, கோபால் ஃபோனை எடுக்கவில்லை. 

முன்றாவது வாரஇறுதியில், செந்தில் கோபால் வீட்டுக்குப் போய்ப் பார்த்தான்.

"அவன் காலையிலேயே கிளம்பிப் போயிட்டானே! உன்னோடதான் எங்கேயோ போறான்னு நினைச்சேன்" என்றாள் கோபாலின் தாய்.

செந்தில் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

அன்று இரவு, கோபால் செந்திலுக்கு ஃபோன் செய்தான். "வீட்டுக்கு வந்திருந்தியாமே? சாரிடா! உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாளைக்குக் காலையில, நானே உன் வீட்டுக்கு வரேன்" என்றான்.

மறுநாள் செந்தில் வீட்டுக்கு வந்த கோபால், அறைக்குள் இருவரும் தனிமையில் இருந்தபோது, "உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா! நான் ஒரு பெண்ணைக் காதலிக்கறேன்!" என்றான்.

"அடப்பாவி! எத்தனை நாளாடா?"

"ஒரு மாசமாத்தான்!"

"அதான் மூணு வாரமா வீக் எண்ட்ல என்னைக் கூப்பிடறதில்லையா? எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு, அவளோட சுத்தறியாக்கும்! எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல?  நான் உன்னை எதிர்பாத்து ஏமாறாம இருந்திருப்பேன்!" என்றான் செந்தில், குற்றம் சொல்வது போல்.

"சாரிடா! இதையெல்லாம் உடனே சொல்ல முடியுமா? முதல்ல நான் அதை உறுதிப்படுத்திக்கணும் இல்ல?"

"அதான் மூணு வாரமா அவளோட சுத்தறியே, இன்னும் என்ன உறுதிப்படுத்திக்கறது?" என்ற செந்தில், "அவளோடயும் சினிமா, ஹோட்டல்னுதானே சுத்தற? மால்ல பர்ச்சேஸ் எல்லாம் கூட இருக்குமே!" என்றான்.

"அதெல்லாம் இல்ல. அவளுக்கு தியேட்டருக்குப் போறது, ஹோட்டலுக்குப் போறதில எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. கோவில், பார்க், மியூசியம், ஜூ, பீச் இது மாதிரி இடங்களுக்குப் போகத்தான் அவளுக்கு விருப்பம். அதனால, இங்கெல்லாம்தான் போனோம். ஐயா சினிமா பாத்தே மூணு வாரம் ஆச்சு, தெரியுமா!" என்றான் கோபால், சிரிப்புடன்.

"ஐம்புலன்களாலேயும் இன்பங்களை அனுபவிக்கணும்னு சொல்லுவியே, அதெல்லாம் இப்ப போச்சா?" என்றான் செந்தில், கேலியாக.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கோபால், "இல்லடா! ஐம்புலன்களுக்கான இன்பமும் அவகிட்டயே இருக்குடா! அவள் முகத்தைப் பாக்கறதும், அவ பேச்சையும், அவள் வளையல் சத்தத்தையும் கேக்கறதும், அவ கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறதும், அவ தலையில இருக்கற பூவோட நறுமணத்தை அனுபவிக்கறதும், அப்புறம் எப்பவாவது..." என்று இழுத்தான் 

"புரியுது, புரியுது! முத்தக்காட்சியெல்லாம் சென்சார்ல கட்!" என்றான் செந்தில், சிரித்தபடி.

"எப்பவாவது ஒரே தின்பண்டத்தை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறதும்ன்னு சொல்ல வந்தேன்!" என்றான் கோபால். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  (கூடி இருப்பதில் மகிழ்ச்சி அடைதல்)
குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

பொருள்:
கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களின் இன்பங்களும், ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடமே உள்ளன.

Read 'Gopal's Weekends' the English version of this story by the same author.


அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Saturday, April 25, 2020

1100. அவளும் நோக்கினாள்!

பெண் பார்த்து முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப யத்தனித்தபோது, பெண்ணின் தாய் கௌரி தன் கணவன் பசுபதி அருகில் வந்து அவர் காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள்.

