அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும், அவனுக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன.
"நீங்களா?" என்றான்.
"நீங்களான்னா? என்னை உனக்கு முன்னாலேயே தெரியுமா என்ன?" என்றாள் அந்தப் பெண்.
"இல்லை. பாத்திருக்கேன்."
"பாத்திருக்கேன்னு சொல்லாதே. பாத்துக்கிட்டே இருக்கேன்னு சொல்லு. நாலு நாளா, நான் இந்த பார்க்குக்கு வர அதே நேரத்துக்கு நீயும் வரே. நான் எங்கே உக்காந்திருந்தாலும், கொஞ்சம் தள்ளி நின்னு என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட்ஸ் கூடக் கேட்டாங்க 'யாருடி அவன், உன்னையே பாத்துக்கிட்டிருக்கான்?'னு. அவன் என்னைப் பாக்கலே, வேற எங்கேயோ பாக்கறான்னு சொல்லிச் சமாளிச்சேன். இன்னிக்கு என் ஃப்ரண்ட்ஸ் யாரும் வரலை. அதனாலதான், உன்னை நேருக்கு நேர் கேக்கலாம்னு வந்திருக்கேன். சொல்லு, ஏன் என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டிருக்கே?"
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அதான் உங்களைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!"
"அப்ப, எந்தப் பொண்ணு அழகா இருந்தாலும், இப்படித்தான் பாப்பியா?"
"ஐயையோ! அப்படி இல்ல. ம்... வந்து... நான் உங்களைக் காதலிக்கறேன். அதான்!" என்றான் கவுதம்.
"காதலிக்கறேன்னா, அதை நேரடியா சொல்லணும். முதல்ல, என்னை வாங்க போங்கன்னு பேசறதை நிறுத்து. நான் உன்னை வா போன்னுதானே பேசறேன். பை தி வே, என் பேர் வனிதா. உன் பேரு?"
"கவுதம்" என்றான் கவுதம்.
இது நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இப்போது கவுதமும், வனிதாவும் காதலர்கள். விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்.
அன்று, கடற்கரையில் கவுதம் அமர்ந்து கொண்டு வனிதாவுக்காக் காத்திருந்தான்.
அப்போதுதான் வந்த வனிதா, அவன் முதுகைத் தட்டினாள். அவர்கள் முதல் சந்திப்பின்போது வனிதா அவன் முதுகைத் தட்டியது கவுதமுக்கு நினைவுக்கு வந்தது.
வனிதாவை உற்றுப் பார்த்த கவுதம், "உன்னை எவ்வளவு தடவை பார்த்தாலும், பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!" என்றான்.
"இருக்கும்டா. அப்படிப் பாத்தாத்தானே, அந்தப் பொண்ணை விட நான் அழகா இருக்கேனான்னு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?" என்றாள் வனிதா, கோபத்துடன்.
"எந்தப் பொண்ணோட?" என்றான், கவுதம் புரியாமல்.
"நான் வரதுக்கு முன்னாடி உத்துப் பாத்துக்கிட்டிருந்தியே அந்தப் பொண்ணோட" என்று கவுதமுக்கு முன்புறமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினாள் வனிதா.
கடல் அலைகளில் காலை நனைத்தபடி நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்த கவுதம், "அந்தப் பொண்ணை நான் இப்பதான் கவனிக்கிறேன். நான் கடலைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன்" என்றான்.
"பொய் சொல்லாதே! நீ முதல்ல என்னைத் திரும்பத் திரும்பப் பாத்ததே, வேற ஒரு பொண்ணோட என்னை ஒப்பிட்டுப் பார்க்கத்தான். அது தெரியாம, நீ என்னைக் காதலிக்கறதா நினைச்சு நான் ஏமாந்துட்டேன். இப்பதான் உன் குணம் புரியுது!" என்று கூறியபடி எழுந்து செல்ல யத்தனித்த வனிதாவின் கைகளைப் பற்றி, "நான் சொல்றதைக் கேள், வனிதா. நீ நினைக்கிற மாதிரி இல்ல!" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் கவுதம்.
கற்பியல்