பசுபதி சற்றுத் தயங்கி விட்டு, பையனின் தந்தை ராமசாமியைப் பார்த்து, "நீங்க தப்பா நினைக்கலேன்னா, எங்க பொண்ணு கலா உங்க பையன்கிட்ட தனியாப் பேசணும்னு நினைக்கறா!" என்றார்.

"இதென்ன புது வழக்கமா இருக்கு? நாங்க கேள்விப்பட்டதில்லையே இப்படி?" என்றாள் பையனின் அக்கா சுமதி.  

பையனின் தாய் சுந்தரி தன் பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டுக் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

மனைவியிடம் சம்மதம் கேட்பது போல் அவளைப் பார்த்து முக ஜாடை செய்த ராமசாமி, மனைவி அரைச் சம்மதத்துடன் தலையாட்டியதும், பசுபதியைப் பார்த்து, "அதுக்கென்ன பேசட்டுமே!" என்றார். 

பிறகு பெண்ணின் பெற்றோர் எதோ தப்பு செய்து விட்டதைப் போல் சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதை கவனித்த ராமசாமி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, "இது நம்ப காலம் இல்லையே! 1970ஆம் வருஷம். சந்திரனுக்கே ராக்கெட் விட்டுட்டாங்க. இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னால பையனும் பெண்ணும் பேசிப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கறது சகஜம்தானே!  இதோ இருக்காளே என் பொண்ணு சுமதி, அவளுக்குப் போன வருஷம்தான் கல்யாணமாச்சு. தன்னைப் பெண் பாக்க வந்தப்ப, தான் இப்படிக் கேக்காம விட்டுட்டமேங்கற குறையிலதான் இது வழக்கமில்லையேன்னு சொல்லியிருக்கா. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க!" என்று சொல்லி விட்டுத் தன் பெண் சுமதியைப் பார்த்துச் சிரிக்க, அவள் அவரை முறைத்தாள். 

பக்கத்தில் இருந்த அறைக்குக் கலா முதலில் செல்ல, பிறகு சேகர் சென்றான். அந்த அறை மற்றவர்கள் அமர்ந்திருந்த முன்னறைக்குப் பின்னால் அமைந்திருந்ததால் இவர்களை யாரும் பார்க்க முடியாது. இவர்கள் பேசுவதும் யாருக்கும் கேட்காது. 

அந்த அறையில் நாற்காலி ஏதும் இல்லை. கலா சுவர் ஓரத்தில் போய் நிற்க, அவளுக்கு எதிரில் போய் நின்றான் சேகர்.

பெண் பார்க்கும் படலத்தின்போது குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த கலா இப்போது தலை நிமிர்ந்து அவன் முகத்தை நேரே பார்த்தாள். சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். சேகருக்கு அவள் தன்னை அப்படிப் பார்த்தது சங்கடமாக இருந்தாலும், அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "சரி. வாங்க போகலாம்!" என்றாள் கலா.  

"என்ன கலா? எங்கிட்ட எதோ பேசணும்னு சொல்லி இங்க அழைச்சுக்கிட்டு வந்துட்டு, சும்மா ரெண்டு நிமிஷம் பாத்துக்கிட்டே இருந்துட்டு போகலாங்கற?" என்றான் சேகர் வியப்புடன். 

"எல்லார் முன்னாலயும் உங்க முகத்தை சரியா பாக்க முடியல. உங்களை நேருக்கு நேரா பாக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். கொஞ்ச நேரம் உங்களை நேருக்கு நேராப் பாத்ததிலேயே உங்ககிட்ட பேசி உங்களைப் புரிஞ்சுகிட்ட திருப்தி கிடைச்சுடுச்சு எனக்கு!" என்று சொல்லிச் சிரித்த கலா, "ஆமாம். நீங்களும் எதுவும் பேசலியே? இப்ப ஏதாவது கேக்கணுமா?" என்றாள்.

"வேண்டாம்! எனக்கும் உன்னை மாதிரிதான் தோணுது. உள்ள வரப்ப, உன்கிட்ட தனியாப் பேசணுங்கற ஆசையிலதான் வந்தேன். ஆனா உன்னைப் பாத்துக்கிட்டே இருந்ததில அந்த ஆசையெல்லாம் அடங்கிப் போயிடுச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் சேகர்.

சிரித்தபடியே சேர்ந்து நடந்து வந்த இருவரையும், இருவரின் பெற்றோர்களும் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல்  
குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
பொருள்:
காதலர்கள் ஒருவர் கண்ணால் மற்றவர் கண்ணை நோக்கி ஒன்று பட்ட உணர்வு கொண்டு விட்டால், அதற்குப் பிறகு வாயால் பேசிக்கொள்ளும் சொற்களுக்கு ஒரு பயனும் (தேவையும்) இல்லை.

Read 'A Request from the Bride' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, April 9, 2020

1099. நிச்சயதார்த்தம்

"நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தண்டி. மறந்துடாதே!" என்றாள் ரேணுகா.

"மறக்கறதாவது? நீ எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு நாளைக்கு உன்னைக் கலாய்க்கறதுக்குத் திட்டமெல்லாம் தயாரா வச்சிருக்கேன்! இவளை ஏன் கூப்பிட்டோம்னு நீ அழப் போற பாரு!" என்றாள் நிகிதா.

மறுநாள் நிச்சயதார்த்தத்தின் போது, நிகிதா தான் சொன்னபடியே, தன் தோழி ரேணுகாவை ஏகமாக கலாட்டா செய்தாலும், ரேணுகாவுக்கு அது ஒரு உற்சாகமான அனுபவமாகவே இருந்தது.

நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த தன் அலுவலக நண்பர்களை நிகிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா. அவர்களில் பலர் திருமணமானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர்தான் - சினேஹா, முகேஷ்.

சினேஹாவிடம் மட்டும் நிகிதா அதிகம் பழகியதை ரேணுகா கவனித்தாள். முகேஷ் தனியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். பொதுவாக எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நிகிதா தனியாக உட்கார்ந்திருந்த முகேஷிடம் சற்றுப் பேசிக் கொண்டிருந்தால், அவன் தனிமையாக உணர்ந்திருக்க மாட்டானே என்று நிகிதாவுக்குத் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு நிகிதாவுக்கும், முகேஷுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக அறிந்து ரேணுகா ஆச்சரியப்பட்டாள்.

"எப்போடீ நிச்சயமாச்சு?" என்று நிகிதாவிடம் கேட்டாள் ரேணுகா.

:"கல்யாணம் நிச்சயமானது இப்பதான்..." என்று இழுத்தாள் நிகிதா.

"அப்படீன்னா?" என்றாள் ரேணுகா.

"நாங்க ரொம்ப நாளாப் பழகிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நிகிதா.

"அடிப்பாவி! ரொம்ப நாளாக் காதலிக்கிறீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்ற ரேணுகா, சட்டென்று நினைவு வந்தவளாக, "ஆமாம், என் நிச்சயதார்த்தத்தில உன்னை நான் முகேஷுக்கு அறிமுகப் படுத்தினேன். அப்ப நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகமானவங்க மாதிரி காட்டிக்கல. அதோட ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்ல. சம்பந்தம் இல்லாதவங்க மாதிரி ஒதுங்கி இருந்தீங்க?" என்றாள்.

"பின்னே, எல்லார் முன்னேயும் நாங்க காதலர்கள்னு காமிச்சுக்கணும்னு சொல்றியா?" என்றாள் நிகிதா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

பொருள்:
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அந்நியர் போல் பார்ப்பது காதலர்களுக்கே உரித்தான இயல்பாகும்.

Read 'The Engagement Function' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, March 26, 2020

1098. சிக்னல் கிடைக்குமா?

ரகுராமன் பல்லாவரம் ரயில் நிலையத்தில்தான் அவளைப் பார்த்தான். முதலில் பார்த்தது எப்போது என்பது அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

இரண்டு மூன்று முறை பார்த்த பிறகுதான் அவள் தன் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பல்லாவரத்தில் வசிக்கும் அவன் கிண்டியில் தான் வேலை செய்யும் அலுவலகத்துக்குச் செல்வதற்காக, தினமும் காலை எட்டரை மணிக்கு பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு வருவான். 

ரயில் நிலையத்தில் தினமும் எத்தனையோ முகங்கள் தென்படும். அவற்றில் சிலவற்றை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அவனைப் போல் அந்த ரயில் நிலையத்துக்கு தினமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் வரும் பலரின் முகங்கள் அவை. ஆனால் பார்த்த முகம் என்பதற்கு மேல் அந்த முகங்கள் பற்றி வேறு எந்த சிந்தனையும் அவன் மனதில் ஏற்பட்டதில்லை.

ஆனால், எதனாலோ அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்ததும், அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது.

அவன் வழக்கமாக நிற்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளித்தான் பெண்கள் பெட்டி இருக்கும். அவள் பெண்கள் பெட்டியில்தான் ஏறுவாள். அவன் நிற்கும் இடத்திலிருந்து சுமார் பத்து அடி தள்ளித்தான் அவள் நிற்பாள். இன்னும் பல பெண்களும் அங்கே நின்று கொண்டிருப்பார்கள். 

'அவளை மட்டும் நான் ஏன் குறிப்பாக கவனித்தேன்?' என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

அவன் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பே அவள் வந்து நின்றிருப்பாள். 

ரகுராமன் அந்தப் பெண்ணை கவனிக்க ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகி விட்டன. அவள் மீது தனக்கு ஏற்பட்டிருப்பது காதல்தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

ஆனால் அவள் அவனை கவனித்தாளா என்று தெரியவில்லை. ரயில் நிலையத்துக்கு வந்தது முதல், ரயில் வந்து அதில் ஏறும் வரை, தான் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா என்று அவன் யோசித்தான். 

அவளிடம் சென்று பேசிப் பார்க்கலாமா என்று சில சமயம் தோன்றும். ஆனால், பொது இடத்தில், அதுவும் பெண்கள் கூடி இருக்கும் இடத்தில், அவளிடம் சென்று ஏதாவது பேசி, அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.

அவள் தன் முகத்தைப் பார்த்தாளா என்பது கூடத் தெரியவில்லையே!

அன்று ரயில் வந்து நின்றதும், அதில் ஏறும் வரை வழக்கம் போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு முன் அவள் அவன் பக்கம் திரும்பினாள். அவள் தன் முகத்தைப் பார்த்ததாகவும், தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இது உண்மையா, தன்னுடைய கற்பனையா என்று அவனுக்குப் புரியவில்லை.

அடுத்த நாள் ரகுராமன் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவளைக் காணவில்லை. 'இன்று அவள் வரவில்லையா, அல்லது தாமதமாக வருகிறாளா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு அருகில் எதோ அசைவு ஏற்பட்டதை உணர்ந்த அவன், எதோ ஒரு உள்ளுணர்வில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவன் அருகில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்!

ரகுராமனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.

எப்போதும் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்தில் நிற்பவள் இன்று தன் அருகில் வந்து நிற்கிறாள் என்ற உண்மையை உணரவே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. புன்னகை செய்ய வேண்டும் என்ற உணர்வு கூட வராமல் அவள் முகத்தைப் பார்த்தான் 

அவள் அவனை நேரே பார்த்துப் புன்னகை செய்தாள்.

ரயில் வந்ததும், அவன் ஏறிய பெட்டியிலே அவளும் ஏறிக் கொண்டாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

பொருள்:
நான் பார்க்கும்போது, என்னை அன்புடன் பார்த்துச் சிரிப்பாள். அசையும் மெல்லிய இயல்பு கொண்ட அவளிடம் அப்பொழுது ஒரு அழகு தோன்றும்.

Read 'Will I Get the Signal?' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, March 15, 2020

1097. அவளே என் காதலி!

"கோ எஜுகேஷன் காலேஜில படிக்கவே கூடாதுடா!" என்றான் தினேஷ்.

"டேய்!  மென்ஸ் காலேஜில படிக்கறவங்கள்ளாம் நம்மைப் பாத்துப் பொறாமைப் படறாங்க. நீ என்னடான்னா இப்படிச் சொல்றியே!" என்றான் முருகன்.

"பின்ன என்னடா? ஒரு பொண்ணைக் காதலிக்க முடியல. அஞ்சு நிமிஷத்தில் காலேஜ் பூரா  தெரிஞ்சுடுது!"

" அடப்பாவி! நீ ஒரு பொண்ணைக் காதலிக்கறியா? உன்னோட நெருக்கமாப்  பழகற எனக்கே இந்த விஷயம் இப்ப நீ சொன்னப்பறம்தான்  தெரியுது. இந்த லட்சணத்தில காலேஜ் பூரா தெரிஞ்சுடுதுன்னு குறைப்பட்டுக்கற? யாருடா அந்தப் பொண்ணு?" என்றான் முருகன். 

"இன்னும் அவகிட்டேந்து எனக்கு சரியான பதிலே கிடைக்கல. அப்புறம்தானே அது காதலாகும்? அப்ப காலேஜ் பூராத் தெரிஞ்சுடுமே! அதைச் சொன்னேன்."

"அது சரி. பொண்ணு யாருன்னு சொல்லலியே?" என்றான் முருகன் விடாமல்.

'பூங்கோதை!" என்றான் தினேஷ். 

"பெயர்ப் பொருத்தமே இல்லையே! நீ இந்திப் பேரு வச்சுக்கிட்டிருக்க. அவ தமிழ்ப் பேரு வச்சுக்கிட்டிருக்கா. எப்படி ஒத்துப் போகும்?"

"அப்ப நீ வள்ளின்னு பேரு இருக்கற பொண்ணைத்தான் கல்யாணம்  பண்ணிப்பியா? அவகிட்டேந்து சிக்னல் கிடைக்கலியேன்னு நான் கவலையில இருக்கேன். நீ வேற பெயர்ப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம்னு எரிச்சலைக் கிளப்பாதே!" என்றான் தினேஷ் எரிச்சலுடன்.

கல்லூரி வளாகத்தில், பூங்கோதை தன் தோழிகள் இருவருடன் நடந்து சென்று கொண்டிருந்ததை தினேஷ் பார்த்தான். அவள் தோழிகளிடமிருந்து பிரிந்து தனியாகப் போனால் அவளுடன் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷ் அவர்களுக்குப் பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்து போனான்.

அவனைத் திரும்பிப் பார்த்த பெண்களில் ஒருத்தி சற்று உரத்த குரலில், "டீ!நமக்குப் பின்னால ஒத்தன் வராண்டி. நாம மூணு பேர்ல யாரைக் குறி வச்சிருக்கான்னு தெரியலியே!" என்றாள் கேலியான குரலில். பிறகு பூங்கோதையைப் பார்த்து, "ஏண்டி, உன் ஆளா அவன்?" என்றாள்.

"என் ஆள்னா எனக்கு முன்னால நடந்து போவாண்டி. பின்னால வர மாட்டான்!" என்றாள் பூங்கோதை. பின்னால் நடந்து வரும் அவனுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குரலை உயர்த்திப் பேசியது போல் இருந்தது. அவள் சொன்னதைக் கேட்டு மற்ற இருவரும் கொல்லென்று சிரித்தனர். 

தினேஷ் அடிபட்டவனாக வேகமாக நடந்து அவர்களைக் கடந்து சென்றான். 

"நீ சொன்னபடி முன்னாடி போறாண்டி!" என்றாள் தோழிகளில் ஒருத்தி. 

"பரவாயில்லையே! நீ சொன்னபடி நடந்துக்குவான் போலருக்கே!" என்றாள் இன்னொருத்தி.

"முதல்ல கீழ விழாம நடக்கட்டும். போற வேகத்தைப் பாத்தா தடுக்கி விழுந்துடுவான் போலருக்கு. ஏற்கெனவே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஒல்லியா இருக்கான்!" என்றாள் பூங்கோதை. 

தினேஷுக்கு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும் போல் இருந்தது. 

இன்னொரு நாள் கல்லூரி வளாகத்துக்குள் தினேஷ் நடந்து சென்றபோது தற்செயலாக பூங்கோதை வேறு சில தோழிகளுடன் அவனுக்கு எதிரே நடந்து வந்தாள். 

தினேஷ் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் அந்தப் பார்வை கோபமான பார்வை போல் இருந்தது. 

 'சரிதான், இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான் தினேஷ். மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான். 

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பூங்கோதை முருகனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை தினேஷ் பார்த்தான். முதலில் அது அவனுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், பூங்கோதை தன்னை விரும்பவில்லை என்றபோது, அவள் யாரை விரும்பினால் என்ன என்று உடனே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். 

தினேஷைப் பார்த்ததும் பூங்கோதை முருகனுடன் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.

"கங்கிராட்ஸ்டா முருகா!" என்றான் தினேஷ், முருகன் அருகில் சென்றதும்.

"நான்தான் உனக்கு கங்கிராசுலேஷன்ஸ் சொல்லணும்!" என்றான் முருகன் சிரித்தபடி.

"என்ன சொல்ற நீ?"

"பூங்கோதை இத்தனை நேரமும் எங்கிட்ட உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தா. உன் நல்ல குணத்தையும், அடக்கத்தையும் பத்தி அப்படிப் புகழ்ந்து பேசினா!"

"உண்மையாவா? அவ என்னைப் பத்திக் கேலியாப் பேசினது, என்னை முறைச்சுப் பாத்ததெல்லாம் பாத்தா அவளுக்கு என்னைப் பிடிக்கலியோன்னு நினைச்சேன்!" என்றான் தினேஷ் மகிழ்ச்சி கலந்த வியப்புடன்.

"உன்னைத் தனியா சந்திக்க அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலியாம்.  தோழிகளோட இருக்கறப்ப உன்னைச் சீண்டிப் பாத்திருக்கா. நீ அவகிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பாத்திருக்கா. நீ எந்த ரியாக்‌ஷனும் காட்டாம பேசாம இருந்ததால உன் மேல கோபமாக் கூட இருந்திருக்கா. நீ அவ கிட்ட பேசுவேன்னு எதிர்பாத்து, நீ பேசாததால உன்னைப் பத்தி எங்கிட்ட வந்து புலம்பறா!" என்றான் முருகன்.

தினேஷ் வேகமாக நடந்தான்.

"எங்கடா போற?" என்றான் முருகன். 

"கொஞ்சம் முன்னாலதான் போய்க்கிட்டிருக்கா. அவ தோழிகள் யாராவது அவளோட சேரரதுக்கு முன்ன அவகிட்ட போய்ப் பேசணும்!" என்று சொன்னபடியே நடையை எட்டிப் போட்டான்  தினேஷ்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பொருள்:
பகை உணர்வு இல்லாத கடும் சொற்களும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும், வெளிப்பார்வைக்கு அயலார் போல் காட்டிக் கொண்டு மனதுக்குள் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிகளாகும்.

Read 'Here is My Lover' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, March 2, 2020

1096. 'சுருக்' என்று தைத்த பேச்சு!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திரன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அவன் ஒரு பட்டதாரி என்பதை அறிந்து மற்ற ஊழியர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.

ஏனெனில், எழுதுபொருட்கள் விநியோகத்  தொழிலில் ஈடுபட்டு வந்த அந்தச் சிறிய நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களே இரண்டு பேர்தான்!

நிறுவனத்தின் மேலாளர் கூட ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவர்தான். முதலாளியின் உறவினர் என்பதால் அவருக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது.

"பாவம்! படிச்சிருந்தும் நல்ல வேலை கிடைக்கல போல இருக்கு! அதனாலதான் இந்த சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்தில் வேலைக்கு சேந்திருக்கான்!" என்று சந்திரனைப் பற்றிப் பலர் நினைத்தனர். உண்மையும் அதுதான்!

சந்திரனின் கல்வியறிவினாலும், அவனுடைய இயல்பான புத்திசாலித்தனத்தாலும், வேலையில் அவன் காட்டிய ஆர்வத்தினாலும் அவனால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் சில முன்னேற்றங்களைக்  கொண்டு வர முடிந்தது. இது நிறுவனத்தின் வியாபார வளர்ச்சிக்கும் உதவியது.

தன சக ஊழியர்களிடம் இனிமையாகப் பழகியதும், வேலையில் அவன் அவர்களுக்கு உதவியதும் அவன் மீது மற்றவர்களுக்கு மதிப்பம் அன்பும் ஏற்படச் செய்தது. ஆயினும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரோ, மேலாளரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அவனுடைய பங்களிப்பைக் கண்டு கொண்டதாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.

அலுவலகம் தொடர்பான கடிதப் போக்குவரத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சந்திரனுடையது. ஸ்டெனோ சியாமளாவை அழைத்து அவன் கடிதங்களை டிக்டேட் செய்வான். அவள் கடிதங்களை டைப் அடித்து அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போவாள்.

சியாமளாவிடம் சந்திரனுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவள் அவனைப் பார்த்துப் புன்னகை கூடச் செய்ததில்லை. அவன் கடிதங்களை டிக்டேட் செய்யும்போது தலை குனிந்து அவன் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டிருப்பாள். 

டைப் செய்யப்பட்ட கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போகும்போது கூட அவன் முகத்தைப் பார்க்க மாட்டாள். அவன் "தாங்க்ஸ்" என்று சொல்வதைக் கூடக் காதில் போட்டுக் கொள்ளாதவ போல் சென்று விடுவாள்.

சியாமளாவுக்குத் தன் மீது இருப்பது அலட்சியமா, வெறுப்பா என்று சந்திரனுக்குப் புரியவில்லை. அதற்குக் காரணமும் புரியவில்லை. தான் அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் என்ன என்று யோசித்தான். அடுத்த முறை அவளுக்குக் கடிதம் டிக்டேட் செய்யும்போது அவளுக்கு மட்டும் கேட்கும்படி 'ஐ லவ் யூ' என்று சொல்ல முடிவு செய்தான்.

ஆனால் அதற்குள் வேறொரு சம்பவம் நடந்து விட்டது.

அலுவலக லஞ்ச் அறையில் சியாமளாவும் லதா என்ற இன்னொரு பெண்ணும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "நம்ம சந்திரன் சார் ரொம்ப புத்திசாலி, இல்ல?" என்றாள் லதா.

அப்போது அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த சந்திரனின் காதில் அது விழுந்தது.  இதற்கு சியாமளா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று கேட்க எண்ணி அறை வாசலில் மறைவாக நின்றான் சந்திரன்.

"என்னைப் பொத்தவரையில முட்டாளா இருந்தாக் கூடப் பரவாயில்ல, முயற்சி செய்யாதவரா இருக்கக் கூடாது. அவர் ஒரு சோம்பேறி!" என்றாள் சியாமளா.

அடிபட்டவனாக சந்திரன் அங்கிருந்து நகர்ந்தபோது சியாமளா திரும்பி அவனைப் பார்த்தது போல் இருந்தது.

'நான் நின்றிருந்ததை முன்பே பார்த்து விட்டு வேண்டுமென்றுதான் அப்படிச் சொல்லி இருப்பாளா? அப்படியென்றால் என் மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பு எனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னாளா?'

சந்திரனுக்குப் புரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் அவளுக்கு டிக்டேஷன் கொடுத்தபோது அவள் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

சந்திரன் மனம் உடைந்து போனான்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சியாமளா டைப் அடித்த கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போனபோது அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தது போல் இருந்தது.

உண்மையாகவே சிரித்தாளா அல்லது தன் பிரமையா என்று யோசித்தபடி சந்திரன் டைப் அடித்த கடிதங்களை எடுத்துப் பார்த்தான்.

மேலே இருந்த கடிதத்துடன் ஒரு பத்திரிகை விளம்பர கட்டிங் குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது.

எழுது பொருட்கள் விநியோகத் தொழில் ஈடுபட்டிருந்த ஒரு மிகப் பெரிய அகில இந்திய நிறுவனத்துக்கு கிளை மேலாளர் தேவை என்ற விளம்பரம் அது!

ஓ! அப்படியானால், என்னை சோம்பேறி, முயற்சி இல்லாதவன் என்றெல்லாம் சொன்னது நான் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அக்கறையினால்தானா? அப்படியானால், அவளுக்கு என்மீது இருப்பது அன்புதான், வெறுப்பு இல்லை!'

சியாமளாவின் இருக்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான் சந்திரன். அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடியே கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்:
வெளித்தோற்றத்துக்கு அவள் பகைவர் போல் அன்பில்லாத சொற்களைப் பேசுவது போல் தோன்றினாலும், அவை மனதில் பகை இல்லாதவரின் சொற்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

Read 'The Stenographer's Remarks' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...